Sunday, 3 November 2013

புகார்ப் புத்தகம்




திருமுடி தம் மனைவியுடன் கும்பகோணம் தொடர்வண்டி நிலையத்தில் கடலூர்க்குப் போகக் காத்திருந்தார். கோடைக்காலப் பகல்! கேட்க வேண்டுமாவெயில் தகித்தது. பாட்டில் தண்ணீர் தீர்ந்துவிடவேநிலையப் பாத்திரத்தில் நிரப்பிக்கொள்ள எண்ணிஅருகில் போய்ப் பார்த்தால்! பாத்திரம் காலி!

பெருத்த ஏமாற்றம் உற்றார். பயணியர் சேவையில் முக்கியம் அல்லவா  குடிநீர் வழங்கல்?   அதுவும் வெயில் காலத்தில்கடமையை ஆற்றாத நிலையத் தலைவர்மீது கோபம் கொண்டார்.

துணைவியின் பக்கத்தில் வந்து அமர்ந்து, " தண்ணீர் இல்லைகடமையைச் செய்பவர்கள் வரவரக் குறைந்துகொண்டே வருகிறார்கள். யாராவது  செல்வாக்கு உள்ளவர் வலுவான இயக்கம் தொடங்கிப் பொதுமக்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்தி முடுக்கிவிட்டாலொழிய நிலைமை திருந்தாது" என்று பொரிந்து தள்ளினார்.

தற்செயலாய்த் திரும்பிப் பார்க்கையில்கண்ணில் பட்டது சுவரில் தொங்கிய பலகை;  "புகார்ப் புத்தகம் ஸ்டேஷன் மாஸ்டரிடம் இருக்கிறது" என்னும் ரகசியத்தை அது தெரிவித்தது.

புகார் எழுதப் போகிறேன் என்று கிளம்பினவரைத் தடுத்தார் மனைவி. "வேண்டாம்விடுங்கள்;    ஏதாவது காரணம் இருக்கும்" என்றார் அவர்.
" கேட்கிறேன், சரியான காரணமாய் இருந்தால் விடுவேன்; இல்லாவிட்டால் புகார்தான்"

நிலையத் தலைவர் எதையோ எழுதிக்கொண்டிருந்தார்.

            -  குடிநீர் இல்லையே!

            - தெரியும்.

            - வைக்கவேண்டியது உங்கள் கடமைதானே?

            - ஆமாம்.

            - ஏன் வைக்வில்லை?

            -  வைக்கவில்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

            - காலிப் பாத்திரத்தைப் பார்த்தால் தெரியாதா?

            - வைக்க வைக்கக் காலியாய்த்தான் ஆகிறது.

            - சாப்பிடச் சாப்பிடப் பசித்தால் சாப்பிடாமல் இருப்பீர்களா?

            - ஏன்'யாநீங்கள் பயணியா அல்லது வம்புதும்புக்காரரா?

           -  இரண்டும்தான். புகார்ப் புத்தகம் கொடுங்கள்.

கொஞ்சமும் தாமதிக்காமல் புத்தகத்தைத் தந்தமை வியப்பளித்தது. கெஞ்சுவார் எனத் திருமுடி நம்பியிருந்தார்.

புத்தகத்தில் கடைசிப் புகார் எழுதி இரண்டு ஆண்டுக்குமேல் ஆகியிருந்தது; விழிப்புணர்ச்சியே இல்லாத பயணிகள்!  அவ்வப்போது புகாரைப் பதிந்தால்தானே பொதுத்துறை நிறுவனங்கள் உருப்படும்தாம் ஒரு முன்மாதிரியாக விளங்குவதை எண்ணிப் பெருமிதம் பொங்க, புகாரை எழுதிபக்கத்தில் நின்ற இரு பயணிகளிடம் (இவர்கள் தண்ணீர் இல்லை எனப் புலம்பிக்கொண்டிருந்தவர்கள்) சாட்சிக் கையெழுத்துப் பெற்றுப் புத்தகத்தைத் திருப்பித் தந்தார். வாசித்துப் பார்த்த நிலையத் தலைவர்முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல், வைத்துக்கொண்டார்.

வெற்றிப் புன்னகை சிந்தியவாறே வந்து துணைவியிடம் விவரித்த திருமுடி இறுதியில் தெரிவித்தார்:  "கடமை தவறிய குற்றவுணர்வு கொஞ்சங் கூட இல்லை என்பது மட்டுமல்ல,    திமிராயும் பேசினார்;   மாட்டி விட்டுவிட்டேன்;   சரியான பாடம் படிப்பார்."

அருஞ் சாதனை புரிந்த மன நிறைவு.

ஒரு மாதத்துக்குப்பின் அஞ்சலட்டை வந்தது;   விசாரணைக்கு மேலதிகாரி அழைத்திருந்தார். திருமுடிக்குப் பெருமை பிடிபடவில்லை. "புகார் வேலை செய்கிறதுஎன்னாலான சிறு தொண்டு நாட்டுக்கு ஆற்றியிருக்கிறேன்" என்னும் எண்ணத்துடன்,   குறிப்பிட்ட நாள்நேரத்தில் குடந்தை சென்றார். சாட்சிகளும் வந்திருந்தார்கள். மூவரும் உற்சாகத்தோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.

திருமுடி அழைக்கப்பட்டார்.

  -  நீங்கள்தான் திருமுடியா?

  - ஆமாம்.

  - சொந்த ஊர்?

  - கடலூர்.

   -  என்ன வேலை?

   -  நகராட்சி அலுவலர்.

   -  இங்கே வந்து போக எவ்வளவு செலவாகும்?

   -  ஐம்பது ரூபாய்.

    -  விசாரணை விசாரணை என்று நாலு தடவை இழுத்தடித்தால்வீண் செலவு ஒரு புறம்அலைச்சல் மறு புறம்அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயம். இதை எல்லாம் யோசித்துப் பார்த்தீர்களா?

     -  இல்லைஆனால் தட்டிக் கேட்க யாராவது வேண்டும்.

     -  தட்டிக் கேட்டாலும் சரி, முட்டிப் பார்த்தாலும் சரிஎன்ன நடந்துவிடும் என்று நினைக்கிறீர்கள்எங்கள் அலுவலர்மேலே நாங்கள் நடவடிக்கை எடுப்போமாகாப்பாற்றத்தான் பார்ப்போம்.

      -  அப்புறம் எதற்குப் புகார்ப் புத்தகம் இருக்கிறது என்ற அறிவிப்பு?

      -  இருக்கிறது என்றால் வாங்கி எழுது என்றா அர்த்தம்?

என்ன பதில் சொல்வது எனத் திருமுடிக்குத் தெரியவில்லைமௌனம் காத்தார்.

அதிகாரி தொடர்ந்தார்: "பேசாமல் வாபஸ் கடிதம் கொடுத்துவிட்டுப் போய் உங்கள் வேலையைப் பாருங்கள்."

விட்டால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்ட திருமுடி அவ்வாறே செய்த பின்புசாட்சிகளின் கண்ணில் படாமல் நழுவினார்.

புகார்கள் இல்லாமல் புத்தகம் ஏன் காலியாய் இருந்தது என்பது இப்போது புரிந்தது. எல்லாரும் புத்திசாலிகள்தாம் மட்டும் பைத்தியக்காரர் என்று நொந்தார்.

                             +++++++++++++++++++

10 comments:

  1. இன்றைக்கு இது வருத்தப்பட வேண்டிய உண்மை தான் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்திற்கு மிகுந்த நன்றி . ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதிய கதை .

      Delete
  2. பூனைக்கு மணி கட்டிய எலியா.? ரசிக்க வைத்தது.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்திற்கு மிகுந்த நன்றி . நீங்கள் ரசித்ததறிந்து மகிழ்கிறேன் .

      Delete
  3. Sir,

    Really you have recorded the truth.

    ReplyDelete
  4. இன்றைய யதார்த்தம். ஆனால் மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு ஐயா

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . வருத்தத்திற்கு உரிய நிகழ்வுதான் .

      Delete
  5. Replies
    1. பின்னூட்டத்திற்கு மிகுந்த நன்றி .

      Delete