Monday, 25 November 2013

பழைய விளையாட்டுகள் - நொண்டிக் கோடு

பழைய விளையாட்டுகள் -- 1
    நொண்டிக் கோடு

இன்றைய சிறுவர்கள்,  இளைஞர்கள் பொது இடங்களில் ஆடும் விளையாட்டு ஒன்றே ஒன்றுதான்: கிரிக்கட்;  அதுவும் எப்போதாவது.
   
சுமார் எழுபத்தைந்து ஆண்டுக்கு முன்பு, தெருக்களில் நாள்தோறும்,  பலப் பல விளையாட்டுகள் ஆடப்பட்டன. தொலைக் காட்சிகாணொளி (வீடியோ) ஆட்டங்கள்,  ஏன்,  வானொலிகூடத் தோன்றாத காலம்ஊர்திகள் அதிகம் செல்லாத காரணத்தால், காலியாகக் கிடந்த மண் தெருக்களில்  இறங்கி விளையாடிப் பொழுது போக்க வேண்டிய கட்டாயம் அந்த விளையாட்டுகளை ஊக்குவித்தது.
   
மறைந்து போன அவற்றுள் ஐந்தை இன்றைய இளைய தலைமுறைக்கு அறிவிக்கவே இக்கட்டுரை எழுதுகிறேன்.

1 -- நொண்டிக் கோடு


  
தெருவின் குறுக்கே,  ஒரு புறத்திலிருந்து மறு புறம் வரையிலும், காலால் ஓர் அகலமான கோடு கிழித்து, கொஞ்ச தொலைவில் அதற்கு இணையாக  (parallel) இன்னொரு கோடு கிழிப்பர்;  இவற்றை இணைத்து இரண்டு கோடுகள் போட்டுவிட்டால், நான்கும் சேர்ந்து ஒரு பெரிய சதுரத்தைத் தோற்றுவிக்கும். இதுதான் ஆடுகளம். (இடம் போதாவிடில் நீள்சதுரக் களம் அமைக்கலாம்).
     
ஆட்டக்காரர்கள் இரண்டு அணியாய்ப் பிரிவார்கள். மொத்தம் எட்டுப் பேர் எனக் கொள்வோம்: ஓர் அணியினர் ஆடுகளத்துள் நுழைவர்மற்றவர் வெளியில் அமர்வர். இவர்களுள் ஒருவர் மட்டும் எழுந்து, நொண்டியபடி  சதுரத்துள் நுழைந்து எதிரிகளைக் கையாலோ தூக்கிய திருவடியாலோ  தொடவேண்டும்; அகப்பட்டவர் வெளியேறுவார். காலை மாற்றாமல் நொண்ட வேண்டும்; களைத்துப் போயோ தவறுதலாகவோ காலைத் தரையில் ஊன்றிவிட்டால், "காலை உட்டான்" என்ற கூச்சல் எழும்;   வெளியே வந்துவிட வேண்டியதுதான். இன்னொருவர் நுழைவார்.
  
உள்ளிருப்பவர் கோட்டை மிதித்தால் அல்லது கடந்தால் வெளியேற வேண்டும். உள்ளே இருக்கிற நால்வரையும் தொட்டுவிட்டால் வெற்றி; ஒருவர் பாக்கி இருந்தாலும் தோல்வி.
          
இரு சாராரும் வியர்த்து சோர்ந்து விறுவிறுத்துப் போவார்கள். உடலுக்கு அருமையான பயிற்சி.
   
அடுத்த ஆட்டத்தில் அணிகள் இடம் மாறும்.
   
உள்ளேயிருப்பவர், சிக்காமல் இருக்க, ஒரு திசையில் கொஞ்ச தூரம்  விரைவாய் ஓடித்  திடீரெனத் திரும்பி எதிர்த் திசையில் ஓடுவார். அதற்கு "வெட்டுதல்" என்று பெயர். அப்படி வெட்டும்போது, கால் சர் எனச் சறுக்கிக்கொண்டு அரை மீட்டர் வரைகூட போகும்வெட்டுதலில் வல்லவர்கள் பலர் இருந்தனர்; அவர்களைத் தொடுதல் மிக அரிது. வெட்டித் திரும்புவதை எதிர்பார்த்திராத  நொண்டிக்காரர் நிலை தடுமாறிக் காலை "உட்டுடுதல்" சகஜம்.
  
எதிர்த் தரப்பிலும் திறமைசாலிகள் இருப்பார்கள்;  எட்ட எட்டக் காலை ஊன்றிச் சென்றுஒருவரை மட்டுமல்ல, இருவரைக்கூடத் தொட்டுவிட வல்ல அபாரக் கில்லாடிகள்!
   
நொண்டுபவர் அவரையும் இவரையும் மாறிமாறித் துரத்துவது வீண் முயற்சியாய் முடியும். ஒருவரை மாத்திரம் குறி வைத்து அவரை விரட்டிக் களைக்கச் செய்து தொடப் பார்ப்பதே சரியான உத்தி. இது, "ஒருத்தரைக் கரவம் கட்டுதல்" எனப்படும். அவரைத் தொட இயலாமற் போனாலும் சோர்ந்திருக்கிற அவர்,   அடுத்த நொண்டிக்காரரிடம் எளிதில்  சிக்குவார்.
   
சிறுமிகளும் இதை ஆடுவது உண்டு.

   =======================================================

12 comments:

  1. வணக்கம்
    பழைய விளையாட்டுகளை ஒரு கனம் மீட்டுப்பார்க வைத்த விட்டது உங்கள் பதிவு..... அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி . தொடர்ந்து வாசித்துக் கருத்துரைக்கக் கோருகிறேன்

      Delete
  2. சிறு வயது ஞாபகம் வந்தது ஐயா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. சிறு வயது ஞாபகம் பல சமயம் இனியதாய் இருக்கும் . உங்கள் வாழ்த்துக்கும் நீங்கள் தொடர்ந்து வாசித்து ஊக்கமூட்டுவதற்கும் மிக்க நன்றி .

      Delete
  3. நொண்டிக்கொண்டே ஒரு விளையாட்டு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி .

      Delete
  4. கையாலும் காலாலும் எதிராளியைத் தொட்டு வெளியேற்றுவது, கொஞ்சம் கபடி விளையாட்டை ஒத்திருக்கிறது. தாங்கள் சொல்வது போல் இப்போது ஓடிவிளையாடும் குழந்தைகளைக் காண்பது அரிது. தொடர்ந்து பழங்கால விளையாட்டுகளை அறியத்தரும் தங்கள் முயற்சிக்கும் பல புதிய செய்திகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பை எங்களுக்கு வழங்கியமைக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டததுக்கு மிக்க நன்றி . கொஞ்சம் கபடிதான் . ஆனால் ஒரு தரப்பு மட்டுமே உள்ளே போகும் , இவர்களை அவர்கள் பிடித்துச் சிறைப்படுத்தக் கூடாது .

      Delete
  5. பாண்டி விளையாட்டையும் கபடியையும் நினைவு படுத்துகிறது. உடலுக்கு அருமையான உடற்பயிற்சி. இந்தக் காலத்தில் கணினி அல்லது அலைபேசியிலேயே விளையாட்டுகள் முடிந்து விடுகின்றன!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதுபோல் பாண்டி , கபடியுடன் ஒற்றுமை உண்டு . கால மாறுதலுக்கு ஏற்ப விளையாட்டுகளும் மாறுகின்றன . பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

      Delete
  6. பழைய விளையாட்டுக்களை இக்கால இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தும் தங்களின் முயற்சியை வரவேற்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete