Sunday 5 July 2015

மாந்தர் வரலாறு


    

      (மிகப்  பழங்காலத்தில்  உலகம்  காடுகள்  மயமாய்  இருந்ததாம்;  மனிதர் அல்லாத,  கணக்கு வழக்கு   இல்லாத   உயிர்களுக்கு   அவை   சொந்தமாய்  விளங்கின.  மாந்தன்  வந்தான்,  பிடித்தது   சனி  இயற்கைக்கு!   எப்போது,  எவ்வாறு,   எங்கே   அவன்  உண்டானான்?   அதைச்  சொல்வது  இந்தக்  கட்டுரை;  தமிழில்   இப்படிப்பட்ட   அறிவு,  ஆராய்ச்சி  நூல்கள்  பிரசுரமாவதில்லை. யார்  வாங்குவார்?  அறிவுப்  பசி  குறைந்தவர்   தமிழர்;  அவர்களுக்குக்  கதை,  சினிமாத்  தகவல்கள்,  ஆன்மிகம்   போதும்!    சிற்சிலர்    அக்கறை  கொண்டவர்  உண்டு;  விரும்பினால்  அவர்கள்  வாசிக்கலாம்.

    ஆங்கில  நூல்களிலிருந்து  திரட்டித்  தொகுத்த  தகவல்கள்  இதில்  உள்ளன. பிரஞ்சுச்  சொற்களைச்  சரியான  உச்சரிப்புடன்  எழுதி இருக்கிறேன்).

      யூதர்கள், கிறித்துவர்கள், முசுலிம்கள்  ஆகிய  மிகப்  பெரும்பாலான  உலகினர்  விவிலியத்தின்  கூற்றுப்படி,  ஆதாம்  ஏவாள்  இணையரைக்    கடவுள்  படைத்ததாயும்   இவர்களிடமிருந்து  மனிதச்  சந்ததி  உருவானதாயும்  நீண்டநெடுங்காலமாக  நம்பிவருகின்றனர்.   இந்த  நம்பிக்கைக்கு  மாறாய்,   லுசிலிஓ  வனினி   (Lucilio   Vanini) என்னும்  இத்தாலிய  தத்துவ   அறிஞர்,   தமது  ஆராய்வின்  விளைவாய்,  குரங்கிலிருந்து  மனிதன்  வந்தான்    என்ற  புரட்சிக்  கருத்தை  1616 இல்  கூறினார்.  மறை நூலுக்கு  எதிர்ப்பா? சகிப்பதுண்டோ  இந்த  அக்கிரமத்தை?   வெகுண்டெழுந்த  கிறித்துவ  வெறியர்கள்  அவரை  உயிருடன்   எரித்துக்  கொன்றார்கள்.  முன்காலத்தில்  மட்டுமா  மத வெறி   கொடூரமாய்த்   தலைவிரித்துத்   தாண்டவமாடிற்று?

      இரண்டு  நூற்றாண்டுக்குப்  பிற்பாடு, கருத்து  சுதந்தரத்தின்  முக்கியத்துவம்  உணர்ந்து,   அதற்கு  சட்டப்   பாதுகாப்பைப்  பல்வேறு   நாடுகள்  உறுதி   செய்தமையால்,  மாந்தர்  வரலாறு  குறித்த  வனினியின்  ஆய்வை  அச்சமின்றித்   தொடர்ந்தனர் அறிஞர்.

        பார் புகழ்  பிரஞ்சு  இயற்கையியலார்  (naturalist)  ழோர்ழ்   குய்விஏ  (George Cuvier)    'புதையெலும்பு   ஆய்வின்   தந்தை'   என்று  போற்றப்படுபவர். பூமியுள்   அமிழ்ந்து கிடக்கிற   தொல்  விலங்கெலும்புகளைப்  பற்றிய   ஆராய்ச்சி  அவருடையது;    அகப்பட்ட   சில  எலும்புகளைக்  கொண்டு  முழு  எலும்புக்  கூட்டையும்,  உறுப்புகளையும்கூட,  உருவாக்குவதற்கான  அடிப்படை   வழிமுறைகளைத்  தம்  நூலொன்றில் விவரித்தார்   (1812).  அதன்  தலைப்பு: "ரெஷேர்ஷ்  சுய்ர்லேசோஸ்மான்  ஃபொசீல் தே கத்ருய்ப்பேது"  (Recherches  sur  les  ossements   fossiles  des  quadrupedes). பொருள்:  நான்கு  கால்  விலங்குகளின்  புதைபடிவங்களைக்  குறித்த  ஆராய்ச்சிகள்.  அந்த  நூல்   பிற்காலத்தார்க்குத்  தலைசிறந்த  வழிகாட்டி  ஆயிற்று.

     வேல்ஸ்    நாட்டுப்  பாதிரியார்   வில்லியம் பக்லேன்ட்  (William Buckland), 1822 இல்,  அந்த  நாட்டின்  குகையொன்றை அகழ்ந்து   ஓர்  எலும்புக்  கூட்டை எடுத்தார்;   மஞ்சள்  களிமண்ணில்  புதைந்திருந்த  அதற்கு,   'ரெட்  லேடி'  (செம்மடந்தை)  என்று  பெயர்  சூட்டினார்.  அது   க்ரோ மஞ்ஞோன்  (Cro  Magnon)  மனித  இனத்தின்  முதலாம்   'மாதிரிச்  சான்று' (specimen)  என்று  நெடுங்காலத்துக்குப்  பின்பு புரிந்தது. (க்ரோ   மஞ்ஞோன்  -- தென்   மேற்கு   பிரான்சில்  ஒரு  குகை).

      பெல்ஜிய இயற்கையியலர்    டாக்டர்    ஃபிலிப்  ஷார்ல்   ஸ்க்மெர்லிங்          (Philippe  Charles  Schmerling)  அந்  நாட்டு   லிஏழ்  (Liege)  என்னும்  ஊருக்குப்   பக்கத்தில்  ஒரு  குழந்தையின்  எலும்புக்  கூட்டு  மிச்சங்களை, 1829 இல்  தோண்டி  எடுத்தார்.

       ஜெர்மனியில்  நீயெண்டர்  பள்ளத்தாக்கு  உள்ளது; அந்நாட்டு  மொழியில்  நீயெண்டர்த்தால். அங்கொரு  குகையில்   பள்ளந்  தோண்டிய  தொழிலாளர்கள் களிமண்ணுக்குள்  தற்செயலாய்ப்  பார்த்தது  ஒரு  மனித  எலும்புக் கூடு  (1856). மண்டையோட்டின்   மேல்தட்டு, ஒரு  காறையெலும்பு (clavicle), மேல்கை எலும்புகள், கீழ்க்கை எலும்புகள், தோள்பட்டை   எலும்பு (shoulderblade),  இரு  தொடையெலும்புகள், சில  விலா  எலும்புகள், பாதி  இடுப்பெலும்பு   என  உடலின்  பல  பகுதிகள்  அதில்   இருந்தன.   இவை   டாக்டர்  ஃபிலிப் எடுத்த எலும்புகளை    ஒத்திருந்தன.  ஆய்வில்  தெரிந்தது,   இவை   வேறு  வகை மனிதனுடையவை என்று.  "நீயெண்டர்த்தால்  மனிதன்"  என்ற  பெயரை   வைத்தார்கள்;   இதன் முதல்  மாதிரிச் சான்று  தான்   மேற்படி   குழந்தை.

        குய்விஏவுக்கு  அடுத்தபடியாகப்  புதை படிவ  ஆய்வில்  புகழெய்திய  பிரஞ்சு  அறிஞர்   எதுஆர்   லர்த்தே  ( Edouard  Lartet)  தம்    நாட்டில்  மேற்கொண்ட   பற்பல  அகழ்வுகள்   தந்தவற்றுள்  ஒரு பெருங்குரங்கின்  (ape)  கீழ்த்தாடையும்   இருந்தது  (1837).  அதுவே  முதல்  குரங்கெலும்பு;  (கிபன், ஒராங் உட்டான்,  கொரில்லா,  சிம்பன்சி  ஆகிய  குரங்குகளைப்  பெருங்குரங்கு  என்கிறார்கள்).  அதற்கும்  தென்கிழக்காசியாவில்  வாழ்கிற  கிபன்  (gibbon)  என்னும்  குரங்குக்கும்  இடையே  அதிசயிக்கத்தக்க  ஒற்றுமையுண்டு   என்பதை  ஆராய்ச்சி தெரிவித்தது.  1852 இல்,  அவரிடம்    மற்றொரு  குரங்கின்  கீழ்த் தாடை  அகப்பட்டது;  இதன்  பற்கள்  மனிதப்  பற்கள்  போல்  இருந்தன. ஜெர்மன்  உடற்கூற்றியலர்   (anatomist) பேராசிரியர்   ஹெர்மன்  ஷாஃபவுசன்   (Herman  Schaffausen)  அந்த  மிச்சங்கள்   மனித  இனத்துக்குக்  குரங்குதான்  மூலம்   என்பதை   நிரூபிப்பதாக    உறுதியாய்க்  கூறினார்.

        க்ரோ  மஞ்ஞோன்  குகை பற்றி    முன்பே  அறிந்தோம்.    அங்கு,   எதுஆர்  லர்த்தேயின்   புதல்வர்   லூய்  லர்த்தே  (Louis Lartet)   பிரஞ்சு  அரசால்   நியமிக்கப்பட்டுச்   செய்த  ஆராய்ச்சியில்,    ஐந்து   எலும்புக்   கூடுகளைக்   கண்டெடுத்தார்  (1868);   அவை   கிடந்த  நிலையும்  அருகில்  எலும்புத்   துண்டுகளின்   பரவலும்    "இறந்தவர்கள்  புதைக்கப்பட்டார்கள்"    என்கிற  தகவலைப்   புலப்படுத்துவதாய்   அவர்  சொன்னார்.

   நீயெண்டர்த்தால்கள்,  க்ரோ மஞ்ஞோன்  மனிதர்களுக்கு  முன்பு  தோன்றியவர்கள்;   ஐரோப்பாவிலும்  தென் மேற்கு  ஆசியாவிலும்  250 000  ஆண்டிலிருந்து  35 000  ஆண்டு  வரைக்குமான  காலக்  கட்டத்தில்  வாழ்ந்தார்கள்;  சுமார்  10 000  வருடம்  அல்லது  அதற்கு  மேற்பட்டு,   க்ரோ மஞ்ஞோன்களுடன்   ஐரோப்பாவில்   ஒரே  சமயத்தில்  வசித்திருக்கிறார்கள்;   குரங்கு - மனிதர்கள்  என்று   அவர்களைச்  சொல்லலாம்;   க்ரோ மஞ்ஞோன்களோ  மேம்பட்ட  தோற்றமும்  ஓரளவு  எழிலும்  வாய்ந்தவர்கள்.

     க்ரோ மஞ்ஞோன்   என்பதற்குப்  பதிலாக,  இப்போது,   "ஐரோப்பிய  முற்பட்ட  நவீன   மனிதர்"  (European  Early Modern   Humans)   அல்லது  "முற்பட்ட  ஹொமோ  செப்பியன்ஸ் செப்பியன்ஸ்" (Early Homo sapiens  sapiens) என்கிறார்கள். இவர்கள்  கிழக்கு  ஆப்ரிக்காவில்  உதித்து,   1 லட்சம் -  2  லட்சம்  ஆண்டுக்கு முன்  (சுருக்கம்  ல/ஆ/மு)   அங்கிருந்து   வெளியேறியவர்கள்.

   எர்ன்ஸ்ட்   ஹெய்க்கல்   (Ernst  Haeckel) -  ஜெர்மன் உயிரியல், விலங்கியல்    வல்லுநர் -   பழங்கால  மனிதர்களுக்கும்   இக்காலப்   பப்புஆ    (ஆஸ்ட்ரேலியாவுக்கு    வடக்கில்  உள்ளது  பப்புஆ  நாடு)   மற்றும் பசிபிக்  தீவு  மக்களுக்கும்  மிக   நெருக்கமான  தொடர்பு  இருக்கிறது  என  1868 இல்  கூறினார்;  கிபன்களுடைய   கருக்களுக்கும்    மனிதக்   கருக்களுக்கும்  இடையே  கண்ட   வியப்பூட்டும்    ஒற்றுமையால்  கவரப்பட்ட   அவர்,   இந்தியப்  பெருங்  கடலில்  மூழ்கிய  லெமூரியா  கண்டத்தில்,   "சொர்க்கத்தின்  தோட்டங்கள் "    இருந்ததாகவும்    நம்   தொல்  மூதாதையர்,    கிபன்களைப்  போன்றவர்  எனவும்  கருத்து  தெரிவித்தார்.   விவிலியம்  ஆதியாகமம்  அதிகாரம்  2,   வசனம் 8:    "தேவனாகிய  கர்த்தர்   கிழக்கே   ஏதேன்  என்னும்  ஒரு  தோட்டத்தை  உண்டாக்கி,  தாம்  உருவாக்கின  மனுஷனை  அதிலே  வைத்தார்".  இத்தோட்டத்தைத்தான்  அவர்  சொர்க்கத்தின்  தோட்டங்கள்  என்றார்.

     லெமூரியாவில்  மனிதக்  குரங்குகள்   வாழ்ந்தன,  அது  மூழ்கிவிட்டது  என்பது   அவர்  முடிவு;   அங்கு  நாகரிக    மானிடர்  வசித்ததாய்   அவர்  சொல்லவில்லை.

      அவருடைய  கூற்றை  மறுத்தது   ஆங்கில  ஆய்வர்  சார்லஸ்  டார்வினின்    நூல்: (1871):  மனிதனின்  பூர்விகம்  (The Descent of Man).

                  அதில்   அவர்   குறிப்பிட்டது:

            உலகின்  ஒவ்வொரு  பகுதியிலும்  வாழ்கிற    பாலூட்டிகள்   ( mammals) அதே  இடத்தில்  முன்னதாய்   வசித்து  அழிந்த   வர்க்கத்துடன்   நெருங்கிய  உறவு    கொண்டவை;    ஆகையால்,   கொரில்லாவுக்கும்   சிம்பன்சிக்கும்  முந்தி, அவற்றைப்  போன்ற  பெருங்குரங்குகள்  ஆப்ரிக்காவில்  உறைந்திருக்க  சாத்தியமுண்டு;  இந்த  இரண்டு  வர்க்கங்களும்   மனிதர்க்கு   மிக   நெருங்கியவை;  எனவே   நமது  மிகத்  தொன்மைக்  கால  மூதாதையர்    அந்தக்  கண்டத்தில்   வாழ்ந்தனர்  என்பது   அதைவிட  சாத்தியம்.

       அவரது    ஊகம்  பின்னாளில்  நிரூபணமாயிற்று.

(தொடரும்)
(படம் உதவி: இணையம்)
                                                               ----------------



16 comments:

  1. கிடைக்கப்பட்ட சான்றுகள் மூலம் பலவற்றை அறிய முடிகிறது... நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி . சான்றுகளை ஆராய்ந்து புதுத் தகவல்களைத் தெரிவிக்கின்றார்கள் அறிஞர்கள் ; அவற்றை நாம் அறிவது நல்லது.

      Delete
  2. தங்களது மனிதனின் மூலம் பற்றிய மேலைச் சிந்தனைகளை ஆர்வத்துடன் தொடர்கிறேன் ஐயா.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆர்வத்துக்கும் தொடர்தலுக்கும் மிக்க நன்றி . சிந்தனைகள் மட்டுமல்ல , ஆய்வு முடிவுகளுங் கூட

      Delete
  3. Replies
    1. வாசித்துக் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி .

      Delete
  4. மாந்தர் வரலாறு குறித்த தொடக்ககால ஆய்வு மற்றும் ஆய்வாளர்களைப் பற்றி விபரங்கள் அறிய உதவும் தொடருக்கு நன்றி. புதிய செய்திகள் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
    Replies

    1. கருத்துரைக்கு மிக்க நன்றி . எவ்வளவோ பாடுபட்டுப் புதிய உண்மைகளைக் கண்டு உலகுக்கு வழங்கியவர்கள் பற்றி அறிவது ஒருவித நன்றிக் கடன் என்று எனக்குத் தோன்றுகிறது . .

      Delete
  5. கல் தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கும் முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்மக்கள் என்பதெல்லாம் உண்மை இல்லையா.

    ReplyDelete
    Replies
    1. உண்மை அல்ல . இது பற்றிக் கட்டுரை இறுதிப் பகுதியில் எழுதியிருக்கிறேன் . உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி .

      Delete
  6. வலைச் சர ஆசிரியனாக நான் இருந்தபோது ( பத்து நாட்களுக்கு முன்)உங்களையும் உங்கள் பதிவொன்றையும் அடையாளபடுத்திக் காட்டி இருந்தேன் ஆனால் வலைச்சரம் குறித்து உங்களுக்குத் தெரிவிக்காதது என் தவறு.

    ReplyDelete
    Replies
    1. என்னை அறிமுகப்படுத்திய உங்கள் பெருந்தன்மைக்கு என் அகமார்ந்த நன்றி . தெரிவிக்காதது பற்றி வருந்தவேண்டாம்; அதைத் தவறு என நான் நினைக்கவே இல்லை

      Delete
  7. அடேயப்பா... எவ்வளவு தகவல்கள்... ஆய்வு விவரங்கள்.. மனிதகுலம் பற்றிய இன்றைய ஆய்வாளர்கள் அனைவருக்கும் முன்னோடியாய் 1616 இல் லுசிலிஓ வனினி இருந்திருக்கிறார். அவருடைய புரட்சிக்கருத்தின் காரணமாக அவர் எரித்துக்கொல்லப்பட்டது மிகவும் கொடுமை. அறியாத பல தகவல்களை அறியத்தரும் தங்கள் முயற்சிக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. .

      அறிஞர் பற்பலர் உண்மையைக் காணும் ஆர்வத்துடன் தொடர்ந்து பல்லாண்டு உழைத்திருக்கின்றனர் . அது குறித்த தகவல்களை நாம் அறிய முடிந்தது பற்றி மகிழ்வோம் ! பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

      Delete
  8. யாரும் எழுத முன் வராத வித்தியாசமான தொடர்! அரிய பல தகவல்கள்! ஆவலுடன் அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  9. புது வருகை : மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் . கருத்துரைக்கு மிக்க நன்றி .

    ReplyDelete