Wednesday, 12 August 2015

உயர்ந்தவனா மனிதன்?

   
     பிற விலங்குகளைக் காட்டிலும் மேலானது மானிடப் பிறப்பு எனவும் நிறையப் புண்ணியம் 
செய்த உயிரே மனிதனாகும் எனவும் புல் பூண்டு பூச்சி பற்பல விலங்குகள் என்று மாறிமாறிப் 
பிறந்து இறுதியில்தான் மாந்தராவார் எனவும் மக்களிடையே நம்பிக்கை உண்டு; ஆனால் 
மனிதனும் ஒரு விலங்குதான் என  அறிவியல் பறைசாற்றுகிறது. குரங்கின் பரிணாமந்தானே 
மனிதன்?

    பறவை அறிஞர் சாலிம் அலி கூறியுள்ளார்:

   “பிற உயிர்களிலிருந்து மனிதன் எவ்வகையிலும் மாறுபட்டவனல்லன் என்று நான் 
உறுதியாக நம்புகிறேன். மற்ற விலங்குகளுக்கு உள்ள ஆதாரமான தூண்டுதல்கள், இயல்புகள், 
பழக்க வழக்கங்கள்தான் இவனிடமும் இருக்கின்றன; ஆனால் மனித மூளை அதிக வளர்ச்சி 
பெற்றுவிட்டது; அதைக் கொண்டு தன்  செயலையும் சிந்தனையையும் பகுத்தறிவு கொண்டு 
அமைத்துக்கொள்ள முடிகிறது; அதே சமயம் கடவுள் விதித்த விதி என்று நினைத்துப் 
பிற உயிர்களைவிடத் தானே   உயர்ந்தவன் என்ற பொய்யான ஒரு முடிவைத் தனக்குள்ளே 
கற்பித்துக்கொண்டிருக்கிறான்.

     டார்வின், மற்ற உயிர்களிலிருந்து இயற்கைத் தேர்வின் வழியாக உருவானவன்தான் 
மனிதன் என்று சொன்னார்; இதை நம்புவது எனக்கு எளிதாக  இருக்கிறது. எனவே மனிதன் 
என்பது உன்னதம் பெற்றதொரு வாலில்லாக் குரங்குதான் என்றே நம்புகிறேன். மனிதனைப் 
போலவே விலங்குகளிடமும் அழகியல் மற்றும் நெறிமுறை எண்ணங்கள் இருக்கத்தான் 
செய்கின்றன. எடுத்துக்காட்டாக ஆஸ்திரேலியாவின் போவர் பறவைகள் குறித்துப் பார்க்கலாம்:
       
போவர் பறவை
     
     ஆண் பறவை கவனத்துடன் தரைப் பகுதியொன்றைத் தேர்ந்தெடுத்து சுத்தஞ்  செய்து 
அங்கே சுள்ளிகளைச் சேர்த்து வைத்துக் கூடு கட்டுகிறது; வண்ணப்  பொருட்களைக் கவனத்துடன்  
பார்த்து எடுத்து வந்து கூட்டின் உட்புறத்தினை அழகு  செய்கிறது; பல வேளைகளில் அந்தப் 
பொருட்களை வெகு தூரத்திலிருந்தும் கொண்டுவருகிறது; இவையெல்லாம் தன் 
பெட்டையை மகிழ்விக்கத்தான்.

தூக்கணாங்குருவி
     
     நம் நாட்டிலேயே தூக்கணங்குருவியை எடுத்துக்கொள்ளலாமே! இதிலும்  ஆண்தான் 
கூடு கட்டுகிறது; கூடு ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வரும்போது இதே போன்ற பல கூடுகளைப்  
பார்த்து ஒன்றைப் பெண் குருவி தேர்ந்தெடுக்க அதற்குப்  பிறகு ஆண் குருவி கூட்டைக் 
களிமண்ணை  வைத்து வண்ண மயமான மலரிதழ்களைப் பொருத்தி அழகு செய்து முற்றாகக் 
கட்டி முடிக்கிறது. ஒரு பெண்துணையைக் கவர இவற்றையெல்லாம் செய்கிறது ஆண்!“
      
     (ச. முகமது அலி இயற்றிய “பறவையியல் அறிஞர் சாலிம் அலி“ என்னும்  நூல். 
பக்கம் 71 – 73)

                                +++++++++++++++
(படங்கள்: நன்றி இணையம்)

6 comments:

 1. நல்ல எடுத்துக்காட்டுகள் ஐயா...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் க்ருத்துரைக்கு மிகுந்த நன்றி .

   Delete
 2. வண்ணப்பொருட்களை எடுத்துவந்து கூட்டை அழகு செய்யும் போவர் பறவையின் செய்கை விந்தை தான். தூக்கணாங்குருவியின் கூட்டைப் பார்த்திருக்கிறேன். பின்னலில் என்ன ஒரு கலை நேர்த்தி! சலீம் அலி கூறுவது உண்மை தான். மனிதன் என்பவன் உன்னதம் பெற்றதொரு வாலில்லாக் குரங்கு தான். பகிர்வுக்கு மிகவும் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ;வண்ணங்களைப் பற்றிய அறிவும் அழகுணர்ச்சியும் ஒரு சிறிய தலைக்குள் அடங்கிய சின்னஞ்சிறு மூளைக்கு இருப்பது வியப்புக்கு உரியதே . கருத்துரைக்கு மிக்க நன்றி .

   Delete
 3. பறவை அறிஞர் சலீம் அலி அவர்கள் கூறியுள்ள கருத்துகள் எவ்வளவு ஆழ்ந்த கருத்துகள். சில விஷயங்களில் மனிதர்களை விடவும் பறவை விலங்குகள் அதி புத்திசாலியாகவும் திறமைசாலிகளாகவும் இருப்பதையும் பார்க்கிறோமே.. நல்லதொரு பகிர்வுக்கு மிகவும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. கருத்துரைக்கு மிக்க நன்றி . உண்மைதான் . மனிதனைக் காட்டிலும் சில துறைகளில் பிற உயிரினங்கள் மேம்பட்டுள்ளன.

   Delete