Sunday, 30 August 2015

செல்லாதா?

              

   (சிறு வயதில்  நான் படித்த சில கதைகளை  அன்பர்களுடன் பகிர விரும்புகிறேன்; சிலர்க்கு முன்னமே தெரிந்திருக்கலாம்)





   போக்குவரத்து  வசதி  இல்லாக் காலம்.

   ஆணிமுத்து செட்டியாரும்  அவருக்கு அறிமுகமான பூவழகனும்  சேர்ந்து வாணிகத்துக்காகப்  பணத்துடன் வேற்றூருக்கு நடந்து சென்றனர். வழியில் சிறு  காடொன்றைக்  கடக்க நேர்ந்தது. முற்பகல்தான்  எனினும்பலவகை மரங்களின்  கனத்த  அடர்த்தி  காரணமாய்ப்  போதிய வெளிச்சம் இல்லை.

  "மடியில்   கனமிருந்தால்  வழியில் பயம் " என்பது  பழமொழி . கள்ளர்கள்  வருவார்களோ  என்ற அச்சம்  மேலிட்டவர்களாய்கடவுளை வேண்டிக்கொண்டு  விரைந்த அவர்கள், தொலைவில்கும்பலாய் ஐவர்  வரக் கண்டனர்.

   செட்டியார்  சொன்னார்:

  "திருடராக இருக்கலாம். நீ அதோ  அந்த  மரத்தடியில்  படுத்துக்கொள்; நான் கொஞ்ச  தூரத்தில் படுக்கிறேன்;  கைகாலை அசைக்காமல்,  ஓசை எதுவும் வெளிப்படுத்தாமல், மூச்சைக்கூட  பலமாய் விடாமல், செத்ததுபோலக்  கிடந்தால்,  அவர்கள்  கவனிக்காமல் போய்விடுவார்கள்".

   அப்படியே  செய்தார்கள். கூட்டம் நெருங்கியது. ஒருவனின்  கால் பூவழகனுடைய  உடம்பின்மேல்  இடித்ததுஅவன்  குனிந்து  பார்த்து, "இங்கே ஒரு பிணம் கிடக்கிறது"  என்றான்.

    தன்னைப் பிணம் என்று சொல்லக் கேட்ட பூவழகன், கடுங் கோபம் கொண்டு, "உங்கள் வீட்டுப்  பிணம்  இப்படித்தான்  மடியில் பணத்தைக்  கட்டிக்கொண்டு  படுத்திருக்குமோ?" என  அதட்டும் குரலில் கேட்டான்.

    உடனே அவனைப் பிடித்துத் தூக்கிப் பணத்தைப்  பிடுங்கிக்கொண்டனர். அதில்  ஒரு  நாணயத்தை  உற்று  நோக்கிய ஒருவன், "இது செல்லாக்  காசு  என்று  நினைக்கிறேன்" என்றவுடன்,  பூவழகன்,  "செல்லாதா? செல்லும்  செல்லாததற்கு அதோ படுத்திருக்கிற  செட்டியாரைக் கேள்" என யோசனை சொன்னான். அப்போதுதான்  அவரைப் பார்த்தார்கள்அவரது பணமும் பறி போயிற்று என்று  சொல்லவேண்டுமோ?

   இந்தக்  கதையிலிருந்து, "செல்லுஞ்  செல்லாததற்குச்  செட்டியாரைக்  கேள் " என்னும்  பழமொழி  பிறந்தது. எது குறித்தாவது  ஐயம் தோன்றினால்  இந்தப்  பழமொழியைப்  பயன்படுத்துவார்கள்.

                   ----------------------------------------------------

 (படம் ; நன்றி இணையம்)

12 comments:

  1. Replies
    1. பாராட்டிக் கருத்து தெரிவித்ததற்கு மிகுந்த நன்றி .

      Delete
  2. செட்டியார்கள் பெரும்பாலும் கடை வைத்திருப்பதால் பணம் செல்லுமா செல்லாதா என்பதை சரியாக சொல்லிவிடுவார்கள் என்ற கணிப்பில் உருவான பழமொழி என்று நினைத்திருந்தேன். ஆனால் அதற்குப் பின்னால் இப்படியொரு கதை இருக்கிறதென்று இப்போதுதான் அறிந்தேன். தாங்கள் சிறுவயதில் படித்த கதைகளை நினைவுபடுத்தித் தொகுத்து வழங்க முன்வந்திருப்பது மிகவும் மகிழ்வளிக்கிறது. இந்தக் கதையை நான் கேட்டதில்லை. இனி வரவிருக்கும் கதைகளையும் என்னைப் போன்றவர்கள் கேட்டிருக்கும் வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். பகிர்வதற்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இளைய தலைமுறை அறிந்திருக்காது என எண்ணித்தான் கதைகளைப் பகிர்கிறேன் . பல கதைகள் மறந்து போய்விட்டன.பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .

      Delete
  3. கதை மிகவும் சுவையாயிருக்கிறது. மிகவும் ரசித்தேன். இந்தப் பழமொழியை இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. இது போல் நீங்கள் சிறுவயதில் படித்து ரசித்த கதைகளைத் தொடர்ந்து கொடுங்கள். நாங்களும் ரசிப்போம். பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கதை ரசிக்கப்பட்டமை மகிழ்வு தருகிறது . மேலும் நான்கு கதைகளைப் பதியப் போகிறேன் . தொடர்ந்த ஆதரவு தேவை . பின்னூட்டத்திற்கு மிகுந்த நன்றி .

      Delete
  4. கேட்ட கதைதான் இருந்தாலும் படிக்கும் போது ரசிக்க வைத்தது.

    ReplyDelete
    Replies
    1. கேட்ட கதைதானே என அலட்சியப்படுத்தாமல் பின்னூட்டம் இட்டதற்கு மிகுந்த நன்றி .

      Delete
  5. Replies
    1. உங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் ; பாராட்டிக் கருத்து அறிவித்தமைக்கு மிகுந்த நன்றி . தொடர்ந்து ஆதரியுங்கள் .

      Delete
  6. பழமொழி கேள்விப் பட்டிருக்கிறேன், ஆனால் அதற்கு ஒரு கதை இருப்பதை இப்போது தான் அறிந்து கொண்டேன், கதை ரசிக்கும்படியாக இருந்தது, தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete