Wednesday, 21 October 2015

மூளையேது? (இதுவும் பிரஞ்சுக் கதை)

   
     


  நடை  தளர்ந்து போனமையால்  வேட்டையாட  முடியாமல்  வருந்தியது  ஒரு  சிங்கம்; முதுமையில்  பட்டினிச்  சாவுதான்  வன விலங்குகளின்  கதி  என்றாலும், உயிர் உள்ளவரை  பசியைத்  தணிக்க இரை  தின்ன  வேண்டுமல்லவா? இருக்கும்  இடந்தேடியா  உணவு  வரும்?  துள்ளும்  மான்களை  விரைந்தோடித்  துரத்தி, எம்பிப் பாய்ந்து பிடித்துக் குரல்வளையில்  கடித்துவயிற்றை  நிரப்பிக்கொண்ட அந்த  இனிய  காலம்  இனி  வருமா? சுகந்தருமா?

  ஏங்கித்  தவித்த  சிங்கம் எதிரில்  வந்த  ஒரு  நரியிடம், "வா, வா, நரியே, நல்ல சமயத்தில்  வந்தாய்ஓடியாடி  இரை  பிடிக்க  இனி  என்னால்  இயலாது  என்பது  உனக்குத்  தெரியும், பசி  தாங்க  முடியவில்லை,  நீ  எப்படியாவது  ஒரு  விலங்கை  அழைத்து  வாயேன்" என வேண்டியது.

 -----  அரசே, உங்கள்  நிலை  கண்டு  இரங்குகிறேன்தவித்த  வாய்க்குத்  தண்ணீர்  தருவதும் பசித்த  வயிற்றுக்கு  உணவு  ஈவதும்  தலைசிறந்த  அறமல்லவோ? "உண்டி  கொடுத்தோர் உயிர்  கொடுத்தோரே" என்பது  நூற்றுக்கு  நூறு மெய்நான் போய்  யாரையாவது  அழைத்து வருகிறேன்.

  ------ மிக்க  நன்றிநரியாரே!"

   ஓர் இளமானைச் சந்தித்த  நரிஇது  வேலைக்கு  ஆகும்  என்றெண்ணிஅதையணுகி,

   "மானேநலமாகும்பிடப்  போன  தெய்வம்  குறுக்கே  வந்தாற்போல் நீ  தரிசனம் தந்தாய். உன்னைப்  பார்க்க வேண்டும்  என்று   நம் மன்னர் என்னை  அனுப்பினார்இவ்வளவு  எளிதில்  காண  முடிந்தமை  வியப்பு!"  என்றது.

   ---  எதற்காகப் பார்க்க  வேண்டுமாம்?

   ---  தெரியாதுஅரசரிடம்  காரணம் கேட்க  முடியுமாஅவருடைய  உடல் நிலை  மோசம், காட்டுக்கே  தெரியும்அதிக  நாள்  தாங்காது.

   ---  எங்கே இருக்கிறார்?

   ---  அருகில்தான்என்னுடன் வா.

  இரண்டும்  சிங்கத்தின் இருப்பிடத்தை  அடைந்தன.

   "மானேவா;  எப்படி  இருக்கிறாய்?

  --- நலந்தான்,  வேந்தேநீங்கள்?

  ---  நாள்களை  எண்ணிக்கொண்டிருக்கிறேன்உலகை  நீங்குவதற்கு முன்எல்லாக்  குடிமக்களையும்  கடைசி  தடவையாய்ப் பார்க்க  வேண்டும் என்று  ஆசைசிலரைப்  பார்த்தாயிற்று;  உனக்காக  நரியைத்  தூது  விட்டேன்.

    ---- எனக்கும்  மகிழ்ச்சிதான் உங்களைச்  சந்தித்ததில்முன்னெல்லாம்  உங்கள்  குரலைக்  கேட்டாலே  நடுநடுங்குவேன்இப்போது  எதிரில்  வர  அச்சமில்லை.

    ----  நல்லதுஇன்னம்  கிட்டே  வா;  கட்டியணைக்க  விரும்புகிறேன்".

    நெருங்கிய  மானைப்  பற்ற  முயன்ற  சிங்கத்திற்குப்  போதிய  வலிமை இல்லை;  எச்சரிக்கையுற்ற  மான்  எடுத்தது  ஓட்டம்.

   "பொறுமை  இழந்து  காரியத்தைக் கெடுத்துவிட்டீர்களே!

    ----  அவசரப்பட  வேண்டியதாயிற்றுவயிற்றைக்  கிள்ளுகிறதே  பசி.   நீ மறுபடியும்  போய்ச்  சமாதானப்படுத்தி  அழைத்து  வா; தந்திரத்தில்  உன்னை  மிஞ்சுவார் யார்?"

   உள்ளங்  குளிர்ந்த  நரி, மானைத்  தேடிப்பிடித்து, "என்ன  இப்படி  ஓடி  வந்துவிட்டாய்?" என்று  வினவியதும்அது  கோபத்துடன்,  "சீ! வஞ்சகனே, இரண்டு  பேரும்  சேர்ந்து  என்னைக்  கொன்று  தின்னத்  திட்டம்  போட்டீர்களா? பிடியில்  சிக்காமல்  நழுவினேனோபிழைத்தேனோ!

  ---- நீ நினைப்பது  தவறு; சிங்கத்துக்கு  இப்போதெல்லாம்  விலங்கபிமானம்  நிறைய  உண்டாகியிருக்கிறது;  உன்னைத் தழுவி  உச்சி  மோந்து  களிக்க  அது  விரும்பியதுகட்டுக்கடங்காத  ஆசைஆகையால்தான்  அவசரம். வா, குடிமகனுக்கு  நற்பேறு  அல்லவா  மன்னனைக்  கட்டித்  தழுவும்  வாய்ப்பு?"

    நரியின்  சொல்வன்மையில் சொக்கிப்  பகுத்தறிவைப் பறி கொடுத்தது மான்.

   இந்தத்  தடவை  சிங்கம்  பொறுமை  காத்துகைக்கெட்டிய  நெருக்கத்தில்  வந்தபின்பிடித்துக்  கொன்று  ஆனந்தமாய்த்  தின்றதுசதையைக் கடித்து  வலுவாய் இழுத்ததில் மானின் மூளை ஒரு பக்கமாய் விழுந்ததுதான்  தாமதம்நரி  அதைத்  தின்று  தீர்த்தது.

  முக்கிய உறுப்புகளை உண்டபின், சிங்கம், "மூளையைத்  தின்னவில்லையேஅது எங்கே?"  எனக்  கேட்டபோதுநரி  சொன்னது:

  "அதற்கு மூளையேதுஅரசே? மூளை இருந்தால் அது மறுபடியும்  வந்திருக்குமா?"

      =================================
(படம் உதவி: இணையம்)

9 comments:

 1. வணக்கம்
  ஐயா
  அறிவுக்கு விருந்தாகும் கதை படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம 1
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி .

  ReplyDelete
 3. நரியின் சாதுர்யமான பதில் ரசிக்க வைத்தது. பகிர்வுக்கு மிகவும் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ரசித்துக் கருத்து அறிவித்தமைக்கு மிக்க நன்றி .

   Delete
 4. நல்ல கதை... அருமை ஐயா...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி .

   Delete
 5. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி .

  ReplyDelete
 6. அதானே.. இப்போது சிங்கத்துக்கு மூளை இருக்கிறதா இல்லையா என்று நமக்கு சந்தேகம் வந்துவிடுகிறது... நரியின் சாமர்த்தியம் ரசிக்கவைக்கிறது. பிரெஞ்சுக் கதைப்பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 7. ரசித்துக் கருத்து எழுதியமைக்கு மிக்க நன்றி .

  ReplyDelete