(17 ஆம் நூற்றாண்டுப்
பிரஞ்சுக் கவிஞர் லா ஃபோந்த்தேன் (La Fontaine) கிரேக்கத்தின் ஈசாப் இயற்றிய கதைகளைத் தம் மொழியில் பெயர்த்தார்; அதில் ஒரு மாறுதலைச் செய்தார்: பாத்திரங்களைப் பேச வைத்து நாடகமாக்கினார். ஒரு கதையைத் தமிழில் பகிர்கிறேன்.)
பீதியைப் பரப்பும் ஒரு நோய், பூமியின் கடுங்
குற்றங்களைத் தண்டிக்க வானம் தன் சினத்தில் உண்டாக்கிய
நோய், பிளேக் (பெயரைச் சொல்ல வேண்டுமே) ஒரே நாளில் நரகத்தை நிரப்ப வல்லது, விலங்குகளைத் தாக்கிற்று.
எல்லாரும் மடிந்துவிடவில்லை, ஆனால் எல்லாரும் தாக்குண்டனர். போகும் உயிரை நிலைநிறுத்த எவரும் அக்கறை செலுத்தவில்லை; எந்த உணவும் பிடிக்காமற்
போனது; ஓநாய்களோ நரிகளோ இரை பிடிக்கப் பதுங்கவில்லை.
சிங்கம் அவையைக் கூட்டியது:
"என்
அருமை நண்பர்களே, நம் பாவங்களுக்காக தெய்வம் இந்தத் துர்ப்பாக்கியத்தைத் தந்திருப்பதாய் நான் கருதுகிறேன். நம்முள் யார் அதிகப் பாவியோ, அவன் இறைவனின் கோபத்துக்குத் தன்னைப் பலியிடட்டும்; அந்த ஒருவனால் அனைவரும் குணமாகக்கூடும்.
இந்த மாதிரி தியாகங்கள், இப்படிப்பட்ட சமயங்களில் செய்யப்பட்டதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. புகழ்ச்சிப் பேச்சு வேண்டாம், நமக்கு நாமே அனுதாபம் காட்டாமல் மனசாட்சிப்படி பேசுவோம்.
என்னைப் பொருத்தவரை, என் பயங்கரப் பசியைத் தணிப்பதற்கு
எத்தனையோ ஆடுகளைத் தின்றேன்; அவை எனக்கு என்ன செய்தன? ஒரு தீமையும் இல்லையே! சில சமயம் இடையனையும் தின்ன நேர்ந்ததுண்டு.
நான் பலியாவேன், தேவைப்பட்டால்; ஆனால், என்னைப் போல் மற்ற ஒவ்வொருவரும் தத்தம் குற்றங்களை ஒப்புக்கொள்வது நல்லதென நினைக்கிறேன்; ஏனென்றால் எல்லாரையுங் காட்டிலும் அதிகக் குற்றம் புரிந்தவன் சாகவேண்டியதுதானே நீதி?"
நரி கூறியது:
"அரசே, நீங்கள் உத்தமர்; உங்கள் கவலை உங்களின் இரக்கத்தை வெளிப்படுத்துகிறது.
ஆடுகள் என்ற அற்பமான மற்றும் மடத்தனமுள்ள பிராணிகளைச் சாப்பிடுவது ஒரு பாவமா? இல்லவே
யில்லை; அவற்றை உண்டதால் கெளரவப்படுத்தி இருக்கிறீர்கள்; இடையனோ என்றால், மிருகங்களை ஆட்டிப் படைக்கிற வர்க்கத்தைச் சேர்ந்த அவனை என்ன செய்தாலும் தகும் எனச் சொல்லலாம்".
எல்லாரும் ஆரவாரத்துடன் கால்தட்டினர்.
புலி கரடி முதலான வலிய விலங்குகளின் மன்னிக்கத் தகாத குற்றங்களை ஆராய எவரும் துணியவில்லை; சண்டைக்காரர்கள் யாவரும், சாதாரண நாய்கள் உள்பட, அவரவர் வாக்குமூலப்படி புனிதர்களாய்க் காட்சியளித்தார்கள்.
இறுதியாய்க் கழுதையின் முறை வந்தபோது அது சொன்னது:
"எனக்கு நினைவு இருக்கிறது, ஒரு பாதிரியாரின் தோட்டத்துக்கு அருகில் போனபோது, பசியும் வாய்ப்பும் புல்லின் தளதளப்பும், இவையல்லாமல், நான் நினைக்கிறேன், ஏதோவொரு பேயும் என்னைத் தூண்டவே, ஒருவாய்ப் புல்லைத் தின்றுவிட்டேன்; அப்படிச் செய்ய எனக்குக் கொஞ்சமும் உரிமையில்லை, நேர்மையாய்ச் சோன்னால்".
அவ்வளவுதான், எதிர்ப்புக் குரல்கள் எழும்பின.
ஓநாயொன்று, தன் வாதத்திறமையால், அந்தக் கேடுகெட்ட, ரோமமற்ற, சொறி பிடித்த, எல்லாத் துன்பத்துக்கும் ஊற்றாகிய விலங்கைப் பலியிட வேண்டுமென்பதை நிரூபித்தது. அதன் சாதாரண
தப்பு தூக்குக்குத் தக்கது எனத் தீர்ப்பாயிற்று.
பிறருடைய புல்லைத் தின்பது எவ்வளவு கொடிய குற்றம்! சாவு மட்டுமே அதற்குப் பரிகாரமாய் இருக்க முடியும்.
அதை நடைமுறையில் காட்டினர் கழுதைக்கு
.
========================
(படம் உதவி : இணையம்)
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல் வலிய மிருகங்களின் குற்றங்களுக்கு மத்தியில் அப்பாவிக் கழுதையின் குற்றம் மன்னிக்கமுடியாதப் பெருங்குற்றமாகிவிட்டது. முன்பே எடுத்துவிட்ட முடிவுக்கு வாதத்திறமையால் வலு சேர்ப்பது வேடிக்கை. ஈசாப்பின் கதைகளில் விலங்குகள் வழி மனிதர்களின் குணாதிசயம் வெளிப்படுந்தன்மை இதிலும் மிக அழகாகத் தெரிகிறது. நாடகவடிவாக்கம் புதுமை. விலங்குகள் ஆரவாரத்துடன் கால்தட்டின என்ற இடத்தில் எழுத்தும் காட்சியும் ரசிக்கவைத்தன.. தமிழில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஆழமான திறனாய்வுடன் கருத்து தெரிவித்துப் பாராட்டியமைக்கு மிகுந்த நன்றி .
ReplyDeleteபுல்லைத் தின்றது பெரிய குற்றமாம்! வலியது வெல்லும் என்பதற்கு அழகான காட்டு. நல்லதொரு கதையைப் பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி!
ReplyDelete