நான் வாசித்த நூல்களின் சில பகுதிகள் பலருக்கும் பயன்படலாம் எனக் கருதுகிறேன்; அவற்றை அவ்வப்போது பகிர்வேன்; முதல் நூல், அறிஞர் எஸ். வையாபுரி இயற்றிய "இலக்கியச் சிந்தனைகள்" (இரண்டாம் பதிப்பு - 1956 . பக். 137. 21 கட்டுரைகளுள்; தலைப்பு: தமிழும் அகராதியும்)
அகராதி என்ற பெயர் முதன்முதலில் காணப்படுவது 1594 இல் தோன்றிய 'அகராதி நிகண்டு' என்ற நூலின் பெயரிலேதான்; இதன் ஆசிரியர் சிதம்பர ரேவண சித்தர் என்னும் வீரசைவப் புலவர்; இவர் இட்ட பெயரே இப்போது டிக்ஷனரி என்று ஆங்கிலத்தில் கூறும் நூலுக்குரிய தமிழ்ப் பெயராய் அமைந்துவிட்டது.
அரிச்சுவடியிலுள்ள எழுத்து முறைப்படியே சொற்களை அமைப்பதுதான் அகராதிமுறை. இது நமக்கு எளிதாகத் தோன்றுகிறது; ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து வந்திருக்கிற தமிழ் இலக்கிய சரித்திரத்தில், இம்முறை16-ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் முதன்முதல் புலப்படுகிறது; அப்பொழுதும் இது அரைகுறையாய்த்தான் கையாளப்பட்டது;
சொல்லின் முதலெழுத்து முறையையே ஆசிரியர்கள் நோக்கி வந்தனர். உதாரணமாக அறிவன், அடியான், அருள், அவன், அஃது, அமர் முதலிய சொற்களை, முதலெழுத்தாகிய அகரம் ஒன்றையே கருதி, அவற்றை ஒரு முறையில் நிறுத்தினர்; இந்த முறையை அகராதி நிகண்டில் காணலாம். இதனால் அகரத்தில் தொடங்கும் ஒரு சொல்லை, குறித்த ஓரிடத்தில் கண்டுபிடிப்பது எளிதாயில்லை. இரண்டாவது எழுத்தையும் நோக்கி சொற்களை முறைப்படுத்திய நூலொன்று சுமார் நூறு ஆண்டுகளின்பின் தோன்றியது; இதன் பெயர், 'அகராதி மோனைக் ககராதி எதுகை' என்பதாகும்; இம்முறையிலேயும் ஒரு சொல்லைக் குறிப்பிட்ட இடத்தில் கண்டுபிடிப்பதற்கு வழி இல்லாமலிருந்தது.
முதன்முதலில் சொற்களின் எழுத்துகள் அனைத்தையும் நோக்கி அகராதி அமைத்தவர்கள் ஐரோப்பியப் பாதிரிகளே ஆவர்; 17 ஆம் நூற்றாண்டு பிற்பகுதியில் ஐரோப்பியப் பாதிரியார்கள் தமிழ் நாட்டிற்கு வரத் தொடங்கினர்; தமிழ் மக்களுக்குக் கிறிஸ்தவ மத உண்மைகளைத் தமிழ் மொழியிலே போதிக்க வேண்டுமென இவர்கள் கருதினார்கள்; ஆகவே இவர்கள் தாமும் தமிழ் கற்க வேண்டுவது மிக அவசியமாய் முடிந்தது; கற்பதற்குக் கருவி நூலாக அகராதி ஒன்று இயற்ற வேண்டுவதும் இன்றியமையாததாயிற்று; எனவே, தமிழில் முதன்முதலில் அகராதி தோன்றுவதற்குக் காரணமாய் இருந்தவர்கள் இப்பாதிரிமார்களே ஆவர்.
அந்நிய மொழிக்கு உரியோராகிய பாதிரிமார்கள் அகராதி இயற்றப் புகுந்தது ஒரு நல்ல அதிருஷ்டம் என்றேதான் கூறவேண்டும்; ஏனெனில் சில நன்மைகள் இதனால் விளைந்தன. முதலாவது, பிற மொழிகளில் அகராதிகள் செப்பமாக அமைந்துள்ள முறையைத் தமிழ் அகராதிகளிலும் கையாள முடிந்தது; இரண்டாவது, பாதிரிகளுக்குத் தமிழ் புதிய மொழி ஆகையினாலே இவர்கள் தமிழிலுள்ள எல்லாச் சொற்களுக்கும் பொருளுணர வேண்டியவர்களாயிருந்தனர். ஆகவே கடின பதம் எளிய பதம் என்ற வேற்றுமையின்றி எளிய பதங்களுக்கும்கூடப் பொருள் விளங்க வேண்டுவது அவசிமாயிற்று: உதாரணமாக, நான், அது, வீடு முதலிய சொற்களையும் அகராதியில் விளக்கவேண்டியதாயிற்று; மூன்றாவது, நூல் வழக்கிலன்றி, சாதாரண மக்கள் பல பிராந்தியங்களிலும் வழங்கி வந்த சொற்களும் அகராதியில் இடம் பெற்றன. தமிழ் கற்ற பண்டிதர்கள் இவ்வழக்குச் சொற்களிற் பலவற்றை, இழிசனவழக்கு என்றேனும், வழுச்சொல் என்றேனும் ஒதுக்கி விடுவார்கள்; ஆனால் அந்நிய நாட்டுப் பாதிரியார்கள் இவ்வாறு ஒதுக்க முடியாது; அவர்கள் சாதாரண மக்களோடு, அதுவும் கல்வி பெறாத கீழ்த்தட்டு மக்களோடு, பழகி வந்தார்கள்; அம்மக்கள் பேசுவதை உணர்வதும் அவர்கள் வழங்கும் சொற்களை உணர்வதும் அவசியம். எனவே அவ்வழக்குச் சொற்களும் அகராதியில் இடம் பெற்றன; இவ்வாறாக, தமிழ் மக்களுள் பல இனத்தாரும் வழங்கும் சொற்கள் எல்லாம் அகராதிகளில் அமைவதற்கு இப்பாதிரிகளே வழிகாட்டியாய் இருந்தார்கள்.
1679 இல் தமிழ்ப் போர்த்துகீசிய அகராதி ஒன்று ப்ரொ இன்ஸா என்ற பாதிரியாரால் இயற்றப்பட்டது; ஆனால் இப்போது இது மறைந்துவிட்டது. இதனையடுத்துத் தோன்றியது பிரசித்தி பெற்ற சதுரகராதியாகும்; இதுவே தமிழில் முதன்முதலில் பிறந்த அகராதி என்று சொல்லலாம்; இதனை இயற்றியவர் தைரியநாதஸ்வாமி என்றும் வீரமாமுனிவர் என்றும் பெயர் வழங்கிய பெஸ்கி (Father Beschi) யாவர்.
----------------------------------------------
(படம் உதவி: இணையம்)
அகராதி பற்றியும், தமிழில் முதன்முதலில் அகராதி தோன்றுவதற்குக் காரணமாய் இருந்தவர்கள் பற்றியும் மிகச் சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
அகராதி பற்றி சிறப்பான பகிர்வு படித்து மகிழ்ந்தேன் த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பாராட்டியதற்கும் வாக்குக்கும் என் மனமுவந்த நன்றி .
Deleteஉங்கள் பாராட்டுக்கு உள்ளங் கனிந்த நன்றி .
ReplyDeleteதமிழில் அகராதி தோன்றிய வரலாற்றை அறிந்து கொண்டேன். அகராதியைத் தொகுத்தவர்கள் அந்நிய நாட்டவராக இருந்ததால் மக்கள் பேசிய பெரும்பாலான சொற்கள் அகராதியில் இடம்பெறக் காரணமாயிற்று என்பது மிகவும் பயனுள்ள செய்தி. தொடர்ந்து படித்த நூல்களிலிருந்து முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். மிகவும் நன்றி!
ReplyDeleteதமிழுக்கு அயல்நாட்டார் அரும் பணி ஆற்றியுள்ளனர் ; சொல்லுக்கு சொல் இடம் விட்டு எழுத அவர்கள்தான் வழி காட்டினர் .பின்னூட்டத்துக்கு உள்ளம் நிறை நன்றி . தொடர்வேன் .
Deleteஅகராதி வரலாறு அறிந்தேன் ஐயா...
ReplyDeleteமகிழ்ச்சி ; கருத்துரைக்கு அகம் நிறை நன்றி .
Deleteபின்னூட்டத்துக்கு அகம் நிறை நன்றி . தொடர்வேன் .
ReplyDelete