Friday, 5 February 2016

நூல்களிலிருந்து -- 3


   ஜவாஹர்லால்  நேரு, இந்திய சுதந்தரப் போராட்டத்தில் மிக முக்கிய பங்கேற்று, அரும் பெருந் தியாகங்கள் புரிந்த தலைவர்களுள் ஒருவர். கோடீஸ்வரரின் ஒரே மகனாய்ப் பிறந்த அவர்க்கு, உலக இன்பங்கள் அனைத்தையும் சலிக்கும் அளவுக்குத் துய்ப்பதற்கும் நகத்தில் அழுக்கு படாமல் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்குமான அரிய வாய்ப்பு கிட்டிற்று; ஆனால் அதைப் புறக்கணித்துவிட்டுப் போராட்டக்களத்தில் குதித்த பெருமகனார் அவர்.

 வாணாளின் கணிசமான பகுதியை சிறைகளில்  கழித்த அவர், அங்கேயே தம் வரலாற்றை எழுதினார்; 1934 ஜூன் -- 1935 பிப்ரவரி காலகட்டத்தில் உருவான அதன் முன்னுரையில், "என் வாழ்க்கையின் துன்பம் மிகுந்த காலத்திலே எழுதப்பட்டது"  என்று  அவர்  குறித்துள்ளார்.   தமிழ் பெயர்ப்பு, "ஜவாஹர்லால் நேரு சுய சரிதை"  எனத் தலைப்பிடப்பட்டு 1957 இல் பிரசுரமாயிற்று;  620 பக்கமும் 68 அதிகாரமும் உடைய அதில் 25 ஆம் அதிகாரம் 1928 இல் நிகழ்ந்த சைமன் குழுவுக்கு எதிர்ப்பு பற்றி விவரிக்கிறது; ஒரு பகுதியைக் கீழே காணலாம். தலைப்பு:  தடியடி அனுபவம்

 போக்குவரத்துக்குத் தடையேற்படும் என்ற காரணத்தைக் காட்டி ஊர்வலங்களைத் தடை செய்தனர்;  இந்த வகையில் யாரும்  குறை  கூற இடம் வைத்துக்கொள்ளல் ஆகாது என்பதற்காகவே பதினாறு பேர் கொண்ட சிறு சிறு கூட்டங்களாகத் தனித்தனியே பிரிந்து போக்குவரத்து குறைவாக உள்ள தெருக்கள் வழியாய் ஊர்வலம் போக ஏற்பாடு செய்தோம்; சட்டப்படி பார்த்தால், இதுவும் ஆணையை மீறியதாகத்தான் ஆகும். கொடியுடன் பதினாறு பேர் சென்றாலும்  ஊர்வலந்தானே! 

  ஒரு தொகுதிக்கு நான் தலைமை தாங்கி நடத்திச் சென்றேன். நடுவிலே பெரிய இடைவெளிக்கு அப்பால், என் தோழர் கோவிந்த வல்லப பந்த் தலைமையில் அடுத்த கூட்டம் வந்துகொண்டிருந்தது. நாங்கள் சுமார் இருநூறு கஜ தூரம் சென்றுவிட்டோம்; தெருவில்  வேறு நடமாட்டம் இல்லை.

  திடீரென்று குதிரைகளின் காலடி ஓசை கேட்டது. திரும்பிப் பார்த்தோம்: இருபது முப்பது பேரடங்கிய குதிரைப் போலீஸ் படையொன்று எங்களை நசுக்க விரைவாக வந்துகொண்டிருந்தது. எங்களை நெருங்கி, அணிவகுப்பின் குறுக்கே பாய்ந்தது. குண்டாந்தடிகளால் தாக்கியது. தொண்டர்களில் சிலர் நடைப்பாதைப் பக்கமொதுங்கினர்; சிலர் கடைகளில் நுழைந்தனர். படை அவர்களைத் தொடர்ந்து  அடித்து  நொறுக்கிற்று. 

  குதிரைப்படை எங்களை நோக்கிப் பாய்ந்து வந்த பயங்கரக் காட்சியைக் கண்டதும் எனக்கும் தப்பி ஓடலாமா என்றுதான் முதலில் தோன்றியது; ஆனால் அந்த எண்ணம் உடனே மாறியது; அணிவகுப்பை விட்டு நகராமல் நின்றேன். என் பின்னால் இருந்த தொண்டர்கள் தடுத்துக்கொண்டதால், முதலடி என்மேல் விழவில்லை; ஆனால் திடீரென்று மற்றவர்கள் ஓடிப் போகவே, நான் மட்டும் நடுத்தெருவில் தன்னந்தனியனாய் இருக்கக் கண்டேன். சில கஜ தொலைவுக்கு அப்பால் காவலர்கள் தொண்டர்களைத் துரத்தியடித்துக்கொண்டிருந்தார்கள். இதுதான் சமயமென்று பாதையோரத்தில் ஒதுங்க நகர்ந்தேன்; ஆனால் அதே இடத்தில் நின்று யோசித்தேன். இடத்தை விட்டு நகருவது இழிவான செயல் என்ற முடிவுக்கு வந்தேன். இவ்வளவும் கண நேரத்தில் நடந்ததெனினும் என் மனத்தில் நிகழ்ந்த போராட்டமும் கோழையைப் போல் நடந்துகொள்ளக்கூடாது என்ற மான உணர்ச்சியால்  நான்  செய்த முடிவும்  நன்றாக நினைவில் நிற்கின்றன.

  கோழைத்தனத்துக்கும் தைரியத்துக்கும் அதிக இடைவெளி இல்லை.  நான் கோழையாய் நடந்துகொண்டிருக்கவும் கூடும். நான் முடிவு செய்ததும் சுற்றிப் பார்த்தேன். குதிரை  வீரனொருவன், தன் புதிய நீண்ட தடியை வீசிக்கொண்டு என்னை  நோக்கிப் பாய்ந்து வந்துகொண்டிருந்தான்; 'உன் வேலையை செய்' என்று அவனிடம் சொன்னேன். தலையையும் முகத்தையும் காப்பாற்றிக்கொள்ளும் இயல்புணர்ச்சியின் பேரில், முகத்தை வேறு புறம் திருப்பிக்கொண்டேன். முதுகில் பலமாய் இரண்டு அடி கொடுத்தான்; என் உடலெல்லாம் நடுங்கியது. நான் இன்னம் அதே இடத்தில் நின்றிருந்தது எனக்கு  வியப்பாய் இருந்தது.

   காவலர்கள் அடிப்பதை நிறுத்திவிட்டு, வழியை மறைத்துக்கொண்டார்கள். தொண்டர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தனர்; பலருக்கு மண்டை உடைந்தும் காயங்கள் ஏற்பட்டும் இரத்தம் பீறிட்டுக்கொண்டிருந்தது. பந்த்தும் அவருடைய கூட்டமும் எங்களுடன் சேர்ந்துகொண்டார்கள்; அவர்களும்  எங்களைப் போல் அடிபட்டிருந்தனர். எல்லாரும் காவலர்களுக்கு எதிரில் உட்கார்ந்துகொண்டோம்.

   இவ்வாறு இரண்டொரு மணி நேரம் உட்கார்ந்திருந்தோம். இருட்டத் தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் மேலதிகாரிகள் கூடிவிட்டனர்.  செய்தி பரவவே பொதுமக்கள் திரண்டு வந்து, மறுபக்கத்தில் பெருங்கூட்டமாய்க் கூடிவிட்டனர். கடைசியில்,  நாங்கள் திட்டமிட்டிருந்த தெருக்களின் வழியாக செல்வதற்கு அதிகாரிகள் இணங்கினர்; எங்களை அடித்துத் துன்புறுத்திய குதிரைப்படைக் காவலர்கள் முன்செல்ல, நாங்கள் ஊர்வலத்தை முடித்தோம்.

  இச்சிறு சம்பவம்  என் உள்ளத்தில் புதிய ஊக்கத்தைத் தோற்றுவித்தது என்பதற்காகவே இதை இவ்வளவு விரிவாய் எழுதினேன். தடியடியைத் தாங்கக்கூடிய சக்தி எனக்கு இருந்தது என்ற பெருமிதத்தில் வலியைக்கூட மறந்துவிட்டேன். அடிபட்டுக்கொண்டிருந்தபோது கூட  என் மனம்  பிறழாமல், என் உணர்ச்சிகளை ஆராய்ந்துகொண்டிருந்தமை வியக்கத்தக்கது.

          ++++++++++++++++++++++++++++++++++

(படம் உதவி - இணையம்)

3 comments:

 1. //பலருக்கு மண்டை உடைந்தும் காயங்கள் ஏற்பட்டும் இரத்தம் பீறிட்டுக்கொண்டிருந்தது. பந்த்தும் அவருடைய கூட்டமும் எங்களுடன் சேர்ந்துகொண்டார்கள்; அவர்களும் எங்களைப் போல் அடிபட்டிருந்தனர். எல்லாரும் காவலர்களுக்கு எதிரில் உட்கார்ந்துகொண்டோம்.//

  கோடீஸ்வரரின் ஒரே மகனாய்ப் பிறந்த அவரின், தீரச்செயலாக இது உள்ளது. படிக்க மிகவும் வியப்பளிக்கிறது. பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

  ReplyDelete
  Replies
  1. நேருவின் தீரச் செயல் என நீங்கள் சொன்னது மிகச் சரி ; கருத்துரைக்கு மிக்க நன்றி .

   Delete
 2. நல்லதொரு பகிர்வு.

  பிறந்தநாள் வாழ்த்துகளும் வணக்கங்களும்.

  ReplyDelete