Wednesday, 9 March 2016

இலக்கணங்களில் பால் (gender)




வளர்ந்த மொழிகளில் இலக்கண நூல்கள் உள்ளன; அவையெல்லாவற்றிலும், ஒருமை - பன்மை, பெயர்-வினை, பால் என்னும் அடிப்படையான பிரிவுகளைக்  காணலாம்.

 ஆங்கிலத்தில்தான் பால் பகுப்பு வெகு எளிது; ஆண்பிறவி, ஆண்பால்; பெண்பிறப்பு, பெண்பால்; மற்றவையெல்லாம் அலிப்பால் (neuter).

  தமிழில் ஆணைக் குறிக்கும் சொல் ஆண்பால் எனவும் பெண்ணைக் குறிப்பது பெண்பால் எனவும் கூறப்படுகின்றன; விலங்குகள் பறவைகளில் ஆண் பெண் பார்க்காமல் ஒன்றன்பால், பலவின்பால் என எண்ணிக்கை கொண்டு பாகுபடுத்துகிறோம்; மொத்தம் ஐந்து பால்  உள்ளன; ஆனால் சிக்கல்  எதுவுமில்லை.

கடுவன், மந்தி, களிறு, பிடி --  ஒன்றன்பால்; 

கோழிகள், மாடுகள், பூச்சிகள் -- பலவின்பால்.

உயிரற்ற பொருள்களுக்கும் இப்படித்தான்:

 சாலை, பழம், வீடு -- ஒன்றன்பால்; 

செய்கைகள், தோணிகள், நோக்கங்கள் - பலவின்பால்.

 இது தெளிவாகத் தோன்றுகிறது; பிற மொழிகள் சிலவற்றில் இவ்வாறில்லை.

 அ) -- பிரஞ்சிலும் இந்தியிலும் ஆண்பால், பெண்பால் என இரண்டுதான் இருக்கின்றன; ஆனால் அர்த்தம் பார்த்துப் பாலை அறிதல் பெரும்பாலும் இயலாது.

 1  --  பிரஞ்சு: ஆண்பால் -- கணவன், அன்பு, கடமை, காற்று, சுவர், நெருப்பு, பறவை, மாதம், மூக்கு, விரல்.

       பெண்பால் -- ஆசிரியை, காது, தண்ணீர், நிறம், நீதி, பிரான்சு, போர்,  மலை, வட்டம், வறுமை.

 2 --  இந்தி: ஆண்பால் -- மாணவன், கத்தரிக்காய், குளியலறை, காது, கிழக்கு, செருப்பு,  நரி, பாம்பு, ரத்தம், வட்டி.

        பெண்பால் -- தாய், கற்பனை, தராசு, நாகரிகம்,  நிகழ்ச்சி, பசி, பேருந்து,   மழை, வணக்கம் (நமஸ்த்தே), வேட்டி.

  அக்காவின் கணவன் ஆண்தான் என்றாலும் அவனைக் குறிக்கும் ஜீஜா என்ற சொல் பெண்பால்! சமற்கிருதத்தில்,  மனைவி என்னும் பொருள் தரும் மூன்று சொற்களுள், ஒன்று பெண்பால், இன்னொன்று அலிப்பால், வேறொன்று  ஆண்பால் என்று படித்திருக்கிறேன்.

  சமற்கிருதத்தில் போலவே லத்தீனிலும் முப்பாலுண்டு. பிரஞ்சில் பால் கண்டுபிடிக்க உதவும் இடைச்சொற்கள் (articles) இருக்கின்றன: ஆண்பாலுக்கு லெ (le), பெண்பாலுக்கு லா (la). இவை சொற்களின் முன்னே எப்போதும் வரும்:

    le bureau, la table. 

  இவை இந்தியிலும் லத்தீனிலும் சமற்கிருதத்திலும் இல்லாமையால் பயின்று பயின்று தான் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும்.

    1 பிரஞ்சு, 2 இந்தி, 3 லத்தீனில் பெயரடைகளுக்கும் பால் இருக்கிறது.

   1 - புதுப் புத்தகம் -- லெ நுவோ லீவ்ர்; புதுக்  கதவு -- லா நுவேல்லு போர்த்து.

   2 -  மஞ்சள் கைக்குட்டை - பீலா ரூமால்; மஞ்சள்  சட்டை - பீலீ கமீஜ்.

   3 - அழகிய குகை - பெல்லுஸ் கவுஸ்; அழகிய ரோஜா - பெல்லா ரொசா; அழகிய கவிதை - பெல்லும் கர்மேன்.

 எல்லாவற்றையும் நோக்கும்போது, பாலைப் பொருத்தவரை, தமிழ்  எளிதே என்பதை அறிகிறோம்.

          ***********************************
(படம் உதவி - இணையம்)

9 comments:

  1. பல்வேறு உதாரணங்களுடன் நல்ல விளக்கம்.

    // எல்லாவற்றையும் நோக்கும்போது, பாலைப் பொருத்தவரை, தமிழ் எளிதே என்பதை அறிகிறோம்.//

    மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வாசித்துப் பொருத்தமாகக் கருத்துரைத்துப் பாராட்டும் உங்களுக்கு என் அகமார்ந்த நன்றி .

      Delete
  2. வகுப்பில் உட்கார்ந்து பாடம் கேட்பதுபோல் ( சீக்கிரமே மறக்க வாய்ப்புண்டு )இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி . நீங்கள் சொல்வதுபோல் மறதி இருக்கவே இருக்கிறது .

      Delete
  3. பெயரடைகளுக்கும் பால் இருக்கின்றதா? கஷ்டம் தான். தமிழ் எளிது தான். பிரெஞ்சில் இருப்பது போல இடைச்சொற்கள் இருந்தாலும் பரவாயில்லை. இல்லாவிட்டால் நினைவில் வைத்துக்கொள்வது மிகவும் சிரமம். எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியது மிகவும் நன்று. மிகவும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிக் கருத்துரைத்தமைக்கு என் உள்ளமார்ந்த நன்றி . நினைவில் வைத்துக்கொள்வது சங்கடந்தான்

      Delete
  4. நல்ல விளக்கம்...
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு என் அகமார்ந்த நன்றி .

      Delete
  5. ஐயா,நல்ல கட்டுரை! நாற்காலிக்கு ஹிந்தியில் 'குர்ஸி' என்று கேள்விப்பட்டிருக்கிறேன்!
    அது பெண் பாலாம்.
    ஐயா தாங்கள் என்'எண்ணப்பறவை'வலைத்தளத்திற்கு வருகை தர வேண்டுகிறேன்!

    ReplyDelete