Sunday, 20 March 2016

சிட்டுக்குருவி

நூல்களிலிருந்து -- 5

சுப்ரமணிய பாரதியாரைப் பொறுப்பாசிரியராய்க் கொண்டு, 'இந்தியா'   என்ற வாரப் பத்திரிகை, 1906 இல் வெளிவரத் தொடங்கியது; அதில், அவர்   ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து எழுதியதோடு, தத்துவம் சமூகம் கலை முதலிய பல பொருள் குறித்துக்  கட்டுரைகளும் வரைந்தார்அவை,   'பாரதியார் கட்டுரைகள்'  என்னும் தலைப்புடன், 496 பக்கமுடைய நூலாய்   1981-இல் பிரசுரமாயிற்று. அக்கட்டுரைகளுள் ஒன்றின் முதற்பாதியை   மட்டும்   அன்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

சிட்டுக்குருவி
   "சிறிய தானியம் போன்ற மூக்கு; சின்னக் கண்கள்; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல்-வெண்மை நிறமுடைய பட்டுப்   போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப் போர்த்த முதுகு; சிறிய தோகை;   துளித் துளிக் கால்கள்.

   இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே   பிடித்துவிடலாம். இவ்விதமான உடலைச் சுமந்துகொண்டு என்  வீட்டிலே இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றுள்  ஒன்று ஆண், மற்றது பெண். இவை தம்முள்ளே பேசிக்கொள்கின்றன. குடும்பத்துக்கு  வேண்டிய உணவு தேடிக்கொள்கின்றன. கூடு கட்டிக்கொண்டு, கொஞ்சிக்  குலாவி, மிக இன்பத்துடன் வாழ்ந்து முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பசி இல்லாமல் காப்பாற்றுகின்றன.

    சிட்டுக்குருவி பறந்து செல்வதைப் பார்த்து எனக்கு அடிக்கடி பொறாமை   உண்டாகும். ஆகா! உடலை எவ்வளவு லாகவத்துடன் சுமந்து செல்கின்றது!   இந்தக் குருவிக்கு எப்போதேனும் தலை நோவு வருவதுண்டோ? ஏதுஎனக்குத் தோன்றவில்லை. ஒரு முறையேனும் தலை நோவு அனுபவித்த முகத்திலே இத்தனை தெளிவு  இருக்க  நியாயமில்லை;  பயமும்  மானமும் மனிதனுக்கு   உள்ளது போலவேகுருவிக்கு உண்டு;  இருந்தபோதிலும், க்ஷணந்தோறும், மனிதருடைய நெஞ்சைச் செல்லரிப்பது போலே அரிக்குங் கவலைத் தொகுதியும், அதனால் ஏற்படும் நோய்த்திரளும் குருவிக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

   தெய்வமே, எனக்கு இரண்டு சிறகுகள் கொடுக்க மாட்டாயாபாழ்பட்ட   மனிதக்கூட்டத்தையும் அதன் கட்டுகளையும் நோய்களையும் துன்பங்களையும் பொய்களையும் உதறி எறிந்துவிட்டு நான் இச்சைப்படி வானத்திலே பறந்து செல்ல மாட்டேனா?

   குருவிக்குப் பேசத் தெரியும், பொய் சொல்லத் தெரியாது. குருவியில் ஆண் பெண் உண்டு, தீராத கொடுமைகள் இல்லை.

 இந்தக் குருவி என்ன சொல்லுகிறது? "விடு, விடு, விடு" என்று கத்துகிறது. இஃது நான் விரும்பிய இன்பத்திற்கு, வழி இன்னதென்று, தெய்வம் குருவித்தமிழிலே எனக்குக் கற்றுக்கொடுப்பது போலிருக்கிறது. விடு, விடு, விடு. உள்ளக்கட்டை அவிழ்த்து விடு, வீண் யோசனையை விடு, துன்பத்தை விடு."

 (இக்கருத்தைக் கவிஞர் பாட்டிலும் சொல்லியுள்ளார்:
      விட்டு விடுதலை ஆகி நிற்பாய் - இந்தச்
      சிட்டுக்  குருவியைப் போலே.)

               .............................................................
          (படம் உதவி இணையம்)


11 comments:

 1. //தெய்வமே, எனக்கு இரண்டு சிறகுகள் கொடுக்க மாட்டாயா? பாழ்பட்ட மனிதக்கூட்டத்தையும் அதன் கட்டுகளையும் நோய்களையும் துன்பங்களையும் பொய்களையும் உதறி எறிந்துவிட்டு நான் இச்சைப்படி வானத்திலே பறந்து செல்ல மாட்டேனா?//

  பெரும்பாலான அப்பாவி மக்கள் நினைக்கும் இனிய சிந்தனை இது.

  //குருவிக்குப் பேசத் தெரியும், பொய் சொல்லத் தெரியாது. குருவியில் ஆண் பெண் உண்டு, தீராத கொடுமைகள் இல்லை.//

  நினைத்துப்பார்க்க மிகவும் நல்ல சிந்தனைகள்.


  >>>>>

  ReplyDelete
  Replies
  1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . நீங்கள் சொன்னதுபோல அல்லற்படுகிறவர்கள் அனைவரும் ஆசைப்படுகிற சிந்தனைதான் . மார்ச் 20 சிட்டுக்குருவி நாளை யொட்டி இதைப் பகிர்ந்தேன் .

   Delete
 2. //உள்ளக்கட்டை அவிழ்த்து விடு, வீண் யோசனையை விடு, துன்பத்தை விடு."//

  // விட்டு விடுதலை ஆகி நிற்பாய் - இந்தச் சிட்டுக் குருவியைப் போலே.)

  சிந்திக்க வைக்கும் மிகச்சிறப்பான பதிவு. பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

  ReplyDelete
  Replies
  1. பாரதியார் உபதேசப்படி நமக்கு நாமே போட்டுக்கொண்டுள்ள பற்பல கட்டுகளை ( சம்பிரதாயம் , சடங்கு , ..) அவிழ்த்துவிடுவோமே யானால் ஓரளவு சுதந்தரம் அடைவோம் . உங்கள் கருத்துக்கு மிகுந்த நன்றி .

   Delete
 3. சிட்டுக்குருவிகள் தினத்தன்று பொருத்தமானதொரு பகிர்வு. சிட்டுக்குருவின் பட்டுடல் குறித்த பாரதியின் வர்ணனை அபாரம். பாரதியார் கட்டுரைகள் சிலவற்றை இணையத்தில் வாசித்திருக்கிறேன். புத்தகமாக வெளிவந்திருப்பதை இப்போது அறிந்துகொண்டேன். பகிர்வுக்கு மிகவும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தமிழ் உரைநடையின் வளர்ச்சியில் பாரதிக்கும் கணிசமான பங்குண்டு. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

   Delete
 4. அழகுநடை ....என்ன ஒரு சிந்தனை ...

  பகிர்வுக்கு மிகவும் நன்றி ஐயா ...

  ReplyDelete
  Replies
  1. வருக வருக என வரவேற்கிறேன் .நீங்கள் சொல்வதுபோல் அழகு நடைதான் .பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

   Delete
 5. மிகச் சிறப்பான பகிர்வு...

  ReplyDelete
  Replies
  1. பாராட்டிப் பின்னூட்டம் எழுதியமைக்கு மிக்க நன்றி .

   Delete
 6. "க்ஷணந்தோறும், மனிதருடைய நெஞ்சைச் செல்லரிப்பது போலே அரிக்குங் கவலைத் தொகுதியும், அதனால் ஏற்படும் நோய்த்திரளும் குருவிக்கு இருப்பதாகத் தெரியவில்லை.' உண்மை தான். கவலையின்றி அங்குமிங்கும் பறந்து திரியும் சிட்டுக்குருவியைப் பார்க்கும் போது பாரதியைப் போல் எனக்கும் பொறாமை ஏற்படுவது உண்மை தான். சிட்டுக்குருவி தினத்தில் பொருத்தமான பதிவு. பகிர்வுக்கு மிகவும் நன்றி!

  ReplyDelete