Monday 3 April 2017

பாவேந்தர் படைப்புகளில் பிரஞ்சுத் தாக்கம்

நூல்களிலிருந்து --- 12

  1672 முதல் 1954 வரையில், ஏறத்தாழ 280 ஆண்டுகள், புதுச்சேரிப் பகுதி பிரஞ்சுக்காரரின் பிடியில் இருந்தது. பிரான்சு நாட்டின் அரசியல் மாற்றங்கள், மக்கள் வாழ்க்கைமுறை, இலக்கியப் போக்கு, மொழியுணர்வு முதலியவற்றின் தாக்குறவுகள் புதுச்சேரியிலும் காணப்பட்டன. உணர்வு மிக்க பாவலர்களை இவற்றின் முற்போக்கான பகுதிகள் கவர்ந்தன; அதனாலாகிய விளைவுகள் அவர்களின் படைப்புகளில் காணப்பட்டன.

  1891-இல் புதுச்சேரியில் தோன்றிப் பிரஞ்சு ஆட்சியில் தம் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்த பாவேந்தர் பாரதிதாசன் படைப்புகளில்  இவ்வியல்பு படிந்திருப்பதில் வியப்பேதும் இல்லை.



 1 -- முப்பெருங் கோட்பாடுகள்:

   பிரஞ்சுத் தாக்கங்கள் சில, தம்மிடம் பிள்ளைப் பருவம் முதலே இயல்பாகப் பதிந்திருந்தன என்று பாவேந்தரே,

   இது அறிவெனத் தெரிந்த நாள்முதல் புதுவையில்
   சுதந்தரம் சமத்துவம் சகோ தரத்துவம்
   மூன்றும் என்னுயிர் உணர்வில் ஊறியவை  (நாள் மலர்கள், பக்கம் 65)

 என்று கூறுகிறார்; மற்றோரிடத்தில் இந்த முப்பெருங் கோட்பாடுகள் உலக மக்கள் அனைவர்க்குமே வேண்டியன என்பதை

   சுதந்தரம் சமத்துவம் சகோதரத் துவமெனும்
   இதந்தரும் பதவி எவர்க்கும் வேண்டும் (குடியரசு 9, 10)

என்று பாடுகிறார்.

  சுதந்தரம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற தலைப்பில் தாம் எழுதிய கட்டுரையில்,

  ஒருநாடு இன்ப வாழ்வடைய வேண்டுமானால் பிரான்சின்
  முப்பெருங் கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்

 என்றும் பரிந்துரைக்கிறார்; மேலும், சுதந்தரம், சமத்துவப் பாட்டு, சகோதரத்துவம் எனத் தம் பாடல்களுக்குத் தலைப்புகள் தந்திருக்கிறார். பிரஞ்சு நாட்டு மக்களின்  உயிரிலும் உணர்விலும் ஊறிய இம்முப்பெருங் கோட்பாடுகள் பாவேந்தரின் உயிர் உணர்விலும் ஊறியிருந்தன என்பதை இவற்றிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

 2 -- விக்தோர் உய்கோ (Victo Hugo) என்னும் புகழ் மிக்க பிரஞ்சுப் பாவலனை இவர் பல இடங்களில் பாராட்டுகிறார்:  

   நாளை நடப்பதை மனிதன் அறியா னென்று
    நல்லகவி விக்தோர் உய்கோ சொன்னான்
                                         (தமிழச்சியின் கத்தி பக். 28)

  என்றும்

        செல்வர் இல்லோர் நல்வாழ் வுக்கே
        எல்லா மக்களும் என்ற பிரான்சில்
        குடிகள் குடிகட் கெனக் கவிகுவிக்க
        விக்தோர் உய்கோ மேவினான் அன்றோ?
                                                (கவிதைகள் - 2,பக் 78)

 என்றும்

  புகழ்வதால் இவருக்கு உய்கோவிடம் இருந்த மதிப்பு புலனாகிறது; இதில், 'செல்வர் இல்லோர் நல்வாழ்வுக்கே எல்லா மக்களும்' என்ற பகுதியில், ழான் ழாக் ருசோ என்ற பிரஞ்சுப் பேரறிஞனின் கருத்தும் அமைந்திருப்பதைக் காணலாம்.

 3 - பிரஞ்சுப் புரட்சி ---

  உருசியப் புரட்சியைப் பாரதியார் சிறப்பித்துப் பாடியதைப் போலவே பாரிசு விடுதலையைப் பாவேந்தர் பாராட்டிப் பாடினார். அந்நாட்டில் நசுக்கப்பட்ட மக்கள் திரண்டெழுந்து புரட்சி செய்து விடுதலை பெற்றதை,

  பிறப்புரி மைகாண் யார்க்கும் விடுதலை எனப்பிழிந்த
  நறுந்தேனை எங்கும் பெய்தாய்; நால்வகைச் சாதி இல்லை
  தறுக்குறும் மேல்கீழ் இல்லை; சமம் யாரும் என்றாய்; வானில்
  அறைந்தனை முரசம்  ' மக்கள் உடன்பிறப் பாளர் ' என்றே.
                                     (கவிதைகள் 4 பக். 230)

என்று பாடுகிறார்.

 4 - சொல்லாட்சிகள் --

  பாவேந்தர் படைப்புகளில்  ஆங்கு ஈங்காகச் சில பிரஞ்சுச் சொற்கள் இடைமிடைந்திருக்கின்றன; இது வேறு எந்தத் தமிழ்ப் பாவலனிடத்தும் காண முடியாத தனித்தன்மை:

 கொம்மிசேர், தெப்புய்த்தே, பர்க்கே, சொசிஎத்தே ப்ரொக்ரெசீஸ்த்து, கோந்த்ரோலர், கோந்த்ரவான்சிஒன், கொம்முய்ன், பிரான், கபினே, அத்மினிஸ்த்ராத்தேர் முதலிய பிரஞ்சு சொற்கள் அவர்தம் 'குயில்' இதழ்களில் காணப்படுகின்றன.

  பேரறிஞர் அண்ணாவின் கூற்று:

 பாவேந்தர், 'புரட்சிப் பாவலர்' என்று பெயர் பெற்று விளங்கியதற்குப் பிரஞ்சின் தாக்கம் ஒரு காரணம் என்பது பேரறிஞர் அண்ணாவின் கருத்து. ஏ, தாழ்ந்த தமிழமே! என்ற நூலில் அவர், "இந்த லோகத்தைப் பற்றிப் புரட்சிகரமாகப் பாடுவதற்குக் காரணம் அவர் வாழும் புதுவையாகும். புதுவையானது பிரான்சு நாட்டை சேர்ந்தது. பிரான்சு சுதந்தரத்துக்குப் பிறப்பிடம். அந்தப் பிரான்சின் சாயல், அந்தப் பிரான்சின் தென்றல், அவர் வாழ்ந்துள்ள புதுவையில் வீசுவதால்தான் அவர் கொடுக்கும் தலைப்புகள் புரட்சிகரமானவையாகப் புரட்சிக் கருத்துகளைக் கொண்டிலங்குகின்றன" என்று கூறியிருக்கிறார்.

          =====================================

 (படம் உதவி - இணையம்)

5 comments:

  1. பாவேந்தர் பற்றி மிக அருமையான செய்திகள் கொடுத்துள்ளீர்கள். பேரறிஞர் அண்ணாவின் கூற்று மேலும் சுவையூட்டுவதாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிக் கருத்து தெரிவித்தமைக்கு மிகுந்த நன்றி .

      Delete
  2. பிரான்சின் முப்பெருங்கோட்பாடுகள் வியக்கவைக்கின்றன. அதனால்தான் மத இன நிற வேறுபாடு காட்டாமல் அம்மக்களால் எளிதில் மற்றவர்களுடன் நட்புறவோடு பழகமுடிகிறது என்பது புரிகிறது. பாவேந்தரின் குயில் இதழில் பிரெஞ்சுச் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது எனக்குப் புதிய தகவல். பகிரவுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. விளக்கமுள்ள பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .வாய்மையே வெல்லும் என நாம் பிரகனப்படுத்துவது போல அவர்கள் , சுதந்தரம் சமத்துவம் சகோதரத்துவம் என எல்லா அரசு வெளியீடுகளிலும் தலைப்பில் எழுதுவார்கள் ; 1789 இல் நிகழ்ந்த புரட்சியின்போது ,மனித உரிமைப் பிரகடனம் என்ற ஆவணமொன்றைப் புரட்சிக்காரர்கள் வெளியிட்டு அதன் தலைப்பில் மேற்கண்ட கோட்பாடுகளை முதன்முதலாய்ப் பொறித்தார்கள் .

      Delete
  3. பாவேந்தர் பாடல்களில் பிரஞ்சுத் தாக்கம் பற்றிய செய்திகளை அறிந்தேன்.தாக்குறவு என்ற புதுச்சொல்லையும் இன்று தான் தெரிந்து கொண்டேன். தாக்கம் என்பதற்கு இன்னொரு சொல் தாக்குறவா? புதுச்செய்திகளைப் பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி!

    ReplyDelete