Monday, 1 May 2017

கொழுப்பு உருண்டை


(1870 பிரான்சு - ஜெர்மனி போரில், ஜெர்மானியர் ருஆன் என்னும் பிரஞ்சு  நகரைக் கைப்பற்றியபோது பற்பலர் புலம் பெயர்ந்தனர். அப்பொழுது நிகழ்ந்ததாய்க் கற்பனை செய்து, மாப்பசான் இயற்றிய சிறுகதையின் சுருக்கம்)  ஆறு குதிரை பூட்டிய, நான்கு சக்கரங்கொண்ட, ஒரு வண்டியில் பத்துப் பேர் வைகறையில் புறப்பட்டனர். லுஆசோ, கர்ரே லமாதோன், பிரபு உய்பேர் என்னும் மூன்று இணையர், மடத்துக் கன்னியர் இருவர், மற்றும் ஒரு தனி ஆண், ஒரு தனிப் பெண்.

  இந்த இளம்பெண், உடல் பருமன் காரணமாய், கொழுப்புருண்டை என ஊரால் பெயர் சூட்டப்பட்டவள். இவளை அடையாளங் கண்டுகொண்ட மூன்று மனைவியரும் கிசுகிசுத்துக்கொண்டனர்; பொதுமகள் என்னும் சொல்லை அவர்கள் தாழ்குரலில் உச்சரித்தாலும், அவள் புரிந்துகொண்டு தலை நிமிர்த்திசக பயணிகள்மீது அறைகூவல் விடுகிறமுறைப்பான பார்வையைத் தொடுத்தபோது, உடனடியாய் ஆழ்ந்த அமைதி நிலவிற்றுஅனைவரும் தலை குனிந்தனர்ஆனால்சிறிது நேரத்திலேயே, மூவரும் உரையாடலைத் தொடர்ந்தனர். அவள் அங்கிருந்தமை அவர்களைத் திடீர்  நண்பிகளாக்கிவிட்டது;  ' வெட்கங்கெட்ட விலைமாதுக்கு எதிராக, கண்ணியமான இல்லத்தரசிகள் தாங்கள்' என்ற நினைப்பு பெருமிதந்தந்தது. 

 பத்து மணி ஆகியும் இரு காதங்கூட முன்னேறவில்லை; நான்கு காதத்துக்கு அப்பால், தோத்து என்ற ஊரில் பகலுணவு உண்பதாகத் திட்டம்அங்கே இரவுக்குள் போக முடியுமா என்பதே இப்போது ஐயமாகிவிட்டது; பாதையை மூடியிருந்த பனிமண்ணில் உருளைகள் எளிதில் சுழல இயலவில்லைஓரிடத்தில் புதையுண்ட அவற்றைக் கிளப்ப இரண்டு மணி நேரம் ஆனது.

 பசியெடுத்தது. அங்கங்கு வழியிலிருந்த கடைகளில் ரொட்டிகூட இல்லை; கடைக்காரர்கள் உணவுப் பொருள்களைப் பதுக்கிவிட்டார்கள்; பட்டினியாற்  பரிதவிக்கும் படைவீரர்கள் வந்தால் கண்ணிற் பட்டதைப் பிடுங்கித் தின்றுதீர்த்துவிடுவார்களே!

  மூன்று மணி. ஒரு கிராமங்கூடத் தென்படாத அகன்றதொரு சமவெளி நடுவில் வண்டி போனபோது, கொழுப்புருண்டை தனது இருக்கைக்கு அடியிலிருந்து ஒரு பெரிய கூடையை இழுத்துத் தூக்கினாள்அதில் நெருப்பில் வாட்டிய இரு கோழிக்குஞ்சுகள், பழங்கள், தின்பண்டங்கள் என மூன்று நாளுக்குத் தேவைப்படக்கூடிய உணவுப்பொருள்களும் ஒயின் பாட்டில் நான்கும் காணப்பட்டன. ஓர் இறக்கையைப் பிய்த்து ரொட்டியுடன் சேர்த்து அவள் அருந்தத் தலைப்பட்டபோது, எல்லாக் கண்களும் அவள்மீது மொய்த்தன, எச்சில் ஊறிற்று.

  லுவாசோ கூறினார்: "எங்களைக் காட்டிலும் மேடத்துக்கு அதிக முன்யோசனைஎல்லாவற்றையும்பற்றி யோசிக்கிறவர்கள் இருக்கிறார்கள்".

  அவள் நிமிர்ந்து நோக்கி, "சாருக்குக் கொஞ்சம் வேண்டுமா? நீண்ட நேரம்  பட்டினியாக இருப்பது கடினம்" என்றாள்அவர் சலாம் செய்து, "  நான் மறுக்கவில்லை" என்று தொடங்கிமற்றவர்கள்மேல் ஒரு வட்டப் பார்வையை செலுத்தி, "இந்த மாதிரி சமயங்களில் நமக்கு உதவுகிறவர்களைக் காண்பது ஆறுதலாக இருக்கிறது" என்று முடித்தார்.   கிடைத்த தொடையொன்றை மிக்க மன நிறைவுடன் மென்றார். தம் மனைவிக்குக் கொஞ்சம் தர முடியுமா எனக் கேட்டார்அவள், 'நிச்சயமாகஎன்று புன்னகையுடன் சொல்லிவிட்டுத் தந்தாள். கன்னியரிடம் இனிய, தாழ்ந்த குரலில் கேட்டபோது, அவர்கள் உடனடியாய் ஏற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தார்கள்.

  பசியைத் தாங்கிக் கொண்டிருந்த மற்ற ஐவரையும் பார்த்த அவள், 'கடவுளேஇவர்களுக்கும் நான் தர முடிந்தால்' என்று சொல்லி நிறுத்திக்கொண்டாள்; இழிவு படுத்தியதாக நினைத்துவிடுவார்களோ என்று தயக்கம். லுவாசோ பேசினார்: "இப்படிப்பட்ட சூழ்நிலையில் எல்லாரும் உடன்பிறப்புகள்ஒருவர்க்கொருவர் உதவ வேண்டும்சம்பிரதாயம் பார்க்காதீர்கள்; ஏற்றுக்கொள்ளுங்கள். நாம் போகிற வேகத்தில் நாளை மத்தியானத்துக்குள் தோத்தை அடைவோமா என்பது தெரியவில்லை."

 கூடை கிட்டத்தட்டக் காலி; அது இன்னம் கொஞ்சம் பெரிதாய் இல்லாமற் போனதே என்பது பலரது வருத்தம்.

  இரவு கவிந்தது, குளிர் மிகுந்தது; வண்டியோட்டி விளக்கேற்றினார்:  வெளியே ஒளி; உள்ளே கும்மிருட்டு.

 ஒரு வழியாய்த் தொலைவில் வெளிச்சம் தெரியத் தொடங்கிற்று. தோத்துதான்! 14 மணி நேரப் பயணத்துக்குப் பின்பு ஊர்க்குள் நுழைந்து விடுதியின் முன் வண்டி நின்றது.

  யாரோ ஜெர்மன் மொழியில் கத்தினார்; பயணிகள் உட்கார்ந்தே இருந்தார்கள்; வெளியே போனால் கொல்லப்படலாம் என்று அச்சம். வண்டிக்காரர் இறங்கி, விளக்கை எடுத்து வந்து, கதவைத்  திறந்தார். அவரருகேசீருடையில் நின்றார் ஒரு ஜெர்மன் படைத்தலைவர். அவர், கொச்சை பிரஞ்சில், கண்டிப்பான குரலில்இறங்கக் கட்டளை இட்டவுடன் ஒவ்வொருவராய் இறங்கினர்.

  ஊரைவிட்டு நீங்குவதற்கான அனுமதிச் சீட்டை அவர் கேட்டுப் பெற்று வாசித்தார்ஜெர்மன் படையின் உயரதிகாரி கையொப்பமிட்டு வழங்கியிருந்த அதில்பயணிகளின் பெயர், வயது, முகவரி, அங்க அடையாளம், தொழில் குறிக்கப்பட்டிருந்தன. ஒத்துப் பார்த்த பின்பு போய்விட்டார். யாவர்க்கும் நிம்மதி பிறந்தது.

  சாப்பிட அமர்ந்தபோது, விடுதி உரிமையாளர் வந்து, " செல்வி எலிசபெத்  ருசே யார்?" என வினவினார்.

  கொழுப்புருண்டைக்குத் தூக்கி வாரிப் போட்டது.

 "நான்தான்.

--படைத்தலைவர் உங்களிடம் பேச விரும்புகிறார்.

--என்னிடமா?

--ஆமாம்,  நீங்கள்தானே எலிசபெத் ருசே?"

கொஞ்ச நேரம் யோசித்து, ''நான் போகமாட்டேன்" என்றாள்.

பிரபு உய்பேர் அறிவுரை வழங்கினார்: 

  "தப்பு, மேடம்உங்கள் மறுப்பு உங்களுக்குப் பெரிய சங்கடங்களை உண்டாக்கலாம்; நம் எல்லாருக்குமேதான். அதிகாரத்தில் உள்ளவர்களைப் பகைத்துக் கொள்ளவே கூடாது. நீங்கள் போவதால் ஆபத்து ஒன்றுமில்லை; விசாரணையில் மறந்துவிட்ட எதையாவது கேட்பதற்காகத்தான் இருக்கும்".

  மற்றவர்களும் சேர்ந்துகொண்டு கெஞ்சினர், வற்புறுத்தினர், வெற்றியும் பெற்றனர்.

  "உங்களுக்காகத்தான் போகிறேன்" என்று அவள் சொன்னவுடன், பிரபுவின்  மனைவி அவளது கையைப் பற்றிக்கொண்டு, "அதற்காக நாங்கள் எல்லாரும் நன்றி செலுத்துகிறோம்" என்றாள்.

   பத்து நிமிடத்தில் திரும்பி வந்தாள், 'கயவன், கயவன்' என முணுமுணுத்தபடி.

 தெரிந்துகொள்ள அனைவர்க்கும் ஆர்வம்; ஆனால் அவள் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. கர்ரே லமாதோன் அதிகமாய் வற்புறுத்தவே, "இது உங்களுக்குத் தொடர்பில்லாதது, நான் ஒன்றுஞ் சொல்வதற்கில்லை" என்று அழுத்தந் திருத்தமாய்க் கூறிவிட்டாள்.

  அதோடு நிறுத்திக்கொண்டுசாப்பிடத் தொடங்கினர். மறுநாள் காலை எட்டு மணிக்குப் புறப்படுவது என முடிவு செய்துவிட்டுப் படுத்தனர். 
    

                                        (அடுத்த பதிவில் முடியும்)
                                 ==============================
 (படம் உதவி - இணையம்)


4 comments:

 1. கொழுப்பு உருண்டை : நல்லதொரு பொருத்தமான தலைப்பு.

  படிக்க சுவையான மற்றும் சுவாரஸ்யமான கதையாக உள்ளது.

  //தெரிந்துகொள்ள அனைவர்க்கும் ஆர்வம்;//

  எங்களுக்கும்தான் அதைவிட ஆர்வமாக உள்ளது.

  //ஆனால் அவள் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.//

  அவள் பேசாவிட்டால் போகட்டும். நாமே கற்பனை செய்துகொள்வோம்.

  படைத்தலைவர் கொழுப்பு உருண்டையின் கொழுப்பினைக் கொஞ்சம் உல்லாசமாகப் பகிர்ந்துகொள்ள முயற்சித்திருப்பார் என நினைக்கிறேன்.

  தொடர்ச்சியை படிக்க மிகவும் ஆவலுடன் .....

  ReplyDelete
  Replies
  1. விவரமான பின்னூட்டம் எழுதிய உங்களுக்கு மிக்க நன்றி .பின் வரப்போவதை முன்கூட்டியே ஊகிக்கும் நுண்ணறிவு உங்களிடமுண்டு .எல்லார்க்கும் இது அமையாது .

   Delete
 2. தமிழுக்குப் புதியதான கதைக்களம். ஆனால் பெண்களின் இயல்பு மட்டும் மாறாமல் அப்படியே. கொழுப்புருண்டை பொருத்தமான பெயர் தான். தொடர்ச்சியைப் படிக்க ஆவல்.

  ReplyDelete
  Replies
  1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் அப்படியே .

   Delete