காலையில்
வண்டியோட்டி பயண ஆயத்தம் செய்யவில்லை.
பிரபு கேட்டார்:
"எட்டு மணிக்கு வண்டி
பூட்டும்படி உங்களுக்கு உத்தரவிட்டோமல்லவா?
-- ஆமாம், அதற்குப் பின்பு வேறு
உத்தரவு கிடைத்தது.
-- என்ன வென்று?
--புறப்படக்கூடாது என்று.
--யாருடைய கட்டளை?
--ஜெர்மன் அதிகாரி.
--ஏன்?
--தெரியாது, அவரைக் கேளுங்கள். வண்டி பூட்டத்
தடைபோட்டிருக்கிறார். நான் பூட்டவில்லை; அவ்வளவுதான்.
-- அவரே நேரில் சொன்னாரா?
--அவருடைய சார்பில்
விடுதி உரிமையாளர் சொன்னார்.
-- எப்போது?
-- நேற்றிரவு; நான் படுக்கப் போனபோது."
அனைவருங் கவலையில் ஆழ்ந்தனர். அதிகாரியை சந்திக்க
முயன்றனர். விடுதியில்தான் இருக்கிறார் எனினும் உரிமையாளரை மட்டுமே அனுமதிப்பாராம்.
இவரோ ஈளை நோய் (ஆஸ்த்மா) காரணமாய்ப் பத்து மணிக்கு முன்பு எழமாட்டார் என்று ஊழியரொருவர்
தெரிவித்தார்.
என்ன செய்வது? காத்திருந்தனர். பத்து
மணிக்கு உரிமையாளர் தோன்றினார்; அவரிடம் விசாரித்தனர்.
அதிகாரி,
தம்மிடம், " நாளை வண்டி கிளம்புவதைத் தடுத்துவிடுங்கள்; என் ஆணையில்லாமல் புறப்படக்கூடாது" என உத்தரவிட்டதாய்
அவர் கூறினார். அவர்மூலம் கோரிக்கை வைத்ததில், ஒரு மணிக்கு நேரம்
ஒதுக்கினார் அதிகாரி.
மூன்று பேர் மாடியேறினர்; அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். நாற்காலியில் சாய்ந்து
அமர்ந்திருந்த அதிகாரி எழவில்லை, சலாம்கூட இடவில்லை.
"என்ன?
---நாங்கள் புறப்பட விரும்புகிறோம், ஐயா.
-- கூடாது.
--காரணந்
தெரிந்துகொள்ளலாமா?
--எனக்கு விருப்பமில்லை
என்பதுதான் காரணம்.
--ஐயா, உங்கள் மேலதிகாரி நாங்கள் பயணிப்பதற்கு எழுத்துப்பட
இசைவு தந்திருக்கிறார். உங்களுக்கு அதிருப்தி ஏற்படும்படி நாங்கள் எதுவுஞ் செய்துவிடவில்லை
என்றுதான் நினைக்கிறோம்.
-- நான் விரும்பவில்லை, அவ்வளவுதான்; போகலாம்."
மூவரும் குனிந்து வணங்கிவிட்டுத் திரும்பினர்.
அனைவருங் கூடி விவாதித்தனர்: கைது பண்ணப்
போகிறாரா?
பணயமாகப் பிடித்து வைப்பாரோ? பெருந் தொகையைக் கப்பமாய்க் கேட்கும் உத்தேசமாக
இருக்குமோ?
ஒன்றும் புரியவில்லை.
இரவு வந்தது. சாப்பிடப் போகுந்தருணத்தில் உரிமையாளர்
வந்து,
"செல்வி எலிசபெத் ருசே தமது
முடிவை மாற்றிக்கொண்டாரா என்று அதிகாரி கேட்டு வர சொன்னார்" என அறிவித்தார்.
கொழுப்புருண்டை "நான் ஒருபோதும் விரும்ப மாட்டேன், விரும்பவே மாட்டேன் என்று கூறிவிடுங்கள்" என்றாள்.
அவர் போனதும், யாவரும் அவளை சூழ்ந்து மர்மத்தையறிய
நெருக்குதல் கொடுத்தனர். நீண்டநேரம் மசியாத அவள், இறுதியில் பிடி
தளர்ந்து,
சொன்னாள்: "அவனுடன் நான் படுக்க வேண்டுமாம்".
திடுக்கிட்ட அனைவரும் அவனைத் திட்டினர்; அவளுக்கு ஆதரவாய், ஆறுதலாய்ப் பேசினர். ஆத்திரந் தீர்ந்த பின்பு, மெளனமாய், யோசனையில் ஆழ்ந்தபடி, சாப்பிட்டுவிட்டுப் படுத்தனர்.
காலையில், நிலைமை மாறவில்லை; ஆனால், கொழுப்புருண்டைக்கு
எதிரான மனப்போக்கு எல்லாரிடமுந் தோன்றியிருந்தது. 'இரவில், யாருக்குந்
தெரியாமல் சென்று, அதிகாரியின் விருப்பத்தை
நிறைவேற்றி யிருந்தால், இப்போது திடீர் அறிவிப்பாக, மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்து அனைவரின் கவலையையும்
அவள் நீக்கியிருக்கலாம் அல்லவா?' ஆனால், யாரும் இப்படி வெளிப்படையாய்க் கூறவில்லை.
மூன்று இல்லத்தரசியரும் தமக்குள் ரகசியமாய்க் கருத்து
பரிமாறிக்கொண்டனர்: "நாமெல்லாம் இப்படி இங்கே கிடந்து கிழவியாக வேண்டுமா? அந்த ஆள் நல்லவன்தான்; நம்மில் ஒருத்தியை அவன் கேட்கவில்லையே!
மனைவிமாரை அவன் மதிக்கிறான். இவள் ஏன் இணங்கக்கூடாது? இவளுடைய தொழில்தானே அது? நம்மை மீட்பதற்கு வாய்ப்பு கிட்டியிருக்கும்பொழுது
இவள் முரண்டு பிடிக்கிறாளே!"
ஆண்கள் ஒருபுறம் விவாதித்தார்கள். லுவாசோ, அந்த 'இழிமகளின்' கைகால்களைக்
கட்டி ஜெர்மானியனிடம் ஒப்படைக்க விரும்பினார்; ஆனால், பிரபு உய்பேர்,சாதுரியமாய் செயல்படுதல்
மேலெனக் கருதி, "அவளை மசிய வைக்க
வேண்டும்" என்றார்.
அவளது மனத்தைக் கரைக்க, நயமாய்ப் பேசி, ஆனமட்டும் முயன்றார்கள்.
'பிறர்க்கு நன்மை விளைவிப்பதற்காகப்
பாவமுஞ் செய்யலாம், கர்த்தர் மன்னிப்பார்'
என்பதற்கு ஆதாரமாய்
விவிலியக் கதைகளைக் கன்னியர் எடுத்துக்காட்டினர்; பலன்தான் இல்லை, அவள் தன் அறைக்குப் போய்விட்டாள். உச்சக் கட்டத்தை
அடைந்தது கவலை. என்ன செய்யப்போகிறாள்? எவ்வளவு சங்கடம், அவள் உறுதி குலையாவிட்டால்?
இரவுணவு உண்பதற்கு அனைவரும் அவளுக்காகக் காத்திருக்கையில், உரிமையாளர் வந்து, " செல்வி ருசே அதிகாரியுடன் சாப்பிடுவார்; நீங்கள் மேசையில் அமரலாம்" என்று அறிவித்தாரோ
இல்லையோ,
புரிந்துவிட்டது. மகிழ்ச்சியுடன்
உண்டு மனநிறைவுடன் உறங்கினர்.
காலையில் புறப்படத் தயாரானபோது, கொழுப்புருண்டையைப் பார்க்க விரும்பாமல்
எல்லாரும் சொல்லிவைத்தாற்போல் தலையைத் திருப்பிக்கொண்டனர்; ஏமாற்றம் அடைந்த அவள், திருமதி லுவாசோவிடம், 'காலைவணக்கம், மேடம்' என மெல்லிய குரலில் சொன்னபொழுது அவள் தலையை மாத்திரம்
லேசாய் அசைத்தாள்; மாசுற்றவள் எனக் கருதி அனைவரும்
விலகினர்.
பயணத்தின்போது, அவள் யாரோ என்பதுபோல, பேச்சு கொடுக்காமல் உதாசீனஞ் செய்தனர். அவளோ, ஏறிட்டுப் பார்க்கத் துணிச்சல் இன்றி, தன்னை வஞ்சகமாய் எதிரியின் கையில் தள்ளிவிட்ட சக
பயணிகளிடம் வெறுப்பும் இறுதிவரை திண்மையைக் கடைப்பிடிக்காமல் போனதற்காக நாணமுங் கொண்டவளாய், மனங்குமுறினாள்.
=======================
(படம் உதவி - இணையம்)
கொழுப்புருண்டையான செல்வி ருசே மிகவும் நாணமுள்ள நல்ல பெண்ணாகவே எனக்குத் தெரிகிறாள். அவளின் உயர்ந்த குணங்களை எனக்கு மிகவும் பிடித்துள்ளது .... அந்த அதிகாரிக்கு அவளின் தேகக் கொழுப்பு மிகவும் பிடித்துள்ளது போலவே.
ReplyDeleteஅவள் தன் சுபாவத்திலும் தொழில் தர்மத்திலும் எப்படிப்பட்ட மோசமான பெண்ணாகவே இருப்பினும்கூட, அவளுக்கு இன்று இதில் விருப்பமில்லாமல் இருக்கும்போது, அந்த அதிகாரி அவளிடம் முறைதவறி கட்டாயப்படுத்தி தவறாக நடந்துகொண்டுள்ளதும், அதற்கு இந்த சக பயணிகள் துணை நின்றுள்ளதும், தவறுதான் என எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.
எனினும் நடந்தது நடந்துவிட்டது. இனி அவர்கள் பயணம் இனிமையாக நடக்கட்டும்.
கொழுப்புருண்டைக் குந்தாணி செல்வி: ருசே வுக்கு என் வாழ்த்துகள்.
மிகச் சரியான விமர்சனம் செய்துள்ளீர்கள் .செல்வியிடம் பகுத்துண்டு உண்ணும் நற்பண்பு இருக்கிறது . நாட்டுப்பற்றின் காரணமாகவே அவள் ஜெர்மானியனுக்கு இணங்கவில்லை ; அதுவும் போற்றுதலுக்குரிய குணம் . மற்றவர்கள் நன்றிகூட இல்லாதவர்கள் . உங்கள் பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .
Deleteஉடலை விற்றுச் சம்பாதிக்கும் அப்பெண்ணிடம் கூட நாட்டுப்பற்று, மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்கின்றது. ஆனால் கப்பல் நகர அவளைப் பயன்படுத்திக் கொண்ட பிறகு உதாசீனம் செய்யும் மற்றவர்களின்செயல் மோசமானது. கதையை மொழிபெயர்த்துப் படிக்கக் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி.
ReplyDeleteபின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . பெரும்பாலோர் தன்னலக்காரர்களாய்த்தான் இருக்கிறார்கள் .
Delete