Wednesday, 10 January 2018

ஏன்?   5000 கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து வந்த வெள்ளையர் ஆசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி அடிப்படுத்தி நீண்ட நெடுங்காலம் ஆண்டார்களே! இதோ, பக்கத்தில், நீந்திக் கடக்கக்கூடிய சிறு கடலில் உள்ள தீவைத் தமிழர்கள் படித்துத் தங்கள் நாட்டுடன் சேர்த்திருந்தால் இன்று அங்கே நாம் சிறுபான்மையினராய் அவல வாழ்வுக்கு ஆளாகி அல்லல்பட நேர்ந்திராது அல்லவா? அப்படிச் செய்யாதது ஏன்?

   முடியாமைதான் காரணம்.

   சிங்களர்கள் சமமான வீரர்கள். அவர்கள் தமிழகத்துள் நுழைந்து சில பகுதிகளைப் பிடித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

   நூல்: பாண்டியர் வரலாறு. ஆசிரியர்: சதாசிவ பண்டாரத்தார். பக். 79, 80;

   “இலங்காபுரித் தண்டநாயகன் பாண்டி நாட்டின் இராமேச்சரம், குந்துகாலம் என்ற ஊர்களைக் கைப்பற்றினான். நாட்டைச் சிறிது சிறிதாகப் பிடித்துக் கொண்டு வந்த சிங்களப் படைக்கும் குலசேகரப் பாண்டியன் படைக்கும் பல ஊர்களில் கடும்போர்கள் நடைபெற்றன. இலங்காபுரித் தண்டநாயகன் பெருவெற்றி எய்தி, மதுரை மாநகரைக் கைப்பற்றினான். கீழை மங்கலம், மேலை மங்கலம், தொண்டி, கருந்தங்குடி, திருவேகம்பம் முதலான ஊர்களும் அவன் வசமாயின.

   பாண்டியனுக்கு உதவியாய் வந்த சோழர் படைக்கும் சிங்களப் படைக்கும் தொண்டி, பாசிப்பட்டினம் முதலிய ஊர்களில் நடைபெற்ற பெரும்போர்களில் சிங்களர் வென்றனர். இவர்களின் வெற்றி அந்நாள்களில் சோழ மண்டலத்திலும் பிற நாடுகளிலும் வாழ்ந்துகொண்டிருந்த மக்களுக்குப் பேரச்சத்தையும் பெருங்கலக்கத்தையும் உண்டுபண்ணிவிட்டது என்பது காஞ்சி மாநகரை அடுத்துள்ள ஆர்ப்பாக்கத்தில் காணப்படும் கல்வெட்டொன்றால் அறியப்படுகிறது.”

   வாசித்தீர்களா? பாண்டியன், சோழன் இருவரும் சேர்ந்தபோதிலும் தோற்றனர். பாண்டிநாடு முழுதும் இலங்கையின் பகுதியாகாமல் தப்பித்ததே தம்பிரான் புண்ணியம்! இந்த அழகில் இலங்கை மீது நாம் படையெடுப்பதாவது, கைப்பற்றுவதாவது!

   என்றாலும் சுமார் நூறு ஆண்டுக்குப் பின்பு, பாண்டியர் படை இலங்கை சென்று பல பகுதிகளைப் பேரழிவுக்குள்ளாக்கி நகரங்களைக் கொள்ளையடித்து சுபகிரி என்னும் நகரிலிருந்த கோட்டையைக் கைப்பற்றியது. இறுதியில் அந்நாட்டில் கிடைத்த பெரும்பொருளை எடுத்துக்கொண்டு வெற்றியுடன் திரும்பிற்று. (மேற்படி நூல். பக். 109).


   உச்சக்கட்டச் சாதனை அவ்வளவுதான். முழுத்தீவையும் வசப்படுத்தப் போதிய படை வலிமையில்லை; கிடைத்த சிறு பகுதியையாவது காலனியாக்குவதற்குத் தேவையான வசதிகளோ organizing திறமையோ இல்லாமற் போயின. 

(படம் உதவி இணையம்)

8 comments:

 1. மேம்போக்காக புரிந்து எழுதப்படட வரலாறு
  -----------------------------------------
  பாண்டிய மன்னர்களுக்கும் சிங்கள மன்னர்களுக்கும் விஜயன் காலத்தில் இருந்து நெருங்கிய தொடர்பு

  சோழர்கள் பாண்டிய நாட்டுக்கு படை எடுக்கும் போது சிங்களவர்கள் பாண்டியனுக்கு உதவியாக வருவார்கள்

  1167 இல் மதுரையை ஆண்ட பராக்கிரம பாண்டியனுக்கும் குலசேகர பாண்டியனுக்கும் நடந்த உள் மோதலில், பராக்கிரம பாண்டியனுக்கு உதவ ஸ்ரீலங்காவை ஆண்ட பராக்கிரம பாகு மன்னனால் தண்ட நாதன் ( தண்ட நாயகன் அல்ல ) என்னும் தளபதி தலைமையில் ஒரு படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

  படை காலதாமதம் ஆக குலசேகர பாண்டியன் பராக்கிரம பாண்டியன், மனைவியை கொன்று மதுரையை கைப்பற்றுகின்றான்.

  இதில் பராக்கிரம பாண்டியனின் மகன் வீர பாண்டியன் தன் படையுடன் தப்பி சென்று சிங்கள படையுடன் இணைக்கின்றார்கள்

  குந்துக்கால் இல் எந்த கொத்தளமும் இருக்க வில்லை ... முன்னேறி வந்த இரண்டு இன படைகளும் குந்துகாலில் கோட்டை அமைத்தார்கள்

  அதன் பின் மதுரையை கைப்பற்றிய சிங்கள , வீரபாண்டியன் படை பின் சோழ நாடு நோக்கி முன்னேறியது .. சில சோழ கிராமங்களை அழித்தார்கள்
  ஆனால் அதுக்கு பின் என்ன நடந்தது என்று சொல்லவேயில்லை . தந்தநாதன் ஸ்ரீலங்கா திருப்பினானா , வீர பாண்டியன் மதுரையை ஆண்டானா என்பதை சொல்லவேயில்லை

  ஆனால் பல்லவராயன் பேட் டை கல்வெட்டு கூறுகின்றது
  1171 இல் சோழ அரசன் ராஜாதி ராஜன் சிங்கள படையை வென்று சிங்கள தளபதி தண்டநாதன் இன்னொரு தளபதியான ஜகத் விஜய வையும் வென்று அவர்களை தலையை வெட்டி மதுரை வாசலில் நட்டு வைச்சான்

  அதன் பின் சிங்கள படை நாடு திரும்பியது

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி . சதாசிவ பண்டாரத்தாரின் நூலில் உள்ள தகவல்கள் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை . நூலின் பக்கங்கள் குறிக்கப்பட்டுள்ளன .

   Delete
 2. வெள்ளையர்கள் கால் ஊன்றக்காரணம் நம்மிடம் இருந்த ஒற்றுமை இன்மையே. சிங்களத்தவரிடம் தோற்றது பங்காளிச் சண்டை மாதிரி இருக்கலாம் மேலும் சதாசிவப் பண்டாரத்தார் எழுதியதில் இதற்கு முக்கியத்துவமிருக்கிறதா நிறைய விஷயங்கள் சிந்தனையைத் தூண்டுகிறது

  ReplyDelete
  Replies
  1. அவர்களின் நவீன ஆயுதங்களும் அணிவகுப்பு , போர்ப்பயிற்சி முதலியவையுந்தான் காரணம் . பாபர் வென்றமைக்கு பீரங்கி காரணம் .உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

   Delete
 3. சிங்கள வரலாற்று ஆவணங்களாக மகாவம்சம் , சூளவம்சம் பராக்கிரமபாகுவின் படைகள் தந்தநாதனின் தலைமையில் பாண்டி நாடு வந்து வீரபாண்டியனின் படைகளுடன் இணைந்து குலசேகர பாண்டியனின் படைகளை வென்று மதுரை வென்று பின் சோழ நாட்டுக்கு போர் தொடுத்தது பற்றி கூறுகின்றது அப்புறம் என்ன நடந்தது பற்றி பேசவேயில்லை. ஆனால் பல்லவராயன் கல்வெட்டு என்ன நடந்தது பற்றி கூறுகின்றது.

  ReplyDelete
  Replies
  1. வரலாற்றை ஆதியோடந்தமாய் எழுதுவது கட்டுரையின் நோக்கமல்ல . இலங்கையைத் தமிழர் ஏன் தம் நாடாய் ஆக்கவில்லை என்பதற்கு விடை கூறுவதே குறிக்கோள் .

   Delete
 4. https://www.wisdomlib.org/hinduism/book/later-chola-temples/d/doc212042.html

  ReplyDelete
 5. சதாசிவ பண்டாரத்தாரின் பாண்டியர் வரலாறு கூறும் செய்திகளை அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete