Tuesday, 11 December 2018

அறை (தொடர்ச்சி)




  ஏவ் சலனப்படவில்லை, விழிகளை உயர்த்தக்கூட இல்லை.

  எனக்குத் தெரிந்ததுதான்.”

  யார் சொன்னார்?” வியப்புடன் கேட்டார்.

  ஃப்ரான்ஷோ. ஆறு மாதமாய்த் தெரியும்.”

  நானொருத்தன், உனக்குத் தெரியப்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டிருந்தேன்என்ற திரு. தர்பேதா, பெருந்துயருடன், “சரி, தெரிந்துகொண்டது மேலானதாக இருக்கலாம்; ஆனால் இந்த நிலைமையில் பியேரை உன்னுடன் வைத்துக்கொள்வது மன்னிக்க முடியாதது என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும். நீ மேற்கொண்டுள்ள போராட்டம் தோல்வியில்தான் முடியும்; அவனது நோய் ஆளைவிடக் கூடியதல்ல. ஏதாவது செய்ய இயன்றால், சிகிச்சையால் காப்பாற்றலாம் என்றால், நான் எதுவுஞ் சொல்ல மாட்டேன். கொஞ்சம் யோசி: நீ அழகி, புத்திசாலி, கலகலப்பானவள், உன்னை நீ விளையாட்டாக அழித்துக் கொள்கிறாய், அதுவும் ஆதாயமின்றி. நான் ஒப்புக் கொள்ளுகிறேன், நீ மெச்சத் தகுந்தவளாய் இருந்திருக்கிறாய்; ஆனால் பார், அது முடிந்துவிட்டது. உன் முழுக் கடமையையுஞ் செய்திருக்கிறாய், கடமைக்கு மேலேயும்; இனியுந் தொடர்வது அறமல்ல. நாம் நமக்கென்றே செய்துகொள்ள வேண்டிய கடமைகளும் உண்டு, குழந்தாய். மேலும் எங்களைப் பற்றி நீ நினைக்கவில்லை.”

  சொற்களைத் தனித் தனியாய்ப் பிரித்துக் கூறினார்:

  ஃப்ரான்ஷோவின் மருத்துவ…. மனைக்குப்பியேரைஅனுப்ப…. வேண்டும்.”

  தொடர்ந்தார்:

  உனக்குத் துன்பமொன்றே தந்த இந்த வசிப்பிடத்தைக் கைவிட்டு எங்களிடம் திரும்பி வா. பிறர்க்கு உதவ வேண்டும், மற்றவர்களின் வேதனைகளைத் தணிக்கவேண்டும், என்று நீ ஆவல்பட்டால், உன் தாய் இருக்கிறாள், பரிதாபத்துக்குரிய அவள் செவிலியர் சிகிச்சை பெறுகிறாள். அருகில் உற்றார் இருப்பது அவளுக்கு அதிகந் தேவை. மேலும் நீ செய்வதைத் தக்கபடி மதிப்பிடவும் அதற்காக நன்றி பாராட்டவும் அவளால் முடியும்.”

  நீண்ட அமைதி நிலவிற்று.

  மகளை நோக்கி விழி உயர்த்தினார்:

  என்ன, விருப்பமில்லைதானா?”

  பியேர் என்னுடன் இருப்பான்என மென்மையாய்ச் சொன்ன ஏவ், “அவனுடன் நான் நன்றாக ஒத்துப் போகிறேன்.” என்று முடித்தாள்.

  நாள் முழுக்க, மடத்தனமாய்.”

  ஏவ் புன்சிரித்துத் தந்தையின் பக்கம் எகத்தாளமான, மகிழ்ச்சி நிறைந்த அசாதாரண பார்வையை வீசினாள். திரு. தர்பேதா எண்ணினார், சினத்துடன்: ‘மெய்தான், அப்படி வாழ்வது மட்டுமல்ல, ஒன்றாகப் படுக்கிறார்கள்.’

  எழுந்துகொண்டே சொன்னார், “நீ முழு அளவுப் பைத்தியம்

  அவள் சோகமாய்ச் சிரித்து, முணுமுணுத்தாள். தனக்குத் தானே சொல்லிக் கொள்வது போல்: “போதுமான அளவல்ல.”

  போதுமான அளவல்லவா? உனக்கு நான் ஒன்றுதான் கூறமுடியும், மகளே: உன்னை நினைத்துப் பயப்படுகிறேன்.”

  விரைவாய் முத்தமிட்ட பின்பு வெளியேறினார்; மாடிப்படி இறங்குகையில் எண்ணினார்: ‘இரண்டு பலசாலிப் பையன்களை அனுப்பி அந்தப் பரிதாபக் கழிவை வலுக்கட்டாயமாய் இழுத்துக்கொண்டு வந்து அவனது கருத்தைக் கேட்காமலே நீர்த்தாரையின் கீழே அமுக்கச் செய்யவேண்டும்.’

  இலையுதிர்க் காலத்தின் அழகிய அமைதியான நாள் அது! பாதசாரிகளின் முகங்களில் சூரியன் பொன் பூசினான். அந்த முகங்களினுடைய எளிமை அவரிடம் தாக்கம் உண்டாக்கிற்று. சுருக்கம் விழுந்தவை சில, மழமழவென்று சில; அவருக்குப் பழக்கமான இன்பங்களையும் கவலைகளையும் அவை யாவும் பிரதிபலித்தன.

  சேன்ழெர்மேன் சாலையில் நுழைந்தபோது அவர் தமக்குள் சொல்லிக் கொண்டார்; நான் ஏவிடம் என்ன குறை காண்கிறேன் என்பது மிகச் சரியாக எனக்குத் தெரிகிறது. மனிதத்துக்குப் புறம்பே வாழ்வதாகக் குற்றஞ் சொல்கிறேன். பியேர் இப்போது மனிதனல்ல. அவனுக்கு எல்லாப் பணிவிடைகளுஞ் செய்கிறாள், அவனிடம் முழு அன்பு செலுத்துகிறாள், அவற்றில் ஓரளவேனும் இந்த மனிதர்களுக்குக் கிடைக்கவில்லையே. பிறர்க்கு உதவாமல் இருப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது; நாம் சமுதாயமாக வாழ்கிறோம்.  

  வரவேற்பறையில் ஏவ் தனித்திருந்தாள். தந்தையின் கண்கள் நினைவுக்கு வந்தன. திரு. தர்பேதா பியேர் மீது குனிந்தார்; “அது நல்லதுஎன்று அவனிடங் கூறினார், நோயாளிகளிடம் பேச அறிந்தவர் போல. அவனைப் பார்த்தார், அவரது பருத்த மற்றும் ஜீவனுள்ள கண்களின் ஆழத்தில் பியேர் ஓவியமானான். “நான் அவரை வெறுக்கிறேன் அப்படிப் பார்க்கும்போது; அவர் அவனைப் பார்வையால் துருவுகிறார் என்பதை நினைக்கையில்.”

  பியேரின் அறையை நோக்கி அடியெடுத்து வைத்தவள் உடனடியாய் நின்று சுவரில் முதுகைச் சாய்த்தாள், சிறிது கலக்கத்துடன்; அறையிலிருந்து நீங்கிய ஒவ்வொரு தடவையும் போல் இந்தத் தடவையும் மறுபடி அங்கு நுழையவேண்டுமே என்ற நினைப்பு அச்சமூட்டிற்று. அவள் நன்றாக அறிவாள் வேறிடத்தில் தன்னால் வாழ இயலாது என்பதை. அறையை அவள் நேசித்தாள்; அந்த நிழலும் வாசனையுமற்ற வரவேற்பறை மீது பார்வையை ஓடவிட்டாள், ஆர்வமின்றி, கொஞ்ச நேரம் கழிவதற்காக; துணிச்சல் மீண்டும் வருவதற்காக அங்குக் காத்திருந்தாள்.

  சாத்தியிருந்த கதவின் கைப்பிடிக் குமிழை உற்றுப் பார்த்தாள். கலக்கம் தொண்டையை இறுக்கிற்று: மனக் கலக்கம். “நான் அங்கே போகவேண்டும்; இவ்வளவு நேரம் தனியாய் அவனை ஒருபோதும் விட்டதில்லை.” கதவைத் திறக்கவேண்டும்; பின்பு கண்களை அரையிருளுக்குப் பழக்கப்படுத்துவதற்காக வாசலில் நிற்பாள். அறையோ தன் முழு ஆற்றலுடன் அவளை வெளித் தள்ளும்; அந்த எதிர்ப்பை முறியடித்து அறையின் மையம் வரை போய்விடவேண்டும்.

  வலிய ஆவல் திடீரெனத் தோன்றியது, பியேரைப் பார்ப்பதற்கு. அவனுடன் சேர்ந்து திரு. தர்பேதாவைப் பற்றிக் கிண்டலடிக்க ஆசை; ஆனால் அவனுக்கு அவள் தேவையற்றவள். அவனது வரவேற்பு எப்படியிருக்கும் என்பதை முன்னறிய முடியவில்லை.

  நான் தங்களுள் ஒருத்தி என இயல்பான மக்கள் இன்னமும் நம்புகிறார்கள்; ஆனால் அவர்களிடையில் ஒரு மணி நேரங்கூட தங்குவதற்கு என்னால் இயலாது. அங்கே, இந்தச் சுவருக்கு அடுத்த பக்கத்தில் வாழ்வது எனக்குத் தேவைப்படுகிறது, ஆனால் அங்கு நான் விரும்பப்படாதவள்.”

  பியேரின் குரல் கேட்டது: “அகாத்து, எங்கேயிருக்கிறாய்?”

  வருகிறேன்என உரக்கச் சொன்னபடி கதவைத் திறந்து நுழைந்தாள்.

  சாம்பிராணியின் அடர்த்தியான மணம் மூக்கையும் வாயையும் நிரப்பிற்று. விழிகளை அகலத் திறந்து கைகளை முன்புறம் நீட்டினாள். வாசனையும் அரையிருளும் அவளுக்கு நெடுங்காலமாகவே ஒரே பொருளாகிவிட்டிருந்தன; நீர், காற்று, நெருப்பு போலப் பழக்கமாகிவிட்டன. மூடுபனியில் மிதப்பது போன்று தெரிந்த ஒரு வெளுத்த கறையை நோக்கி எச்சரிக்கையுடன் முன்னேறினாள்; அது பியேரின் முகம். அவனது உடை இருளில் சங்கமித்திருந்தது. (நோய்வாய்ப்பட்டதிலிருந்து கருப்பே அணிகிறான்.) தலையைப் பின்புறம் தாழ்த்திக் கண்களை மூடியிருந்தான். அவனருகில் நாற்காலியில் அமர்ந்தாள்.

  அகாத்து!”

  பியேர் கண் திறந்திருந்தான்; ஏவைப் புன்முறுவலுடன் பார்த்து, “உனக்குத் தெரியுமா, முள் கரண்டி? அதிலொன்றுமில்லை; அவரைப் பயமுறுத்துவதற்காக அப்படிச் செய்தேன்.”

  உனக்கு மிக நல்ல வெற்றி! அவரை முழுக்கக் குழப்பிவிட்டாய்.”

  நீ கவனித்தாயா? நெடுநேரம் அதை உருட்டிக் கொண்டிருந்தார். அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன். இந்த ஆள் முன்பே வந்திருக்கிறார். இவரை ஏன் என்னிடம் அனுப்பினார்கள்? தப்பு செய்கிறார்கள்; அவர்களிடம் அதிகாரம் இருக்கிறது, ஆனால் தவறு செய்கிறார்கள். நான் தப்பு செய்வதேயில்லை. இது எனக்கு அனுகூலம்.”

  கடுமையான குரலில் தொடர்ந்தான்: “அவர் ஒரு ஏவலாள். உனக்கு அவரைத் தெரியும். அவருடன் வரவேற்பறைக்குப் போனாய்.”

  ஏவ் பதிலுரைக்கவில்லை.

  அவர் என்ன விரும்பினார்? உன்னிடஞ் சொல்லியிருப்பாரே?”

  ஒரு கணந் தயங்கிய ஏவ் அழுத்தந் திருத்தமாய்த் தெரிவித்தாள்: “உன்னை அடைத்து வைக்க வேண்டுமாம்.”

  ஏளனமாய்க் கூறினான் பியேர்: “அடைத்து வைப்பது! நல்ல பாதையிலிருந்து விலகுகிறார்கள். அவை என்னை என்ன செய்யும், சுவர்கள்? அவை என்னைத் தடுக்கும் என்று நம்புகிறார்கள் போலும். சுவர்கள், கடக்கப்படக் கூடியவை. நீ என்ன பதில் சொன்னாய்?”

  உன்னை அடைக்கக் கூடாது என்று.”

  தோள்களை உலுக்கினான்: “நீ வேண்டுமென்றே சொல்லியிருந்தாலொழிய, அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது; நீயுந் தப்பு செய்திருக்கிறாய். அவர்கள் தங்கள் திட்டத்தை வெளிப்படுத்த விடவேண்டும்.”

  ஏவ் சோகத்துடன் தலை குனிந்தாள். மேசை மீது இருந்த விளக்கையும்அதன் அடிப்பாகத்தில் பியேர், கருப்பு வண்ணம் பூசியிருந்தான்சதுரங்கப் பலகையையும் பார்த்தாள். அதில் கருப்புச் சிப்பாய்களை மட்டுமே விட்டுவைத்திருந்தான். சில சமயம் அவன் எழுந்து மேசையருகில் சென்று சிப்பாய்களை ஒவ்வொன்றாய்க் கையிலெடுப்பான்; அவற்றிடம் பேசுவான், அவற்றை ரொபோ என விளிப்பான். அவனது விரல்களுக்கிடையில் அவை உயிர்பெற்றன போல் தோன்றும். அவன் வைத்த பின்பு ஏவ் தன் முறைக்குப் போய்த் தொடுவாள்; அவை மீண்டும் ஜீவனற்ற மரத்துண்டுகளாக மாறியிருக்கும். இவை அவனுடைய பொருள்கள் என நினைப்பாள். “அறையில் எனது என்று எதுவும் இப்போதில்லை. பிறர் கண்ணுக்குப் புலப்படாமல் இருக்க விரும்புகிறேன். அவனைப் பார்க்கவேண்டும், அவனால் பார்க்கப்படக்கூடாது. நான் அவனுக்குத் தேவையில்லை; அறையில் நான் இருப்பது அதிகம்.”

  சுவர்த்தாளின் பெரிய சிவப்பு ரோஜாக்களை அடிக்கடி பார்த்தாள், அவை நடனமாடத் தொடங்கும்வரை. அரையிருளில் ரோஜாக்கள் ஒளிர்ந்தன. சுவரில் வெங்காய வில்லைகளைப் போன்ற தோற்றந்தந்த சில வெண்வட்டுகளும் இருந்தன. அவை சுழன்றன. ஏவின் கைகள் நடுங்கத் தொடங்கின. “சில நேரங்களில் நான் பைத்தியமாகிறேன்; இல்லையில்லை, நான் பைத்தியமாக முடியாது. தளர்ந்து போகிறேன், அவ்வளவுதான்.” என நினைத்தாள், தன்மீதே வெறுப்புடன்.

  தன் கையின் மேல் திடீரெனப் பியேரின் கையை உணர்ந்தாள். விரல் நுனிகளால்தான் பிடித்திருந்தான், ஒரு வித வெறுப்புடன், ஒரு நண்டை முதுகில் பற்றி, அதன் கொடுக்குகளைத் தவிர்க்க விரும்பினாற் போல.

  அகாத்து, உன்மீது முழு நம்பிக்கை வைக்க விரும்புகிறேன்.”

  ஏவ் கண்களை மூடிக்கொண்டாள். “பதிலெதுவுஞ் சொல்லக்கூடாது; சொன்னால், அவநம்பிக்கை கொள்வான்; அப்புறம் ஒன்றுங் கூறமாட்டான்.”

  கையை விட்டுவிட்டான்.

  உன்னை மிகவும் நேசிக்கிறேன், அகாத்து; ஆனால் புரிந்துகொள்ள முடியவில்லை. எப்போது பார்த்தாலும் ஏன் அறைக்குள்ளேயே இருக்கிறாய்?”

  மறுமொழியில்லை.

  ஏனென்று சொல்லு.”

  உன்னை நேசிக்கிறேன் என்பது உனக்கு நன்றாகத் தெரியும்என்றாள் உணர்ச்சியற்ற குரலில்.

  நான் நம்பவில்லை. எதற்காக என்னை நேசிப்பாய்? அச்சந்தான் ஏற்படும்; எனக்குப் பேய் பிடித்திருக்கிறது. உனக்கும் எனக்கும் நடுவில் ஒரு சுவர் இருக்கின்றது; உன்னை பார்க்கிறேன், பேசுகிறேன், ஆனால் நீ வெளிப்பக்கத்தில் இருக்கிறாய். நம் காதலை எது தடுக்கிறது? எனக்குத் தோன்றுகிறது, இப்போதைவிட எளிதாய் இருந்தது முன்பு என்று, ஹாம்பூரில்.”

  ஆமாம்,” என்றாள் ஏவ், வருத்தமுடன், சதா ஹாம்பூர்!

  அவன் தங்களது மெய்யான கடந்த காலம் பற்றிப் பேசவே மாட்டான். இருவரும் ஹாம்பூர் போனதில்லை.

  நாம் கால்வாய்களின் ஓரமாய் உலாவினோம். அங்கே ஒரு தட்டைப் படகு பார்த்தோம், நினைவிருக்கிறதா? அது கருப்பாய் இருந்தது. பாலத்தின் மேல் ஒரு நாய். உன் கையைப் பிடித்திழுத்தேன்; உனக்கு வேறு தோல் இருந்தது. நீ சொன்னதையெல்லாம் நம்பினேன்.”

  சும்மாயிருங்கள்எனக் கத்தினாள்.

  சிறிதுநேரம் காது கொடுத்துக் கேட்டான்: “வரப்போகின்றனஎன்றான் வருத்தந்தோய்ந்த குரலில்.

  ஏவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘வரப்போகின்றனவா? இனிமேல் வராதென்று நம்பி இருந்தேனே!’

  மூன்று நாளாய்ப் பியேர் முன்பைக் காட்டிலும் அதிக அமைதியாய் இருந்தான்: சிலைகள் வரவில்லை. அவற்றைக் குறித்து நடுங்கவைக்கும் அச்சம் கொண்டிருந்தான். (அதை அவன் ஒப்புவதில்லை.) ஏவ் தைரியசாலி; ஆனால் அவை ரீங்காரம் செய்துகொண்டு பறக்கும்போது பியேருக்காகப் பயந்தாள்.

  அட்டையைத் தாஎன்றான்.

  அவள் எழுந்துபோய் அதையெடுத்தாள். சிலைகளைத் துரத்த அது பயன்படும். சிலந்தி போன்ற தோற்றம்; பியேரே அட்டைத் துண்டுகளை ஒட்டித் தயாரித்தது. ஒரு துண்டில்பொறிமேல் ஆதிக்கம்எனவும் மற்றொன்றில்கருப்புஎனவும் எழுதியிருந்தான்; இன்னொன்றில் கண்களை இடுக்கிக்கொண்டு சிரிக்கிற முகமொன்றை வரைந்திருந்தான்; அது வால்டேராம். சிலந்தியின் ஒரு காலைப் பிடித்துத் தூக்கிக் கூம்பிய முகத்துடன் அதை நோக்கினான்:

  இது இனிமேல் பயன்படாதுஎன்றான்.

  ஏன்?”

  இதை நேர்மாறாக்கிவிட்டார்கள்.”

  வேறொன்று செய்வாயா?”

அவளை நெடுநேரம் உற்றுப் பார்த்தான்.

  அதை நீ மிகவும் விரும்புகிறாய்என்றான் பற்களுக்கிடையில்.

  அவன் மீது ஏவுக்கு எரிச்சல்: “ஒவ்வொரு தடவையும் அவை வருவது அவனுக்கு முன்கூட்டித் தெரிகிறது. எப்படி? அவன் கணிப்பு தவறுவதே இல்லை.”

  பியேரின் விரல் நுனியிலிருந்து சிலந்தி பரிதாபமாய்த் தொங்கிற்று.

  இதைப் பயன்படுத்தாமலிருப்பதற்கு சில காரணங்களை எப்போதுங் கண்டுபிடிக்கிறான். ஞாயிறன்று, அவை வந்திருந்தபோது, சிலந்தியைக் காணோம் என்று சாக்கு சொன்னான்; ஆனால் நான் அதைக் கண்டேன், பசை பாட்டிலுக்குப் பின்னால்; அவற்றை யிழுப்பவன் இவனல்லவா என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன். முழுக்க முழுக்க மெய் பேசுகிறானா என்பதை ஒருகாலும் அறிய முடிவதில்லை. சிலைகளை எந்த அளவுக்கு உண்மையென நம்புகிறான்? சிலைகளைப் பொருத்தவரை, எனக்குத் தெரிகிறது, அவற்றை அவன் காண்பதில்லை, சத்தம் மட்டுங் கேட்கிறான் என்று. அவை கடக்கும்போது தலையைத் திருப்பிக் கொள்கிறான்; இருந்தாலும் பார்ப்பதாய்ச் சொல்கிறான், அவற்றை வர்ணிக்கிறான்.” டாக்டர் ஃப்ரான்ஷோவின் சிவந்த முகம் நினைவுக்கு வந்தது. “பிரிய மேடம், புத்தி சுவாதீனம் இல்லாத எல்லாரும் பொய்யர்கள்; அவர்கள் உணர்வதாகச் சொல்வதற்கும் உண்மையாக உணர்வதற்கும் இடையில் வேறுபாடு கண்டறிய நீங்கள் முற்பட்டால் காலத்தை இழப்பீர்கள்.” திடுக்கிட்டாள். “ஃப்ரான்ஷோவுக்கு இங்கென்ன வேலை? அவர் சிந்திப்பதைப் போல நான் சிந்திக்க மாட்டேன்.”

  பியேர் எழுந்து சிலந்தியைக் கொண்டுபோய்க் குப்பைக்கூடையில் எறிந்தான். திரும்பி வந்து அமர்ந்து ஏவைப் பார்த்தான். அவள் முணுமுணுத்தாள்: “உன்னைப் போல்தான் நான் சிந்திக்க விரும்புகிறேன்.”

  அவன் கூறினான்:

  சுவரில் கருப்புத் தாள் ஒட்டவேண்டும், இந்த அறையில் போதிய கருப்பு இல்லை.”

  கடிகாரத்தில் ஆறு மணி அடித்தது. ஏவ் பெருமூச்செறிந்தாள். “சிலைகள் உடனடியாக வாரா. காத்திருக்கவேண்டும்.”

  இருட்டில் காத்திருக்கப் பிடிக்கவில்லை.

  விளக்கேற்றட்டுமா?”

  உன் விருப்பப்படி செய்.”

  சிறிய விளக்கைக் கொளுத்தினாள். அறையை சிவப்பு மூடுபனி ஆக்ரமித்தது. செம்மூடுபனியில் பியேரின் உதடுகள் இரு மங்கிய கறைகளாய்த் தோன்றின. ஏவுக்கு அந்த உதடுகள் பிடிக்கும். முன்பு அவை உணர்ச்சியைத் தூண்டுவனவாயும் இன்பந் தருவனவாயும் இருந்தன; இப்போது சுவையை இழந்துவிட்டன. அந்த விறைத்த முகத்தில் அவை மட்டுமே ஜீவனுடையவை.

  அவளை அவன் முத்துவதை அறவே விட்டுவிட்டான்; ஸ்பர்சங்களால் அவன் வெறுப்படைந்தான். இரவில் யாரோ அவனைத் தொட்டனர்; ஆண்களின் கைகள் வலியவை, வறண்டவை, உடல் முழுதுங் கிள்ளின; பெண்களின் கைகள் நீண்ட நகங்களுடன், கெட்ட விதமாய் வருடின. அடிக்கடி முழு உடையணிந்து படுத்தான். ஆனால் கைகள் ஆடைக்குள் நழுவிச் சட்டையை இழுத்தன. ஒரு தடவை சிரிப்பொலி கேட்டது, உடன் அவனுடைய உதடுகளின்மீது உப்பலான உதடுகள் படிந்தன; அந்த இரவிலிருந்துதான் ஏவை முத்தமிடுவதில்லை.

  அகாத்து, என் வாயைப் பார்க்காதே!”

  ஏவ் கண்களைத் தாழ்த்தினாள். அவன் தொடர்ந்தான், துடுக்குடன்: “உதடுகள் கொண்டு உள்ளத்தை அறியலாம் என்பதை நான் அறியாதவனல்ல.”

  மிக உரத்த குரலில் பேசத் தொடங்கினான்: “நினைவிருக்கிறதா, சாங்த் பொலீ?”

  பதில் சொல்லக்கூடாது. பொறி வைக்கிறானோ, என்னவோ?

  திருப்தி நிறைந்த குரலில் தொடர்ந்தான்:

  அங்கேதான் உன்னை யறிந்தேன். ஒரு டேனிஷ் கடற்படைக்காரனிடமிருந்து உன்னைக் கிளப்பினேன். கைகலப்பு ஏற்படும் நிலைமை; ஆனால் மதுப் பணத்தை நான் தந்துவிட்டமையால் உன்னை அழைத்துப் போக விட்டுவிட்டான். எல்லாம் நகைச்சுவை நாடகம்.”

  பொய் சொல்கிறான். தான் சொல்வதில் ஒரு சொல்லைக் கூட அவன் நம்பவில்லை; என் பெயர் அகாத்து அல்ல என்பது அவனுக்குத் தெரியும். இப்படிப் புளுகும்போது அவனை வெறுக்கிறேன்.’

  அவனது நிலைத்த கண்களைப் பார்த்தாள். அவளது கோபம் உருகிற்று. சிந்தித்தாள்.

  அவன் பொய் பேசவில்லை. தடுமாற்றத்தில் இருக்கிறான். அவை நெருங்குவதை உணர்கிறான்; சத்தங் கேட்பதைத் தவிர்ப்பதற்காகப் பேசுகிறான்.’

  பியேர் கூறினான்: “நம் சந்திப்புகள் பெரும்பாலும் அசாதாரணமானவை; ஆனால் தற்செயலானவை என நம்ப மாட்டேன். உன்னை அனுப்பியவர் யார் என நான் கேட்கவில்லை, நீ சொல்லமாட்டாய் என்பது எனக்குத் தெரியும். எப்படியோ, என்மேல் சேற்றை வாரியிறைப்பதற்குப் போதிய சாமர்த்தியம் உன்னிடம் இருந்தது.”

  சிரமப்பட்டுப் பேசினான், கீச்சுக்குரலில், விரைவாக; சில சொற்களை உச்சரிக்க இயலவில்லை; வாயிலிருந்து அவை வழுக்கி வெளிப்பட்டன.

  என்னை விழாவின் மத்தியில் இழுத்துப் போனாய். கருப்புக் கார்கள் தொங்கும் குடைராட்டினங்களுக்கு இடையில்; கார்களுக்குப் பின்னால் சிவப்புக் கண்களின் பட்டாளமொன்று இருந்தது. நான் முதுகைத் திருப்பின உடனே அவை ஒளி வீசின. நீ என் கையில் தொங்கியபடியே, அவற்றுக்குச் சைகை காட்டினாய் என்று நினைக்கிறேன்.”

  கத்தினான்: “மௌனமாக இருக்கவேண்டும் என்பது கட்டளை. மௌனம். எல்லாரும் அவரவர் இடத்தில் விறைப்பாக! சிலைகளின் நுழைவுக்காக! அது உத்தரவு. த்ரலலா

  ஊளையிட்டான், கைகளை வாய்க்கு முன் ஒலிபெருக்கி போல் குவித்துக்கொண்டு: “த்ரலலா, த்ரலலா 

  பேச்சை நிறுத்தினான். ஏவ் அறிந்துகொண்டாள், சிலைகள் அறைக்குள் நுழைந்துவிட்டதை. அவன் விறைப்பாய், வெளுத்த முகத்துடன், நின்றிருந்தான்; ஏவும் அவ்வாறே. இருவரும் மௌனமாய்க் காத்திருந்தனர். சிலைகள் பறக்கத் தொடங்கின.

  பியேர் ஹான் என்று சொல்லிவிட்டு நாற்காலியில் அமர்ந்து கால்களை இழுத்துக் கொண்டான். அவ்வப்போது அசட்டுத்தனமாய்ப் புன்சிரித்தான்; ஆனால் நெற்றியில் வியர்வைத் துளிகள் முத்துகளாயின. அந்த வெளுத்த கன்னம், கோணிக்கொண்ட அந்த வாய் ஆகியவற்றைப் பார்க்க ஏவுக்கு சகிக்கவில்லை. கண்களை மூடினாள். பியேர் சத்தமாய்ப் பெருமூச்செறிந்தான்: “பறக்கின்றன, ரீங்காரிக்கின்றன, அவன்மீது குனிகின்றன.”

  ஏவ் கண்களை மூடியே வைத்திருந்தாள். “எனக்கும் பயமாக இருக்கிறது, சிலைகளைப் பற்றிய பயம்என்றெண்ணினாள். அவற்றின் பிரசன்னத்தை நம்புவதற்கு ஆன மட்டும் விரும்பினாள்.

  சிலைகள் தாழ்வாயும் மெதுவாயும் பறந்தன. ஒரு பயங்கர அலறல் அவளை உறையச் செய்தது. “அவனைத் தொட்டுவிட்டன.” கண் திறந்தாள். பியேர் கைகளால் தலையைத் தாங்கிக் கொண்டிருந்தான், அவனுக்கு மூச்சு திணறிற்று. ஏவ் இரக்கத்துடன் எண்ணினாள்: விளையாட்டு, அது விளையாட்டுதான், அது உண்மையென நான் ஒரு கணமும் நம்பியதில்லை. ஆனால் இவன் துன்புறுகிறான்.

  பியேர் இறுக்கந் தளர்ந்து பலமாய் சுவாசித்தான். ஆனால் கண் பாவைகள் அசாதாரணமாய் அகன்றிருந்தன.

  பார்த்தாயா?”

  என்னால் பார்க்க முடியவில்லை.”

  அதுவரை உனக்கு நல்லதுதான். பயந்துவிடுவாய். எனக்குப் பழக்கம்.”

  ஏவின் கை நடுக்கம் நிற்கவில்லை. ரத்தம் தலைக்கேறியிருந்தது. சிகரெட்டைச் சட்டைப் பையிலிருந்து எடுத்த பியேர் வாயில் வைத்தான், ஆனால் கொளுத்தவில்லை.

  சிறிது நேரம் யோசித்த பின்பு கேட்டான்:

  சத்தங் கேட்டதா?”

  கேட்டது, விமானப் பொறியின் சத்தம் போல” (இப்படித்தான் பியேர் சொல்லியிருந்தான், சென்ற ஞாயிறு.)

  பியேர் புன்னகைத்தான்; “மிகைப்படுத்துகிறாய்என்றான். ஏவின் கைகளைப் பார்த்தவன், “உன் கைகள் நடுங்குகின்றன; உணர்ச்சிவசப்பட்டுவிட்டாய். பரிதாபத்துக்குரிய அகாத்து, நீ கலவரப்பட வேண்டிய அவசியமில்லை. நாளைக்கு முன்பு அவை வாரா.”

  ஏவால் பேச இயலவில்லை. பற்கள் கிடுகிடுத்தன. பியேருக்குத் தெரிந்துவிடுமோ என்று அஞ்சினாள்.

  அவளை அவன் நெடுநேரம் நோக்கிவிட்டு, “நீ ரொம்ப அழகிஎன்றான் தலையை ஆட்டிக்கொண்டு; “வருத்தத்துக்குரியது, மெய்யாகவே வருத்தத்துக்கு உரியது.”

  கையை விரைவாய் நீட்டி அவளது காதை வருடினான். “என் அழகுத் தேவதையே, உன்னால் எனக்குக் கொஞ்சம் சங்கடம். அளவுக்கு மீறி அழகாயிருக்கிறாய்; இது என் கவனத்தைச் சிதைக்கிறது.”

  சற்று யோசித்தான், தலையை ஆட்டினான்.

  சரி, நான் தூங்கப் போகிறேன்என்றவன், தொடர்ந்து குழந்தைக் குரலில் கூறினான்: “அகாத்து, நான் களைத்திருக்கிறேன். என் எண்ணங்கள் என் வசமில்லாமற் போய்விட்டன.”

  சிகரெட்டைத் தூக்கியெறிந்துவிட்டுப் படுத்தான். ஏவ் தலையணையொன்றைக் கழுத்துக்குக் கீழே சொருகினாள்.

  நீயுந் தூங்கலாம், அவை வரமாட்டாஎன்று சொல்லிக் கொண்டு கண் மூடினான்.

  ஏவுக்குத் தூக்கக் கலக்கமில்லை. தூங்குகிறவனை நோக்கினாள். “எந்தக் கோலத்தில் விழிக்கப் போகிறான்?” இக்கேள்வி அவளைத் துளைத்தது. அவன் ஒவ்வொரு தடவையும் தூங்கத் தொடங்கினவுடனே, அவளுக்கு அதை நினைக்க வேண்டியிருந்தது, தவிர்க்க முடியவில்லை. கலங்கிய கண்களுடன் விழித்துத் தெளிவின்றிப் பேசுவானோ என்று பயந்தாள். “நானொரு முட்டாள். இன்னம் ஓராண்டுக்கு முன்பு அந்த நிலைமை தொடங்காது, ஃப்ரான்ஷோ சொல்லியிருக்கிறாரே!”

  என்றாலும் கலக்கம் நீங்கவில்லை. ஒராண்டு என்றால் ஒரு குளிர்காலம், ஒரு வசந்தம், ஒரு கோடை, இன்னொரு இலையுதிர்காலத் தொடக்கம்.

  ஒரு நாள் எல்லாம் குழம்பும்.

  பியேரின் கையை நோக்கிக் குனிந்து உதடுகளை வைத்தாள்: “அதற்கு முன்பு உன்னைக் கொன்றுவிடுவேன்.”

(முடிந்தது)
(2018 ஆகஸ்ட் மாத மஞ்சரியில் வெளிவந்தது)



4 comments:

  1. அவன் மேல் அவ்வளவு அன்பு வைத்திருக்கிறாள். அவனது நோய் பற்றி நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறாள். அவனது முடிவும் தன் கையால் தான் என்று தீர்மானித்தும் வைத்திருக்கிறாள். மனதைப் பாதிக்கும் வித்தியாசமான கதை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பாத்திரப் படைப்பே கதையின் சிறப்பு . வெள்ளைக்காரப் பெண்களின் இயல்புக்கு மாறான ஒரு தமிழ் மங்கையின் பண்பை உடையவள் இவள் .பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

      Delete
  2. ஏவின் மனநிலையும் எண்ணங்களும் விசித்திரமாக இருந்தாலும் அவளுணர்வைப் புரிந்துகொள்ள முடிகிறது. நிபந்தனையற்ற அன்புக்கு ஒரு அபாரமான எடுத்துக்காட்டு ஏவுக்கு பியேரின் மீதான அன்பும் காதலும். ஆனால் அதன் முடிவுதான் மிகுந்த துயர் தருவதாக உள்ளது. எப்படிப் பார்த்தாலும் ஏவின் பாத்திரப்படைப்பு பெரும் பரிதாபத்துக்குரியது. சிறப்பானதொரு கதையைத் தமிழில் மொழிபெயர்த்து நாங்களும் ரசிக்கத் தந்தமைக்கு நன்றி. மஞ்சரியில் வெளியானதற்குப் பாராட்டு.

    ReplyDelete
    Replies
    1. பொருத்தமான விமர்சனத்துடன் கூடிய பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

      Delete