Thursday 27 December 2018

காலம் தேடும் தமிழ்


நூல்களிலிருந்து – 21

  (2017 பிப்ரவரியில் காலமான தமிழறிஞர் மணவை முஸ்தபா 1987-இல் இயற்றிய நூல்: காலம் தேடும் தமிழ். அவர் அரும்பாடு பட்டுத் தேடிச் சேகரித்து, “அறிவியல் தமிழ் நூல்கள்என்ற அதிகாரத்தில் தந்துள்ள பல பல தகவல்கள் வரலாற்று ஆவணமாகப் பயன்படக்கூடும் எனக் கருதி அவற்றை இங்கே பதிகிறேன்.)



  தமிழ் பயிற்றுமொழி ஆன 1830-ஆம் ஆண்டிலிருந்து அறிவியல் பாட நூல்கள் எழுதப்பட்டன. அதே சமயம், அறிவியலைத் தமிழில் அறியச் செய்வதற்காகப் பொது நூல்களும் இதழ்களும் வெளிவந்தன.

  இரேனியஸ் பாதிரியார் 1832 – 1848 காலக்கட்டத்தில் பூமி சாஸ்திரம், பூமி சாஸ்திரச் சுருக்கம், பூமி சாஸ்திரப் பொழிப்பு, பூமி சாஸ்திரப் பாடல்கள் ஆகிய நூல்களை இயற்றினார். ஆங்கில அறிவியல் நூல்களைத் தமிழாக்கம் செய்யும் முயற்சிக்குப் பெரும் உந்தாற்றலாய்த் திகழ்ந்தவர் 1848-இல் இலங்கைக்கு மருத்துவ ஆசிரியராய் வந்த டாக்டர் ஃபிஷ் கிரீன் ஆவார்; அவர்தான் மருத்துவப் பாடத்தைத் தமிழில் கற்பிக்கத் தொடங்கியவர். கலைச் சொல்லாக்கம் முதலாகப் பல முன்னோடிப் பணிகளுக்கு வழிகாட்டிய பெருமையும் அவருக்குண்டு.

  டாக்டர் கட்டர் ஆங்கிலத்தில் திறம்பட ஆக்கியிருந்த Anatomy, Physiology and Hygiene என்ற நூலைஅந்தாதி பாத உற்பாவன நூல்என்னுந் தலைப்பில் 1852-இல் ஃபிஷ் கிரீன் தமிழில் தந்தார். அவரது மேற்பார்வையில் 1857-இல் மொழிபெயர்க்கப்பட்டபெண் நோயை விவரிக்கும் மருத்துவம்” (Midwifery) என்னும் நூலும்இரண வைத்தியம்” (The Science and Art of Surgery) “மனுஷ சுக ரணம்” (Human Physiology), அவரே மொழிபெயர்த்தகெமிஸ்தம்” (Chemistry) ஆகியவையும் சிறந்தவையாக மதிக்கப்படுகின்றன. அவரது உதவியுடன்இந்து பதார்த்த சாரம்”, “வைத்தியம்ஆகிய மொழிபெயர்ப்பு நூல்கள் அச்சேறின. (1884)

  1849-இலிருந்து சில கணித நூல்கள் படைக்கப்பட்டன. முதல் நூல்பால கணிதம்இலங்கையிற் பிறந்தது. இது முழுமையான மொழிபெயர்ப்பாய் இல்லாமல் ஆங்கிலக் கணித முறையின் சிறப்பியல்புகளும் தமிழ்க் கணிதத்தின் தனிக் கூறுகள் சிலவும் இணைந்ததாக உருவாயிற்று; அது 179 பக்கங்களைக் கொண்டிருந்தது. 1855-இல் யாழ்ப்பாணத்துக் கரோல், விஸ்வநாதன் என்பவர்கள் அல்ஜிப்ராவை முறையே இயற்கணிதம், பீச கணிதம் என்ற பெயர்களில் எழுதி வெளியிட்டனர்.

  1861-இல் சாலமன், க்ஷேத்திர கணிதமும் (geometry), ஆர்னால்டு, வான சாஸ்திரமும் இயற்றினர். A catechism of Human Anatomy and Physiology என்னும் நூலைத் தமிழில்சரீர வினா விடைஎன்ற தலைப்பில் தந்தவர் ஜெகநாத நாயுடு. (1865)

  லூயிஸ் என்பார் இயற்றியதி ஸ்டீம் & தி ஸ்டீம் என்ஜின்என்ற தமிழ் நூலில் விளக்கப்படங்களின் எண்கள் அனைத்தும் தமிழ் என்பது குறிப்பிடத்தக்கது. (1868). இதே கால கட்டத்தில் வீட்டு விலங்கு பற்றியஊர்தி விலங்குகாட்டு மிருகங்கள் குறித்தவனவிலங்கியல்மீன்கள் தொடர்புள்ளமச்சவியல்ஆகிய மூன்று நூல்கள் பிரசுரமாயின.

  1885-இல், வெ..சுப்பிரமணிய முதலியார் நல்ல தமிழில் அருமையாக மொழியாக்கஞ் செய்துகால்நடையியல்” (Veterinary Science) எழுதினார். இதில் கையாளப் பெற்ற புதிய சொல்லாக்கங்கள் பலவும் சீரிய கலைச் சொற்களாக இன்றளவும் புழங்குகின்றன.

  அறிவியல் தமிழ் வளர்ச்சிப் பாதையில் 1930-ஆம் ஆண்டு ஒரு மைல் கல். நடுநிலைப் பள்ளிவரை அமலில் இருந்த தமிழ்ப் பயிற்றுமொழித் திட்டம் பள்ளியிறுதி வரைக்கும் நீட்டிக்கப்பட்ட இந்த ஆண்டிலிருந்துதான் அறிவியல் பாட நூல்களும் கலைப் பாட நூல்களும் பெருமளவில் எழுதிக் குவிக்கப்பட்டன. பொதுவான அறிவியல் நூல்களும் வெளிவந்ததோடு பத்திரிகைகளில் அறிவியற் கட்டுரைகளும் அதிக அளவில் எழுதும் சூழ்நிலை உருவாயிற்று.

  பத்திரிகைகளின் பங்கு கணிசமானது. 1831-இல் வந்த மாதப் பத்திரிகைதமிழ் மேகஜின்பிற செய்திகளுடன் அறிவியல் செய்திகளுக்கும் இடந்தந்தது. அறிவியலைத் தமிழில் விளக்க முடியும் என்ற நம்பிக்கை வலுப்பெற இவ்விதழ் பேருதவியாய் அமைந்தது.

  நீண்ட இடைவெளிக்குப் பின்பு, 1870-இல், “அகத்திய வர்த்தமானிவைத்திய முறைகளை விவரிக்கும் கட்டுரைகளை வழங்கியது. 1887-இல்சுக சீவனிஎன்ற மருத்துவ மாத இதழ் பெங்களூரிற் பிறந்தது. “சுகாதார போதினி” 1891-இலும்ஆரோக்கிய வழி”, “ஆயுர்வேத பாஸ்கரன்என்னும் இரு இதழ்கள் 1908-இலும் தோன்றின. இவையெல்லாம் நீண்ட ஆயுளைப் பெறவில்லை; ஆனால் 1909-இல் பூனாவில் தொடங்கியநல்வழி” 70 ஆண்டுக்காலம் வாழ்ந்தது.

  அறிவியல் இதழுக்கான தோற்றப் பொலிவுடன் 1897-இல் உதித்ததுஞான போதினி”; இதன் ஆசிரியர் பூர்ணலிங்கம் பிள்ளை; இதில் தத்துவக் கட்டுரைகளும் அவற்றைப் பார்க்கிலும் அதிகமாய் அறிவியற் கட்டுரைகளும் இடம்பெற்றன. கல்யாண சுந்தர நாடனை ஆசிரியராய்க் கொண்டு பிரசுரமானசித்தாந்த தீபிகைசமய, தத்துவக் கட்டுரைகளோடு பௌதிக இரசாயனக் கட்டுரைகளையும் கொண்டிருந்தது.

  1914-இல் தோன்றியதொழிற் கல்விஎன்னும் இதழும் அதே ஆண்டில் மருத்துவக் கட்டுரைகளை வெளியிடுவதற்கு என்றே தோற்றுவிக்கப்பட்டவைத்தியக் கலாநிதிஇதழும் குறிப்பிடத் தக்கவை. 1911-இல் தமிழர் கல்விச்சங்கம் வெளியிட்டதமிழர் நேசன்ஒரு தனித்துவமான போக்கில் அறிவியற் செய்திகளையும் குறிப்புகளையும் ஆய்வுக் கட்டுரைகளையும் உயர் தமிழில் பிரசுரித்தது. 

  மேலும் பல மாத இதழ்களான
1. தன்வந்தரி (சென்னை ஆயுர்வேதக் கல்லூரியின் வெளியீடு)
2.ஆயுர்வேதம்
3.   ஆரோக்கியமும் சிசுவின் சுக வாழ்வும் (அலோபதி)
  அற்ப ஆயுளில் மடிந்தன. ஆனால் 1949 முதல் தொடர்ந்து 40 ஆண்டுக்கு மேல் அறிவியல் பரப்பும் பணியைப் புரிந்ததுகலைக் கதிர்”.   

  சர்வதேச அளவில் அறிவியலைத் தெளிவாயும் சொற்செட்டோடும் பொருட்செறிவோடும் தமிழில் தர இயலும் என்பதை ஆழமாயும் அழுத்தமாயும் உணர்த்தி நிலைநாட்டிய பெருமையுனெஸ்கோ கூரியர்என்ற தமிழ்த் திங்களிதழைச் சாரும். இது 1967 முதல் 20 ஆண்டுக்கும் மேலாகப் பிரசுரமானது. 50,000-க்கு மேற்பட்ட கலைச் சொற்களை உருவாக்கிற்று.  
&&&&&&

6 comments:

  1. தகவல்கள் அனைத்தும் சிறப்பு ஐயா... நன்றிகள் பல...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிப் பின்னூட்டம் எழுதியமைக்கு மிகுந்த நன்றி .

      Delete
  2. Replies
    1. பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .

      Delete
  3. நானும் தமிழ்வழிக்கல்வி பயின்றவன் அவை யார் எழுதியதின்வழி என்று தெரியவில்லை நீங்கள் குறிப்பிட்ட மொழி ஆக்கங்கள் வாசிக்கக் கிடைகிறதா

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் தமிழ்வழிக் கற்றவர் என்பதறிந்து மகிழ்கிறேன் . எனக்கு அந்தப் பேறு கிட்டவில்லை . எங்கள் புதுச்சேரி மாநிலம் பிரஞ்சிந்தியா என்ற பெயரில் வெள்ளையரின்கீழ் இருந்தபோது பிரஞ்சு மட்டுமே பயிற்றுமொழி . அந்த ஆக்கங்கள் இப்போது கிடைக்க வழியில்லை . உங்கள் பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .

      Delete