Monday 11 February 2019

என்னைப் பற்றி



 இன்று (பிப்ரவரி 11) என் பிறந்த தேதி. 93 வயது முடிந்து 94-ல் அடியெடுத்து வைத்துவிட்டேன்.

  மலரும் நினைவுகளுள் சிலவற்றை எழுதுகிறேன்.


காரைக்கால்

  இப்போது புதுச்சேரி மாநிலம் என்று சுட்டப்படுகிற பிரதேசம் 1962 வரை பிரஞ்சிந்தியா எனப்பட்டது. புதுச்சேரி நகருக்குத் தெற்கே 150 கி.மீ. தொலைவில் உள்ள சிறு நகரமான காரைக்காலில் பிறந்தேன்.

  ஐந்து வயதில் .மன்னவன் அரசு ஆண்கள் தொடக்கப்பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். அது ஒரு மாடி வீடு. மன்னவன் என்ற வள்ளல் பள்ளி நடத்துவதற்காக அரசுக்குத் தானமாய் ஈந்த இல்லம். கீழே இரண்டு, மாடியில் இரண்டு என நான்கு வகுப்புகள் இருந்தன. அது எங்கள் வீட்டருகே இருந்தது; இரண்டே நிமிட நடை. (மாணவர் இன்மையால் இப்போது அது வாடகைக்கு விடப்பட்டுள்ளது).

  முதல் வகுப்பாசிரியர் கணேச தேசிகர். குள்ளமாய், குண்டாய், தலையில் கொண்டையுடன் கோட்டு போட்டுக் கொண்டிருப்பார். ஒரு நாள், சிலர் சத்தமாய்ப் பேசுகிறார்கள் என்பதற்காக எல்லார் தலையிலும் கம்பால் ஓர் அடி அடித்தார். நிரபராதியான என்னைத் தண்டித்துவிட்டாரே என்று வருந்தினேன். அந்நிகழ்ச்சி என் மனத்தை ரணப்படுத்திற்று. (பிற்காலத்தில் என்னுடைய ஆசிரியர் பணியின்போது, தவறு செய்தது நிரூபிக்கப்பட்டாலொழிய யாரையும் தண்டிக்கக்கூடாது என்ற கொள்கையை இறுதிவரை கடைப்பிடித்தேன்.)

  இரண்டாம் வகுப்பாசிரியர் சாமிநாத ஐயர். ஒல்லியாய், உயரமாய்க் குடுமியுடன் காட்சியளித்தார். அரவது மகன் வாசுதேவன் எங்களுடன் படித்தான். “அவனை யாரும் பேர் சொல்லிக் கூப்பிடக்கூடாது, தம்பி யென்றே அழைக்கவேண்டும்என்றொரு விநோதக் கட்டளையை அவர் இட்டிருந்தார்.

  அடுத்த வகுப்பில் அய்யாப் பிள்ளை எனும் கிறித்துவர், உயரமும் அதற்கேற்ற உடல் பருமனும் பெற்ற ஆசிரியர். உட்கார்ந்த படியே தான் பாடம் போதிப்பார். அவ்வப்போது இரு மாணவர்களைக் கூப்பிட்டு காலழுத்த ஆணை பிறப்பிப்பார். அவர்கள் மேசைக்கடியில் அமர்ந்து கெண்டைக்கால் சதையை அமுக்குவார்கள். அவர்களைப் பார்த்து நான் பரிதாபப் பட்டிருக்கிறேன்.

  நான்காவதில் தலைமையாசிரியராகிய கட்சிராயர் ஆசிரியராய் இருந்தார். இவருங் கிறித்துவர். பிரமாதமாய்க் கற்பித்தார். அவரை எனக்கு மிகப் பிடிக்கும், அவருக்கும் என்னைப் பிடிக்கும், முதல் மாணவன் ஆயிற்றே!

  5-இலிருந்து 11 வரை அரைக் கிலோமீட்டர் தொலைவிலிருந்த அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியிற் கற்றேன். தலைமையாசிரியர்கள் முதலில் ஷான்த்துவாசோ என்ற வெள்ளையர், பின்பு சிவராமகிருஷ்ண ஐயர். அப்புறம் பசாஞ் என்ற சட்டைக்காரர்.

  (இப்போது அது ஔவையார் அரசு மகளிர் கல்லூரி).

  எட்டாம் வகுப்பின் இறுதியில் நடந்த பொதுத்தேர்வில் முதல் மாணவனாய்த் தேறினேன்.

  மேலும் நான்காண்டு இலவசக் கல்வி பயின்று பொதுத்தேர்வில் தேறி SSLC க்குச் சமமான ப்ரவே என்ற சான்றிதழ் பெற்றுப் படிப்பை முடித்துக் கொள்ளலாம். பெரும்பாலோர் இதைத்தான் விரும்புவார்கள்.

  இதில் பிரஞ்சு தவிர வேறு மொழி கற்க வழியில்லை.

புதுச்சேரி

  நானும் வேறு சிலரும் ஆறாண்டுப் படிப்பைத் தேர்ந்தோம். காரைக்காலில் 3 ஆண்டு, புதுச்சேரியில் 3 ஆண்டு. இதற்குக் கல்விக் கட்டணம் உண்டு. இந்தப் பாடத்திட்டத்தில் இரு பிரிவுகள் இருந்தன. A பிரிவில் துணை மொழிகளாய் ஆங்கிலமும் லத்தீனும் கற்பிக்கப்படும்; B பிரிவில் தமிழும் ஆங்கிலமும். நமக்குத்தான் தமிழ் சரியாய்த் தெரியாதே, B-யில் சேர்வோம் என்று தீர்மானித்து அப்பிரிவில் பெயரைப் பதிந்துவிட்டு வருகையில் ஆசிரியர் சிமோனேல் என்னைக் கூப்பிட்டு, “எந்தப் பிரிவு?” என வினவினார். நான் விடையளித்ததும், “போடா போடா, நீயெல்லாம் லத்தீன் படிக்கவில்லையென்றால் வேறு எவன் படிப்பான்?” என்று சொல்லி என்னை அழைத்துப் போய் “A-க்கு மாற்றுங்கள்என்று கூறிவிட்டார். தமிழ் கற்கவேண்டும் என்ற ஆசையில் மண் விழுந்தது.

  லத்தீன் ஆசிரியர் அவர்தான்; துணைத் தலைமையாசிரியர் பணியும் அவருக்கு இருந்தமையால் பாடம் போதிக்கப் பல சமயம் வர மாட்டார். அடுத்த பத்தாம் வகுப்பிலும் அவ்வாறே. ஆகையால் இரண்டாண்டில் முடிக்கவேண்டிய பாட நூலின் காற்பாகம் மட்டுமே படித்திருந்தோம். அதாவது இரண்டாண்டுப் படிப்பில் ஆறு மாதம் மட்டுமே. 11-ஆம் வகுப்பில் ஆசிரியர் பாலகிருஷ்ணன். அவரைக் கோயில் கட்டித் தொழலாம். சுப்பராமனும் நானும் என இரண்டே மாணவர்கள். எங்களின் அவல நிலையைத் தெரிந்துகொண்ட அவர், பரிதாபப்பட்டு, அந்த வகுப்புக்கான நூலை விட்டுவிட்டுப் பழைய புத்தகத்தில் நாங்கள் கற்காத பகுதியைப் போதித்தார். அவரது நல்லெண்ணமும் எங்கள் ஆர்வமுஞ் சேர்ந்து ஒன்றரை யாண்டு பாடங்களை ஒரே ஆண்டில் முடிக்கச் செய்தன. இப்போது ஓராண்டு மட்டுமே தாமதம்!

  9-இல் கணக்காசிரியராய் இருந்த அன்னுசாமி மகா மோசம். கணிதம் கற்பிப்பதற்குப் பதிலாய் கதரணிய வேண்டிய அவசியம், கலப்பு மணம் புரிந்துகொள்ளும்படி எங்களுக்கு உபதேசம், கடவுள் இல்லையென்பதற்கான காரணங்கள், முதலிய பொதுவிஷயங்களைப் பற்றியே பேசினார். அவ்வப்போது கொஞ்சங் கொஞ்சம் கணக்கு. பெரும்பாலான மாணவர்கள் அவருக்கு ஜால்ரா. சிலர் மட்டும் எதிர்த்தும் மறுத்தும் வாதிட்டோம். அதனால் அவர் எங்களைக் கேலி செய்தார்.

  எப்போதும் என் நெற்றியில் திருநீறு இருந்தமையால், “சுண்ணாம்புக் கட்டிஎன்றே என்னை அழைப்பார்; ஞானத்தை நீ சம்பந்தம் செய்துகிட்டியோ? எனக் கேட்பார்.

  பிராமண சுப்பராமனுக்குப்பொரிச்ச மீன்என்று பெயர் சூட்டினார்.

  B பிரிவு ழுய்லியேன் நீளமான கோடுகள் உள்ள பைஜாமா போட்டிருந்தமையால் அவன்வரிக்குதிரை”.

  சில பெற்றோரின் புகாரின் விளைவாய் அவர் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டார். கம்யூனிஸ்ட் தலைவர்களுள் அவர் ஒருவர் என்பது பின்னாளில் தெரிய வந்தது. அடுத்து வந்த ஆசிரியர் கணக்கை முதல் பாடத்திலிருந்து கற்பித்தார்.

  பயிற்றுமொழி முதல் வகுப்பிலிருந்தே பிரஞ்சு. ஒரு நாளுக்கு ஒரு பாடவேளை மட்டும் தமிழ். அதுவும் ஏழாம் வகுப்பு வரைதான். எழுத, வாசிக்கக் கற்றோம். ஆத்திசூடி, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, நீதி வெண்பா என எளிய அற நூல்கள் படித்தோம். இலக்கணத்தில் அடிப்படையான பெயர்ச்சொல், வினைச்சொல், எழுவாய் பயனிலை செயப்படுபொருள் முதலியவற்றைத் தெரிந்துகொண்டோம்.

  வரலாற்றுப் பாடத்தில் பிரான்சு மட்டுமே விரிவாய்ப் போதிக்கப்பட்டது.

  புவியியலும் அவ்வாறே; பிரெஞ்சுக் காலனிகளாய் இருந்த அல்ஜீரியா, துனீசியா, செனேகால், மடகாஸ்கர், வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகியவை குறித்து முக்கியமான தகவல்களும் பாடம்.

  ராஜராஜன், புத்தர், அசோகர்? கேள்விப்பட்டதே யில்லை. காவேரி, கங்கை, வைகை பற்றி ஒன்றுந் தெரியாது.

  பிரஞ்சுக் கவிதைகளை மனப்பாடஞ் செய்தோம்; பிரஞ்சுக் கவிஞர்களின் வரலாறுகளை விவரமாய் அறிந்தோம். சங்கப் புலவர்கள், பாரதி, தாகூர் ஆகியோர் பற்றி எதுவுந் தெரியாது.

  பாடநூலில் (Reader) தூண்டிலில் மீன் பிடித்தல், திராட்சை அறுவடை, அன்னையர் தினம், தந்தைமார் நாள், கிறிஸ்துமஸ் தாத்தா, பனிச் சறுக்கு, மலையேற்றம் என்றெல்லாம் நாங்களறியாத, எங்களுக்குப் புரியாத விஷயங்களை வாசித்தோம்.

  எல்லா subject களிலும் பிரான்சில் மாணவர்கள் என்ன கற்றனரோ, அதுதான் நாங்கள் கற்றது. அந்நாட்டிலிருந்து புத்தகங்கள் கப்பலில் வரவழைக்கப்பட்டு எங்களுக்கு விற்கப்பட்டன.

  கடைசி வகுப்பு வரை நமக்குத் தேவை இல்லாத எத்தனையோ விஷயங்களைப் படிக்க வேண்டியிருந்தது. அறிய வேண்டிய எதுவும் மிகக் கொஞ்சமாகவே கிடைத்தது.  

  பிரெஞ்சிந்தியாவில் புகழ் பெற்ற கவிஞர், பேராசியர், அறிஞர் எவரும் தோன்றாமற் போனதில் வியப்பென்ன இருக்க முடியும்?

  12 ஆம் வகுப்புக்கு நான் மட்டுமே தேர்ச்சி பெற்றுப் புதுச்சேரி போனேன். College colonial என்ற கல்வி நிலையத்திற் சேர்ந்தேன். A பிரிவில் 22 மாணவர் இருந்தனர்.

  விடுதியில்லை. புதுச்சேரியில் சில தர்ம பிரபுகள் தங்கள் இல்லத்தில் இலவசமாய்த் தங்கியிருப்பதற்கு வெளிப்பகுதி (காரைக்கால், மாயே, ஏனாம்) மாணவர்களுக்கு இடந் தந்தார்கள். அவர்களுள் திருமுடி . சேதுராமன் செட்டியார் (பின்னாளில் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் பிரம்மாண்ட மூன்று கட்டு மாடி வீடு எனக்கும் அடைக்கலந் தந்தது. கூடத்தில் நூறு பேர் அமரலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். முன் கட்டுக்குப் பெண்கள் வரமாட்டார்கள். அது முழுதும் ஆண் ராஜ்யம். அங்கிருந்த ஐந்து அறைகளுள் ஒன்று, மாணவர்களுக்கு; மற்றது அலுவலர் முதலியோர்க்கு. தங்கியிருப்பவர்கள் அல்லாமல் கிராமப் பகுதியிலிருந்து நகருக்கு வந்து வேலை பார்க்கிற தபால்காரர் முதலானோர் மத்தியானத்தில் இளைப்பாறுவார்கள். பல பிரமுகர்கள் சேதுராமனைச் சந்திக்க வருவார்கள். எனக்குத் தெரிந்து பாரதிதாசன் இருமுறை வந்தார். எப்போதும் ஜே ஜே என்று கூட்டம். அடையா நெடுங்கதவு!

காமராஜருடன் திருமுடி ந.சேதுராமன் செட்டியார்

  இளைஞர் கழகம் என்ற அமைப்பின் தலைவர் சேதுராமன். ஆண்டு விழாக்களிற் கலந்து கொள்ளும் தமிழறிஞர்கள் இங்கே தங்கிப் பகலுணவு உண்பார்கள். திரு.வி., பண்டிதமணி மு.கதிரேசன், பாலூர் கண்ணப்பர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் ஆகியோரைப் பார்க்க எனக்கு வாய்ப்பு கிட்டிற்று. இந்தச் சூழ்நிலையில் தான் நான், சங்கத்தமிழ், திருவள்ளுவர், இளங்கோ, கம்பர் முதலியோரைப் பற்றிய அறிமுகம் பெற்றேன்.

  13, 14 ஆம் வகுப்புகளில் வெள்ளைக்காரப் பேராசிரியர்கள் கல்வி கற்பித்தார்கள்; போன் ழான், பெனேஜேக், வெர்மோகொஷி, ப்ரீழான் ஆகியோர் நினைவில் நிற்கிறார்கள். உடற்பயிற்சியாசிரியரும் வெள்ளையர்தான்; பெயர் நினைவில்லை. தலைமையாசிரியர் ழொசலேனும் வெள்ளையரே.

  9 ஆம் வகுப்பிலிருந்து கட்டணஞ் செலுத்தவேண்டும். எனக்கு மெரிட் ஸ்காலர்ஷிப் கிடைத்தமையால், நான் கட்டணங் கட்டவேண்டியது இல்லை. உபகாரச் சம்பளமாக மாதம் 5 ரூபாய் தந்தனர்; அப்பா பத்து ரூபாய் அனுப்புவார்; போதுமானது.

  போர்க் காலமாதலால் பிரான்சிலிருந்து நூல்கள் வர முடியவில்லை. கல்லூரி நூலகம் எனக்களித்த நூல்கள் போதவில்லை. இரவல் வாங்கித்தான் படிக்க வேண்டியிருந்தது. புதுச்சேரி மாணவர்கள் தங்கள் பெற்றோர் பயன்படுத்திய நூல்கள், நண்பர்கள், உறவினர்களின் புத்தகங்கள் பெற்றனர். வெளியூர்க்காரனாகிய எனக்கு யாரைத் தெரியும்?

  படிப்பு முடிந்து திரும்பிய பின்னர் தனியார் வாணிக நிலையத்தில் மூன்றாண்டு ஒப்பந்தப்படி பணி புரியக் கொல்கத்தாவிலிருந்து ஏர் பிரான்ஸ் வானூர்தி மூலம் வியட்நாம் போனேன். (1948). அங்கே சுதந்தரம் கோரி கெரில்லாப் போர் நடந்தமையால் மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இரவில் அடிக்கடி துப்பாக்கி முழக்கங் கேட்கும்.

  ஓராண்டுக்குப் பின், எங்கள் நிலையத்தின் பாரீஸ் அலுவலகத்தில் பணியாற்ற என்னை அனுப்பினர். மரேஷால் ழோஃர் என்ற பிரஞ்சுக் கப்பலில் 26 நாள் பயணித்துப் பிரான்சை அடைந்தேன்.



மரேஷால் ழோஃர்
ஆந்திரே லெபோன்
  
  ஒப்பந்தம் முடிந்தது. முதலாளி அப்துல் ஹமீது (தமிழர்) கோரியபடி மேலும் ஆறு மாதம் பணியாற்றிவிட்டு ஆந்திரே லெபோன் என்னும் பிரஞ்சுக் கப்பலில் ஏறி 18 நாள் கழித்துக் கொழும்பில் இறங்கி ரயில் மூலம் காரைக்காலை அடைந்தேன்.

  அரசு பள்ளி ஆசிரியரானேன் (1952). வெளிநாட்டில் நான் சம்பாதித்த பணத்தில், பெற்றோரிடமிருந்து ஒரு ரூபாய் கூட வாங்காமல், திருமணம் செய்துகொண்டேன். வரதட்சணை கேட்கவில்லை, இத்தனை பவுன் நகை போடவேண்டும் என்றும் சொல்லவில்லை.

  தமிழ் கற்று 36 ஆம் வயதில் புலவர் பட்டம் பெற்றேன். நெடுநாள் கனவு நனவாகியது.

  வீண் செலவுகளைத் தவிர்த்து, சிக்கனம் பிடித்து கடன் வாங்காமல் இரு புதல்விகளையும் ஆளுக்கு 20 பவுன் நகை போட்டுக் கட்டிக் கொடுத்தேன். இளைய மகளுக்குத் திருமணம் என் செலவில் நிகழ்ந்தது. மூன்று புதல்வர்களுக்கும் வரதட்சணை பெறாமல் மணஞ் செய்துவைத்தேன். ஐவரும் தாங்கள் விரும்பியவரைக்கும் கல்வி கற்று நன்னிலையில் வாழ்கிறார்கள்.

  நான் பொருளாதாரத்தில் படிப்படியாய் முன்னேறியதற்கு முக்கிய காரணம் என் மனைவியின் முழு ஒத்துழைப்பு. ஆடம்பரம் விரும்பாமல், சினிமா டிராமா மோகமில்லாமல் நாற்பதாண்டுக் காலம் வாழ்க்கைத் துணையாய் இருந்த அந்த உத்தமி 25 ஆண்டுக்குமுன் காலமானமை எனக்குப் பெருஞ்சோகம்.

  எங்கள் வீட்டில் ஒரு மரப் பெட்டியுள் பழைய புத்தகங்கள் பல இருந்தன. என் பெற்றோரோ அண்ணன்மாரோ அவற்றுள் ஒன்றையேனும் எடுத்துப் புரட்டியது கூட இல்லை. எப்படியோ எனக்கு வாசிப்பில் ஆர்வம் உண்டாகி ஒவ்வொன்றாய் எடுத்துப் படித்து மகிழ்ந்தேன். எல்லாமே தரமான நூல்கள்; மகாபாரத வசனம், ராமாயண வசனம், கந்த புராணம், திருப்புகழ், விநோத ரச மஞ்சரி, ஆயிரத்தோர் இரவில் சொல்லிய அரபு கதைகள், அறப்பளீசுவர சதகம், குமரேச சதகம், ஒட்டன் நாடகம், திருக்குறள் குமரேச வெண்பா, விக்ரமாதித்தன் கதைகள், 32 பதுமை கதைகள், அசன்பேயுடைய கதை, ஆங்கிலப் புதினம் soldier’s wife இன் மொழிபெயர்ப்பு போர்வீரன் மனைவி, அல்லியரசாணி மாலை என்பவற்றுள் திருப்புகழும் திருக்குறள் குமரேச வெண்பாவும் புரியவில்லை. மற்றவற்றைச் சுவைத்துப் படிக்க என் சொற்பத் தமிழறிவு போதுமானதாய் இருந்தது. 10 வயதில் தொடங்கிய அந்த வாசிப்பார்வம் எண்பதாண்டுக்கு மேலாகத் தொடர்ந்துகொண்டுள்ளது.




   அந்நூல்களுக்குரியவர் என் கொள்ளுப் பாட்டனார் நாராயணன் என்பவராம். நான் பார்த்ததில்லை. ஏறக்குறைய 150 ஆண்டுக்கு முன்னர் நூல் வாசிப்பில் நாட்டங் கொண்டு புத்தகங்களை வாங்கி வீட்டு நூலகம் அமைத்திருந்த அவரை நினைத்து இன்று கூட வியக்கிறேன். அவர் காலமான பின்பு அவற்றை எரித்துச் சாம்பலாக்கிவிடாமல் பத்திரமாய்ப் பாதுகாத்தமை என் நற்பேறு!

  பணி ஓய்வு பெற்ற பின்பு அஞ்சல் வழியில் இரண்டாண்டு இந்தி கற்றுப் பட்டயம் (diploma) பெற்றேன். இப்போது மலையாளம் கற்றுக் கொண்டிருக்கின்றேன்.

  சாதனையெதுவும் புரியவில்லை. சரிவரக் கடமைகளை நிறைவேற்றிய மன நிறைவுடன் வாழ்கிறேன். ஆச்சு! இன்னும் கொஞ்ச காலம்!
********

 (படங்கள் உதவி - இணையம்)

25 comments:

  1. ஒரு நிறைவான வாழ்வை வாழ்ந்து எங்களுக்கெல்லாம் முன்மாதிரியாய்த் திகழும் தங்களை இப்பிறந்தநாளில் வாழ்த்தி வணங்குவதில் பேருவகை அடைகிறேன். தங்கள் வாழ்க்கை சாதனை அல்ல என்று தாங்கள் குறிப்பிட்டாலும் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் தாங்கள் சந்தித்த சவால்களும் பிரச்சனைகளும் எண்ணற்றவை. அவற்றை துணிவுடனும் தெளிவுடனும் தாங்கள் எதிர்கொண்ட திறமையும் சாமர்த்தியமும் போற்றத்தக்கவை.

    கடன் வாங்காமல், கையூட்டு வாங்காமல், தன் சுய சம்பாத்தியத்திலேயே ஐந்து பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்விப்பதென்பது கயிற்றுமேல் நடப்பதன்ன பெரும் சாகசம். வாய்திறந்து எமக்கு எதையும் கற்றுத்தரவில்லை. இதுதான் வாழ்வென வாழ்ந்து காட்டுகிறீர்கள். உம்மோடு நாங்கள் வாழ்ந்திருக்கும் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு வரம்.

    தங்கள் எழுத்தும் சிந்தனையும் அபாரமான நினைவாற்றலும் மலைக்கவைக்கின்றன. தங்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் காலப்பெட்டகத்தில் ஆவணப்படுத்தப்பட வேண்டியவை. வாழும் வழிகாட்டியான தாங்கள் நல்லாரோக்கியத்துடனும் நலமான சிந்தனை மற்றும் செயல்திறத்துடனும் இன்னும் பல காலம் வாழவேண்டுமென வாழ்த்தி மகிழ்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டி விரிவான பின்னூட்டம் எழுதியமைக்கு நன்றி . என் வாழ்க்கை மகிழ்வாய்க் கழிந்தமைக்கு பிள்ளைகளும் வந்த மருமகள்களும் காரணந்தான் . எனக்கு நல்லாசிரியர் விருது பெற்றுத் தர முதன்மைக் கல்வி அலுவலர் திரு . ஜான் லூய் முயன்றார் ; வேலை நிறுத்தமொன்றில் நான் கலந்துகொண்டமையால் அவரது எண்ணம் நிறைவேறவில்லை . மாவட்டக் கல்வி அதிகாரியாய்ப் பதவி வகித்த திரு .
      செசில்ராஜுக்கு என் கடமையுணர்ச்சி நன்றாய்த் தெரியும் . ஒரு சமயம் சிரமம் மிக்க பணியொன்றை அவர் எனக்குத் தந்தபோது , கஷ்டமான வேலை தருகிறீர்கள் என்று சொன்னேன் . அதற்கு அவர் , கஷ்டமான வேலை என்று ஒரு ஞானசம்பந்தம் சொல்லக்கூடாது என்றார் .

      Delete
    2. நல்லாசிரியர் விருதுக்கு மிகவும் தகுதியானவர் தாங்கள். விருது பெறவியலாமற்போனது வருத்தம்தான்.

      \\கஷ்டமான வேலை என்று ஒரு ஞானசம்பந்தம் சொல்லக்கூடாது என்றார்\\ தங்கள் கடின உழைப்பையும் பணி சிரத்தையையும் நன்குணர்ந்திருக்கிறார்.

      Delete
    3. விருதை நான் என்றுமே எதிர்பார்த்ததில்லை . சம்பளம் தருகிறார்கள் . கடமை தவறக்கூடாது என்பதே என் எண்ணமாய் இருந்தது . மேலும் என் நாட்டுப்பற்று , நல்ல மாணவர்களை உருவாக்கி அவர்களால் தேசத்தை முன்னேற்ற வேண்டும் என்று எனக்கு ஒரு நல்ல குறிக்கோளைத் தந்திருந்தது.

      Delete
    4. உயர்ந்த உள்ளத்தை உடைய உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

      Delete
  2. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  3. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா/ உங்கள் நினைவாற்றல் என்னை விய்சப்படய வைக்க்கிறது வாழ்வாங்கு வாழ்ந்த உங்களை வணங்குகிறேன்

    ReplyDelete
  4. வணங்குகிறேன் ஐயா...

    உங்களை சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . சந்திப்பு சாத்தியமானால் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்

      Delete
  5. திருமதி. கீதா மதிவாணன் அவர்கள் எழுதியுள்ள பின்னூட்டத்தைப் படித்து மகிழ்ந்தேன். நான் சொல்ல நினைத்த பலவற்றை அவர்களே சொல்லியுள்ளார்கள். :)))))

    தங்களின் இனிய பிறந்த நாளில் தங்களுக்கு அடியேனின் நமஸ்காரங்கள்.

    ஒவ்வொரு வரியாக ரஸித்துச் சுவைத்துப் படித்து மகிழ்ந்தேன். மிகவும் உன்னதமான சாதனையாளர்தான் .... தாங்கள்.

    இளைஞர்கள் அனைவருக்கும் தாங்கள் ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறீர்கள்.

    >>>>>

    ReplyDelete
  6. http://gopu1949.blogspot.com/2012/03/1.html
    http://gopu1949.blogspot.com/2012/03/7.html

    ’மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ என்ற தலைப்பினில் அடியேன் 2012-ம் ஆண்டு எழுதியிருந்த ஓர் மிகச்சிறிய தொடரைத் தாங்கள் சமீபத்தில் (24.01.2019) வாசித்து விட்டு, எனக்கு ஓர் பின்னூட்டம் அளித்துள்ளீர்கள். அதன் பாதிப்பு தங்களின் இந்தக் கட்டுரையில் ஆங்காங்கே பிரதிபலிப்பதை என்னால் நன்கு உணர முடிந்தது.

    தங்களின் அந்தப்பின்னூட்டமும், அதற்கான என் பதிலும் கீழே கொடுத்துள்ளேன்.

    >>>>>

    ReplyDelete



  7. http://gopu1949.blogspot.com/2012/03/7.html

    சொ.ஞானசம்பந்தன் January 24, 2019 at 6:39 PM

    மிகவும் சுவைபட அந்த நாள் நிகழ்ச்சிகளை மலரும் நினைவாக எழுதி இருக்கிறீர்கள். உங்களின் கல்வியாசை, விடாமுயற்சி, மெய் வருத்தம் பாராமல் உழைத்தது எல்லாம் வெகுவகப் பாராட்டத்தகுந்தது. ஒரு பெருந்தொகையைத் தேவைப்பட்ட காலத்தில் கொடுத்து உதவியது எவ்வளவு அருங் குணம்! நீங்கள் ஓர் உயர்ந்த மனிதர்! எல்லாவற்றையும் இவ்வளவு விவரமாய் நினைவில் வைத்திருப்பது சிலர்க்கே சாத்தியம். சாந்துணையும் கற்க வேண்டும் என்னும் உங்கள் கருத்து போற்றற்குரியது. நான் 36 ஆம் வயதில் புலவர் பட்டமும் 68 ஆம் அகவையில் இந்தி டிப்லோமாவும் பெற்றேன் . 92 வயதில் மலையாளம் கற்றுக்கொண்டிருக்கிறேன் .பெருமைக்காகச் சொல்லவில்லை. உங்கள் கருத்தும் என் கருத்தும் ஒத்திருக்கின்றன என்பதைத் தெரிவிப்பதற்காகத் தான்.

    >>>>>

    ReplyDelete
  8. சொ.ஞானசம்பந்தன் January 24, 2019 at 6:39 PM

    வாங்கோ ஐயா, நமஸ்காரங்கள் + வணக்கம்.

    //மிகவும் சுவைபட அந்த நாள் நிகழ்ச்சிகளை மலரும் நினைவாக எழுதி இருக்கிறீர்கள். உங்களின் கல்வியாசை, விடாமுயற்சி, மெய் வருத்தம் பாராமல் உழைத்தது எல்லாம் வெகுவாகப் பாராட்டத்தகுந்தது.//

    மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஐயா

    //ஒரு பெருந்தொகையைத் தேவைப்பட்ட காலத்தில் கொடுத்து உதவியது எவ்வளவு அருங் குணம் ! நீங்கள் ஓர் உயர்ந்த மனிதர்!//

    என்னால் அன்றையதினம் செய்ய முடிந்துள்ள ஒரு சின்ன உதவிதான். வெகு சீக்கரமாகவே (ஓரிரு மாதங்களுக்குள்) பணமும் எனக்கு, PROMPT ஆக திரும்பி வந்துவிட்டது. இருப்பினும் அவர்களுக்கு அன்று அது ஓர் TIMELY HELP ஆக இருந்துள்ளது. அதனால் நான் அந்த சம்பவத்தை, அப்போதே மறந்தும்கூட, அவர்களால் மறக்க முடியாமல், இன்றுவரை வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் நினைவூட்டி நன்றி செலுத்தி வருகிறார்கள்.

    //எல்லாவற்றையும் இவ்வளவு விவரமாய் நினைவில் வைத்திருப்பது சிலர்க்கே சாத்தியம்.//

    ஏதோ இறையருளாலும், தங்களைப்போன்ற பெரியவர்களின் ஆசியாலும், எனக்குக் கொஞ்சம் ஞாபகசக்தி அதிகமாகவே, இன்றுவரை இருந்து வருகிறது.

    //சாந்துணையும் கற்க வேண்டும் என்னும் உங்கள் கருத்து போற்றற்குரியது.//

    இன்றும் இந்தக்கால சிறுவர், சிறுமியர்களை குருவாக ஏற்று, இந்த கம்ப்யூட்டர், மொபைல் ஸ்மார்ட் போன், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற எத்தனை எத்தனையோ சிறு சிறு விஷயங்களையும், நவீன சாதனங்களையும் இயக்க வேண்டி, நாம் கற்கத்தான் வேண்டியுள்ளது. வயதானாலும்கூட நம்மை நாமே, காலத்திற்கு ஏற்ப அப்-டேட் செய்துகொள்ள வேண்டியதும் மிகவும் அவஸ்யமாகத்தான் உள்ளது.

    //நான் 36 ஆம் வயதில் புலவர் பட்டமும் 68 ஆம் அகவையில் இந்தி டிப்லோமாவும் பெற்றேன் . 92 வயதில் மலையாளம் கற்றுக்கொண்டிருக்கிறேன் .பெருமைக்காகச் சொல்லவில்லை . உங்கள கருத்தும் என் கருத்தும் ஒத்திருக்கின்றன என்பதைத் தெரிவிப்பதற்காகத் தான்.//

    தாங்கள் தாராளமாகப் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். உங்களை நினைத்து நானும் பெருமைப்படுகிறேன் + [கொஞ்சம் பொறாமையும் படுகிறேன். :)))))]. தங்களின் சாதனை மிகப்பெரிய மகத்தான சாதனை ஐயா. என்னைப்போன்றவர்களுக்கு மட்டுமல்ல .... இளைஞர்களுக்கும் தாங்களே வழிகாட்டியாக விளங்குகிறீர்கள். கேட்கவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    அன்புடன் கோபு
    珞

    ReplyDelete
    Replies
    1. சிறிய உதவி என்று சொல்வது உங்கள் தன்னடக்கத்தைக் காட்டுகிறது . குறள் :
      காலத்தினாற் செய்த உதவி சிறிதுஎனினும்
      ஞாலத்தின் மாணப் பெரிது .

      Delete
  9. தங்களின் இந்த வரலாற்றுக் கட்டுரை மூலம், தங்கள் வாழ்க்கைப் பயணம் மட்டுமல்லாமல், அன்றைய பூகோள அமைப்புகள், அன்றையப் பயண வசதி வாய்ப்புகள், அன்றைய பயண நேரங்கள், அன்றைய கல்வி முறைகள், பாடங்களின் இருந்த பல்வேறு மொழிகள், படிக்கும் மாணவர்களுக்கான கஷ்டமான வசதி வாய்ப்புகள், அன்று இருந்த நல்லோர்களின் தான தர்ம தயாள குணங்கள், ஒருசில ஆசிரியப் பெருமக்களின் விசித்திர குணாதிசயங்கள், முன்னோர்கள் வைத்துச்சென்றுள்ள மிகவும் பொக்கிஷமாக நூல்கள், அவைகள் காப்பாற்றப்பட்டுள்ள அதிசயம் என அனைத்தையும் ஒன்றாக அறிந்து வியந்து மகிழ முடிகிறது.

    தங்களுக்கு 92 வயது முடிந்து 93 வயது ஆரம்பம் என என்னால் நினைக்கவே முடியவில்லை. 29 வயதுதான் முடிந்துள்ளது போல, பேரெழுச்சியுடன் மிக அருமையாக அனைத்தையும் கோர்வையாக நினைவு படுத்திச் சொல்லியுள்ளீர்கள். மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    புலமையில் ஓர் ’நடமாடும் பல்கலைக் கழகம்’ போலத் திகழும் தாங்கள் மேலும் பல்லாண்டுகள் நன்கு ஆரோக்யத்துடன் வாழ்ந்து அனைவருக்கும் ஓர் நல்ல வழிகாட்டியாகத் திகழ, எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய பிரார்த்திக்கிறேன், ஐயா.

    அன்புடன் + நமஸ்காரங்களுடன்,

    கோபு

    ReplyDelete
    Replies
    1. உங்களின் விரிவான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . அளவுக்கு அதிகமாய்ப் புகழ்ந்திருக்கிறீர்கள் .உங்கள் பிரார்த்தனைக்கும் நன்றி . வயது 93 முடிந்து 94 ஆரம்பம் . தவறுதலாய்க் கட்டுரையில் 93 தொடக்கம் என்று எழுதிவிட்டேன் . முதுமை காரணமாய்க் கணக்கில் தவறு .

      Delete
  10. வாழ்த்துக்களும் வணக்கங்களும் ஐயா..

    தங்கள் பதிவை வாசிக்கும் போது எனக்கு பெரும் வியப்பு எத்தனை எத்தனை அனுபவங்கள் தங்களுக்கு ...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டத்துக்கு என் மனமார்ந்த நன்றி .

      Delete
  11. பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு என் அகமார்ந்த நன்றி .

      Delete
  12. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். ஒன்றாம் வகுப்பு துவங்கி மேல் வகுப்புகள் வரையிலும் வகுப்பு நடத்திய ஆசிரியர் பெயர்களை நினைவில் வைத்திருப்பது வியப்பையளிக்கிறது. என் ஆசிரியர்கள் பற்றி நினைத்துப் பார்த்தேன். ஐந்தாம் வகுப்பு வரை நடத்தியவர்களின் ஒருவர் பெயர் கூட நினைவிலில்லை. ஆறாம் வகுப்பிலும் ஒன்றிரண்டு பெயர்களே நினைவில் உள்ளன. கற்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை உங்களைப் பார்த்துத் தான் கற்றுக்கொண்டேன். மலரும் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. தெரியாத சில விஷயங்கள் தெரிந்து கொண்டேன். அந்நாளிலேயே சிறந்த புத்தகங்களைச் சேகரித்து வீட்டில் நூலகம் அமைத்திருந்த கொள்ளுப் பாட்டனாரை நினைத்து வியப்பு!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு என் உள்ளமார்ந்த நன்றி . என் கொள்ளுப் பாட்டனாரின் வாரிசாக நான் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல் நூல்களை அவ்வப்போது வாங்கி வாசித்து முக்கிய தகவல்களைக் குறிப்பெடுத்துக்கொண்டமை நான் நூல்கள் எழுதவும் வலைத்தளத்தில் கட்டுரைகள் எழுதவும் மிகவும் பயன்தருகிறது .

      Delete
  13. அய்யா தங்களுக்கு விரிவான மிட் அஞ்சல் அனுப்பி உள்ளேன் பாரக்கவும் நன்றி

    ReplyDelete