சங்க கால வேந்தர்களுள் ஒருவன் சேரமான் பெருஞ்சோற்று
உதியன் சேரலாதன். புலவர் முரஞ்சியூர் முடி நாகனார் அவனைத் தம் பாடலுள் (புறம் 2 : அடி
13 – 16)
அலங்குளைப் புரவி
ஐவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட
பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும்
பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம்
வரையாது கொடுத்தோய்
என்று புகழ்ந்திருக்கிறார்.
பொருள்: அசைந்த தலையாட்டம் உள்ள குதிரைகளை யுடைய
பாண்டவர் ஐவரோடும் பகைத்து, அவர்களுடைய நாட்டைக் கவர்ந்து கொண்ட, தும்பைப்பூச் சூடிய
நூறு பேரும் போரிட்டுக் களத்தில் இறந்து போகப் பெருஞ்சோறாகிய மிக்க உணவை அளவு இல்லாமல்
கொடுத்தவனே!
இதற்கு உரையாசிரியர் ஔவை சு. துரைசாமி பிள்ளை தந்துள்ள
விளக்கம்:
பாரதப் போரில் இரு படைகளும் போர் செய்து மடியும்
வரை அவர்களுக்கு இந்தச் சேர மன்னன் வேண்டிய அளவு உணவு வழங்கினான்.
என்ன வேடிக்கை! 2000 கி.மீ.க்கு அப்பாலுள்ள போர்க்களத்துக்கு
இங்கிருந்து எப்படி உணவு அனுப்பியிருக்க முடியும்? வழியிலேயே கெட்டுப் போய்விடாதா?
அஸ்தினாபுரத்திலேயே ஏற்பாடு செய்திருக்க மாட்டார்களா? இயலவில்லை யெனில் அக்கம் பக்க
நாடுகளின் உதவியை அன்றோ கோரியிருப்பார்கள்?
இது குறித்துத் தமிழறிஞர் எஸ். வையாபுரி பிள்ளை
தம் இலக்கியச் சிந்தனைகள் என்னும் நூலில் (பக். 42) பின்வருமாறு எழுதியுள்ளார்:
“தென்னாட்டிலிருந்த அரசனொருவன் பாரத யுத்தம் நிகழ்ந்த
குருக்ஷேத்திரத்திற்கு உணவுப் பொருள்களை யெல்லாம் எடுத்துச் சென்று அங்கே பொரக் கூடியிருந்த
படைகளுக்கெல்லாம் உணவளித்தான் எனல் சரித்திர முறையில் ஒப்புக்கொள்ளக் கூடியதன்று. அன்றியும்
சேரர்கள் இவ்வாறு உணவளித்தார்கள் என்ற செய்தி வியாச மகாபாரதத்தில் கூறப்படவில்லை. அங்குச்
சேரர்களைக் குறித்துக் காணப்படுவதெல்லாம் கர்ணனது திக்கு விஜயத்தில் இவனால் தோல்வியுற்றுத்
துரியோதனனுக்குத் திறை செலுத்தினார்கள் என்பதும் பின்பு யுதிஷ்டிரது படையோடு சேர்ந்து
போருக்கு உதவினார்கள் என்பதுமேயாம்.”
&&&&&
சில விஷயங்கள் புரிதலுக்கு அப்பாற்பட்டதாய் இருக்கிறது
ReplyDeleteபழங் காலத் தமிழ்ப் புலவர்கள் மன்னர்களை மனம் போன போக்கில் புகழ்ந்து பாடித் தம் தேவைகளை நிறைவு செய்துகொள்வார்கள் ; மெய் பொய் குறித்து அவர்களுக்குக் கவலை இல்லை . ஒரு புலவர் வேந்தன் ஒருவனை , " சூரியனிலிருந்து குளிர்ச்சியும் சந்திரனிலிருந்து வெப்பமும் வரவேண்டும் என நீ விரும்பினால் அவ்வாறே வரச் செய்யும் ஆற்றல் உனக்கு உண்டு " என்று புகழ்ந்தார் .அதனால்தான் பொய் பிறந்தது புலவர் நாவிலே என்ற பாடல் எழுதப்பட்டது . ஆகவே இதில் புரிதல் என்பது இல்லை . அப்பட்டமான கற்பனை எனக் கொள்ள வேண்டும் .
Delete