Tuesday 10 March 2020

கண்டம்



  சோதிடர்கள் பயன்படுத்தும் கலைச் சொற்களுள் கண்டம் என்பதும் ஒன்று.

  உங்களுக்குத் தண்ணியிலே கண்டமிருக்கு. பரிகாரம் செய்யணும்

  இந்த ஜாதகருக்கு 52 வயசுலே ஒரு கண்டம் இருக்கு; அதத் தாண்டிட்டா அப்பறம் கவலையில்லை

என்றெல்லாம் சோதிடர் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

  உயிரைப் பறிக்கக்கூடிய ஆபத்துதான் கண்டம் எனப்படுகிறது.

  அடிக்கடி நோய் நொடிக் காளாகி நொந்து மீள்பவரைக் குறித்துப் பேசுகையில், “அவருக்கு நித்ய கண்டம் பூர்ணாயுசுஎன்று கூறுவார்கள். 

  சோதிடத்தில் நம்பிக்கை இன்மையால் நான் ஜாதகம் பார்த்ததே யில்லை. எனக்கொரு கண்டம் இருந்தது என்பது அனுபவத்தில் தெரிந்தது.

  1965 இல் என் மைத்துனர் (மனைவியின் தமையனார்) வீட்டுக்குக் குடும்பத்தோடு சென்று சில நாள் தங்கியிருந்தேன். மே மாதம், பள்ளி விடுமுறைக் காலம்.

  நாகூர் நாணயக்காரத் தெருவில் நடமாட்டம் குறைவு. ஒரு மாலைநேரம்; ஆறு மணி யிருக்கலாம். வீட்டருகில், வீதியோரமாய், நாற்காலி போட்டுத் தெற்கு நோக்கி அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டிருந்தேன். என் மூத்த மகன் (3 வயது) இடப் பக்கம் என்மீது லேசாய்ச் சாய்ந்தவாறு நின்றிருந்தான்.

  திடீரென, “அப்பா, பூச்சி வருதுஎன்றான். வலப்பக்கம் தெருவில் பார்வையைச் செலுத்தினேன்; பாம்பொன்று ஒரு முழத் தொலைவில் வந்துகொண்டிருந்தது. நான் சிலையானேன்; “அசையாமல் நில்லு!” என்று மகனிடஞ் சொன்னேன்.

  காலைச் சுற்றின பாம்பு கடிக்காமல் விடாதுஎன்பது அனுபவ மொழி.

  அது, தரையில் ஊன்றியிருந்த என் வலக்காலைச் சுற்றவில்லை; காலில் முட்டிவிட்டுத் தெற்கே திரும்பிப் பின்பு மீண்டும் கிழக்குப் பக்கமாய்ப் பயணித்து வீட்டின் மூன்று படிகளிலும் ஏறி சுவரை யொட்டிய ஒரு மூலையில் நின்று படமெடுத்தது.

  ஆகா! நல்ல பாம்பு!

  என் பார்வை அதன் மீதே பதிந்திருந்தது. சற்று நேரத்தில் அது தலை தாழ்த்தி ஊர்ந்து நிலையைத் தாண்டி உள்ளே போயிற்று. எங்கே போகிறது என்பதை யறிய எழுந்து சென்று கவனித்தேன். முற்றத்தின் ஓரத்தில் இருந்த சாக்கடைப் பள்ளத்தில் இறங்கி அதில் ஊர்ந்து, tunnel இல் புகுவது போல், மூடப்பட்டிருந்த பகுதியில் நுழைந்து விட்டது.

  எதிர்த்த வீட்டு சந்திர சேகரனைக் கூப்பிட்டு செய்தி சொன்னேன்; அவரும் இன்னொருவரும் வந்தனர். ஒருவர் நீளமான மூங்கில் கம்பொன்றைத் தெருப்பக்கத்திலிருந்து சாக்கடையில் செலுத்திக் குத்தினார்; பாம்பு முற்றம் வழியாக வெளியேறுகையில் அடிப்பதற்கு ஒரு கம்புடன் மற்றவர் தயாராய் நின்றார். எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தது.

  தக்க நேரத்தில் பாம்பு என் மகனது கண்ணிற் படாமலிருந்தாலோ, அவன் உடனே எச்சரிக்காவிட்டாலோ, நான் காலை ஆட்டியிருக்கக்கூடும்; அது கொத்தியிருக்கலாம்.

  பாம்புக்கும் எனக்கும் ஒரே சமயத்தில், ஒரே இடத்தில் கண்டம்: நான் மீண்டேன், அது மாண்டது.

&&&&&

7 comments:

  1. உங்கள் கண்டத்தை நினைத்துப் பார்த்தால், ஒரு நிமிடம் திகைக்க வைக்கிறது... நல்ல வேலையாக தங்கள் மகன் காப்பாற்றி விட்டார்...

    ReplyDelete
  2. ஆமாம் , அவன் காப்பாற்றினான் . உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. தங்களால் பாப்பிற்குக் கண்டம்

    ReplyDelete
  4. மெய்தான்; ஆனால் வேறு வழியில்லை.உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. பாம்பென்றால் படியு நடுங்கும் ஆனால்பாம்பென்று நினைத்து ஒரு அரணீஆஈ ஓண்ரதை பதிவாக்கி இருந்தேன் https://gmbat1649.blogspot.com/2011/12/blog-post_04.html

    ReplyDelete
    Replies
    1. மெய்யாகவே திகில் அனுபவந்தான் . எப்படி உற்ங்க முடியும் ? நல்ல காலமாகப் பாம்பல்ல.

      Delete
  6. மூன்று வயது மகனும் சொன்னதைக் கேட்டு ஆட்டாமல் இருந்தது ஆச்சரியம் தான். பாம்புக்குக் கண்டம் என்பதைப் படித்துச் சிரித்தேன்.

    ReplyDelete