Saturday, 10 December 2011

புதிரோ புதிர் - நகைச்சுவைக் கதை


(வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் அலுவலர் பல வீடுகளுக்குச் சென்று விட்டு ஒரு பாட்டியின் இல்லத்துக்குப் போகிறார். பாட்டி திண்ணை மீது கால்களை நீட்டி அமர்ந்துள்ளார்)


“பாட்டி, தேர்தல் வருகிறது. வாக்காளர் பட்டியல் தயாரிக்கிறேன். உங்கள் பெயர் என்ன?”

”அதை நான் சொல்லக் கூடாது.”

“என்ன, பாட்டி? கணவன் பெயரைக் கூட இப்போது சொல்கிறார்கள். நீங்கள் உங்கள் பெயரையே சொல்ல மாட்டீர்களா?”

“என் பெயரும் மாமியார் பெயரும் ஒன்று. அதை எப்படி சொல்லுவேன்?”

“இப்படிக் கூட ஒரு கஷ்டமா? இத்தனை வயதான பிறகு என்ன பாட்டி? சும்மா சொல்லலாம். சொல்லுங்கள்.”

“வயதாகிவிட்டால் மட்டு மரியாதை போய் விட வேண்டுமா? இந்தக் காலத்துப் பிள்ளைகள் முளைத்து மூன்று இலை விட்டதும், அப்பனையே பேர் சொல்லிக் கூப்பிடுகின்றன. நான் அந்தக் காலத்து மனுஷி. சொல்ல மாட்டேன்.”

“அப்படியானால் ஒரு ஹிண்ட் கொடுங்கள்.”

“இண்டாவது இடுக்காவது? என்னடாப்பா உளறுகிறாய்?”

”இண்டுமில்லை, இடுக்குமில்லை. ஹிண்ட்! அதாவது ஒரு குறிப்பு. எதையாவது சொல்லுங்கள். அதை வைத்து நான் கண்டுபிடிக்கிறேன்.”

(மனதுக்குள்: நல்ல வேலை கிடைத்தது நமக்கு)

“கடலில் என்ன அடிக்கிறது?”

“காற்று.”

“அதில்லை. கரையில் வந்து மோதுமே? அது!”

”அதுவா? அலை! அலையா உங்கள் பெயர்? புதுமையாக இருக்கிறதே!”

‘அவசரக் குடுக்கை! இன்னும் சொல்வதைக் கேள்.”

“சொல்லுங்கள்.”

“கீழே என்பதற்கு மாற்றமாய் என்ன சொல்லுவோம்?.”

”மேலே!”

“அதைச் சுருக்கு.”

“மேல்.”

”இரண்டையும் சேர்.”

“மேலே மேல்! இப்படி ஒரு பெயரா?”

“சீ! முன்னே ஒன்று கண்டுபிடித்தாயே, அதையும் இதையும் சேர்.”

“முன்னே என்ன கண்டுபிடித்தேன்? ஆங்! அலை! அப்போ “அலைமேல்”

“கொஞ்சம் மாற்று.”

“அலமேல்.”

“அது தான்.”

“அப்பாடா! ஒரு வழியாய்க் கண்டுபிடித்தாயிற்று!”

“இன்னும் இருக்கிறது.”

‘ஐயையோ! இன்னுமா?”

“ஏண்டாப்பா? வீடான வீட்டிலே அவச் சொல் சொல்லவா வந்தே? நீ போ. இனி மேல் ஒன்றும் சொல்லமாட்டேன்.”

(இந்த மாதிரி நாலு கிழம் இருந்தால் நாம் கணக்கெடுத்து வாழ்ந்தாற் போலத்தான்.)

”உன்னைப் பெற்றவளை எப்படிக் கூப்பிடுவே?”

“அம்மா.”

“அதையுஞ் சேர்த்துக் கொள்.”

“அலமேல் அம்மா.”

”சரி.”

(இந்த அம்மாவைச் சேர்க்காவிட்டால் குடியா முழுகிவிடும்?)

“இப்போ, வீட்டுக்காரர் பேரைச் சொல்லுங்கள்.”

“அதை எப்படி நான் சொல்லுவேன்?”

“நீங்கள் எங்கே சொல்லப் போகிறீர்கள்? நான் தான் கண்டுபிடிக்க வேண்டும்.”

‘இண்டு வேண்டுமா?”

“ஆமாம்.”

“குரங்கு இருக்கிறதல்லவா?”

“என்னிடமா? நான் என்ன குரங்காட்டியா?”

‘சீ! நான் ஒன்று சொன்னால், நீ ஒன்று சொல்கிறாய். நீ போய்ச் சேரு.”

”கோபித்துக் கொள்ளாதீர்கள், பாட்டி. சொல்லுங்கள்.”

“குரங்குக்கு வேறு பேர் சொல்லு.”

“வேற பேரா?”

(இனிமேல் கையோடு அகராதி கொண்டு வர வேண்டும்).

”வேறே பேரென்ன? வானரம், மாருதி, கடுவன், மந்தி......”

“கடலைத் தாண்டுச்சே?”

”அனுமார்!”

“ஆங்! அதைக் கொஞ்சம் மாற்று.”

“அனுமாரை எப்படி மாற்றுவது?”

“ஆரம்பம் அது தான். கடைசியை மாற்று.”

“அனு, அனு, அனு.......”

“நல்ல மக்கு நீ! வயிற்றில் பசியில்லை, என்ன சொல்லுவோம்?”

“மந்தமாய் இருக்.”

‘அதான் இப்போது கண்டுபிடி.”

“அனுமந்தம்! அனுமந்தன்!”

”அதான்”.

”அம்மாடி! நான் வருகிறேன் பாட்டி.”

(தேர்தலைச் சபித்துக் கொண்டே அலுவலர் போகிறார்)

(பி.கு. 1976 ல் ஆனந்த விகடனில் எழுதியது)

Tuesday, 6 December 2011

மூவகை மாணவர்



ஆசிரியர்களைப்பற்றிக் கருத்துத் தெரிவிக்கிற நன்னூல் மாணவர்களை மறந்துவிடவில்லை. இவர்களை மூவகையாகப் பிரித்து வழக்கம்போல் தக்க உவமைகள் கூறி விளக்குகிறது.


பா.38.
அன்னம் ஆவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடம்ஆடு எருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.

1.அன்னம், ஆ (தலை மாணவர்)
2.மண், கிளி (இடை மாணவர்)
3.இல்லிக்குடம்,  ஆடு, எருமை, சல்லடை (கடை மாணவர்)

1. இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள கற்பனைப் பறவையாகிய அன்னத்திடம் நீர் கலந்த பாலை வைத்தால் அது நீரை விலக்கிப் பாலை மட்டும் பருகுமாம்.”நீரொழியப் பாலுண் குருகு” என்றார் நாலடியார். அன்னத்தைப் போன்ற மணவர், ஆசிரியர் கற்பித்தவற்றுள் தேவையற்றதைத் தவிர்த்து முக்கிய பகுதியை நினைவில் இருத்துவர்.

புல் கண்ட இடத்தில் ஆ வயிறார மேய்ந்து, நிழல் கண்ட நிலத்தில் படுத்து அசை போடும். முதல் வகை மாணவரும் ஆசிரியர் சொன்ன யாவையும் உள்வாங்கி ஓய்வுநேரத்தில் நினைவுக்குக் கொண்டுவந்து அலசி ஆய்ந்து மூளையில் பதித்துக் கொள்வார்.

2. மண் என்பது இங்கு நிலத்தைக் குறிக்கிறது. உழைப்புக்கேற்ற பலனை வயல் வழங்குவதுபோல் ஆசிரியர் எந்த அளவு சிரமப்பட்டுப் போதிக்கிறாரோ அந்த அளவு மாத்திரம் இடை மாணவரிடம் பயன் (ரிசல்ட்) காண்பார்.

கிளியானது சொல்லித் தந்ததைத் திருப்பிச் சொல்லுமே ஒழியப் புதியவற்றைச் சொல்லாது. இடை மாணவரும் ஆசிரியர் கற்பித்ததை மட்டும் அறிவர், தாமாகச் சிந்தித்து மேம்பாடு அடையார்.

3. இல்லிக்குடம் – ஓட்டைக்குடம். இதையொத்த மாணவர் தம் நினைவாற்றல் குறைபாடு காரணமாக எல்லாம் மறப்பர். மூளையில் எதுவுந்தங்காது.

ஓரு செடியின் இலைகளுள் சிலவற்றை மட்டும் தின்றுவிட்டு அடுத்த செடியை அணுகும் ஆடு போன்றார் எந்த ஆசிரியரிடமும் நிலையாகக் கல்லார்.

குட்டையைக் கலக்கி நீர் குடிக்கும் எருமை, ஆசிரியரை வருத்திப் பாடங்கற்கும் மாணவர்க்கு உவமை.

உணவுப்பொருளைக் கீழே விட்டுவிட்டு மண்கட்டி, கல், குச்சி முதலியவற்றைப் பிடித்து வைத்துக்கொள்ளும் சல்லடை போல் சில மாணவர் பாடத்தின் முக்கிய பகுதியைக் கவனத்தில் கொள்ளாமல் ஆசிரியர் சொன்ன குட்டிக்கதை, நகைச்சுவைத் துணுக்கு முதலியவற்றை நினைவிற்கொள்வர்.

மற்றபடி சோம்பல், கெட்டபழக்கம் முதலிய குறைகளை நன்னூல் கண்டுகொள்ளவில்லையோ என்ற கேள்வி எழலாம். அவற்றை உடையவர் மாணவரே அல்லர் என்று நன்னூல் ஒதுக்கிவிடுகிறது.

Saturday, 3 December 2011

விசாரிப்பு - ஒருநிமிடக் கதை



பத்து நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சக ஊழியர் கோபாலனைப் பார்த்து நலம் விசாரித்து விட்டு வருவதற்காக மாணிக்கம் தம் மனைவியுடன் சென்றிருந்தார். அலுவலகச் செய்திகள், ஊர் வம்பு, சினிமா, அரசியல் என உற்சாகமாக நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுத் திரும்பி வருகையில் மனைவி கேட்டாள்:

“ஏங்க, கல்யாணச் சந்தடியில் தாலி கட்ட மறந்து போன கதையா, என்னென்னமோ அரட்டை அடிச்சுட்டுக் கடைசியில அவரோட உடம்பைப் பத்தி விசாரிக்கவும், ஆறுதல் சொல்லவும் மறந்துட்டீங்களே, அவர் என்ன நினைச்சுக்குவார்?”

மாணிக்கம் சிரித்தவாறே சொன்னார்:

“ஒண்ணும் நினைக்க மாட்டான்! சந்தோஷந்தான் படுவான். நான் வேணும்னு தான் அவன் நோயைப் பத்திப் பேசலை. இந்தப் பத்து நாளில் எத்தனை பேரின் கேள்விகளுக்கு உடம்பைப் பத்தி, சிகிச்சை பத்தி சொல்லி சொல்லி அலுத்துப் போயிருப்பான்? அந்த நிலையில் என் பேச்சு, அவனுக்கு நிச்சயம் புத்துணர்வும் தெம்பும் கொடுத்திருக்கும்.”

(01/08/2007 ஆனந்த விகடனில் ஒரு நிமிடக்கதை பகுதியில் எழுதியது)

Thursday, 1 December 2011

பேகனின் மனைவி




பழங்கால வள்ளல்களுள் ஒருவன் பேகன்; முல்லைக்குத் தேரீந்த பாரி போல இவன் மயிலுக்குப் போர்வை போர்த்திப் புகழ் பெற்றான். (பைத்தியக்காரர்கள் என நினைக்கத் தோன்றுகிறது . ஆனால் நிகழ்ச்சி பற்றிய முழு விவரங்களும் காரணமும் தெரியாமையால் கருத்துத் தெரிவிப்பது சரியாகாது)

பழனி மலையை ஆண்ட இவனிடம் ஒரு பெருங்குறை இருந்தது: தன் மனைவியைப் பிரிந்து அவளை ஆற்றொணாத் துயரில் ஆழ்த்திப் பரத்தையரை நாடியவன் இவன்;  இதைத் தீயொழுக்கமாக இன்றைய சமுதாயங் கூடக் கருதுவதில்லை என்னும் போது அக்கால நிலை எவ்வாறு இருந்திருக்கும்!

அந்தப் பெண்ணின் இரங்கத் தக்க நிலையைத் தெரிந்துகொண்ட புலவர் சிலர் பேகனுக்கு அறிவுரை கூறினர். (பிரிந்து வாழும் இணையர்க்குப் புத்தி சொல்லி அவர்களைச் சேர்த்துவைக்கச் சான்றோர் முயல்வதுண்டு; இவர்களைப் "பிரிந்தார்ப் புணர்ப்போர்" எனக் குறுந்தொகை 146 ஆம் பாடல் சுட்டுகிறது).

புலவர்கள் இயம்பிய நல்லுரைகள் புற நானூற்றின் ஐந்து பாக்களில் இடம் பெற்றுள்ளன. அப் பாட்டுகள் பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தின் சில கூறுகளான மன்னர் சிலரது நடத்தை, புலவர்களின் தன்னலமற்ற செயல்பாடு,  இல்லத்தரசிகளின் பரிதாப நிலைமை ஆகியவற்றை அறிய உதவுகின்றன.

கபிலர், " இல்லொன்றின் வாயிலில் நின்று நான் உன்னை வாழ்த்திப் பாடியபோது, அதைக் கேட்டு ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள். யாரவள்? அவளுக்கு அருள்வாயாக!" எனக் கேட்டுக்கொண்டார்.

பரணர், " பேகனே , நேற்று நான் உன் காட்டைப் போற்றிப் பாடினேன்; அப்போது ஒருத்தி எதிரில் வந்து அழுதாள். " நீர் பேகனுக்கு உறவா? " என நான் வினவியதற்கு, அவள் கண்ணீரை விரல்களால் துடைத்தபடி, "இல்லை , அவன் என்னைப் போன்ற ஒரு பெண்ணை நாடி நாள்தோறும் அவளது இருப்பிடத்துக்கு வந்து போகிறான் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்" என்று விடை அளித்தாள். நீ அவளுக்கு இரங்காமலிருப்பது சரியல்ல" என்று கூறினார்.

பேகன் அவரது பாட்டுக்குப் பரிசு கொடுக்க முனைந்தான். புலவர் அதனை மறுத்து,  " எனக்குப் பசியும் இல்லை, என் சுற்றமும் இங்கு வரவில்லை ; அம் மடந்தையின் பிரிவுத் துன்பம் போக்கி அருள் செய். இதுவே நான் உன்னிடம் கோருவது" என்றார்.

பரிசைப் பெற மறுத்த இன்னொருவர் அரிசில்கிழார். அவர் சொன்னார்;

" வேந்தே, நீ கொடுக்கிற நகையும் செல்வமும் எனக்கு வேண்டாம்; நீ அருள் பாலிக்காமையால், பார்ப்போர் இரங்குமாறு, உடல் மெலிந்து அருந்துயர் உழக்கும் உன் மனைவி தனது கூந்தல் முடித்துப் பூச் சூடும்படியாக நீ அவள் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதே என் விழைவு"

பேகனின் இல்லத்தில் அவனுடைய மனைவி வாழவில்லை என்னும் தகவல் இப் பாடலால் தெரிகிறது .

பெருங்குன்றூர் கிழார் என்ற வேறொரு புலவரும் தம் பங்குக்கு அவனுக்குப் போதிதார் :

" நான் பண் இசைத்துப் பாடிய சமயம் உன் மனைவி கண்ணீர் மல்கத் தனியாய் நின்று செவிமடுத்தாள். எண்ணெய் தடவிச் சீவாத குழல் உடையவளாய் அவள் இன்னல் உற்றிருக்கிறாள் ; நீ அவள்பால் சென்று தன் கூந்தலை அவள் சீவி மலர் சூட அருள வேண்டும்; இதுவே உன்னிடம் நான் எதிர்பார்க்கும் பரிசு" என்று அவர் தெரிவித்தார் .

எந்தப் புலவரும் பெண்ணின் பெயரைக் குறிப்பிடவில்லை; ஆனால் உரையாசிரியர்கள், ஆதாரம் எதுவும் காட்டாமல், கண்ணகி என்று எழுதியிருக்கிறார்கள். கணிகையை விரும்பிய கோவலனால் புறக்கணிக்கப்பட்டுக் கண்ணீரும் கம்பலையுமாய்க் காலந்தள்ளிய கண்ணகியின் நிலைமையும் பேகனின் மனைவி நிலைமையும் ஒன்று என்பதால் அந்தப் பெயரைச் சூட்டினர் போலும்!

புலவர்களின் பரிந்துரையை ஏற்றானா பேகன்? துணைவியின் துன்பத்தைத் துடைத்தானா?  தகவல் இல்லை. காட்டு மயிலுக்கு இரங்கிப் போர்வையீந்தவன் வீட்டு மயிலுக்கு வெந்துயரே தந்தான். இந்திய மனைவியரின் நிலைமை இன்றுங்கூடப் பெரிய அளவில் மேம்பட்டுவிடவில்லை .