Thursday, 1 December 2011

பேகனின் மனைவி
பழங்கால வள்ளல்களுள் ஒருவன் பேகன்; முல்லைக்குத் தேரீந்த பாரி போல இவன் மயிலுக்குப் போர்வை போர்த்திப் புகழ் பெற்றான். (பைத்தியக்காரர்கள் என நினைக்கத் தோன்றுகிறது . ஆனால் நிகழ்ச்சி பற்றிய முழு விவரங்களும் காரணமும் தெரியாமையால் கருத்துத் தெரிவிப்பது சரியாகாது)

பழனி மலையை ஆண்ட இவனிடம் ஒரு பெருங்குறை இருந்தது: தன் மனைவியைப் பிரிந்து அவளை ஆற்றொணாத் துயரில் ஆழ்த்திப் பரத்தையரை நாடியவன் இவன்இதைத் தீயொழுக்கமாக இன்றைய சமுதாயங் கூடக் கருதுவதில்லை என்னும் போது அக்கால நிலை எவ்வாறு இருந்திருக்கும்!

அந்தப் பெண்ணின் இரங்கத் தக்க நிலையைத் தெரிந்துகொண்ட புலவர் சிலர் பேகனுக்கு அறிவுரை கூறினர். (பிரிந்து வாழும் இணையர்க்குப் புத்தி சொல்லி அவர்களைச் சேர்த்துவைக்கச் சான்றோர் முயல்வதுண்டு; இவர்களைப் "பிரிந்தார்ப் புணர்ப்போர்" எனக் குறுந்தொகை 146 ஆம் பாடல் சுட்டுகிறது).

புலவர்கள் இயம்பிய நல்லுரைகள் புற நானூற்றின் ஐந்து பாக்களில் இடம் பெற்றுள்ளன. அப் பாட்டுகள் பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தின் சில கூறுகளான மன்னர் சிலரது நடத்தை, புலவர்களின் தன்னலமற்ற செயல்பாடு,  இல்லத்தரசிகளின் பரிதாப நிலைமை ஆகியவற்றை அறிய உதவுகின்றன.

கபிலர், " இல்லொன்றின் வாயிலில் நின்று நான் உன்னை வாழ்த்திப் பாடியபோது, அதைக் கேட்டு ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள். யாரவள்? அவளுக்கு அருள்வாயாக!" எனக் கேட்டுக்கொண்டார்.

பரணர், " பேகனே , நேற்று நான் உன் காட்டைப் போற்றிப் பாடினேன்; அப்போது ஒருத்தி எதிரில் வந்து அழுதாள். " நீர் பேகனுக்கு உறவா? " என நான் வினவியதற்கு, அவள் கண்ணீரை விரல்களால் துடைத்தபடி, "இல்லை , அவன் என்னைப் போன்ற ஒரு பெண்ணை நாடி நாள்தோறும் அவளது இருப்பிடத்துக்கு வந்து போகிறான் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்" என்று விடை அளித்தாள். நீ அவளுக்கு இரங்காமலிருப்பது சரியல்ல" என்று கூறினார்.

பேகன் அவரது பாட்டுக்குப் பரிசு கொடுக்க முனைந்தான். புலவர் அதனை மறுத்து,  " எனக்குப் பசியும் இல்லை, என் சுற்றமும் இங்கு வரவில்லை ; அம் மடந்தையின் பிரிவுத் துன்பம் போக்கி அருள் செய். இதுவே நான் உன்னிடம் கோருவது" என்றார்.

பரிசைப் பெற மறுத்த இன்னொருவர் அரிசில்கிழார். அவர் சொன்னார்;

" வேந்தே, நீ கொடுக்கிற நகையும் செல்வமும் எனக்கு வேண்டாம்; நீ அருள் பாலிக்காமையால், பார்ப்போர் இரங்குமாறு, உடல் மெலிந்து அருந்துயர் உழக்கும் உன் மனைவி தனது கூந்தல் முடித்துப் பூச் சூடும்படியாக நீ அவள் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதே என் விழைவு"

பேகனின் இல்லத்தில் அவனுடைய மனைவி வாழவில்லை என்னும் தகவல் இப் பாடலால் தெரிகிறது .

பெருங்குன்றூர் கிழார் என்ற வேறொரு புலவரும் தம் பங்குக்கு அவனுக்குப் போதிதார் :

" நான் பண் இசைத்துப் பாடிய சமயம் உன் மனைவி கண்ணீர் மல்கத் தனியாய் நின்று செவிமடுத்தாள். எண்ணெய் தடவிச் சீவாத குழல் உடையவளாய் அவள் இன்னல் உற்றிருக்கிறாள் ; நீ அவள்பால் சென்று தன் கூந்தலை அவள் சீவி மலர் சூட அருள வேண்டும்; இதுவே உன்னிடம் நான் எதிர்பார்க்கும் பரிசு" என்று அவர் தெரிவித்தார் .

எந்தப் புலவரும் பெண்ணின் பெயரைக் குறிப்பிடவில்லை; ஆனால் உரையாசிரியர்கள், ஆதாரம் எதுவும் காட்டாமல், கண்ணகி என்று எழுதியிருக்கிறார்கள். கணிகையை விரும்பிய கோவலனால் புறக்கணிக்கப்பட்டுக் கண்ணீரும் கம்பலையுமாய்க் காலந்தள்ளிய கண்ணகியின் நிலைமையும் பேகனின் மனைவி நிலைமையும் ஒன்று என்பதால் அந்தப் பெயரைச் சூட்டினர் போலும்!

புலவர்களின் பரிந்துரையை ஏற்றானா பேகன்? துணைவியின் துன்பத்தைத் துடைத்தானாதகவல் இல்லை. காட்டு மயிலுக்கு இரங்கிப் போர்வையீந்தவன் வீட்டு மயிலுக்கு வெந்துயரே தந்தான். இந்திய மனைவியரின் நிலைமை இன்றுங்கூடப் பெரிய அளவில் மேம்பட்டுவிடவில்லை .

No comments:

Post a Comment