Wednesday, 3 July 2019

நூல்களிலிருந்து – 23





(பேராசிரியர் க.நெடுஞ்செழியன் எழுதி 2017 நவம்பரில் வெளிவந்த இரண்டாம் பதிப்பு “சித்தண்ண வாயில்” ஓர் ஆராய்ச்சி நூல். பழந்தமிழகத்தில் சமணம் பௌத்தம் போன்றே ஆசீவகம் என்ற மதமும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தது. சித்தண்ண வாயிலில் (சித்தன்ன வாசல் என்பது தவறு) காணப்படுங் கற்படுக்கைகளும் கல்வெட்டுகளும் ஆசீவகர்க்கு உரியவை என்று இந்நூல் கூறுகிறது. அதன் ஒரு பகுதியைப் பகிர்கிறேன்.)

  ஆசீவகம் உருவாக்கப்பட்ட தொடக்க காலத்தில் சைனத்திற்கும் பௌத்தத்துக்கும் கடும் போட்டியாகத் திகழ்ந்துள்ளது: எனினும் நாள் செல்லச்செல்ல பௌத்தத்திற்கும் ஆசீவகத்துக்கும் இடையே நல்லுறவு நிலவியது. பௌத்த சமயத்தைப் பரப்பிய அசோகன் ஆசீவகர்களுக்கென்று கற்படுக்கைகளை அமைத்ததில் அவ்வுண்மையைக் காணலாம். அசோகன் பௌத்தத்தைப் பரப்ப மேற்கொண்ட முயற்சியில் தமிழக மூவேந்தர்களும் அவனுக்குத் துணை நின்றுள்ளனர். அசோகனும் அவனால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட அவன் மகனும், தமிழ்நாட்டில் பல பௌத்த நினைவுச் சின்னங்களைத் தோற்றுவித்துள்ளனர். அந்த நாள்களில் தமிழக மூவேந்தர்களும் ஆசீவகத்தின் புரவலர்களாகத் திகழ்ந்தார்கள்; இதனை அவர்கள் வெளியிட்டுள்ள காசுகளில் பொறிக்கப்பட்ட யானைச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. யானை ஆசீவகத்தின் குறியீடு. இவ்வாறு தான் சார்ந்த பௌத்த சமயத்துக்குப் புகலிடந் தந்த தமிழ் மூவேந்தர்களுக்கு நன்றி காட்டும் வகையில் அவர்களின் போற்றுதலுக்கு உரிய சமயமாகிய ஆசீவகத்தைச் சிறப்பிக்கும் நோக்கில் அசோகன் அச்சமயத் துறவிகளுக்குச் செயற்கையாகக் குடைந்து கற்படுக்கைகளை உருவாக்கியுள்ளான் எனலாம்.

  மற்கலி கோசாலராகிய அறப்பெயர் சாத்தனார் கைலாயம் வரை சென்று அங்கு ஆதிநாதரிடம் ஆதி உலாவைக் கேட்டு வந்து திருப்பிடவூரில் அரங்கேற்றினார் எனப் பெரிய புராணம் குறிப்பிடுவதால் (வெள்ளானைச் சருக்கம் – பாடல் 52) மாசாத்தனாருக்கும் வடபுலத்திற்கும், குறிப்பாக மகதத்துக்கும் இருந்த தொடர்பை உய்த்தறிய முடிகிறது. மற்கலி கோசாலர் மகாவீரருடன் இணைந்து ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக சமயப் பணிகள் ஆற்றினார் என்று கூறப்படுகிறது. இது பெரிய புராணம் குறிப்பிடும் வடபுலப் பயணத்தை உறுதி செய்கிறது. மற்கலியின் இவ் வட நாட்டுப் பயணமே ஆசீவகம் மகதத்தில் பரவுவதற்கும் வட நாட்டார் பலர் தமிழகத்தில் வந்து சமயப் பயிற்சியை – பரவலை – மேற்கொள்ளவும் காரணமாயிற்று. இதன் விளைவாகவே தமிழில் முதன்முதலாகப் பிறமொழிக் கலப்பு ஏற்படலாயிற்று. தமிழகக் குகைக் கல்வெட்டுகளில் அர்த்தமாகதி, பாகதம் முதலான மொழிகளின் சொற்கள் இடம் பெற்றுள்ளதற்கான காரணம் இதுவே. மணப்பாறையிலுள்ள நல்லாண்டவர் கோயில் என்னும் ஐயனார் கோயிலில் இடம்பெற்றுள்ள லாட முனிவரின் சிலை, அவர் லாட தேசத்திலிருந்து வந்தவர் என்பதன் அடையாளமாகும். லாடதேசம் என்பது இன்றைய குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதி. இவ்வாறு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் ஆசீவகத்தைத் தழுவவும் பரப்பவும் பலர் தமிழகம் வந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

  சிலப்பதிகாரத்தில் ஆசீவகத்தின் செல்வாக்கு மிகப்பெரிய அளவில் இருந்துள்ளதுடன் ஐயனாராகிய பாசாண்ட சாத்தன் முழுமுதற் கடவுள்களுக்கும் மேலான ஆற்றல் பெற்ற தெய்வமாகக் காட்டப்படுவதும் இங்கு எண்ணத்தகும். ஆசீவகத் துறவிகளின் கடுந்தவமும் தூய ஒழுக்கமும் வாய்மையும் அம்மதத்தின் பெருமைக்கும் உயர்விற்குங் காரணங்களாயின. இன்றும் பல ஐயனார் கோயில்களில் “பொய் சொல்லா மெய் ஐயனாரின்” சிலைகள் அவர்களின் பெருமைக்குக் கட்டியங் கூறுகின்றன. இவ்வாறு தமிழர் வாழ்வியலின் அனைத்துக் கூறுகளிலும் பிரிக்க முடியா அங்கமாகத் திகழ்ந்தனர் ஆசீவகத் துறவிகள். இச்சூழலில்தான் கருநாடகத்திலிருந்து வந்த களப்பிரர்கள் சைன சமயத்தினராக இருந்த காரணத்தாலும் சைனம் இயல்பிலேயே ஆசீவக எதிர்ப்பில் ஊறித் திளைத்திருந்ததாலும் ஆசீவகம் கடும் பாதிப்புக்கு உள்ளாகத் தொடங்கியது. பல ஆசீவகப் பாழிகள் சைனப் பள்ளிகளாக உருமாற்றம் பெற்றன; பல சைன அறிஞர்கள் தங்களை “ஆசீவகர்கள் என்னும் யானையை வீழ்த்திய அரிமாப் போத்துகள்” எனப் பெருமை பாராட்டிக்கொண்டனர்.

  களப்பிரர்களின் அரசியல் அதிகாரத்தால் பாதிக்கப்பட்ட ஆசீவகமும் ஐயனார் வழிபாடும், வன்முறைகளை மட்டுமே கருவிகளாகக் கொண்டவர்களும் மனித ஊனைத் தின்பதும் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக் கொள்வதும் தங்களின் சமய அடையாளங்களாய்க் கொண்டவர்களும் ஆகிய கபாலிக காளாமுகத்தவர்களால் நிலைகுலைந்து போயின. இந்த வன்கொடுமையை முதன்முதலாய்க் கட்டவிழ்த்துவிட்டவர் திருநாவுக்கரசரே யாவார்; இவர் பழையாறையில் இருந்த ஆயிரம் ஆசீவகர்களை யானைகளையிட்டுக் கொன்றழிக்கச் செய்தார்; இதனை

ஆனை இனத்தில் துகைப்புண்ட
அமணா யிரமும் மாய்ந்ததற்பின்

எனும் பெரிய புராணம் – திருநாவுக்கரசர் – 249 ஆம் பாடலால் அறியலாம்.

  அப்பர் சைன சமயத்திலிருந்து சைவ சமயத்தின் உட்பிரிவான கபாலிகத்திற் சேர்ந்த பின்பு சைன எதிர்ப்போடு ஆசீவக எதிர்ப்பும் கூர்மைப் படுத்தப்பட்டது என்பதைப்

பாடலிபுத் திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும்
கூட இடித்துக் கொணர்ந்து குணபர வீச்சுரமெடுத்தான்

என்னும் 145-ஆம் பாடல் உறுதி செய்யும். இங்கே பாழி எனக் குறிக்கப்படுவது ஆசீவகர்க்குரிய இடம். பாடலிபுத்திரம் – இன்றைய கடலூர்.

  ஞான சம்பந்தரும் வைதிக நெறிக்கு மாறான சமயங்களாகிய சைனம் பௌத்தம் ஆகியவற்றோடு ஆசீவகத்தையும் அழித்தொழிப்பதில் முன்னின்றார். ஆசீவகர்களின் பாழிகள் சைன பௌத்தர்களின் பள்ளிகள் ஆகிய அனைத்தையும் இடித்துத் தரைமட்டம் ஆக்கிவிட்டு அவ்விடங்களில் எல்லாம் சைவக் கோயில்களை எடுத்தார். இதனைப் பெரிய புராணம்

    பூழியன் மதுரை யுள்ளார்
       புறத்துளர் அமணர் சேரும்
    பாழியும் அருகர் மேவும்
       பள்ளியும் ஆன எல்லாம்
    கீழுறப் பறித்துப் போக்கிக்
       கிளரொளித் தூய்மை செய்தே
    வாழிஅப் பதிகள் எல்லாம்
       மங்கலம் பொலியச் செய்தார்.
              (பா. 589)

எனக் குறிக்கக் காணலாம். 

  ஆசீவக சமயத்துச் செல்வாக்கின் அடையாளமே ஐயனார் வழிபாடாகும்.   
  ஐயனார்க்கு சாத்தன் என்றும் பெயருண்டு.



Monday, 24 June 2019

கற்பனை மன்னர்



  வடமொழி யிலக்கியங்களில் இடம்பெற்றுள்ள திருதராட்டிரன், அரிச்சந்திரன் முதலியோர் அல்லாமல் வேறு சில மன்னர்களைப் பற்றியுங் கதைகள் உண்டு; தமிழிலும் உள்ளன.

  அவர்களுட் சிலரைப் பற்றி ஆராயலாம்:

1. சிபி என்ற அரசனின் கதை மகாபாரதம் வனபர்வம் அத்தியாயம் 200-இல் சொல்லப்பட்டிருக்கிறதாம்.

  உசீநர நாட்டை யாண்ட அவன், ஒரு புறாவைக் காப்பாற்றுவதற்காக அதைத் துரத்தி வந்த பருந்துக்குத் தன் தொடைச் சதையை அறுத்துத் தர முன்வந்தான். எவ்வளவு சதையை நிறுத்தாலும் அது புறாவின் எடைக்குச் சமமாகாததால் தானே தராசு தட்டில் ஏறினான்.

  இந்திரனும் அக்கினியுந்தான் அவனது கருணையைச் சோதிப்பதற்காகப் பருந்தும் புறாவுமாய் வந்தனர். சோதனையில் வென்ற சிபி, தேவர்களின் பாராட்டைப் பெற்று மகிழ்ந்தான்.

  இது கற்பனைக் கதையென்பது வாசிக்கும்போதே தெரிகிறது.

  அவன் தசரதனின் முன்னோர்களுள் ஒருவன் என வால்மீகி இராமாயணங் கூற அதைக் கம்பர் வழிமொழிகிறார்:

  பாலகாண்டம் - திரு அவதாரப் படலம்

     புறவொன்றின் பொருட்டாகத் துலைபுக்க
     பெருந்தகை தன் புகழில் பூத்த
     அறனொன்றுந் திருமனத்தான்; அமரர்க்கு
     இடர் இழைக்கும் அவுணர் ஆயோர்
     திறன் உண்ட வடிவேலான்; தசரதன்
     - - - - - - - - - 

     (அருஞ்சொற்பொருள்: 
     புற ஒன்றின் – புறா ஒன்றினுடைய; 
     துலை – தராசு; 
     பெருந்தகை – சிபி; 
     புகழில் பூத்த – புகழ் பெற்ற குலத்தில் தோன்றிய; 
     திறன் உண்ட – வலிமையை அழித்த)

  சிபியின் கதை அப்படிப் போகையில் சங்க காலத் தமிழ்ப் புலவர் சிலர் அவன் ஒரு சோழன் எனக்கொண்டு, “சீரை புக்க செம்பியன்” என்று அவனுக்குப் பெயர் சூட்டியிருக்கின்றனர்; (தராசில் ஏறிய செம்பியன் என்ற தமிழன் என்று பொருள்) அவனது மரபில் தோன்றியவர்கள் எனச் சில வேந்தர்களைப் புகழ்ந்திருக்கிறார்கள்.

புறம் 37: 5,6

     புள்ளுறு புன்கண் தீர்த்த வெள்வேற்
     சினங்கெழு தானைச்செம்பியன் மருக.

     (புள் உறு புன்கண் – பறவை அடைந்த துன்பம்; 
     மருக – மரபில் வந்தவனே!)

புறம் 39: 1-3

     புறவின் அல்லல் சொல்லிய கறையடி
     யானை வான்மருப்பு எறிந்த வெண்கடை
     கோனிறை துலாஅம் புக்கோன் மருக!

     (புறவின் – புறாவினுடைய, 
     அல்லல் சொல்லிய – துன்பத்தை நீக்குவதற்காக, 
     வான்மருப்பு – வெள்ளைத் தந்தத்தால், 
     எறிந்த – செய்த, 
     துலாஅம் – தராசு)

இரு பாடல்களும் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் புகழ்ந்து பாடியவை.

புறம் 46: 1,2

  அதே மன்னனைக் கோவூர் கிழார் பாடியது:

     நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
     இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை

     (பிறவும் – பிற பறவைகளினுடைய)

  அவனை ஐயூர் முடவனாரும் “செம்பியன் மருக!” என்று விளிக்கிறார். (புறம் 228, அடி 9)

 தாமப்பல் கண்ணனார் சோழன் மாவளத்தானை அதே போலப் பாராட்டியுள்ளார்.

புறம் 43: 5-8

     கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீஇத்
     தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
     தபுதி அஞ்சிச் சீரை புக்க
     வரையா ஈகை உரவோன் மருக!

     (கூர் உகிர் – கூர்மையான நகங்களையுடைய, 
     ஏறுகுறித்து ஒரீஇ – தாக்குதலுக்குத் தப்பி, 
     தன் அகம் புக்க – தன்னிடம் அடைக்கலம் புகுந்த, 
     தபுதி அஞ்சி – சாவுக்குப் பயந்து, 
     உரவோன் – வலிமையுடையவனுடைய)

  இப்படி ஒரு வடநாட்டு வேந்தனைச் சோழனாக்கியிருக்கின்றனர்.

2. மனுநீதிச் சோழன்

  ஒரு பசுவுக்கு நீதி வழங்குவதற்காகத் தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற நியாயவான் இவன்.

  “இது ஆராய்ச்சி மணி, இதை யடித்தால் நமக்கு நீதி கிடைக்கும்” என்று சிந்தித்துச் செயல்பட்ட அபூர்வ மாடொன்றை இக்கதையில் சந்தித்து வியக்கிறோம்.

  கண்ணகி பாண்டியனிடம் வழக்குரைத்தபோது, செம்பியனையும் மனுநீதிச் சோழனையும் பற்றிப் பெருமையுடன் பேசியதாய்ச் சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது.

வழக்குரை காதை: 52 – 55

     புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
     வாயிற் கடைமணி நடுநா நடுங்க
     ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
     அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்

     (வாயில் கடைமணி – வாசலில் கட்டிய மணி, 
     ஆவின் கடைமணி – பசுவின் கடைக்கண்ணிலிருந்து, 
     உகுநீர் – ஒழுகிய நீர், 
     ஆழியின் – தேர்க்காலில்)

3. பொற்கைப் பாண்டியன்

 இவனைப் பற்றிய கதையில், தான் செய்த தவறுக்குத் தண்டனையாய்த் தனது கையை வெட்டிக்கொண்டான் எனவும் அது பொன் கையாய் வளர்ந்தது எனவும் அறிகிறோம். பொன் + கை = பொற்கை.

  கையைத் துணித்தால், குருதிச் சேதம் ஏற்பட்டு மரணம் சம்பவிப்பது இயற்கை. இவனுக்கோ பொன் கை கிடைத்துள்ளது!

4. அரிமர்த்தன பாண்டியன்

  இறைவனைப் பிரம்பால் இவன் அடித்தான் என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது.

  இவ்வாறு பல தகவல்கள் உண்மை வரலாறு போல இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. கற்பனைகள் எல்லா மொழிப் படைப்புகளிலும் இருக்கும். அவற்றைச் சுவைக்கலாம், அப்படியே நம்பிவிடக் கூடாது. எதைப் படித்தாலும் “இது நம்பக்கூடியது, இது கற்பனை” எனப் பிரித்தறிய வேண்டும்.

  எழுத்தாளர் சிலர் தம் கருத்துகளுக்குக் கற்பனைக் கதைகளை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். இது தவறு.  

“கலை உரைத்த கற்பனையை
நிலை எனக் கொண்டாடும்
கண்மூடி வழக்க மெல்லாம்
மண்மூடிப் போக!”
             -    இராமலிங்க அடிகள்.