Monday, 9 September 2013

அரை நூற்றாண்டுக்குமுன் திருமணம் - 1



இப்போதைய திருமணங்கள் மண்டபங்களில் நிகழ்கின்றன. முன்பு எங்கே நடந்தனஎப்படி நடந்தன என்பதைப் பகிர்கிறேன்: பழைய பழக்க வழக்கங்கள் சிலவற்றை இப்பதிவு ஆவணப்படுத்தும்.

முன்னேற்பாடுகள் - வீடுகளில்தான் மணங்களை நடத்தினார்கள். உள்ளே இடம் போதாது என்பதால்வீட்டெதிரில், தென்னங்கீற்றுப் பந்தல் வேய்ந்தார்கள். நல்ல நாள் பார்த்துக் கால் நட்டு வேலை தொடங்குவர்; முடிந்தவுடன்உள்பக்கக் கூரை முழுதையும் வெள்ளை வேட்டிகளைக் கிடைமட்டமாய்க் கட்டிக் கீற்று தெரியாதபடி மூடிப் பாக்குக்குலை, ஈச்சங்குலை, தென்னங்குலை ஆகியவற்றை அங்கங்கே தொங்கவிட்டு அணிசெய்துகீழே ஆற்று மணல் கொட்டிப் பரப்பிஇரு பக்கமும் அமைத்துள்ள நுழைவாயிலில் தாறு தள்ளிய வாழை மரங்களை நிறுத்திக் கட்டுவார்கள்.

(எல்லாப் பொருள்களும் இயற்கைசுற்றுச் சூழலுக்குச் சிறு மாசும் இல்லை. போக்குவரவுக்கு வழி விட்டுப் பந்தல் அமையும்; குறுகிய தெருவாய் இருந்தால்இரண்டு மூன்று வீடுகளுக்குப் பந்தல் நீளும்)

உறவினர் கூடல் - அழைப்பிதழில்,  "நான்கு நாள் முன்னதாக வந்திருந்துஎன்னும் சொற்றொடர் தவறாமல் இடம் பெறும்அதற்கு ஏற்பநெருங்கிய உறவினர்கள் ஒரு வாரம் முன்பிருந்தே அன்றாடம் குடும்பங் குடும்பமாய் வந்து தங்குவார்கள். கூட்டுக் குடும்ப முறைக் காலமாதலால், ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்த பட்சம் பத்து உறுப்பினர்களாவது இருந்தனர்; அவர்களுள் சிலர் வந்து தங்க முடிந்தது.

பெண்களுக்கு என்ன வேலைஎல்லார்க்கும் உணவு சமைத்துப் பரிமாறுதல்தேவை திங்களுக்கெனப் பரண்களில் பத்திரப்படுத்தியிருந்த பென்னம்பெரிய பித்தளைப் பாத்திரங்களை இறக்கித் தரச்செய்து, புளி தேய்த்து விளக்கிப் பளபளப்பாக்கிக் கழுவித் திருமணச் சமையலுக்குத் தயார் செய்துவைத்தல்வாங்கி வருகிற அரிசிதுவரை முதலான மளிகைப் பொருள்களைப் புடைத்துக் கல்மண்கட்டி நீக்கித் தூய்மைப்படுத்திப் பானைகளில் கொட்டிவைத்தல் (தூய பொருள் கிடைக்காத காலம்), உலக்கை கொண்டு உரலில் மா இடித்தல்இட்டலிக்குத் தேவையான மாவைக் குடைகல்லில் அரைத்தல்இல்லத்தின் அகமும் புறமும் மாக்கோலம் இழைத்து அழகுபடுத்தல் முதலியவை.

ஆண்கள்குழுக்களாய்ப் பிரிந்து பந்தல் வேலையைக் கண்காணித்தல்பல ஊர்ச் சந்தைகளுக்குப் போய்க் காய்கறிகள், தேங்காய்வாழையிலைக் கட்டுகள்வாழைப்பழம்வெற்றிலை என வாங்கிப் பேருந்துக் கூரையில் போட்டுக் கொண்டுவருதல் முதலிய பணிகளை மேற்கொள்வார்கள். இலைக் கட்டுகளைப் பிரித்துக் கிழிசல்களை நீக்கி முழு நீள இலைகளைச் சாப்பாட்டுக்குசிற்றுண்டிக்கு எனத் தனித்தனி அளவாக நறுக்கி,  (இதற்குப் பழக்கம் அவசியம்: இலைகள் சேதம் உறாமல் கணித்து நறுக்கவேண்டும்) அடுக்கி வைப்பார்கள்.

கல்யாண வீட்டுக்கார ஆண்கள்வந்திருக்கிற உறவினர் சிலருடன் சேர்ந்து தெரிந்தவர்களிடம் சென்றுபெரும்பெரும் சமையல் பாத்திரங்கள், சமக்காளங்கள்பந்திப் பாய்கள், தாம்பாளங்கள் என்று தேவைப்படும் பொருள்களை இரவலாய்ப் பெற்றுப் பாரவண்டியில் ஏற்றி வந்து யார்யார் வீட்டில் வாங்கியது என்பதற்குச் சுண்ணாம்பால் அடையாளக் குறி போட்டு வைப்பார்கள்.

இப்படி எல்லாருக்கும் வேலை இருக்கச் சிறுவர்களுக்கு மட்டும் கொண்டாட்டமோ கொண்டாட்டம்: நிறையப் பிள்ளைகள் கூடியிருப்பதால், பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டுஓடியாடி உற்சாகமாக விளையாட அருமையான வாய்ப்பு அல்லவா?

                                                         (தொடரும்)
                     

                                                                                                               

1 comment:

  1. உறவுகள் ஒன்றுகூடி மனவேற்றுமைகளை மறந்து ஒருவருக்கொருவர் உதவி, திருமணவேலைகளைப் பகிர்ந்துகொண்டு மகிழ்வுடன் செயலாற்றிய அக்காலத்தை நினைத்து வியப்பு மேலிடுகிறது. கூட்டுக்குடும்பங்கள் அரிதாகிவிட்ட நிலையில் இன்றைய திருமணங்கள் ஒப்பந்ததாரர்களிடம் விடப்பட்டுவிடுகின்றன. விருந்தினர்கள் மண்டபத்திலேயே வரவேற்கப்பட்டு, மண்டபத்துடனேயே வழியனுப்பப்படுகின்றனர். கணவன் மனைவி இருவரும் பணிக்குச் செல்லல், பணிச்சுமை, வெளியூர் வாசம், குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை தராமை, உடல்நலக்குறைவு போன்ற பல காரணங்களால் வீட்டுக்கு ஒருவர், சம்பிரதாயத்துக்காக வந்து திருமணங்களில் தலைகாட்டிப் போவதுதான் தற்போதைய நடைமுறையாக உள்ளது. இந்த அவசர யுகத்தில் அதைத் தவறென்று சொல்ல இயலாவிடினும் பழங்கால திருமண நடைமுறைகள் பற்றி அறியும்போது மனத்துக்குள் மெல்லிய ஏக்கம் பிறப்பதென்னவோ உண்மை. சுவையான பகிர்வுக்கு மிக்க நன்றி. தொடரும் அந்நாளைய திருமண நிகழ்வுகளைப் பற்றியறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete