Sunday, 29 September 2013

அரை நூற்றாண்டுக்குமுன் திருமணம் -- 4
மறு - அடுத்த நாள்,   பெண் வீட்டுக்கு மணமக்கள் செல்வார்கள்: அதற்கு மறு என்று பெயர். மணமக்களுடன் மாப்பிள்ளையின் உறவுக் குடும்பம் ஒன்றும் போகும். ஒரு நாளாவது தங்கிபின், திரும்புவார்கள்இப்போது பெண்ணுக்குச் சொந்தக்காரக் குடும்பம் வரும்.

ஒவ்வொரு தடவையும் வெவ்வேறு உறவினர்கள் பயணிப்பார்கள். இதன் காரணமாய் மணமகளின் ஊர்வீடுஅக்கம்பக்கம் வாழ்வோர் ஆகியோரை மாப்பிள்ளை வீட்டாரும்இவர்களையும் சார்ந்தோரையும் பெண் வீட்டாரும்நன்கு அறிந்துகொள்வார்கள். அன்றுடன் உறவினர்கள் விடை பெற்றுச் செல்வார்கள்மூன்றாம் மறுவுக்குப் பின்பு யாரும்  இருக்கமாட்டார்கள்.

இக்காலத்தில் மாப்பிள்ளை ஓர் ஊர்,   பெண் வேறு ஊர்,   மணம் நடைபெறுவது இன்னோர் ஊரின் மண்டபத்தில்இந்த மண்டபம் மட்டுமே எல்லார்க்கும் தெரியும்.இன்னமும் வேலை -- இரவல் வாங்கி வந்த பொருள்களை உரியவரிடம் திரும்பக் கொண்டுபோய்க் கொடுக்க வேண்டாமா
சில பொருள்கள் காணாமல் போயிருக்கும்இழப்பீடு தரவேண்டும். இந்த வேலையும் முடிந்துவிட்டால், " அப்பாடா!" என்று ஆசுவாச மூச்சு விடலாம்.  சிலர் இரவு முழுதும் உறங்காமல் வேலை செய்திருப்பர். திருமண வேலைகள் அவ்வளவு சிரமம் பயப்பன;

ஊர் கூடித் தேர் இழுப்பதுபோல் உறவினர் பலர்  சேர்ந்து முழு  ஈடுபாட்டுடன் பல நாள் உழைத்தல் இன்றியமையாதது. ஆகவே தான் "கல்யாணம் பண்ணிப் பார்"  என்ற பழமொழி பிறந்தது.

தற்காலத்தில் பணம் இருந்தால் போதும்: எல்லா வித வேலைகளையும் செய்து தரப் பல குழுக்கள் ஆயத்தமாக இருக்கின்றனமண்டபங்களில் வசதியாக அமரவும் யாவரும் ஒரே நேரத்தில் உண்ணவும் முடிகிறது. வரவேற்கத்தக்க பெரிய முன்னேற்றம் தான். ஆனால் உறவு நெருக்கமும் அதனால் விளைந்த மனக் கலப்பும் மகிழ்ச்சியும் மறைந்து போயின.

ஒருபுறம் லாபம் மறுபுறம் இழப்பு:  இதுதானே வாழ்க்கையின் இயல்பு?

                                                                      (முடிந்தது)   


                                                ++++++++++++++++++++++++++++

(படங்களுக்கு நன்றி- கூகுள்)

6 comments:

 1. இன்றைய நிலையை சரியாகச் சொன்னீர்கள் ஐயா...

  ReplyDelete
  Replies
  1. பாராட்டிக் கருத்து தெரிவித்தமைக்கு மிகுந்த நன்றி .

   Delete
 2. அக்காலத்தில் திருமணம் நடைபெற்ற விதம் பற்றி அறியத் தந்த சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி தங்களுக்கு. நான் சிறுமியாயிருக்கையில் என் அத்தை திருமணத்துக்கு எங்கள் வீட்டுக்கொல்லையிலேயே பெரிய பெரிய அடுப்புகள் வைத்து பலவகையான பலகாரங்கள் செய்து பலகாரக்குடம் கொடுத்தனுப்பியது நினைவுக்கு வருகிறது. இப்போது எல்லாம் ரெடிமேடாக கடைகளில் ஆர்டர் செய்து வாங்கி அனுப்பிவிடுகிறார்கள். இறுதியாக வாழ்க்கையில் இயல்பைக் குறிப்பிட்டு இழப்புகளை ஏற்கும் பக்குவத்தையும் குறிப்பிட்டமை சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . பலகாரக் குடம் பற்றிய செய்தி சரியே . அதற்குக் கட்டுப்பெட்டி என்பது பெயர் . திருமணச் சமையலும் வீட்டுக் கொல்லையில்தான் நடக்கும் .

   Delete
 3. பழங்கால நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்ள உதவிய சுவாரசியமான இப்பதிவுக்கு மிக்க நன்றி.
  இதனைப் படித்தவுடன் எனக்கும் அந்நாளைய திருமணம் பற்றிய நிகழ்வுகள் சில நினைவுக்கு வந்தன:-

  1. திருமண வீட்டில் முதல் நாள் மாலையிலிருந்தே ஒலிபெருக்கி வைத்துத் தெரு முழுக்க அலறும் படி தொடர்ச்சியாக சினிமா பாடல்களை ஒலிபரப்புவார்கள். குழந்தைகளான எங்களுக்குப் பாட்டுக் கேட்க மிக்க ஆனந்தமாயிருக்கும்.(டேப் ரிக்கார்டர், தொலைக்காட்சிப்பெட்டி இல்லாத காலம்; மேலும் NOISE POLLUTION பற்றி அறிந்திராக் காலம் ).

  2. மொய் எழுதுபவர்கள் அனைவரும் மைக் அருகில் சென்று ‘மாப்பிள்ளைக்கு இன்னார் பத்து ரூபா’ என்றவாறு அறிவித்து விட்டு பணம் கொடுப்பது வாடிக்கையாக இருந்தது. யார் யார் எவ்வளவு மொய் எழுதுகிறார்கள் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கும்படியான இந்த நிகழ்வு, நல்லவேளையாக இப்போதில்லை.

  3. மாப்பிள்ளை தோழனாக இருப்பவனுக்கு ‘ஒரு நாள் முதல்வன்,’ போல ஒரிரு நாட்கள் அதிக மவுசு கிடைக்கும். திருமணம் முடிந்து பெண் வீட்டில் தங்கியிருக்கும் போது, விருந்துக்கு அமர்கையில் தோழர் உட்பட மாப்பிள்ளை வீட்டார் அனைவருக்கும் சாப்பாட்டுக்கு இலைக்குப் பக்கத்தில் பணம் வைக்க வேண்டும். பணம் போதாது என்று தோழன் கருதினால் மாப்பிள்ளை உட்பட யாரும் சாப்பாட்டைத் தொடமாட்டார்கள். பெண் வீட்டார் அதிகப்படியான பணம் வைத்துச் சாப்பிடக் கெஞ்ச வேண்டும். எப்படியிருக்கிறது கதை? சாப்பாட்டுக்குக் கூலி!

  4. திருமணம் முடிந்தவுடன் பெண்ணும் மாப்பிள்ளையும் இணைந்து அபிஷேகம் செய்த ஒதியன் மரக்கிளையை மண்ணில் நடும் சம்பிரதாயம் கட்டாயம் இருக்கும். (ஒதியன் எந்த மண்ணிலும் சுலபமாகத் துளிர் விடும் என்பதற்காக அந்த மரத்தைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள் போலும்). இப்போது ஒதியன் மரக்கிளைக்குப் பதிலாக ஒரு மூங்கில் குச்சி நுனியில் சில இலைகளைக் கட்டி அதற்குச் சந்தனம், குங்குமம் வைத்து அபிஷேகம் செய்கிறார்கள். பழைய சம்பிரதாயத்தை விடாமல் கடைபிடிக்கிறார்களாம்! திருமணம் முடிந்த பின் அந்தக் குச்சி மண்டப ஓரத்தில் அனாதையாகக் கிடக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. மேலும் தகவலகள் சேர்த்து எழுதிய பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . மாப்பிளையின் நண்பர் சிலர் வாழ்த்துக் கவிதை அச்சடித்து எல்லாருக்கும் ஒரு பிரதி கொடுத்து , ஒரு பிரதியைக் கண்ணாடிச் சட்டம் போட்டு மேடைக்குப் போய் வாசித்து ( ஒலி பெருக்கியில் ) மாப்பிள்ளையிடம் தருவர் .. வீட்டுச் சுவர்களில் இப்படிப்பட்ட படங்கள் வரிசையாய்க் கொஞ்ச நாள்கள் தொங்கும் .

   Delete