Thursday, 5 September 2013

கலம்பகம்

       
   தமிழ்ச்  சிற்றிலக்கிய  வகைகளுள்  சிறந்தவையாகக்  கருதப்படுபவற்றுள்  ஒன்று  கலம்பகம்.   புயம் , அம்மானை ,  மறம்  முதலான  18  உறுப்புகளைக்  கொண்டு  அகவற்பா ,  வெண்பா ,  கலிப்பா  முதலிய  பாக்களால்  பாடப்படுவது  அதன்  இலக்கணம் . பற்பல  உறுப்புகளும்  பலப்பல  பாக்களும்  கலந்து  வருவதால்  கலம்பகம்  எனப்  பெயர்  பெற்றது .  ( கலப்பு + அகம்)  என்று  பிரிப்பார்கள் .

   கடவுள் ,  வேந்தர் ,  முனிவர்மீது  பாடியவை  எனக்  கலம்பகத்தில்  மூன்று  விதம்  உண்டு .
 
   பல்லவ  மன்னன்  மூன்றாம்  நந்திவர்மன்மீது  ( 9 ஆம்  நூ . )  பாடப்பெற்றது    நந்திகலம்பகம் ;  ஆசிரியர்  பெயர்  தெரியவில்லை. அதில்  ஒரு  பாடல்.

   ஒருவன்  தன்  காதலியைப்  பிரிந்து  சென்றான்,   செல்வம்  ஈட்டுவதற்கு; அந்தப்  பிரிவைத்   தாங்க  இயலாமல்  துன்புறுகிறாள்  இவள்; உள்ளத்தைத்  துயரம்  கப்பி  இருக்கும்போது  வெளியுலக  இன்பம்  அந்தச்  சோகத்தை  அதிகப்படுத்துமே  ஒழிய  அதைக்  குறைக்காது  அல்லவா?   சுற்றுமுற்றும்  மகிழ்ச்சி  நிரம்பிய  சூழ்நிலை  நிலவினாலும்  இவளுக்கு  மட்டும்  துயரம்தான்.
                         
அதை  வெளிப்படுத்தினாள்   ஒரு  பாட்டில்:
                       
                         மலர்களில்  அமர்ந்து  வண்டுகள்  ஆரவாரிக்கும்  காலம்
                         மாந்தளிர்களில்  குயில்கள்  கோதும்  காலம்
                         சிலர்க்குத்  தென்றல்  இன்பம்  தரும்  காலம்
                         பாவி  எனக்கு  அதே  தென்றல்  தீயாய்  வீசும்  காலம்.
                                                                                   
                                          இனிப்  பாட்டை  வாசிப்போம் :


                   மலர்ச்சூழல்   அமர்ந்துஇனிய   வண்டுஆர்க்கும்   காலம் 

                     வரிக்குயில்கள்   மாவில் இளம்   தளிர்கோதும்   காலம் 

                   சிலர்க்குஎல்லாம்   செழும்தென்றல்   அமுதுஅளிக்கும்   காலம்

                     தீவினையேற்கு   அத்தென்றல்   தீவீசும்   காலம் .

                                                         (  பா  60 )
   
 

               
                       ===========================

3 comments:

  1. Replies
    1. உங்கள் கருத்துரைக்கு மிகுந்த நன்றி .

      Delete
  2. உங்கள் அன்பான அழைப்புக்கு மிக்க நன்றி . ஆனால் எனக்குக் கவிதை வராது . வருந்துகிறேன் .

    ReplyDelete