மணவறை எனப்பட்ட மணமேடை, முற்றத்திலும், இரு நாற்காலிகள், பந்தலிலும் மணமக்களுக்காகக்
காத்திருக்கும்; வாடகைக்குக் கிடைக்கும் அந்த மணமேடை, தொங்கும் பல வண்ண மணிமாலைகளும் சட்டம் போட்ட
மற்றும் எல்லாத் திசைகளிலும் ஒளி உமிழும் சிறு கண்ணாடிகளும் (mirrors) அணிந்து கண்ணுக்கு விருந்து நல்கும்.
இரவில் பந்தல், வீட்டின் முன்கட்டு, பின்கட்டு, சமைக்கும் இடம் முதலியவை பெட்ரோமாக்ஸ் விளக்குகளால்
வெளிச்சம் பெறும்; மின் விளக்கொளி போதாது.
பெண் அழைப்பு -- மணம் பெரும்பாலும் மாப்பிள்ளை
இல்லத்தில் நிகழும். அதற்கு முந்தைய நாள்
பெண்ணையும் பெண்வீட்டாரையும் அழைத்துவந்து சொந்தக்காரர் நண்பர் அல்லது தெரிந்தவர்
இல்லில் தங்கவைப்பார்கள். மாலை வேளை வந்ததும் "பெண் அழைப்பு" நடைபெறும்:
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, கூரையை மடக்கிய, திறந்த காரில், பெண்ணை அமரவைத்து, நாதஸ்வரக் குழு இன்னிசைமழை பொழிய, இரு பக்கமும் ஆள்கள் சுமந்து வருகிற
பெட்ரோமாக்ஸ் விளக்குகள் ஒளி பரப்ப, பெண்வீட்டாரும் பிறரும்
சூழ்ந்து நடைபோட, கார் மெதுவாகச் சில தெருக்களில் சுற்றி ஊர்வலம் வரும்.
அங்கங்குச் சிறிது நேரம் நிற்பதும் உண்டு.
மணவீட்டுக்கு அருகில் ஓர் இல்லத்தில் பெண்ணை இறங்கச் செய்வர்; அங்கேதான் பெண்ணின் உறவினர்கள் தங்கி இருப்பார்கள்.
(பெண்வீட்டில் மணம் நிகழ்ந்தால் "மாப்பிள்ளை அழைப்பு" நடைபெறும்.
மண நாள் -- வீட்டின் உள்ளும் திண்ணைகளிலும்
பந்தலிலும் விரிக்கப்பட்டிருக்கும் சமக்காளங்களின்மீதும் பாய்களின்மேலும் ஆண்கள் சம்மணம்கொட்டி அமர்வார்கள்;
பெண்கள் வீட்டினுள் ஒரு பகுதியில் உட்கார்வார்கள்.
சடங்குகள் முடிந்த கையோடு
மணமக்கள் பந்தலில் வந்து அமர்ந்ததும் மொய் எழுதும் சம்பிரதாயம் நிகழ்ந்து
கொண்டிருக்க, தாம்பாளங்களை ஏந்தி வரும் சிலர் முதலில் சந்தனம்,
அடுத்துச் சீனி, கடைசியாய் வெற்றிலை என யாவர்க்கும் வழங்குவர், நெருக்கமாய் உட்கார்ந்திருப்போர் இடையே, அவர்களை மிதிக்காமல், உதைக்காமல், தலையில் தாம்பாளத்தைப் போட்டுடைக்காமல், எவரையும் விட்டுவிடாமல், எச்சரிக்கையாய் அடி வைத்து முன்னேறி, குனிந்து குனிந்து தாம்பாளம் நீட்டுவது
கடினமான மற்றும் பழக்கம் தேவைப்படும் பணி;
தாம்பாளம் காலி ஆக ஆக, நிரப்பிய வேறு தாம்பாளம் கொண்டுவந்து
தரப்படும்.
(தொடரும்)
படங்கள் உதவி; இணையம்
அருமை... தொடர்கிறேன் ஐயா...
ReplyDeleteதொடர்ந்து வாசித்து எனக்கு ஊக்கம் அளிக்கிரற உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி .
Deleteபழைய திரைப்படங்களில் இது போல் பெண்ணழைப்பு, மாப்பிள்ளை அழைப்பு போன்ற நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறேன். இப்போது மொய் எழுதும் பழக்கமே இல்லாமல் போய்விட்டதென்று நினைக்கிறேன். பெண் மாப்பிள்ளையின் கையில் மொய்க்கவரைக் கொடுத்தகையோடு பந்தி நோக்கிப் பாய்வதில்தான் அனைவருக்கும் கவனம். பண்டைய திருமண முறை பற்றி இனி வரும் சந்ததியினரும் அறிந்துகொள்ளும் வகையில் சிறப்பான ஒரு ஆவணப்பதிவு. நன்றி தங்களுக்கு.
ReplyDeleteவிரிவான பின்னூட்டத்திற்கு நன்றி . உண்மைதான் . எப்போது தாலி கட்டுவார்கள் என்ற ஒரே சிந்தனையோடு அமர்ந்திருக்கிறவர்கள் , தாலி கட்டிய அடுத்த நொடியில் ; கையில் கவரோடு மேடை நோக்கி விரைகிறார்கள் . பழைய பழக்க வழக்கங்கள் பற்றிப் பெரும்பாலானவர்கள் எழுதி ஆவணப்படுத்துவதில்லை . எனக்குத் தெரிந்த சிலவற்றைப் பதிகிறேன் , யாருக்காவது பயன்படலாம் எனக் கருதி .
Deleteநிச்சயமாக இது ஓர் ஆவணப்பதிவு தான். முற்காலத்தில் திருமணம் எப்படி நடந்தது என நம் சந்ததியினர் தெரிந்து கொள்ள உதவக்கூடிய வரலாற்றுப் பதிவு. தற்போது திருமணம் மண்டபத்தில் தான் நடக்கிறது. எனவே பெண்வீட்டிற்கோ, மாப்பிளளை வீட்டிற்கோ போகும் உறவுகள் மிகவும் குறைவு. திருமணம் முடிந்த ஒரு சில மணி நேரங்களில் மண்டபமே காலி! திருமண வீடு என்றால் திருமணத்துக்கு ஒரு வாரம் முன்பிருந்தே உறவுகள் கூடி கலகலப்புடன் இருந்த நிலை இன்று மாறிவிட்டது. இது அவசர யுகம். தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeleteபின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . தமிழரின் கெட்ட பழக்கம் முக்கிய சமூக , நிகழ்ச்சிகளை , பழக்க வழக்கங்களை , வரலாற்றுக்குப் பயன்படக்கூடிய சம்பவன்களை ஆவணப்படுத்தாமை / 100 ஆண்டுதான் ஆகிறது பாரதியார் இறந்து . அவரை யானை எந்தத் தேதியில் கீழே தள்ளியது என்பது பதியப்படவில்லை . இத்தனைக்கும் அவர் ஒரு பத்திரிகையாளர் , சிறந்த கவிஞர் .
Delete