Monday 18 November 2013

பெரியம்மையும் காலராவும்





 உலகின் மிகப் பழைய பத்து நோய்களுள் பெரியம்மையும் காலராவும் இரண்டு. அவை கொள்ளை நோய்கள், அதாவது,  அவ்வப்போது திடுதிப்பெனத் தோன்றி,  மளமளவெனப் பரவி,  நிறையப் பேரைப் பலி வாங்குகிற பிணிகள்.

 1940 க்கு முன்பு, அவை இரண்டும் தமிழகத்தைச் சிம்ம சொப்பனமாய் நடுங்கச் செய்தன.

 அவை நோய் என்று அறியாத மக்கள், மாரியம்மனும் காளியம்மனும் மனிதர்மீது கொண்ட கோபத்தினால், அவர்களைத் தன்டிப்பதற்காக அவற்றை ஏவிவிடுகிறார்கள் என நம்பினார்கள்.

 அம்மையின் அறிகுறிகள்: உடல் முழுதும் கடுமையான வலி, காய்ச்சல், தலை வலி,  முகத்தில் கொப்புளங்கள். இக்கொப்புளங்கள் சிறிதுசிறிதாக மார்பிலும் உடம்பின் கீழ்ப்பாகத்திலும் தோன்றும்;  அம்மை இறங்குகிறது என்பர். பின்பு அறவே மறையும். கொப்புளங்களில் நமைச்சல் ஏற்படும்; சொரியக்கூடாது;  வேப்பிலைக் கொத்தால் இப்படியும் அப்படியும் தடவுவார்கள். கொப்புளம் என்று சொன்னால் சாமி கோபிக்கும் என அஞ்சி "முத்து" என்பர். "முத்து போட்டிருக்கு" என்றால் அம்மைக் கொப்புளங்கள் கிளம்பியுள்ளன என்பது பொருள்.

 முதல் நோய்க்கு மாரியம்மனின் பெயரையே சூட்டி, "அம்மை" என்றனர்; அம்மை என்றால் அன்னை என்று அர்த்தம். பெரியம்மை,  சின்னம்மை, விளையாட்டு அம்மை,  மணல்வாரி அம்மை,  நீர்கொள்வான் என்னும் பலவகை அம்மைகளுள் பெரியம்மை மட்டுமே மிகக் கொடியது. இது தாக்கினால் பிழைப்பது மிக அரிது;  ஒருவேளை பிழைத்தாலும், கண்ணில் கொப்புளங்கள் தோன்றினால் பார்வை பறிபோகும்; முகம் முழுதும் வடுக்கள் நிறைந்து விகாரமாகும்;  அம்மி பொலிந்தாற்போல், சிறுசிறு குழிகள் உடைய அந்த முகம், "அம்மை வார்த்த முகம்" எனப்பட்டது. ஆயுள் முழுதும் அப்படியே நீடிக்கும்.

  எந்த அம்மையானாலும் மருத்துவம் செய்யக்கூடாது. செய்தால் மாரியம்மன் மேலும் சினந்து தண்டனையைக் கடுமையாக்கும். காவடி எடுக்கிறோம்,  தீ மிதிக்கிறோம் என வேண்டிக்கொள்வதும், " மாரியம்மன் தாலாட்டு" என்ற நூலைக் குடும்ப உறுப்பினர் யாராவது வாய்விட்டு வாசித்து அம்மனைச் சாந்தப்படுத்துவதும்தான் செய்யக்கூடியவை. வீட்டு வாசலின் கூரையில் வேப்பிலைக் கொத்தைச் செருகி வைப்பார்கள்;  அது, வெளியார் வரக்கூடாது என்பதற்கான அபாய எச்சரிக்கை. "சுத்தபத்தம்" (தூய்மை) இல்லாதவர்கள் வந்தால், அம்மனுடைய் கோபம் அதிகமாகும் என்பது நம்பிக்கை.

 வீட்டில் ஒருவருக்குத் தொற்றினால் மற்றவர்களையும் தாக்கும்;  ஒரு தடவை அம்மை கண்டு பிழைத்துக்கொண்டால் மறு தடவை வராது.

 மக்கள் அதிகமாய் அஞ்சியது, அம்மையை விடக் காலராவுக்கே; அது ஒரே நாளில் கொன்றுவிடும் என்பதே காரணம். அதற்கு அறிகுறி இல்லை; திடீரென வாந்தியும் பேதியும் ஏற்பட்டு உடலில் நீர் வற்றி (dehyderation) சாவு உண்டாகும். பிழைப்பது அரிதினும் அரிது. காலரா என்று சொல்லவே மக்கள் அஞ்சி, " காட்டுப் பூனை" என்றனர். குணம் அடைவதற்குக் காளியம்மனை வேண்டிக்கொள்வது தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.

 இவற்றை நோய்கள் எனப் புரிந்துகொண்ட வெள்ளையர்கள் அவ்வப்போது தடுப்பு முறைகளை மேற்கொண்டார்கள்; ஆனால் சாமிகளின் கோபத்துக்குப் பயந்த மக்கள் சுகாதாரத் துறையுடன் ஒத்துழைக்கவில்லை. வீடு வீடாகச் சென்று அம்மை குத்த வருகிற அரசு ஊழியர்களிடம் சிக்காமல் பெண்களும் குழந்தைகளும் உள்ளே ஒளிந்துகொண்டு தப்புவார்கள்; அகப்பட்டவர்கள் குத்திக்கொள்வார்கள்;  அவர்களிலும் சிலர், " எனக்குக் காய்ச்சல்" என்றோ, " நான் எண்ணெய்க் குளியல் செய்திருக்கிறேன்" என்றோ ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி நழுவுவார்கள். விளைவு? பிணிக்குப் பலிதான்.

 பள்ளிகளில் முன்னறிவிப்பு இல்லாமல் வந்து,  அம்மை குத்தினார்கள், காலராவுக்குத் தடுப்பு ஊசி போட்டார்கள். அங்காடியில் கூட்டம் இருக்கிற நேரத்தில் திடீரெனப் போய்,  நோய்த் தடுப்புச் சிகிச்சை செய்தார்கள். எதிர்ப்பைச் சமாளிக்கக் காவலர் புடைசூழ்ந்து நின்றனர்.

 கடை கண்ணிக்குப் போகிறவர்களிடம்,  எதிரே வருகிறவர்கள், "அங்கே வளைச்சுக்கிட்டு அம்மை குத்துறான், ஊசி போடுறான்" என அபாய அறிவிப்பு தந்தவுடன்,  பெரும்பாலோர், "கடையுமாச்சு, கண்ணியுமாச்சு, தப்பிச்சால் போதும்" என்றெண்ணித் திரும்பிவிடுவார்கள்.

 பள்ளியில் சேர,  அம்மை குத்திய சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டதால், கல்வி கற்கும் வாய்ப்புக் கிட்டிய குழந்தைகள் அந்நோயினின்றும் காப்பு பெற்றார்கள். காலம் செல்லச்செல்ல, விழிப்புணர்வு பரவப் பரவ, தடுப்பு நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டவர்களை சாமி தண்டிப்பதில்லை என்ற நிதர்சன உண்மை விளங்க விளங்க,  மக்களின் ஒத்துழையாமை படிப்படியாய்க் குறைந்தது. பெரியம்மை அறவே ஒழிந்தது; வரும் முன்னரே காலரா தடுக்கப்படுகிறது.

 இப்போது அம்மை வார்த்த முகமுடையார் யாருமில்லை; காலராவால் இறப்போர் மிக மிகக் குறைவு.

 சிறந்த முன்னேற்றம் அல்லவா?

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++.

5 comments:

  1. நல்ல பகிர்வு ஐயா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிக் கருத்து தெரிவித உங்களுக்கு என் உள்ளமார்ந்த நன்றி .

      Delete
  2. ஐயா இன்னும் மக்கள் பலநம்பிக்கைகளில் இருக்கிறார்கள். அவற்றை தவறு என்றோ மூட நம்பிக்கை என்றோ சொல்லிவிட்டால் போச்... கோபத்துடன் நம் மேல் பாய்வார்கள். கேள்வி கேளுங்கள் உண்மை நிலையைத் தெரிந்து கொள்ளுங்கள் என்றால் கோபித்துக் கொள்கிறார்கள். சும்மாவா பாரதி பாடினான் “நெஞ்சு பொறுக்குதில்லையே”

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மனமார்ந்த நன்றி . உங்கள் கருத்து 100% சரி ; நனறாகப் படித்தவர்கள் கூடத் திருந்துவதில்லை .

      Delete
  3. நிச்சயமாய் நல்ல முன்னேற்றம் தான். அம்மை தழும்புடைய சிலரைப் பார்த்திருக்கிறேன். பள்ளமும் மேடுமாக முகத்தை எவ்வளவு அவலட்சணமாக மாற்றி விடுகிறது? பெரியம்மையை நாட்டை விட்டே ஒழித்த பெரிய சாதனை தான்!

    ReplyDelete