Saturday 12 December 2015

பலசரக்கு


1 ---  அனுபவம்பட்டறிவு

    சமற்கிருதச் சொல் அனுபவம்;  அதைப்  பட்டறிவு  எனப்  பெயர்த்துள்ளோம்ஆனால்  இரண்டும்  வெவ்வேறு.

     முதன்முதலாகத்  தீயைத்  தொடுகிற குழந்தை  உடனடியாகக்  கையை  இழுத்துக்கொள்கிறதுசுரீர்  என்ற  சூடும்   வலியும்   வேதனையும்   அனுபவம்; இனி  நெருப்பைத்  தொடக்கூடாது   என்ற  முடிவு,  பட்டறிவு: பட்டதனால்  பெற்ற  அறிவு.

அனுபவம்,   உணர்ச்சி;  பட்டறிவு,   சிந்தனை.

 எனவே,  அனுபவத்தைப்  பட்டறிவு  என்பது  தவறு.

2 --- விளையாட்டு  வீரர் , வீராங்கனை    

 ஸ்போர்ட்சை விளையாட்டு என்கிறோம். விளையாட்டில் முன்னேறுவதற்குத் தேவைப்படும் பண்புகள்  உடல்வலிமை, பயிற்சி, தாக்குப்  பிடிக்கும்  திறன், விடாமுயற்சி, தன்னம்பிக்கைஅனுபவம் அல்லவோ?  வீரத்துக்கு ஏது  இடம்அது  என்ன  போரா?

  ஆகவே விளையாட்டு வீரர்வீராங்கனை இரண்டும் தவறான  சொற்றொடர்கள்; இருப்பினும் வழக்கத்துக்கு வந்துவிட்டனவைத்துக்கொள்வோம்.

 3 ---  இரட்டைக்  கிளவி

   'கண்ணோடு   காண்பதெல்லாம்  தலைவா'   எனத்  தொடங்கும்,   நித்யஶ்ரீ  மகாதேவன்  பாடிய  திரைப்  பாடலில்,  'இரட்டைக்   கிளவி  உண்டல்லோ?' என்னும்  வினா  இடம் பெற்றுள்ளது; அது  சிலர்க்குப்  புரியாமல்  இருக்கலாம்அவர்களுக்காகக்  கீழ்வரும்  விளக்கம்:

      கலகல  என்று  நகைத்தாள்.
      தொணதொண  எனப்  பேசுகிறார்.

   மேற்காட்டுகளில்  ஒரு சொல் சேர்ந்து  இரண்டு  தடவை  வருகிறதுஅப்படிப்பட்ட  சொல்  இரட்டைக் கிளவி.

   இதற்கு  இலக்கணம்  நன்னூல்  396- இல்  உண்டு:

          "இரட்டைக்  கிளவி  இரட்டிற்பிரிந்து  இசையா"

பொருள் -- இரட்டையாக  வரும்  சொற்கள்  தனித்தனியே பிரியா. அதாவது , கல   என்றோ   தொண  என்றோ  தனியாக   வந்தால்  அர்த்தம்   இல்லை.

    மேலும்  காட்டுகள்:

   வெதவெதகடகடசிடுசிடுத்தான்பளபளக்கும்வழவழப்பான, சுறுசுறுப்பு, அருவருப்பு.

     பழமொழி:   பனங் காட்டு  நரி  சலசலப்புக்கு  அஞ்சாது.

      ஓடு ஓடுஅதுதான்  அதுதான்இவை  இரட்டைக்  கிளவியல்லஏனென்றால்  தனியாகப்  பிரித்தால்  பொருள் தரும்அடுக்குத் தொடர்  என  இவற்றுக்குப்  பெயர். மூன்று  முறை  நான்கு  முறைகூட  அடுக்கி வரலாம்:

        சிறு சிறு பிழைகள்.
       "ஒளிபடைத்த  கண்ணினாய் வா வா வா" (பாரதியார்)


   4 -- குத்தியும்  கொத்தியும்

         


குத்துதல் =   கூரிய கருவியை  ஒன்றனூடே  செலுத்தல்:  

முள்  குத்தும் , ஊசி குத்துகிறாள்கத்தியால்  குத்தினான்.

    நீல  வண்ணத்தோர்  எழில்  பறவை, நீர்நிலைக்கு  மேலே, இறகடித்தபடி  நின்று  திடீரென  நீர்க்குள்  மூழ்கி   ஒரு  மீனைக்   குத்தி  எடுக்கும்: அது    மீன்குத்தி.   இதன்   சங்க  காலப் பெயர்சிரல்.
                          
குறள்:    

கொக்குஒக்க  கூம்பும்  பருவத்து  மற்றதன்
குத்துஒக்க  சீர்த்த  இடத்து.

ஐந்திணை   ஐம்பது; பா 24:

 கோலச்  சிறுகுருகின்  குத்து

         -- கொத்துதல்தோண்டுதல்.

      வேறொரு  பறவை   மரத்தண்டில்  அமர்ந்து  டொக் டொக்  என்று அலகால்  கொத்திப்   பட்டையைப்  பெயர்த்து  உள்ளிருக்கும்  புழு பூச்சியைத்  தின்னும்அது  மரங்கொத்தி.
 
5 ---  ஒப்பித்தலும்  ஒப்புவித்தலும்

ஒப்பித்தல் = மனப்பாடம்   பண்ணியதைப்  புத்தகம்  பாராமல்  சொல்லுதல்:

             ஆசிரியரிடம்   மாணவர்கள்  பாடத்தை  ஒப்பித்தார்கள்.

ஒப்புவித்தல் = உரியவரிடம்  சேர்த்தல், ஒப்படைத்தல்:

           பெட்டியை  அவரிடம்  ஒப்புவி.


 6 --  பல்லக்கு



     பரியங்க்கா  என்ற   வடசொல்   போர்த்துக்கீசிய   மொழியில்   பலான்க்கீம்  என  மாறி  ஆங்கிலத்துள்   நுழைந்து   பலென்க்கீன்  (palanquin)  ஆனதுஅதை  நாம்  பல்லக்கு  என்கிறோம்.

    முந்தைய  தமிழ்ச்சொல்  சிவிகை   ஓய்வு பெற்றது:

   குறள்  --      அறத்தாறு   இதுவென  வேண்டா   சிவிகை
                         பொறுத்தானோடு  ஊர்ந்தான்  இடை.


7 --  எட்டேகால்  லட்சணம்

இந்தச்  சொற்றொடரைக்  கேள்விப்பட்டிருப்பீர்கள்;

     எட்டேகால்  லட்சணமே   எமனேறும்  பரியே

     எனத்  தொடங்கும்  தனிப்  பாடல்   ஒன்றுண்டு.

 எண்களைக்  குறிக்கப்   பழந்தமிழர்  எழுத்துகளைப்  பயன்படுத்தினர்:

      1  -  ;   2 --    ;   7 -- ;   8 -- ;   1/4 -   

      அதன்படி

       எட்டேகால்:   அவ
      எட்டேகால்  லட்சணம்   = அவ லட்சணம்.   (அழகற்றது,  அசிங்கம்).

&&&&&&&&&&&&&&
(படங்கள் உதவி இணையம்)


12 comments:

  1. விளக்கங்கள் அனைத்தும் அருமை ஐயா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிக் கருத்து உரைத்தமைக்கு மனங் கனிந்த நன்றி .

      Delete
  2. அருமையான பதிவு...உயிரெழுத்துகளில் அறிவியல் வைத்த தமிழனின் அறிவு மயக்குகின்றது...
    உ என்ற உயிரெழுத்து வட்ட வடிவ பொருட்களின் முதலாய் வருமென்ற செய்தி படித்தேன்...உண்மையா?

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துரைக்கு உள்ளங் கனிந்த நன்றி . அந்தச் செய்தி எனக்குத் தெரியாது . வட்ட வடிவப் பொருளில் உருள் , உருளை , உருட்டுதல் முதலிய சில சொற்கள் ' உ ' வில் தொடங்குகின்றன ; அப்படித் தொடங்காதவையும் உண்டு ; காட்டுகள் : சுழி , சுருள் , வட்டம் , வளையல் , முட்டை , மண்டலம் . ( மண்டுதல் = சுற்றி வளைதல் )

      Delete
  3. அழகான அற்புதமான விளக்கங்கள். அருமையாகவும், எளிமையாக புரியும்படியும் தகுந்த உதாரணங்களுடன் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிக் கருத்து உரைத்தமைக்கு மனங் கனிந்த நன்றி .

      Delete
  4. அனுபவம், பட்டறிவு இரண்டுக்குமான வேறுபாட்டை இன்று தான் தெரிந்துகொண்டேன். சிவிகை என்ற அழகான தமிழ்ச்சொல் இருந்தும் அதை விடுத்து வேற்றுமொழிச்சொல்லான பல்லக்கைப் பயன்படுத்துகிறோம்! கனியிருப்பக் காய்கவர்ந்தற்று! என்ற குரள் தான் நினைவுக்கு வருகின்றது. பலசரக்கு சுவையாயிருந்தது. மிகவும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு நெஞ்சு நிறைந்த நன்றி . தமிழர்க்கு மொழிப் பற்று குறைவு ; முன்னோர் வட சொற்களைப் பயன்படுத்தினர் ; நாம், ஆங்கிலம் . வங்கி , மேலாளர் , காசோலை , பேருந்து , தொலைபேசி முதலான தமிழ்ச் சொற்களைச் சொல்லுகிறவர் யாரையாவது கண்டதுண்டா ?

      Delete
  5. அனுபவித்துப் படித்தேன் நன்றி

    ReplyDelete
    Replies
    1. அனுபவித்துப் படித்துக் கருத்து அறிவித்தமைக்கு அகம் நிறை நன்றி .

      Delete
  6. அனுபவம், பட்டறிவு, ஒப்பி, ஒப்புவி போன்ற சொற்களுக்கு இடையேயான பொருள்வேறுபாடு அறிந்தேன். பல்லக்கு தமிழ்வார்த்தை என்றும் பல்லக்கிலிருந்துதான் palanquin என்ற ஆங்கில வார்த்தை உருவாகியிருப்பதாகவும்தான் இவ்வளவு நாள் நினைத்திருந்தேன். தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. பலசரக்கு என்ற தலைப்பு மிகுந்த ரசனையுடனும் பொருத்தமாகவும் இடப்பட்டுள்ளது. சமீப காலமாக மளிகை என்றே புழங்கிய காதுகளுக்கு பலசரக்கு என்ற பழைய வார்த்தை பால்யத்தை நினைவுபடுத்தி மகிழ்விக்கிறது.

    ReplyDelete
  7. தலைப்பைக்கூட சுவைத்துக் கருத்து தெரிவித்தமைக்கு அகங் கனிந்த நன்றி .

    ReplyDelete