Saturday 16 January 2016

அல்க்கெமி (ரசவாதம்)


      


     மரணமிலா வாழ்வை விழையாதார் யார்? இன்றுநேற்று ஏற்பட்ட ஆசையா? என்றைக்கு மனிதன் சிந்திக்கத் தொடங்கினானோ, அன்றைக்கே முளைவிட்டிருக்கும். கிட்டத்தட்ட  5000 ஆண்டுக்கு முற்பட்ட 'கில்காமேஷ்' என்னும் உலகின் முதல் இதிகாசத்தின் தலைவன், சாகாமலிருக்க வழி தேடியதாய்  அது  கூறுகிறது.

    இறப்பைத் தவிர்க்க இயலாவிடினும்   நீண்டநெடுங்காலம்  வாழ்வதற்காவது மருந்தொன்றைக் கண்டுபிடிக்க வேண்டும்,  மற்றும்  மட்ட  உலோகங்களைப் பொன்னாக  மாற்றுவதற்கு ஓருத்தியைக் காணவேண்டும் என்ற இரண்டு குறிக்கோளுடன் முதன்முதலாய் முயற்சி மேற்கொண்டவர்கள்  கிரேக்கர்கள்; அவர்களின் நம்பிக்கை, பாதரசமும் கந்தகமும்  சேர்த்து மருந்து தயாரித்து உட்கொண்டால் ஆயுள் நீளும் என்பது. அவர்களை அல்க்கெமிஸ்டுகள் (alchemists) என்கிறது ஆங்கிலம்; ரசவாதிகள் என்கிறோம் நாம்; இவர்கள்  கடைப்பிடித்த  உத்தி  ரசவாதம்.

   கிரேக்கத்தில் பிறந்த ரசவாதம் வெகுவிரைவில் எகிப்து, ஐரோப்பா, அரேபியா,  இந்தியா,  சீனா  எனப்  பற்பல நாடுகளில்  பரவிற்று.

    ஆங்கில ரசவாதிகளின் பேராசையையும் முயற்சிகளையும் நையாண்டி  செய்து,  பென் ஜான்சன்  (Ben Jonson)  இயற்றிய  அல்க்கெமிஸ்ட்  (The   Alchemist) என்னும்  நகைச்சுவை  நாடகம்  (1610) அவரது  நான்கு   சிறந்த   படைப்புகளுள் ஒன்றாக  மதிக்கப்படுகிறது.
   
      சீனர்கள்  கந்தகமும்  வெடியுப்பும்  கலந்து  பார்த்தார்கள் என்பது 4 ஆம் நூற்றாண்டில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது; இந்தக் கலவையுடன் 9 ஆம் நூற்றாண்டில் கார்பன் சேர்த்தபோது எதிர்பாரா விதமாய்க் கிடைத்தது துப்பாக்கி   மருந்து;  இது  அவர்களின் பெருங்  கண்டுபிடிப்புகளுள்  ஒன்று.   

      தமிழக  ரசவாதிகளும்  பாதரசத்தைத்தான்  முக்கிய   மூலமாய்க்    கொண்டு முயன்றனர்; பற்பல மூலிகைகளையும் வெவ்வேறு வேதிப்  பொருள்களையும் மாற்றிமாற்றிப் பயன்படுத்தி சோதித்துப் பார்த்திருப்பார்கள், 'செம்பு பொன்னாகும் சிவாய நம எனில்' என்று திருமூலர் ஓர் எளிய  வழியைக் காட்டினார் ;  அப்படியும்  உருப்   போட்டிருக்க  மாட்டார்களா,  என்ன?  வாய் வலியும்  தொண்டை  வறட்சியும் தான்  கண்ட  பலனாய்   இருந்திருக்கும்!

     சாதாரண  உலோகத்தைத்  தங்கமாக  மாற்றும்  பேராசை  தமிழரிடையே   ஓங்கி  வளர்ந்திருந்தது  ஒரு காலத்தில்  என்பதற்கு  சான்றாக  விளங்குகிறது பழமொழியொன்று:   "போதும்   என்ற   மனமே  பொன்   செய்யும்    மருந்து"     ரசவாதிகளை  நோக்கிக்  கூறப்பட்ட  அந்தப்   பழமொழியின்   விரிந்த  பொருள்:

    மலிவான  உலோகத்தை  விலை உயர்ந்த பொன்னாக  மாற்ற  வல்ல  வேதிப் பொருளைக்  கண்டுபிடிக்க அரும்பாடு படும் ரசவாதிகளே, உங்கள் குறிக்கோள் நிறைவேறித்   தங்கத்தைப்  பெருமளவில்  உற்பத்தி   செய்து  குவித்தாலும்  நீங்கள்  மனநிறைவு  அடையப்  போவதில்லை;   இன்னம்,  இன்னம்,  என்ற எண்ணமே  மேலோங்கி நிற்கும்;  'ஆசைக்கோர் அளவில்லை';  ஆகையால்   முயற்சியைக் கைவிட்டு, இருப்பது  போதும்  என்று  நினைத்து மனத்தைப்   பக்குவப்படுத்துவது   மேல்  எனப்  போதிக்கிறது  அந்தப்  பழமொழி.

      தாயுமானவர்,  ' கந்துக  மதக்  கரியை' எனத்  தொடங்கும்  பாட்டில், 
     "வெந்தழலில்  இரதம் வைத்து  ஐந்து  உலோகத்தையும்
      வேதித்து விற்றுண்ணலாம்" என்றார்.

(வெந்தழலில் = வெம்மையான நெருப்பில், இரதம் = இரசம் = பாதரசம், வேதித்து =  வேதியியல்  முறைப்படி பொன்னாக  மாற்றி.)

  மட்ட உலோகங்களைத் தங்கமாக்கி அதை விற்று செல்வம் பெற்றாலும்பெறலாம்; ஆனால் சிந்தையை அடக்கல் அரிது  என்பது  பாடலின்  கருத்து.

   உலக ரசவாதிகளின் இலக்கு, எட்டாக் கனியாய்ப் போய்விட்டாலும், அவர்களது உழைப்பால்  வேதியியல் என்னும்  அறிவியல் துறையும்  தொழில் நுட்பமும் மேம்பட்டன; கெமிஸ்ட்ரி என்ற சொல் அல்க்கெமியிலிருந்து பிறந்தது.

                                            +++++++++++++++++++++++++++++++++
                                     

11 comments:

  1. வேதியியலில் பிறப்பை அறிய முடிந்தது.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வாசித்து ஊக்கமூட்டுவதற்கு மிக்க நன்றி .

      Delete
  2. //உலக ரசவாதிகளின் இலக்கு, எட்டாக் கனியாய்ப் போய்விட்டாலும், அவர்களது உழைப்பால் வேதியியல் என்னும் அறிவியல் துறையும் தொழில் நுட்பமும் மேம்பட்டன; கெமிஸ்ட்ரி என்ற சொல் அல்க்கெமியிலிருந்து பிறந்தது.//

    பல்வேறு விஷயங்களை தங்கள் பாணியில் மிகவும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    'ஆசைக்கோர் அளவில்லை' + "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து"

    அன்று முதல் இன்று வரை இவை அருமையான கருத்துக்களாகவே இருந்து வருகின்றன.

    பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . ஊக்கந்தரும் கருத்து உரைத்திருக்கிறீர்கள் . பழமொழிகளுள் பல அனுபவத்தின்மேல் கட்டப்பட்டவை . வாழ்க்கையை செம்மைப்படுத்த உதவுகின்றன .

      Delete
  3. உலகளவில் சாதாரண உலோகத்தைத் தங்கமாக மாற்ற நடந்த நிகழ்ச்சிகள் பற்றியறிந்தேன். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற பழமொழி கூறும் திருமூலர் கருத்து, வாய் வலி, தொண்டை வறட்சி.... நல்ல நகைச்சுவை. ரசித்துச் சிரித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி .

      Delete
  4. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற பழமொழி கூறும் முழுக்கருத்தை அறிந்தேன் என்பது தவறாகத் தட்டச்சாகிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. அர்த்தம் புரிந்துகொள்ளக் கூடிய தவறுதான்

      Delete
  5. Replies
    1. வலைச்சித்தர் ரசிக்கும் அளவுக்கு என் கட்டுரை அமைந்துள்ளது என அறிந்தேன் . மிக்க நன்றி .

      Delete