Monday, 25 November 2019

தேளும் நானும்







என் காரைக்கால் ஓட்டு வீட்டில் கரப்பான் பூச்சிகள் ஏராளமாய்க் குடியிருந்தன; அவற்றை வதஞ் செய்வதற்கு இரவு நேரங்களில் வெளிப்பட்ட தேள்களுக்கும் பஞ்சமில்லை; இவை கதவில் சுவரில் தங்கி இரைக்காகக் காத்திருக்கும்; இல்லத்தாரை அடிக்கடி கொட்டிவிடும். மின்சாரமற்ற அந்தக் காலத்திலே, மண்ணெண்ணெய் விளக்குகள் உமிழ்ந்த வெளிச்சம் மங்கலானது ஆதலால் வீட்டின் சில பகுதிகள் இருளில் மூழ்கியிருக்கும். அந்த இருட்டுச் சூழ்நிலை தேளுக்கு வசதியானது; அதன் தாக்குதலுக்கு அதிகமாக ஆளாகிறவர்கள் பெண்களே; ஏனெனில் அவர்களுக்குத் தானே அங்குமிங்கும் நடமாட வேண்டிய அவசியம் உண்டு?

  பல வீடுகளில் அடுக்குப் பானை அறை என்றோர் அறையிருந்தது: அரிசி, துவரை, உளுந்து, புளி முதலியவற்றை சீசன் சமயத்தில் குறைந்த விலையில் பெரிய அளவில் வாங்கி ஸ்டாக் செய்வார்கள்; ஒவ்வொரு பானையிலும் ஒவ்வொரு சரக்கு; சொந்தத் தயாரிப்பான வற்றல்கள், வடகம், அப்பளம் முதலானவையும் பானைகளுக்குள் அடக்கம்.  

  ஒரு பெரிய உறுதிவாய்ந்த பிரிமணையைத் தரையில் இட்டு அதன் மேல் பெரும்பானை யொன்றை வைத்தால் அது ஆடாமல் அசையாமல் நிலைத்து நிற்கும்; அதன்மீது சிறிய பானை, இதன் மேல் இன்னுஞ் சிறியது என அடுக்குவார்கள். இப்படி மூன்று நான்கு அடுக்குகள் சுவரையொட்டி வரிசையாக நிற்கும்; இந்த இடமும் தேளுக்குப் பிடிக்கும்.

  அடிப் பானையிலுள்ள பொருளை எடுப்பதற்கு, மேலிருக்கும் பானைகளை ஒவ்வொன்றாய் இறக்கி வைத்து, வேலை முடிந்ததும் மறுபடி அடுக்க வேண்டும். பகல் வெளிச்சத்தில் பிரச்சனை இருக்காது; இரவில் மங்கிய விளக்கொளியில் தேளிருப்பது தெரியாது; அதை நம் கை தொட்டுவிடுவது சகஜம்.

  பாரதியார், தம்கண்ணன் என் சேவகன்பாட்டில் வேலைக்காரன் மட்டம் போடுவதற்குக் காரணம் பானைத் தேள் கொட்டியமை என்று சாக்கு சொல்வான் என்கிறார்:

ஏனடா நீ நேற்றைக்கு இங்குவர வில்லை யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லாற் கடித்த தென்பார்

பணியாள் கூறியமை மெய்யாகவும் இருக்கலாம்.

  தேளுக்குப் பலியானவர்கள் வலியால் துடிப்பார்கள்; தக்க மருத்துவம் எதுவுமில்லை. தாக்கிய தேளைத் தேடினால் சில சமயம் சிக்கும்; அடித்து விடுவோம். நான் ஏராளத் தேள்களைத் துவம்சம் செய்திருக்கிறேன். ஒரு தடவை கூடக் கொட்டுப்பட்டதில்லை, என் 36 ஆம் வயது வரை. (1962 வரைக்கும்)

  அந்த ஆண்டு மேத் திங்களில் புலவர் பட்டத்துக்கான இறுதித் தேர்வை எழுதுவதற்காகக் கும்பகோணம் சென்று தேர்வுக் கூடத்துக்கு அருகிலிருந்த ஓர் உணவகத்தில் தங்குவதற்கான ஏற்பாடு செய்துகொண்டேன். அங்கிருந்தது ஒரேயோர் அறை; அதுவும் மொட்டை மாடியில். பேருந்து முதலிய ஊர்திகள் தோன்றாத அக்காலத்தில் அதிகப் பேர் பயணிக்கவில்லை யாதலால் கும்பகோணம் போன்ற பெரிய நகரங்களிற் கூடத் தங்கும் அறைகள் அபூர்வமாய்த் தான் காணப்பட்டன.

  ஆறு நாள் தேர்வு; டவுன் ஹைஸ்கூல் என்னும் பள்ளிக்கு நடந்தே போய் எழுதினேன்.

  மூன்று தாள் மன நிறைவுடன் எழுதி முடித்தபின் அடுத்த நாளுக்கான கல்வெட்டுகள் என்ற பாடத்தினை மீள்பார்வையாய்ப் படித்தேன்; 30 பாடங்களுள் கிட்டத்தட்டப் பாதியை நன்கு நினைவுபடுத்திக் கொண்டவுடன் அறையிலிருந்து வெளியேறி மாடியில் உலாவியபடி படித்தவற்றை அசைபோட்டுக் கொண்டிருந்தேன். நடமாட அதிக இடமில்லை; பூச்சட்டிகள் ஆக்ரமித்திருந்தன. திடீரெனத் தீயை மிதித்தது போல் காலைச் சடாரெனத் தூக்கிக்கொண்டேன். இருட்டு: என்னவென்று தெரியவில்லை. வலி தொடங்கியதும் புரிந்தது. தேளின் வேலை! பழி தீர்த்துக் கொண்டது!

  உடனே அறைக்குள் ஓடி அமர்ந்து காலைத் தூக்கி பெஞ்ச் மேல் வைத்துக் கணைக்காலைக் கைவிரல்களால் சுற்றி வளைத்து அமுக்கிப் பிடித்துக் கொண்டேன். நஞ்சு ஏறாமலிருக்கக் கட்டுப் போடலாமென்று தெரியும்; துணிக்கு எங்கே போவது? ஆகையால்தான் விரல்களைப் பயன்படுத்தினேன். கடுப்பு மேலே ஏறவில்லை. எவ்வளவு காலம் இவ்வாறு பிடித்துக் கொண்டிருக்க முடியும்?

  டாக்டரிடம் போனால் ஏதாவது சிகிச்சை செய்யக்கூடுமல்லவா? எழுந்து கதவைப் பூட்டிக்கொண்டு படியிறங்கியபோது வலி விறுவிறு என்று ஏறியது; சமாளித்தபடி கீழே வந்து ஓட்டலதிபரிடம் விசாரித்ததில் தெருக் கடைசியில் ஒரு டாக்டர் இருப்பதறிந்து மாட்டு வண்டியொன்றில் புறப்பட்டேன். (அப்போதெல்லாம் சில ஊர்களில் மாட்டு வண்டி, வேறு ஊர்களில் குதிரை வண்டிதான் வாடகை ஊர்திகள்.)

  டாக்டர் கால் விரலில் ஊசி போட்டார்; உடனடியாய் வலி நின்றது; ஆகா! இதுவல்லவோ வைத்தியம்! தேர்வுக்குப் படிக்க இனித் தடையில்லை.

  இரண்டு ரூபாய் பெற்றுக்கொண்ட டாக்டர் குண்டைத் தூக்கி வீசினார்:

  அதிக நேரந் தாங்காது! விரல்களில் ஐஸ் கட்டி வைத்துக்கொள்ளுங்கள்!”

  அடக் கண்ணராவியே! இதற்கா மெனக்கெட்டேன்? கடைகள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன. ஐஸ்க்கு வழியில்லை.

  அறைக்குத் திரும்பிய சிறிது நேரத்தில் கடுப்பு தொடங்கிவிட்டது. “போச்சு! பரீட்சை போச்சு!” என்ற துயரம் ஒரு புறம், முன் அனுபவம் இன்மையால் மேற்கொண்டு என்னென்ன செய்யுமோ என்ற திகில் ஒரு புறம் (தேள் கொட்டிச் சிலர் இறந்தமை எனக்குத் தெரியும்). துணையில்லாத துரதிர்ஷ்டத்தை எண்ணிக் கலங்கினேன். “சரி, மனந் தளரக்கூடாது; அது பாட்டுக்கு வலிக்கட்டும், நான் பாட்டுக்குப் படிப்பேன்!” என்று துணிச்சலை வரவழைத்துக்கொண்டு புத்தகத்தைத் திறந்து பார்த்தால் எழுத்துகள் நடனமாடுகின்றன! வாசிக்க முடியவில்லை.

  படிக்க இயலவில்லையே! வேறு என்ன செய்யலாம்? தூங்கி விடுவோம்! நேரம் ஆக ஆக வலி குறையும். அதிகாலையில் நிலைமை மேம்பட்டிருக்கும்; அப்போது எழுந்து படிப்போம்என முடிவு செய்து பெஞ்சில் படுத்தேன் (கட்டில் இல்லை).

  விண்விண் என்று தெறிக்கும்போது உறங்குவது சாத்தியமா? சாதாரணப் பல்வலியே தூக்கத்தை விரட்டிவிடும். வேறு வழியில்லை. கண்ணை மூடிக்கொண்டு கஷ்ட காலத்தை சபித்தவாறு புரண்டுகொண்டிருந்தேன். என்னை யறியாமல் உறங்கிவிட்டேன். அதிகக் காலம் ஆகியிருக்காது. விழிப்பு, வலி. மீண்டும் கண்ணயர்தல், விழிப்பு. இப்படிச் சில தடவை.

  ஒரு வழியாய் 4 மணிக்கு எழுந்து படிக்க முயன்றேன்; முடிந்தது; வலியும் மட்டுப்பட்டிருந்தது; ஆனால் பாதத்தில் வீக்கம், தொங்கவிட்டால் அதிக வலி.

  மாட்டு வண்டியிற் போய் எழுதினேன். காலைக் கீழே வைத்தால் விண்விண்! தூக்கி அந்தரத்தில் தொங்கவிட்டபடி மிக்க சிரமத்துடன் ஆனால் நல்லவண்ணம் முடித்தேன்.

  அன்று மாலை. விபத்து நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்டேன். பூச்சட்டி ஓரத்தில் ஒரு தேள்! வாலைத் தூக்கிக் கொண்டு ஓய்வெடுத்தது. அதே தேளா, வேறொன்றா? எதுவானால் என்ன? செருப்பால் அடித்தேன், ஒழிந்துபோ!
 
  ரிசல்ட் வந்தது: தேறிவிட்டேன்!

  93 வயது வாழ்வில் அந்த ஒரு தடவைதான் தேளால் தாக்குண்டேன்.

&&&&&
(படம் உதவி - இணையம்)

Thursday, 14 November 2019

பழையன கழிதலும் புதியன புகுதலும்




  மொழி வழக்குகளில் மட்டுந்தான் பழையன கழிந்து புதியன புகும் என்பதில்லை; தெய்வங்கள் வழிபாட்டு முறைகளிற்கூட இவை நிகழ்கின்றன.

  பண்டைக் காலத்தில் பபிலோனியர், எகிப்தியர், கிரேக்கர், ரோமானியர் முதலியோர் எத்தனையோ ஆண் பெண் கடவுள்களை சர்வ சக்தியுள்ளவை என நம்பி வணங்கியும் கோயில்கள் எழுப்பித் தொழுதும் வந்தார்கள். கிறித்துவம் பரவிய பின்பு அவை மாஜி கடவுள்களாகிவிட்டன.

  நம் நாட்டில் ஆரியர்கள் மத்திய ஆசியாவில் மாடு மேய்த்தபோது நிரம்பப் புல் தேவைப்பட்டமையால் மழைத் தெய்வமான வருணனை மிக மேலான கடவுளாய்க் கருதி வணங்கினார்கள். இந்தியாவுக்குள் புகுந்து தங்கியபோது நீருக்குப் பஞ்சமில்லாமையால் வருண வழிபாட்டைக் கைவிட்டார்கள்; உள்நாட்டு மக்களை  யெதிர்த்துப் போரிட்டுத் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காக இந்திரனை தேவர் தலைவன் எனப் போற்றித் தங்களுக்குப் போர்களில் வெற்றி யருளும்படி துதித்தார்கள்; தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிய பின்பு இந்திரனுக்கு விடை கொடுத்துவிட்டுத் திருமால் சிவன் பிரம்மா ஆகியோரை முழு முதற் கடவுள்களாக்கி மும்மூர்த்திகள் என்று சிறப்புப் பெயரிட்டு வழிபட்டார்கள்.

  பிரம்மா படைப்புக் கடவுள் எனவும் மக்களின் தலைகளில் அவர்தான் விதியை எழுதுகிறார் எனவும் கூறி அவரைப் போற்றினார்கள்; புராணங்களில் அவருக்கு முக்கியம் தந்தார்கள்; தேவலோகத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் தேவர்கள் அவரிடந்தான் முறையிட்டார்கள். அவ்வாறு உயர் பீடத்தில் வீற்றிருந்த பிரம்மா காலப்போக்கில் பதவி இழந்து காணாமற் போனார்; அவருக்கான கோயில் இப்போது எங்குமிருப்பதாய்த் தெரியவில்லை.

  ஆதிநாளில் சிறு தெய்வங்களாய் இருந்து பின்பு மேல்நிலை  யடைந்த சிவனும் திருமாலும் தனித் தனி மதங்களுக்குத் தலைவர்களாகி இன்று வரை செல்வாக்கு குன்றாமல் அருள் பாலித்து வருகிறார்கள்.

  பிள்ளையார் புதுக் கடவுளாய் ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்துள் நுழைந்து காணாபத்யம் என்ற மதத்தின் முழுமுதல் தெய்வமாகிவிட்டார்; விநாயகர் எனப் பெயர் பெற்றிருக்கிறார்; வி + நாயகர் = தமக்கு மேம்பட்ட தலைவர் இல்லாதவர். வினைகளைப் போக்க அவரே வல்லவர்; ஆகையால் எந்த முக்கிய நிகழ்ச்சியும் இடையூறு எதுவுமின்றி நல்லவண்ணம் நடந்து முடிவதற்காகக் கணபதி ஹோமம் நடத்தவேண்டும். கடிதம் எழுதுவதற்குக் கூடப் பிள்ளையார் சுழி போடுவது அவசியம்.

  நீண்ட நெடுங்காலம் ஆரவாரம் இல்லாமல் வீட்டுக்குள் கொண்டாடப்பட்டுவந்த விநாயகர் சதுர்த்தி எப்படிப் பரிணமித்துவிட்டது! சில ஆண்டுகளாகப் புது வழக்கம் புகுந்து நிலைபெற்றது: பெரும் பெரும் விநாயகர் சிலைகளை எழுப்பி சில நாள் வைத்திருந்து பின்பு நீரிற் கரைக்கிறார்கள்.

  என் சிறு வயதில் பண்டரிநாதன் பாண்டுரங்கன் விட்டல் என்று முப்பெயரால் அழைக்கப்பட்ட ஒரு மராட்டியக் கடவுள் ஏராளத் தமிழ் பக்தர்களைக் கவர்ந்திருந்தார். மகாராட்டிரத்தில் உள்ள பந்தரீபூர் என்னும் ஊரைத் தமிழ்ப்படுத்திப் பண்டரிபுரம் என்றனர். பாத யாத்திரையாய் அங்கே போய் வணங்கி வருகிற வழக்கம் இருந்தது. அதற்கான பாடல்களும் இயற்றப்பட்டன.

  ஒரு பக்தர் பாத யாத்திரையின் போது பாடுகிறார்:

“எத்தனை தூரமோ அறியேன் பண்டரிபுரம்
அறியேன் பண்டரிபுரம் தெரியேன் பண்டரிநாதா!”

சிலர் கூட்டமாகப் போகிறார்கள்:

“பண்டரிபுரம் செல்வோம் இனி நாமே
பண்டரிபுரம் செல்வோம்
பாழாம் பூமியில் மானிட ஜென்மம்
விழலுக் கிறைத்த ஜலம் போலாச்சே
இனிமேலே
பண்டரிபுரம் செல்வோம்.”

“ஜெய ஜெய விட்டலா
பாண்டுரங்க விட்டலா!”
எனவும்

“பாண்டுரங்கா விட்டலா
பண்டரிநாதா விட்டலா!”
எனவும் முழங்கியவாறு நடந்தார்கள்.

  பண்டரிநாதன் பாண்டுரங்கன் விட்டல் விட்டலானந்தம் விட்டல்நாதன் என்றெல்லாம் மக்கள் பெயர் சூட்டிக் கொண்டார்கள்.

  நாளடைவில் அந்த வழிபாடு கைவிடப்பட்டு சபரிமலைப் பயணம் தொடங்கிற்று.  “சாமியே, சரணம் ஐயப்பா” என்ற கோஷம் பலமாக ஒலிக்கக் கேட்கிறோம். பாடல்கள் வீரமணி என்பவரால் பரப்பப்பட்டுள்ளன: ஐயப்பன் மணிகண்டன் எனப் பெயரிடும் வழக்கம் தோன்றிற்று.

  வடலூர் ஜோதி தரிசனம் புதிதாய்ப் புகுந்தது: அதைக் காட்டிலும் புதியது கிரிவலம். முன்னெல்லாம் தீபத்துக்கு மட்டுந்தான் திருவண்ணாமலையில் பக்தர்கள் கூடி “அண்ணாமலைக்கு அரோகரா!” என்று முழங்கினார்கள்; இப்போது மாதந்தோறும் திரள்கிறார்கள்.

  வருங்காலத்தில் எத்தனையோ மாறுதல்கள் உண்டாகும் என்பது உறுதி.

 

Monday, 4 November 2019

ஏதேதோ – 4



  1. இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் அமெரிக்காவின் தென் மாநிலங்களில் நிலவிய இனப் பிரிவினை பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்ததை விட அதிக மோசமாய் இருந்தது. 1958 இல் மிசிசிப்பி பல்கலைக் கழகத்தில் படிக்க விண்ணப்பித்த ஒரு கருப்பு மாணவனான கிளெனன் வலுக்கட்டாயமாக ஒரு மனநல விடுதியில் சேர்க்கப்பட்டான். அந்தப் பல்கலைக் கழகத்தில் தனக்கு இடம் கிடைக்கும் என்று நினைத்த ஒரு கருப்பன் நிச்சயமாக ஒரு பைத்தியக்காரனாகத்தான் இருக்க வேண்டும் என வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பு வழங்கினார்!

(நூல் : சேப்பியன்ஸ்; ஆசிரியர் யுவால் நோவா ஹராரி; தமிழில் நாகலட்சுமி சண்முகம். பக்.171)

  2. எதிலோ எப்போதோ வாசித்தவை:

  a) பெண் நல்லவளோ கெட்டவளோ மணந்துகொள்.
  நல்லவளாயின், உன் இல்லறம் இன்ப மயமாகத் திகழும்; கெட்டவளானால், நீ ஞானியாவாய்.

  b) மண வாழ்க்கை என்பது ஒரு விசித்திரமான வட்டம்.
  வெளியே இருப்பவர்கள் உள்ளே நுழையத் துடிக்கிறார்கள்; உள்ளிருப்பவர்களோ புறத்தில் வர வழி தெரியாமல் தவிக்கிறார்கள்.

  3. மதுரையை அடுத்துள்ள பசுமலையில் நாட்டில் சுதந்தரத்துக்காகப் பாடுபட்டு வந்த ஜார்ஜ் ஜோசப் என்ற பாரிஸ்டர் இருந்தார்; கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்; வசதியான குடும்பத்திற் பிறந்தவர்; ரோஜா நிறமாய் இருந்த அவரை மக்கள் ரோஜா தலைவர் என அழைத்தனராம். பிரமலைக் கள்ளர்கள் தங்கள் குழந்தைகட்கு ரோஜா எனப் பெயர் சூட்டுவது இன்றுவரை நீடிக்கிறது. இன்றைய சந்ததி ரோஜாப்பூ என நினைத்து அந்தப் பெயரை வைக்கிறது.

  காந்தியடிகள் மதுரை வந்தபோது அவரை சந்தித்து அவரது பணியைப் பாராட்டினார்; பின்னர் தாம் நடத்திய பத்திரிகைக்கு ஆசிரியராக இருக்க அவரை அழைத்துக்கொண்டு போய்விட்டார்.

  ஜார்ஜ் ஜோசப்புக்கு மதுரையில் ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது; தூசி படிந்து அடையாளம் தெரியாமல் நிற்கிறது.

(நூல்: தா. பாண்டியன் இயற்றிய “ஜீவாவும் நானும்”. பக். 92-93)

 4. திருக்குறள் ஒரு சமண நூல் என்பது கல்விப் புலத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிற கருத்து. குறளின் ஒரு பகுதியை முதன்முதலில் மொழிபெயர்த்த E.W. எல்லீஸ் அது ஒரு சமண நூல் என்பதை உணர்ந்து வள்ளுவருக்கு ஒரு தங்க நாணயம் வெளியிட்டார். அவர் ஆங்கில அரசில் பணிபுரிந்து கொண்டிருந்ததால் இதைச் செய்ய முடிந்தது. அந்த நாணயத்தில் திருவள்ளுவர் முக்குடையுடன் ஒரு தீர்த்தங்கரர் போல் சித்திரிக்கப்படிருந்தார்.

  இந்த வாதத்துக்குத் திருக்குறளில் பல கோட்பாட்டுத் தடயங்கள் உள்ளன. முதல் அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களில், “பொறிவாயில் ஐந்தவித்தான்” போன்ற சொற்றொடர்களே சமண நூல் என்று நிறுவப்பட்ட மேருமந்திரப் புராணம் சீவக சிந்தாமணி முதலிய நூல்களில் பத்து வெவ்வேறு தீர்த்தங்கரர்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சமணச் சமயச் சடங்குகள் ஒழுங்குகள் பற்றிய குறிப்புகள் திருக்குறளில் ஆங்காங்கே விரவிக் கிடப்பதையும் காணலாம்; ஆனால் இந்தத் தடயங்கள் எல்லாமே அண்மையில் வந்த உரைகளில் கொச்சைப்படுத்தப்பட்டுவிட்டதுதான் அவலம்.

  தமிழகத்தில் யாருக்காவது பொழுது போகவில்லை என்றால் திருக்குறளுக்கு உரை எழுத ஆரம்பித்துவிடுகிறார்கள். எவ்வாறு பழந்தமிழகத்தில் சமண நூல்கள் வெள்ளத்தில் எறியப்பட்டும் தீக்கிரையாக்கப்பட்டும் அழிக்கப்பட்டனவோ அது போலவே உரை என்ற பெயரில் திருக்குறளில் பொதிந்திருந்திருக்கும் சமணக் கருத்துகள் இன்று அழிக்கப்படுகின்றன; புதுப்புது அர்த்தங்கள் கொடுக்கப்பட்டு மைய அடையாளம் சிதைக்கப்படுகிறது.

  திருக்குறள் போன்ற ஒரு நூலை ஆராயும்போது அது தோன்றிய கால கட்டத்தின் வரலாற்றுப் பின்னணியில், அன்றைய சிந்தனைச் சூழலில் வைத்துப் பார்த்தால்தான் அதில் பொதிந்திருக்கும் கோட்பாடுகள் உருத்துலங்க ஆரம்பிக்கும்; அன்றைய மக்களிடம் வேரூன்றி இருந்த சமயங்களின் சித்தாந்தங்கள் எவை எவை என்று கண்டு அவற்றின் அடிப்படையில் நூலை ஆராயவேண்டும்.

  மதராஸ் ராஜதானி கல்லூரியில் பேராசிரியராய்ப் பணியாற்றிய சக்ரவர்த்தி நயினார் (காண்க அவரது திருக்குறள் வழங்கும் செய்தி), பின்னர் ஜீவபந்து டி.எஸ். ஸ்ரீபால் (திருவள்ளுவர் வாழ்த்தும் ஆதிபகவன்) போன்ற பலர் இந்தப் பொருளை விளக்கி எழுதியிருக்கின்றனர். தஞ்சை சரசுவதி மகாலில் காகிதச் சுவடி வடிவில் இருந்த திருக்குறள் ஜைன உரை 1991 இல் பதிப்பிக்கப்பட்டுள்ளது; ஆனால் வேறு சில ஜைன உரைகள் (கவிராஜ பண்டிதர் உரை உட்பட) இருந்த சுவடு தெரியவில்லை.

(சு.தியடோர் பாஸ்கரன் இயற்றிய நூல்: கல்மேல் நடந்த காலம். பக். 7,8. ஆண்டு 2016)

Tuesday, 22 October 2019

நேர்மறையா?


(22-09-19 தினமணியில் வெளியான என் குறுங்கட்டுரை)



குறிப்பு - திங்ஸ் என்பது அச்சுப்பிழை; தின்க்கிங் என்றிருக்க வேண்டும்.

&&&&&&&

நேர்மறையா…?

விடையின் வகைகளைப் பற்றித் தொல்காப்பியர் கூறாவிடினும் உரை எழுதிய இளம்பூரணார் உடன்படுதல், மறுத்தல் முதலான ஆறு வகைகளைத் தெரிவிக்கிறார். நன்னூல் விதி ‘விடை எட்டு வகைப்படும்’ என்கிறது.

சுட்டு மறைநேர் ஏவல் வினாதல்
உற்றது உரைத்தல் உறுவது கூறல்
இனமொழி எனும்எண் இறையுள் இறுதி
நிலவிய ஐந்தும் பொருண்மையின் நேர்ப

(நன்னூல்-386)

  கட்டுவிடை, மறைவிடை, நேர்விடை ஏவல் விடை, வினாஎதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, இனமொழி விடை ஆகிய எட்டு விடைகள். மறை என்பது மறுத்தல்; நேர் என்பது உடன்படுதல்; இரண்டும் எதிர்ச்சொற்கள். இவற்றை ஒன்று சேர்த்து ‘நேர்மறை’ என்னும் சொற்றொடரைப் பலரும் எடுத்தாள்கின்றனர். இது பிழையாகும்.

“தம்பி, கடைக்குப் போவாயா?”

என்ற வினாவுக்குப் “போவேன்” என்பது நேர்; “மாட்டேன்” என்பது மறை. யாராவது இரண்டையும் சேர்த்துப் “போவேன், மாட்டேன்” என்று கூறுவாரா? ‘நெகட்டிவ் தின்க்கிங்’ என்பதை எதிர்மறைச் சிந்தனை எனல் சரி. பாசிட்டிவ் தின்க்கிங் என்பதை உடன்பாட்டுச் சிந்தனை அல்லது ஆக்கச் சிந்தனை என்று சொல்லலாம். எனவே ‘நேர்மறை’ என்னும் சொற்றொடரை எடுத்தாள்வதை இனி தவிர்க்கலாமே!

-                                                                                   ---  சொ. ஞானசம்பந்தன்