Tuesday, 10 March 2020

கண்டம்



  சோதிடர்கள் பயன்படுத்தும் கலைச் சொற்களுள் கண்டம் என்பதும் ஒன்று.

  உங்களுக்குத் தண்ணியிலே கண்டமிருக்கு. பரிகாரம் செய்யணும்

  இந்த ஜாதகருக்கு 52 வயசுலே ஒரு கண்டம் இருக்கு; அதத் தாண்டிட்டா அப்பறம் கவலையில்லை

என்றெல்லாம் சோதிடர் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

  உயிரைப் பறிக்கக்கூடிய ஆபத்துதான் கண்டம் எனப்படுகிறது.

  அடிக்கடி நோய் நொடிக் காளாகி நொந்து மீள்பவரைக் குறித்துப் பேசுகையில், “அவருக்கு நித்ய கண்டம் பூர்ணாயுசுஎன்று கூறுவார்கள். 

  சோதிடத்தில் நம்பிக்கை இன்மையால் நான் ஜாதகம் பார்த்ததே யில்லை. எனக்கொரு கண்டம் இருந்தது என்பது அனுபவத்தில் தெரிந்தது.

  1965 இல் என் மைத்துனர் (மனைவியின் தமையனார்) வீட்டுக்குக் குடும்பத்தோடு சென்று சில நாள் தங்கியிருந்தேன். மே மாதம், பள்ளி விடுமுறைக் காலம்.

  நாகூர் நாணயக்காரத் தெருவில் நடமாட்டம் குறைவு. ஒரு மாலைநேரம்; ஆறு மணி யிருக்கலாம். வீட்டருகில், வீதியோரமாய், நாற்காலி போட்டுத் தெற்கு நோக்கி அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டிருந்தேன். என் மூத்த மகன் (3 வயது) இடப் பக்கம் என்மீது லேசாய்ச் சாய்ந்தவாறு நின்றிருந்தான்.

  திடீரென, “அப்பா, பூச்சி வருதுஎன்றான். வலப்பக்கம் தெருவில் பார்வையைச் செலுத்தினேன்; பாம்பொன்று ஒரு முழத் தொலைவில் வந்துகொண்டிருந்தது. நான் சிலையானேன்; “அசையாமல் நில்லு!” என்று மகனிடஞ் சொன்னேன்.

  காலைச் சுற்றின பாம்பு கடிக்காமல் விடாதுஎன்பது அனுபவ மொழி.

  அது, தரையில் ஊன்றியிருந்த என் வலக்காலைச் சுற்றவில்லை; காலில் முட்டிவிட்டுத் தெற்கே திரும்பிப் பின்பு மீண்டும் கிழக்குப் பக்கமாய்ப் பயணித்து வீட்டின் மூன்று படிகளிலும் ஏறி சுவரை யொட்டிய ஒரு மூலையில் நின்று படமெடுத்தது.

  ஆகா! நல்ல பாம்பு!

  என் பார்வை அதன் மீதே பதிந்திருந்தது. சற்று நேரத்தில் அது தலை தாழ்த்தி ஊர்ந்து நிலையைத் தாண்டி உள்ளே போயிற்று. எங்கே போகிறது என்பதை யறிய எழுந்து சென்று கவனித்தேன். முற்றத்தின் ஓரத்தில் இருந்த சாக்கடைப் பள்ளத்தில் இறங்கி அதில் ஊர்ந்து, tunnel இல் புகுவது போல், மூடப்பட்டிருந்த பகுதியில் நுழைந்து விட்டது.

  எதிர்த்த வீட்டு சந்திர சேகரனைக் கூப்பிட்டு செய்தி சொன்னேன்; அவரும் இன்னொருவரும் வந்தனர். ஒருவர் நீளமான மூங்கில் கம்பொன்றைத் தெருப்பக்கத்திலிருந்து சாக்கடையில் செலுத்திக் குத்தினார்; பாம்பு முற்றம் வழியாக வெளியேறுகையில் அடிப்பதற்கு ஒரு கம்புடன் மற்றவர் தயாராய் நின்றார். எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தது.

  தக்க நேரத்தில் பாம்பு என் மகனது கண்ணிற் படாமலிருந்தாலோ, அவன் உடனே எச்சரிக்காவிட்டாலோ, நான் காலை ஆட்டியிருக்கக்கூடும்; அது கொத்தியிருக்கலாம்.

  பாம்புக்கும் எனக்கும் ஒரே சமயத்தில், ஒரே இடத்தில் கண்டம்: நான் மீண்டேன், அது மாண்டது.

&&&&&

Sunday, 1 March 2020

ஊஞ்சல்




  
  எண்பது ஆண்டுக்கு முன்பு வரை திருமணத்தன்று மாலையில் ஊஞ்சல் என்றொரு நிகழ்ச்சி நடந்தது.

  இணையர் இருவரையும் ஊஞ்சலில் அமர்த்தி மாப்பிள்ளையைப் பழித்துக் கொழுந்தியும் பெண்ணைக் கிண்டலடித்து நாத்தியும் கேலிப் பாட்டுப் பாடக் குடும்பத்தாரும் உறவினரும் கேட்டு விமர்சித்துக் களித்தார்கள்.

  என் நினைவில் படிந்துள்ள சில அடிகள்:

அ) மாப்பிள்ளை சமர்த்தரடி
    சாப்பிடுவதில்
    மாப்பிள்ளை சமர்த்தரடி
    யானைமேல் ஏறென்றால்
    பானைமேல் ஏறுவார்.

ஆ) எலுமிச்சம்பழம் போல
    எங்க பொண்ணு அழகு
    எலி மூஞ்சி மாப்பிள்ளைக்கு

இ) மாமியார் வீடு போக
   எங்க அண்ணனுக்குப் பிடிக்காது
   மாமியார் வீடு போனால்
   மானங்கூடக் கெட்டுப் போகும்
   முதல் நாள் வாழையிலை
   ரெண்டாம் நாள் தையல் இலை
   மூணாம் நாள் கையிலே

ஈ) கோண மூஞ்சி மாப்பிள்ளைக்குக்
   கோட்டு சூட்டு வேணுமா
   சொர்ணத் தங்கம் போல ஒரு
   பொண்ணு கூட வேணுமா

  சிரித்து மகிழ்வதன்றிக் கோபம் யாருங் கொள்ளார். காரணம்: ஒண்ணுக்குள்ளே ஒண்ணு! அதாவது முறைப்பிள்ளைகள். சிறு வயதிலிருந்தே அடிக்கடி சந்தித்து அளவளாவிப் பரிகசித்து இன்புற்று வளர்ந்தவர்கள்.

  முறைப்பிள்ளை மணம் சிறிது சிறிதாய் வழக்கொழிந்தது.

&&&&&
(படம் உதவி இணையம்)

Saturday, 22 February 2020

தாகூரும் ஒகம்போவும்


நூல்களிலிருந்து – 25 
தாகூரும் ஒகம்போவும்



(சாகித்ய அக்காதெமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன், “உலகை வாசிப்போம்” என்ற தம் நூலில் வெளிநாடுகளில் படைப்பாளிகளுட் சிலரையும் அவர்களுடைய நூல்களையும் அறிமுகம் செய்துள்ளார். 115 -122 பக்கங்களில் இடம்பெற்றுள்ள மேற்படி தலைப்பிலான கட்டுரையின் முக்கிய பகுதிகளை இங்குப் பதிகிறேன்.)

  லத்தீன் அமெரிக்காவில் தாகூரையும் இந்திய இலக்கியங்களையும் தேடித்தேடி வாசிக்கிறார்கள்; தாகூருக்கு விழா எடுக்கின்றனர், கருத்தரங்குகள் நடத்துகிறார்கள். இதற்கான முக்கிய காரணம் தாகூர் இரண்டு மாத காலம் அர்ஜெண்டினாவில் தங்கியிருந்ததாகும்.

  1924 இல் சாந்திநிகேதனை உருவாக்க நிதி திரட்டுவதற்காகத் தாகூர் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார். எதிர்பாராமல் உடல் நலமற்றுப் போகவே அர்ஜெண்டினாவில் சிகிச்சைக்காகத் தங்க நேரிட்டது. எழுத்தாளரும் இளம் பெண்ணுமான விக்டோரியா ஒகம்போ இதைப் பற்றி அறிந்து தாகூரும் அவரது உதவியாளர் லியோனார்டும் தங்கிக் கொள்ளத் தனி மாளிகை ஒன்றை ஏற்பாடு செய்து தந்தார்.

  20 வயதில் திருமணமான ஒகம்போ கணவருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாகப் பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்த காலத்தில் மனவேதனையும் தயரமும் நிரம்பிய நிலைமையில் தான், அவர் கீதாஞ்சலியை வாசித்தார்; தமது மனவுணர்ச்சிகளைத் தாகூர் அப்படியே பிரதிபலித்துள்ளதாகக் கருதினார்; ஆகவே அக்கவிதைகளைத் திரும்பத் திரும்ப வாசித்துக் கண்ணீர் சிந்தினார்.

  தாம் ஆதர்சக் கவியாகக் கருதிய தாகூருக்கு நேரில் சேவை செய்யும் வாய்ப்புத் தம்மைத் தேடிவந்தபோது உடனே ஏற்றுக் கொண்டார். தாகூருக்குப் பிடித்தமானது போல ஆற்றங்கரையை ஒட்டிய மாளிகையை வாடகைக்கு அமர்த்தினார். ஒகம்போவின் பணியாளர்கள் இங்கும் வேலை செய்தார்கள். தாகூருக்கான உடை, எழுதுபொருட்கள், இசைத் தட்டுகள் அத்தனையும் வாங்கித் தந்து உபசரித்தார். சிறப்பு நாற்காலி ஒன்றையும் வாங்கிக் கொடுத்தார்; அதிலமர்ந்து தாகூர் எழுதினார். இந்தியாவிற்குத் திரும்பியபோது நாற்காலியைத் தம் பரிசாக உடன் அனுப்பினார். அது தாகூரின் மியூசியத்தில் இன்றுமிருக்கிறது.

  தாகூர் – ஒகம்போ நட்பு ஆழமானது. தம்மை அவர் காதலித்தார், தம்மை அடையும் வேட்கையும் அவருக்கிருந்தது என்று ஒகம்போ தம் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்; ஆனால் தாகூரைத் தம் ஆசானைப் போலவே ஒகம்போ நடத்தினார். தாகூர் மறையும் வரையில் இருவர்க்குமிடையே கடிதப் போக்குவரத்து நடந்தது. கடிதங்கள் யாவும் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளன.

  தாகூர் ஒகம்போவை விஜயா என இந்தியப் பெயர் சூட்டி அழைத்தார்; அவளது அன்பையும் அழகையும் வியந்து கவிதைகள் எழுதினார்; புரபி என்ற அக்கவிதைத் தொகுப்பை அவளுக்கே சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

  1941 இல் தாகூர் இறந்தபோது அவருடனான தம் நட்பு குறித்து ஒகம்போ விரிவான அஞ்சலிக் கட்டுரை எழுதி வெளியிட்டார். ஒகம்போ வழியாகத் தாகூர் லத்தீன் அமெரிக்க எழுத்துலகில் முக்கிய எழுத்தாளராய் அறிமுகமாகிக் கொண்டாடப் பட்டார். தாகூரின் கவிதைகளையும் சொற்பொழிவுகளையும் ஸ்பானிய மொழியில் பெயர்த்து வெளியிட்டார். தாகூரின் அழகியலும் உணர்ச்சிப் பெருக்கும் நிரம்பிய கவிதைகள் புதுவகை அனுபவத்தை லத்தீன் அமெரிக்க வாசகர்களுக்கு அளித்தன. தாகூரின் நாடகங்களும் மொழியாக்கம் செய்யப்பட்டன.

  ஒகம்போ தாகூர் பற்றி ஒரு நூல் இயற்றியுள்ளார்; அது வங்காள மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளது.

  அர்ஜெண்டினாவில் தாகூர் தங்கியிருந்த மாளிகை இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது; வாடகைக்கு விடப்பட்ட நிலையிலும் அங்கே தாகூரின் உருவப் படம் மாட்டிவைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

&&&&&

Tuesday, 11 February 2020

பிறந்த நாள்




  இன்று என் 95 ஆம் பிறந்த நாள். கிட்டத்தட்டப் பத்தாண்டுக் காலமாய்க் கட்டுரைகள், ஆய்வுகள், பிரஞ்சிலிருந்து மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றை இலக்கியச் சாரலில் பதிந்து வருகிறேன். வேறு சில பதிவர்களின் படைப்புகளை நோக்க என் எழுத்துகள் எண்ணிக்கையிலும் வகைமையிலும் (variety) குறைவுதான். எழுத வேண்டும் என நான் எண்ணியவற்றுள் மிகப் பெரும்பாலானவற்றை எழுதி முடித்துவிட்டேன்; இன்னங் கொஞ்சந்தான் பாக்கி.

  என் படைப்புகளை வாசித்த அன்பர்கள் அனைவர்க்கும் என் மனமார்ந்த நன்றி; தொடர்ந்து கருத்துரைத்து ஊக்கிய வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன், அய்யா G.M.B., கரந்தை ஜெயக்குமார் ஆகியோர்க்குப் பிரத்யேக நன்றி.

&&&&&