Tuesday, 10 January 2012

அது ஒரு காலம் – 1


இன்றைக்கு இன்றியமையாததாகிவிட்ட மின்சாரம் புழக்கத்துக்கு வராத காலத்தில் எல்லா வீடுகளும் மண்ணெண்ணெய் விளக்குகளின் மங்கலான ஒளியையே நம்பியிருந்தன. ஏழைகள் தகர விளக்குகளையும், மற்றவர்கள் பித்தளை விளக்குகளையும் பயன்படுத்தினார்கள்.

கை விளக்கு, கால் விளக்கு என இருவகை இருந்தன. விளக்கை ஏற்றிக் கையில் எடுத்துச் சென்று, தேவையான இடங்களில் வெளிச்சம் பாய்ச்சிக்கொண்டு வேலை முடிந்தபின்பு அணைத்து, அது முன்பிருந்த இடத்தில் வைத்துவிடுவர். அதில் தண்டு இருக்காது. அதுவே கைவிளக்கு (போர்ட்டபிள்).

கால் விளக்கைக் காலில் எடுத்துப் போவார்களோ என்று வியப்புக் கேள்வி கேட்கத் தோன்றும். அதை எங்கும் எடுத்துப் போவதில்லை. ஓரிடத்தில், பெரும்பாலும் வீட்டுக் கூடத்தில், அது நிலையாக நிற்கும். ஒரு சாண் தண்டு கொண்ட அதன் மொத்த உயரம் கிட்டத்தட்ட ஒரு முழம். உயரத்தில் எரியும் திரியால் அதிகத் தொலைவுக்கு ஒளி கிடைக்கும். காலூன்றி நிற்பது போல் தோன்றியதால் அதைக் கால் விளக்கு என்றனர். குத்து விளக்கை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

வீட்டிற்குள் இப்படி மினுக், மினுக் என்று கொஞ்சமாக வெளிச்சம் ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. வெளியில் செல்வதென்றால் காற்றால் அணைந்து விடாத லாந்தர் (lantern) விளக்கைக் கொண்டு போக வேண்டும். அரிக்கன் (hurricane) விளக்கு என்றும் அதற்குப் பெயருண்டு.

வெளிச்சம் மங்கிய மாலை வேளையில் நெல் மூட்டைகள் அடுக்கிய பத்துப் பன்னிரண்டு பார வண்டிகள் அவற்றின் கீழ்ப்பாகத்தில் கட்டித் தொங்கும் லாந்தர்கள் ஒரே சீராக ஒளி தந்தபடி வலமும், இடமுமாக ஊஞ்சலாட, இரும்புப் பட்டையால் இறுக்கிய ஆளுயர மரச் சக்கரங்கள் மண் சாலையை உராய்கையில் 'கிர்ர்ர்ரக்.. கிர்ர்ர்ரக்..' என்று கரகரத்த ஓசையெழுப்ப, மாடுகளின் கழுத்துச் சலங்கைகள் 'ஜல் ஜல் ஜல்' என இனிமையாய் ஒலிக்க, கிரிக்கெட் பவுலர் பந்தை உடையில் தேய்த்தபடி நடப்பதைக் காட்டிலும் சாவகாசமாய்க் கண்ணுக்கும் மனத்துக்கும் களிப்பு வழங்கியவாறு வரிசையாய் ஊர்வலம் போல் சென்ற காட்சி இப்போது நினைத்தாலும் பரவசமூட்டுகிறது.

சூரியன் மறைந்தபின்பு தெருக்கள் சிறிது சிறிதாய் வெளிச்சம் மங்கி முழுதும் இருண்டுவிட்ட பின்பு அண்ணாந்து நோக்கிக் கண்கொள்ளாக் காட்சியொன்றைக் கண்டுகளிக்க முடிந்தது. வான் முழுவதும் மஞ்சள் அல்லது சிவப்பு நிற விண்மீன்களும் விண்மீன் கூட்டங்களும் பொரியவையும் சிறியவையுமாய் நிறைந்து கண் சிமிட்டும். உற்றுக் கவனிப்போர் வியாழன், செவ்வாய், சனி முதலிய கோள்களையும் அடையாளங் காண்பர். சில மாதங்களில் மேற்கே வெள்ளிக் கோளானது வானத்தில் ஏற்றி வைத்த பிரகாசமான விளக்கென ஒளிரும். கீழேயோ நூற்றுக்கணக்கான மின்மினிகள் மரங்களைச் சுற்றி அங்குமிங்கும் பறந்து பளிச் பளிச் என மின்னிப் பார்வைக்கு விருந்தளிக்கும்.

இரவில் யாரும் வெளியில் செல்ல மாட்டார்கள். பேய், பிசாசு பற்றிய பயமில்லாதவர் எவருமில்லை. காலையில் செய்தி கிடைக்கும். ''அங்கே ஒருவனைப் பேய் அடித்துவிட்டது; இங்கே ஒருவன் வாயாலும் மூக்காலும் ரத்தங்கக்கிச் செத்துக் கிடந்தான்; பேய் அறைந்து கொன்றுவிட்டது'' என்று வாரத்தில் இரு தடவையாவது மக்கள் பேசிக்கொள்வார்கள். இரவில் திருடுவதற்கோ வேறு அவசர கரியமாகவோ லாந்தாரின்றி வெளியே புறப்பட்டவர்கள் இப்படி இறந்து போகச் சாத்தியம் உண்டு. 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' அல்லவா?

வெளியில் போயே தீரவேண்டும் என்ற கட்டாயத்தில் வீட்டை விட்டுக் கிளம்பியவர்களுக்குக் கண்ணும் தெரியாது, ஒரு மண்ணும் தெரியாது. பாதையைக் கண்டுபிடிப்பதும் எளிதல்ல. காற்றில் அசைகிற செடியும் மரக்கிளையும் பேய் பிசாசாகத் தெரிவதில் வியப்பென்ன? ஏற்கனவே இருட்டைக் கண்டு படக் படக் என்று துரித கதியில் அடித்துக் கொண்டிருக்கிற இதயம் செடியொன்று மேனியில் தட்டுப் பட்டவுடன் அச்சத்தின் உச்சத்துக்கே போய் அளவு மீறித் துடித்து நின்றுவிடும்.

இப்படிப் பயங்கரமாய் இருண்டு சந்தடியற்றுப் போன ஊர் பௌர்ணமியன்றும் அதற்கு 2, 3 நாள் முன்னும் பின்னும் உயிர்ப்புப் பெறும். யாவரும் மதியை நோக்கிக் களிப்பது அந்தச் சில நாள்களில்தான். அதுவும் பங்குனி முதல் ஆவணி முடியக் கோடைக்காலத்தில் மட்டுமே. மற்ற மாதங்களில் மேகமூட்டமோ, குளிரோ தடைபோடும்.

தெருக்களில் பால் போலக் காயும் நிலா ஒளியில் சிறுவர்கள் ஓடியாடியும் கூடிக் கதை பேசியும் குதூகலிப்பார்கள். அம்புலியில் 'அவயாக்கெழவி' (ஔவையார் கிழவி) கால் நீட்டியமர்ந்து வெற்றிலை பாக்கு இடிப்பதாகப் பெரியவர்கள் சொல்வது கேட்டு வியப்பார்கள். மேகங்கள் ஓடும்போது சந்திரன் நகர்வது போலத் தோன்றும். 'அம்புலி ஓடுது' என்று ஆச்சரியத்துடன் குரலெழுப்பாத குழந்தை இருக்காது. 'ஏன் நாம போற எடத்துக்கெல்லாம் அம்புலி வருது?' என்ற கேள்வியும் அடிக்கடி காதில் விழும். 'அதப் பறிச்சுத் தா' என்று சில குழந்தைகள் கோரிக்கை எழுப்புவது உண்டு. 'எட்டாது' என்று பதில் கூறினால் 'கல்லால் அடிக்கலாம்' என அரிய யோசனை சொன்ன புத்திசாலிக் குழந்தையும் உண்டு! கைப்பிள்ளைகளை இடுப்பில் ஏந்திய தாய்மார்கள் சந்திரனைக் காட்டிப் பாட்டுப்பாடி சோறூட்டுவார்கள்.

ஒரு பாட்டு:

நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலைமேலே ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா.

இன்னொன்று வினா விடையாய் அமைந்தது.

நிலா நிலா எங்க போறே?
அவரங்காட்டுக்குப் போறேன்.

ஏன் போறே?
மண்ணெடுக்க.

மண்ணு ஏன்?
ஊடு கட்ட.

ஊடு ஏன்?
புள்ள பெற.

புள்ள ஏன்?
பெரப்பம் பாயிலே பெரண்டு விளையாட
ஈச்சம் பாயிலே இருந்து விளையாட
கோரைப்பாயிலே குந்தி விளையாட
தாழம் பாயிலே தவழ்ந்து விளையாட.

(இப்படிப் பலவகைப் பாய்கள் அப்போது புழக்கத்தில் இருந்தன).

பௌர்ணமி நாள்களில் பலர் சேர்ந்து நிலாச்சோறு உண்பார்கள். விளக்குத் தேவைப்படாமல் இயற்கை பொழியும் குளிர் ஒளியில் அமர்ந்து உல்லாசமாக உரையாடியபடி உணவுண்பது ஓர் இனிய அனுபவம்.

அதெல்லாம் ஒரு காலம்.

இப்போது மின்மினிகளைக் காணவே முடியவில்லை. அவை இருக்கின்றனவா அல்லது அழிந்து விட்டனவா என்ற ஐயம் எழுகிறது. பாரவண்டிகளுக்கு லாரிகள் விடை தந்துவிட்டன. நட்சத்திரங்களின் அழகைக் காண்பதற்குத் தெரு மின்விளக்குகள் தடையாய் உள்ளன. நிலா ஒளியோ மறைந்தே விடுகிறது. முழுமதியைக் கண்டுகளிப்பதும் அதன் பாலொளியில் மூழ்கிப் பரவசப்படுவதும் இயலாமற்போய்விட்டது.

எங்கள் ஊரில் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு மின் கம்பங்கள் நடத்தொடங்கியபோது, பயன்பாட்டுக்கு வரப்போகிற மின்சாரம் பற்றித்தான் எங்கும் பேச்சாக இருந்தது. என் தாயாரும் பாட்டியாரும், 'நம்ம தெருவுலே எதிர் ஓரத்துலே கம்பங்கள் நட்டா நம்ப வூட்டு மேலே வெளிச்சம் விழும்' என்று ஆசையுடன் பேசிக்கொண்டது எனக்கு நினைவிருக்கிறது. அவர்களுக்குக் கிடைத்தது ஏமாற்றமே!

(படம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது.)

1 comment:

  1. அந்தக் கால நினைவுகள் அபாரம். பொக்கிஷமான நினைவுகளை இன்றைய தலைமுறை அறிந்திராத, அறிய வாய்ப்பில்லாத அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டதற்கு மிகவும் நன்றி.

    நிலாப்பாடல் மிகவும் ரசிக்கும்படி உள்ளது. இப்படி நிலவொளியில் பிள்ளைகள் விளையாடிய காலம் தொலைக்காட்சி வந்தபின் போயேபோய்விட்டது.

    ReplyDelete