Sunday 15 December 2013

பழைய விளையாட்டுகள் -- பேந்தா

பழைய விளையாட்டுகள் -- (தொடர்ச்சி 4 )
5--பேந்தா  (Benthaa)

 கொந்தம் என்பதற்குப் பொருள் தெரியாதது போலவே,  பேந்தாவுக்கும் தெரியவில்லை;  அதுவாவது தமிழ் போன்று ஒலிக்கிறது,  இது எந்த மொழிச் சொல் என்றே தெரியவில்லை. அர்த்தம் எதுவாக இருந்தால் என்ன?   ஆட்டம் தானே முக்கியம்?

  இதுவும் முக்குழி மாதிரி கோலியாட்டம்ஆனால் ஆறு பேர் ஆடுவது.

  தரையில் ஒரு நீள் சதுரம் வரைய வேண்டும்; ஒரு சாண் அகலம், ஒன்றரை சாண் நீளம்; கொந்ததத்துக்கு கோடு காலால் அகலமாகப் போடுவது;  இதற்குக் கை விரலால் மெல்லியதாய்க் கிழிக்க வேண்டும். நீள் சதுரத்தை நீளவாக்கில் சரி பாதியாகப் பிரிக்கிற கோடு ஒன்று: இதை அ - இ கோடு என்போம்.

   
 களத்துக்குக் கொஞ்ச தூரத்தில் நின்று குனிந்து அவரவரும்  கோலிகளை நீள்சதுரத்தை நோக்கி உருட்டிவிடுவார்கள். (முக்குழிக்குப் போல). களத்துக்கு அதிகத் தொலைவில் நிற்கிற மூன்று கோலிகளை, அ - இ கோட்டின் மத்தியில் சேர்ந்தாற் போல் வைக்க வேண்டும், எந்தக் கோலியாவது கோட்டின் மேல் போய் நின்றால் அல்லது உள்ளே  புகுந்துவிட்டால் அது மூன்று கோலிகளுள் ஒன்றாக அ - இ கோட்டில் இடம் பெறும்.

 அ - இ கோட்டில் வைக்கப்பட்ட மூன்று கோலிகளையும், மற்ற மூவரும் தத்தம் கோலிகள் நிற்கிற இடத்திலிருந்து, அடித்து அடித்துத் தொலைவாகத் தள்ளவேண்டும்: இதுவே ஆட்டத்தின் குறிக்கோள்.

 நீள்சதுரத்தின் மிக அருகில் கிடக்கிற கோலிக்கு உரியவர் முதல் ஆட்டக்காரர்;  பிந்தி நிற்கிற கோலிக்காரர் மூன்றாவதாக ஆடுவார்;  நடுவில் உள்ள கோலியின் உரிமையாளர் இரண்டாமவர்.

 முதல்வர்க்கு அடி பிடிக்கும் வரை தொடர்ந்து ஆடுவார்குறி தவறிய பின்பு இரண்டாம் ஆள் அடிக்கத் தொடங்குவார்அப்புறம் மூன்றாமவர்; மறுபடியும் 1, 2, 3.  யாராவது ஒருவர்,  குறியைத் தாக்கினால் போதும்; தொடர்ந்து மூவரும் ஆடலாம். மூவருக்குமே குறி  தவறிவிட்டால், அதனோடு நிறுத்திக்கொண்டு தம் கோலிகளை எடுத்துக்கொள்வார்கள்.

  மற்ற மூன்று பேரும் குனிந்து, இடக் கையை மடக்கி முதுகின்மேல் வைத்தபடி, வலக் கையை மூடி, தம் கோலிகள் நிற்கிற இடத்திலிருந்து, முட்டியால் அவற்றைத் தள்ளிக்கொண்டு போய்க் கட்டத்தினுள் நுழைத்துவிட வேண்டும்;  முதலில் ஒருவர் ஒரு தள்ளல் தள்ள, அடுத்து இரண்டாமவர் ஒரு தடவை, கடைசியாய் மூன்றாமவர் ஒரு தள்ளல். மீண்டும் 1,2,3  என மாறிமாறித் தள்ளுவார்கள்.

  எவ்வளவு ஜாக்கிரதையாகத் தள்ளினாலும், தரையில் கிடக்கும் சிறு கல், மண்ணாங்கட்டி முதலியவற்றில் விரல்கள் உராய்ந்து சிராய்ப்பு ஏற்பட்டு  ரத்தம் கசியாமல் இருக்காது. ஒவ்வொரு தடவையும் கோலி அதிகத் தொலைவுக்குப் போகுமாறு பலமாய்த் தள்ளினால், தள்ளல் எண்ணிக்கை குறைந்து,  தரையில் கை  மிகுதியாக உரையாது. விளையாட்டில் வலி, காயம் சகஜம்;  இந்தச் சிறு துன்பம், ஆட்டத்தின் பேரின்பத்தில் விரைந்து கரைந்து மறைந்து விடும்.

 ஒரு கோலியை அடித்த கோலி, உருண்டு போய், வேறொரு கோலியையும் மோதுவதுதவறு: அது "ஜல்லி" எனப்படும்;  அடிபட்ட கோலி ஓடி இன்னொரு கோலியில் படுவதும் ஜல்லி தான். அந்த மாதிரி இடிக்காமல் அடிக்க வேண்டும். தவறுதலாய் அடிபட்ட கோலிக்கு உரியவர், ஜல்லி அடித்தவருடைய கோலியை, தம் கையை அகலமாக விரித்துப் பலம் கொண்ட மட்டும் எட்டத் தள்ளிவிடுவார். அங்கிருந்துதான் ஆட வேண்டும். (முக்குழி ஆட்டத்தில் ஜல்லி தவறு அல்ல)

  இந்த ஆட்டத்தை இரு அணியாயும் ஆடலாம்; தொடக்கத்தில் அணித் தலைவர் மட்டும் கோலி உருட்டினால் போதும்.

            +++++++++++++++++++++++++++++++









9 comments:

  1. மிகச் சிறு வயதில் இதனை விளையாடிய ஞாபகம் இருக்கு, கால போக்கில் நான் மறந்தே விட்டேன், மீண்டும் ஒரு நினைவூட்டல், இப்போது எல்லாம் கோலி அடிப்பது அவமானமாகவும், எதோ இழி விளையாட்டுப் போல ஆகிவிட்டது. வருந்ததக்கது. இத்தகைய விளையாட்டுக்களை முறையாக பல் ஊடகங்களில் ஆவணப்படுத்தியாவது வைக்க வேண்டும்.

    --- விவரணம். --- 

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் இந்த ஆட்டத்தை ஆடியது அறிந்து மகிழ்கிறேன் . கால மாறுதலில் மேல் கீழாவதும் கீழே இருந்தது மேலே ஏறுவதும் மற்ற துறைகளிலும் காண்கிறோம் . உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

      Delete
  2. பேந்தா கோலி விளையாட்டு கண்பார்வையை அறிவுக் கூர்மையை கொடுக்கும் ஆனால் இப்போதெலாம் சூதாட்டமாகிவிட்டது,பழைய நினைவைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்னது உண்மை . உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி .

      Delete
  3. வணக்கம் ஐயா
    சின்னஞ்சிறு வயதில் விளையாடிய விளையாட்டை நினைவு படுத்தி அந்த நினைவுகளை அசை போட தந்தமைக்கு மிகுந்த நன்றிகள்.. தொடருங்கள். பகிர்வுக்கு நன்றிகள்...

    ReplyDelete
  4. பழைய நினைவுகளை அசை போடுவது இன்பமானது . உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா !

    தங்களின் தளத்தினை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளனர் .
    http://blogintamil.blogspot.ch/2014/01/blog-post_3.html
    சிறப்பான ஆக்கங்களைத் தொடர்ந்து வெளியிடும் தங்களின்
    தளத்தினைத் தொடர்வதிலும் நான் மிகவும் பெருமை கொள்கின்றேன் .
    மிக்க நன்றி ஐயா பகிர்வுகளுக்கு .

    ReplyDelete
  6. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
    நல்வணக்கம்!
    திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
    வலைச்சரம் ஆறாம் நாள் - பல்சுவை விருந்து
    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

    வாழ்த்துக்களுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    (S'inscrire à ce site
    avec Google Friend Connect)

    ReplyDelete
  7. 1977 வரை சிறு வயதில் விளையாடியது - அருமையான பதிவு

    ReplyDelete