Sunday 8 December 2013

பழைய விளையாட்டுகள் - முக்குழி

பழைய  விளையாட்டுகள்  -  (தொடர்ச்சி-3)
4 - முக்குழி

  கோலி, குண்டு, ரவை எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்ட, பளிங்காலான அல்லது மாக்கட்டியலான உருண்டைகளைக் கொண்டு ஆடிய ஆட்டங்களுள் ஒன்று முக்குழி. நான்கு பேர் ஆடலாம். அதற்கு மேலோ கீழோ போனால் ஆட்டம் சுவைக்காது.


நடுத் தெருவில் மூன்று சிறு குழிகளைக் கையால் தோண்டுவார்கள்; ஒரே நேர்க் கோட்டில் அமையும் அந்தக் குழிகளுக்கு இடைவெளி சுமார் ஒரு மீட்டர் இருக்கும்.

   o o o
   1 2 3

முதல் குழிக்குக்  கொஞ்ச தொலைவில் போய் நின்று குனிந்து, அவரவரும் தம் கோலியை முதல் குழியை நோக்கித் தரையில் உருட்டுவர். குழிக்கு மிக அருகில் ஓடி நின்ற கோலியின் உரிமையாளர் முதல் ஆட்டக்காரர்; அதிகத் தொலைவில் கிடக்கும் கோலிக்காரர் கடைசி ஆட்டக்காரர்;  மற்றவர் கோலி நின்ற இடத்தைக் கொண்டு இரண்டாம், மூன்றாம் ஆட்டக்காரர் ஆவர்.

முதல்வர்,  தம் கோலி கிடக்கிற இடத்தில் வலக்கை (அல்லது இடக்கை)க் கட்டை விரலை ஊன்றி,  ஆள்காட்டி விரலை மாத்திரம் நீட்டி,  மற்ற கையின் எல்லா விரல்களையும் சேர்த்துக் குவித்துஅவற்றின் நுனியில் கோலியைப் பிடித்து,  நீட்டியுள்ள ஆள்காட்டி விரலை அந்தக் கோலியால் பின்புறமாய் வளைக்க வேண்டும்;  முடிந்த மட்டும் வளைந்ததும், கோலியை ஆள்காட்டி விரலால் தள்ள வேண்டும்வில்லை வளைத்து அம்பு எய்வதை நினைத்துக்கொள்ளுங்கள். இலக்கு பார்த்து அம்பு விடுவது போல், முதல் குழியில் போய்க் கோலி புகும்படி எய்ய வேண்டும்.

புகுந்துவிட்டால், அந்தக் குழியில் விரலூன்றி அடுத்த குழிக்கு அனுப்ப வேண்டும். குழி தொலைவில் இருப்பதால், இது கடினம்;  ஆதலால், முதல் குழியுள் புகுந்தவுடன், பக்கத்தில் கிடக்கிற கோலியை நோக்கி அடிப்பார்கள்; அந்தக் கோலி எட்டப் போகும்,  நம் கோலி இரண்டாம் குழியை  நெருங்கும். (இதற்குச் சாமர்த்தியம் தேவை);  இங்கிருந்து குழியுள் புகலாம். புகாவிட்டாலோ பிற கோலிகளின்மீது மோதாவிடிலோ தொடர்ந்து ஆடக் கூடாது. கோலி தரையில் கிடக்கும்.

இப்போது இரண்டாமவர் ஆடுவார்;  அடுத்து வரிசைப்படி மற்றவர்கள்; கடைசி ஆள் ஆடியபின்பு, மீண்டும் முதல்வர்.

 1, 2, 3 குழிக்குப் பின், மறுபடி 2, 1, அப்புறம் 2, 3, பிறகு 2, 1, கடைசியாக 2 :  மொத்தம் பத்துக் குழி புகவேண்டும்;  அதற்குப் பின்பு, அங்கிருந்து  யாருடைய கோலியையாவது அடித்துவிட்டால், அது, "பித்து" எனப்படும்; பித்து அடித்தவர் "ராஜா";  அவர் தம் கோலியை எடுத்துக்கொள்வார், ( பித்து அடிக்காதவரைக்கும் ராஜா அல்ல). மற்ற மூவரும் ஆட்டத்தைத் தொடர்வார்கள்அவர்களுள் இருவர் ராஜா ஆகிவிடநான்காமவர் தோற்றவர்.

இவர் முதல் குழியின் அருகில் அமர்ந்து,  முட்டியை மடக்கி, மூன்றாம் குழியை நோக்கி, முதல் குழியின்மேல் வைக்க வேண்டும்; முதல் ராஜா மூன்றாம் குழியில் விரல் ஊன்றி அந்த முட்டியைக் குறி வைத்துக் கோலியால் அடிப்பார்;  மொத்தம் மூன்று அடி. அடுத்து மற்ற ராஜாக்கள் இருவரும் அடிப்பார்கள்; ஒன்பது அடிகளில் சில, குறி தவறிப் போகும்; நாலைந்து அடியாவது விழும்,  முட்டி வலிக்கும்.

இனி, அடுத்த ஆட்டம்.

குறி பார்த்துச் சரியாக அடிப்பது என்பது அனுபவத்தில் கைவரும்இலக்கு இருக்கிற தொலைவைக் கணித்து அதற்குத் தக்கவாறு 
பலமாகவோ லேசாகவோ அடிக்க வேண்டும்சிலர் இரண்டு மீட்டருக்கு  அப்பாலுள்ள கோலியைக்கூட அடித்துவிடுவர். அடுத்தடுத்து  அடிப்பதற்கு "அடிபிடித்தல்" என்று பெயர்;   யாருக்காவது குறி தொடர்ந்து தவறினால், அவர்,"இன்னைக்கு எனக்கு அடிபிடிக்கலெ" எனச் சொல்லி வருந்துவார். ராஜா ஆவதற்கு, அடுத்தடுத்து விரைவாய்க் குழி புகுந்தால் போதாது;  மற்றவர் ராஜா ஆவதைத் தடுக்கவும் வேண்டும்;  அதற்காக அவர்களது கோலிகளை அடித்துக் குழிகளுக்கு அப்பால் தள்ளுவது அவசியம்.

தொடக்கத்தில் முதல் குழியை நோக்கிக் கோலிகளை உருட்டுகையில், "குட்டுனா எட்டு,  குழி பூந்தா ஒன்பது" (குட்டினால் எட்டு,  குழி புகுந்தால் ஒன்பது) என அவரவரும் சொல்வார்கள்;  அதாவது,  ஏற்கனவே தரையில் கிடக்கிற எந்தக் கோலியையாவது மோதினால்,  எட்டுக் குழி புகுந்ததாய்க் கொள்ள வேண்டும்;  முதல் குழியுள் போய்க் கோலி நுழைந்துவிட்டாலோ, ஒன்பது குழி புகுந்ததாய் ஆகும்;  இன்னம் ஒரு குழி புகுந்தால் போதும். அப்படிச் சொல்ல மறந்தால், குட்டுவதும் குழி புகுவதும் செல்லாது.


       ---------------------------------------------
படம் : நன்றி இணையம்

9 comments:

  1. ரசிக்க வைக்கும் விளையாட்டு ஐயா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வாசித்து ரசித்து வாழ்த்தும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி .

      Delete
  2. இது போன்ற விளையாட்டை என் தம்பியும் நண்பர்களும் விளையாடப் பார்த்திருக்கிறேன். அழகழகான பளிங்குகள் மீது மட்டும்தான் என் ஆர்வம் எல்லாம். பண்டைய விளையாட்டை அறியத் தந்தமைக்கு நன்றி. குட்டினால் எட்டு, குழி புகுந்தால் ஒன்பது என்று விளையாட்டை குறுக்குவழியில் வெற்றிபெறும் வண்ணம் அமைத்திருந்தது வியப்பூட்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . பண்டைக் காலத்து விளையாட்டுகள் , பழக்க வழக்கங்கள் ,விழாக்கள் முதலானவற்றை ஆவணப்படுத்துதல் சமூக வரலறு அறிவதற்கு அவசியம் ; ஆனால் நம் முன்னோர் செய்யவில்லை . மாணிக்கவாசகர் சாழல் என்னும் ஆட்டம் பற்றிப் பாடியுள்ளார் ; அது பற்றிச் சிறிதும் தெரியவில்லை . இலக்கியங்களில் பெண்கள் பந்து அடித்ததாய்ச் சொல்லப்படுகிறது : என்ன பந்து , எப்படி அடித்தனர் ? யாரும் அறியார் . பழைய ஆட்டங்களின்போது சில சமயம் சண்டை ஏற்பட்டாலும் பகையாய் நீடிக்காது .சேர்ந்து விளையாடுவதில் உற்சாகமே மிகுதி . இவற்றை நினைவு கூர்ந்து எழுதுகையில் சிறு வயதுக் காலத்துக்குப் போகிறேன் . ஆட்டத் தோழர்களையும் மனக் கண்ணில் காண்கிறேன் . யாவரும் காலமாகிவிட்டனர் . இன்னம் ஒரு விளையாட்டு பாக்கி இருக்கிறது .

      Delete
  3. பையன்கள் கோலிக்குண்டு விளையாடுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவ்விளையாட்டைப் பற்றி ஒன்றும் தெரியாது. இலக்கியங்களில் பெண்கள் பந்து விளையாடியது பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறதா? பழங்கால தமிழகத்தைப் பொறுத்தவரை பந்து என்பது ஆண்களுக்கே உரித்தான விளையாட்டு என்று தான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். அக்காலத்தில் ஆண்பிள்ளைகளுக்குப் பந்தும் சிறுமிகளுக்குச் சமையல் செய்ய செப்பு சாமான்களும் வாங்கிக் கொடுப்பர். பழைய நினைவுகளை எழுதும் போது அக்காலத்துக்குச் சென்று வருவதாய் எழுதியிருக்கிறீர்கள். ஆட்டத்தோழர்களைப் பற்றியும் ஆட்டத்தின் போது நடந்த சுவாரசியமான மறக்க முடியாத சம்பவங்களை எழுதுங்களேன்.

    ReplyDelete
  4. பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி . பெண்கள் பந்து அடித்தமைக்கு இரு சான்றுகள் : 1 - திருப்பாவை 18 ஆம் பாடலில் , " பந்தார் விரலி " என ஒரு பெண்ணைத் தோழி விளிக்கிறாள் ; பந்து ஆர் விரலி = பந்து நிறைந்த விரல்களை உடையவளே ! அதாவது அடிக்கடி பந்து ஆடுபவள் ; 2 - திருக்குற்றாலக் குறவஞ்சி , 4 ஆம் பா , வசந்தவல்லி பந்தாடலைக் காட்சிப்படுத்துகிறது :
    நத்தணி கரங்கள் சேப்ப நாலடி முன்னே ஓங்கிப்
    பத்தடி பின்னே வாங்கிப் பந்தடி பயில்கின் றாளே .
    ( நத்து அணி = சங்கு வளை அணிந்த ; சேப்ப = சிவக்க ; ஓங்கி = பாய்ந்து ; வாங்கி = நகர்ந்து .)
    முன்னும் பின்னும் ஓடிப் பந்தடித்தாள் .
    ஆட்டத் தோழர்கள் என்னுடன் பயின்றவர்கள் அல்ல ; கூடிக் கலைவோம் ; மற்றபடி அவர்களைப் பற்றிய விவரம் தெரியாது . ; சுவையான நிகழ்ச்சிகள் நடந்திருக்கும் ; எல்லாம் மறதியில் மூழ்கின ; முக்கால் நூற்றாண்டு ஓடிவிட்டதே ! பெயர்கள் மட்டும் நினைவில் உள்ளன .

    ReplyDelete
    Replies
    1. பெண்கள் பந்து விளையாடியதை எடுத்தியம்பும் இலக்கியச் சான்றுகளை அளித்தமைக்கு மிக்க நன்றி.

      Delete
    2. பாராட்டிக் கருத்துரைத்தமைக்கு பதில் நன்றி .

      Delete

  5. ----------------------------------------------------
    ----------------------------------------------------

    [7] ஆடுவோமே ஊஞ்சல்

    தேன் சிந்தும் மலர்ச் சோலய்யின் ஓங்கிய மரக் கிலய்யில், னீன்டு தொங்குமாரு, வெலிச்சம் பொருந்திய மனிக்கல் பதிக்கப்பட்ட எலில் மிகு ஊஞ்சலய் அமய்த்து, அதன் மீது மிக்க ஆவலோடு அமர்ந்தவராக, எலில் மிகு இலய்ய மகலார் மலர்விலியார், எலிலுடன் தோன்ரி ஆடிப் பாடி மகிலலாயினார். தோலியீர்! குட கடலில் ஓயாது இன்னல் செய்த கடல்குரும்பரய் வென்ரு அடக்கிய, குட புலக் காவலராம் சேரப் பேரரசர் இமயவரம்பர் னெடுஞ்சேரலாதரின் பெருமய்யினய்ப் பாடி ஊஞ்சல் ஆடுவோமே. அருல் மிகு னீல்விலியினது, கருவிலி அசய்ந்தாட ஊஞ்சல் ஆடுவோமே. வானகத்திலே தோன்ரலாகும் குடபுலக் காவலராம் சேரப் பேரரசரின் சின்னமான, எலில் மிகு வான் அலாவிய வில்லினய்ப் பாடி ஊஞ்சல் ஆடுவோமே. சேரர் என்ரும், பொரய்யர் என்ரும், மலய்யர் என்ரும் பெயர் கொன்ட, குட புலக் காவலரின் திரன் பாடி ஊஞ்சல் ஆடுவோமே. கார்முகில் போலும் னீன்டு விரிந்த கரிய கூந்தல் அசய்ந்தாட ஊஞ்சல் ஆடுவோமே. கடல்குரும்பரய் வென்ரு அடக்கிய குட புலக் காவலரின் திரன் பாடி ஊஞ்சல் ஆடுவோமே. னீதிமுரய் பிரலாமல் மக்கலய்க் காக்கும் சேரமான் திரன் பாடி ஊஞ்சல் ஆடுவோமே. மின்னல் கொடி போலும் சிட்ரிடய் அசய்ந்தாட ஊஞ்சல் ஆடுவோமே. வெட்ரி பொருந்திய, வில் கொடியய்ப் பாடி ஊஞ்சல் ஆடுவோமே.

    "மனி ஊசல் மேல் இரீஇ,
    கடம்பு முதல் தடிந்த காவலரய்ப் பாடி,
    னெடுங் கன் பிரல ஆடாமோ ஊசல்,
    வில் (கொடி) பாடி, ஆடாமோ ஊசல்.
    சேரர், பொரய்யர், மலய்யர், திரன்பாடி,
    கார் குலல் ஆட ஆடாமோ ஊசல்,
    கடம்பு (வென்ரவர்) பாடி, ஆடாமோ ஊசல்.
    மன்பதய் காக்கும் மன்னர் திரன்பாடி,
    மின் இடய் னுடங்க ஆடாமோ ஊசல்,
    வில் கொடி பாடி, ஆடாமோ ஊசல்."
    (சிலம்பு, காதய்: 29, பாடல்: ஊசல்)


    ஊஞ்சல் பாடல் (Swing Poem)
    http://ulikininpin12.tumblr.com/


    ----------------------------------------------------
    ----------------------------------------------------

    ReplyDelete