Friday 26 May 2017

நூல்களிலிருந்து --- 13

சி.வை.தாமோதரம்பிள்ளை


(பழங்காலத் தமிழ் நூல்கள் அழிந்து போகாதபடி, சுவடிகளைத் தேடித்தேடிக் கண்டுபிடித்து அச்சிலேற்றிய அரும் பெரும் பணியை ஆற்றியவர் உ.வே.சாமிநாதையர். அதே பணியில் மும்முரமாய் ஈடுபட்ட இன்னொருவர், யாழ்ப்பாணத்தில் பிறந்து, தமிழகத்துக்கு வந்து, உயர்கல்வி கற்றுப் புதுக்கோட்டையில் நீதிபதியாய் விளங்கிய சி.வை.தாமோதரம்பிள்ளை (1832 - 1901).  இவரது தொண்டின் பெருமையை எஸ்.வையாபுரி பிள்ளை, தம் 'தமிழ்ச் சுடர்மணிகள்' என்னும் நூலில் எடுத்துக்காட்டியுள்ளார். அதன் ஒரு பகுதி இது)

 "முயற்சியில் நேர்ந்த இடையூறுகள் பல.

 முதலாவது ஏட்டுப் பிரதிகள் கிடைப்பது அரிதாயிருந்தது. பரம்பரை வித்வான்களது இல்லங்கள்தோறும் பிரதிகள் தேடுவது அவசியமாயிற்று.  உற்ற நண்பர்கள் அங்கங்கேயிருந்து உதவி புரிந்தனர்; இந்நண்பர்களுக்குப் பிரதிகளை நேரிற்பரிசோதிப்பது பெரும்பாலும் இயலாத காரியமாயிருந்தது; இதனால் ஏடு பெறும் முயற்சி முற்றும் நன்கு நிறைவேற வழியின்றிப் போயிற்று. ஏடுகளுக்கு உரியவர்களும் அவற்றைக் கொடுக்க விரும்பவில்லை.

இரண்டாவதாக, பிரதிகளைப் பரிசோதித்துப் பலபடியாய் ஆராய்ந்து வழுவறப் பிரதி செய்வது. அக்காலம் ஏடு வாசித்தல் வழக்காறற்றுப் புதியதொரு கலையாய்த் தோன்றிவிட்ட காலம்! தற்போது அச்சிற் கிடைக்கும் பல இலக்கியங்கள் பெயர்கூட அறியப்படாமல் இருந்த காலம்! தக்க பாண்டித்தியம் இருந்தாலன்றி நூல்களைப் பதிப்பிடல் இயலாததாம்; அவ்வகைப் பாண்டித்தியம் உள்ள உதவியாளர்கள் பிள்ளையவர்களுக்குக் கிடைக்கவில்லை; இவரே ஏடு பார்த்துப் பிரதி செய்து பொருள் ஆராயவேண்டியதாயிற்று.

 மூன்றாவதாக, நூல்களைப் பதிப்பிடுதலின் செலவு.

 நான்காவதாக, எத்துணையோ சிரமமெடுத்து நூல்களை வெளியிட்டபோதிலும் அதற்குக் கைம்மாறாகக் கிடைத்தது வசவுரைதான்; ஆங்கிலங் கற்ற தமிழ் விற்பன்னர்கள் உதாசீனமாயிருந்தார்கள்; தமிழ் கற்ற பண்டிதர்களிற் சிலர் பொறாமை மிக்குப் பகை காட்டினார்கள்; ஒருசில அறிஞர் தமிழ் நூல்களை வெளியிடத் தங்களுக்குத்தான் தனியுரிமை உண்டென்று கருதினார்கள்; இவர்கள் செய்ததெல்லாம் குறை கூறிக்கொண்டிருந்ததேயாம். பிறரைக் குறை கூறுவதே பாண்டியத்தின் முக்கிய லட்சணமென்ற கொள்கையுடையோரால் தமிழில் இலக்கியச் செல்வம் எந்நாளேனும் பெருகுவதாகுமா? ஆனால் பிள்ளையவர்கள் கண்டனவுரை, வசவுரை முதலிய இடையூறுகளை யெல்லாம் பொருட்படுத்தியவர்களே யல்லர்.  

 தொல்காப்பியம், கலித்தொகை, சூளாமணி யென்பன அவர்கள் தந்த தனிப் பெருஞ் செல்வங்களுட் சிறந்தன. தமிழன்னையின் அருங்கலமாகத் திகழும் இந்நூல்கள் உள்ளவரை இவர்கள் புகழும் நின்று நிலவுவதாகும்".


                        ++++++++++++++++++++++++

12 comments:

  1. Replies
    1. அருமை எனப் பாராட்டிக் கருத்துத் தெரிவித்தமைக்கு மிகுந்த நன்றி .

      Delete
  2. உ.வே.சாமிநாதையர் படத்தை வெளியிட்டு அதன் கீழே சி.வை.தாமோதரம்பிள்ளை என எழுதியுள்ளீர்கள், ஐயா.

    இந்தப் படத்தைப் பார்ப்போருக்கு கொஞ்சம் குழப்பத்தைத் தரலாம்.

    தமிழுக்காக உண்மையிலேயே பாடுபட்டுள்ள இவர்களைப் பற்றி தங்கள் வாயிலாக இந்தப்பதிவின் மூலம் மேலும் கொஞ்சம் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

    தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை முழுமையாக நான் படித்து வியந்துள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவேண்டும் கோபு சார். தவறு என்னுடையது. ஐயா தமது பதிவை தட்டச்சு செய்து எனக்கு அனுப்புவார்கள். உகந்த படத்தைத் தேர்ந்தெடுத்து பதிவோடு அவர்களுடைய இந்த வலைத்தளத்தில் வெளியிடுவது என் பொறுப்பு.

      சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் படத்தை இணையத்தில் தேடியபோது தினகரன் வாரமஞ்சரியில் வெளியான இப்படத்தைப் பார்த்தேன். தினகரனின் மீதான நம்பகத்தன்மையினால் இத்தவறு நேர்ந்துவிட்டது. தற்போது மாற்றிவிட்டேன். சுட்டியமைக்கு மிக்க நன்றி.

      நான் படத்தை எடுத்த தளத்தின் முகவரி இதுதான்.

      http://www.vaaramanjari.lk/2017/04/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88

      Delete
    2. தவற்றைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி . படம் மாறியதற்கான காரணத்தைக் கீதமஞ்சரி தெரிவித்துள்ளது . தவறுதல் மனித இயல்பு . உ.வே. சா . அவர்களின் என் சரித்திரம் : நானும் முழுமையாக வாசித்திருக்கிறேன் . தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் அவருக்கு நிகர் யாருமில்லை என்பது என் கருத்து . பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .

      Delete
    3. தவற்றுக்காக வருந்தவேண்டாம் ; தவறுதல் இயல்பு . பல ஆண்டுகளுக்குமுன் வெளிவந்த காங்கிரஸ் மலரில் புலுசு சாம்பமூர்த்தி என்னும் தலைவரின் படத்தின்கீழே காமராஜ் எனக் குறித்திருந்தனர் .

      Delete
  3. //கீத மஞ்சரி 27 May 2017 at 09:40
    மன்னிக்கவேண்டும் கோபு சார். தவறு என்னுடையது. ஐயா தமது பதிவை தட்டச்சு செய்து எனக்கு அனுப்புவார்கள். உகந்த படத்தைத் தேர்ந்தெடுத்து பதிவோடு அவர்களுடைய இந்த வலைத்தளத்தில் வெளியிடுவது என் பொறுப்பு.

    சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் படத்தை இணையத்தில் தேடியபோது தினகரன் வாரமஞ்சரியில் வெளியான இப்படத்தைப் பார்த்தேன். தினகரனின் மீதான நம்பகத்தன்மையினால் இத்தவறு நேர்ந்துவிட்டது. தற்போது மாற்றிவிட்டேன். சுட்டியமைக்கு மிக்க நன்றி. //

    இதுபோன்ற தவறுகள் ஏற்படுவது யாருக்குமே மிகவும் சகஜமே. அதற்காக தாங்கள் தயவுசெய்து வருந்த வேண்டாம். இப்போது சரிசெய்து விட்டதாகச் சொல்லியுள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியே.

    தமிழ்த்தாத்தா உ.வே.சா. ஐயர் அவர்களின் உருவமும் படங்களும் என் மனதில் பதிந்து போனவைகள் என்பதால் என்னால் உடனே சுட்டிக்காட்ட முடிந்தது.

    சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் படத்தை நான் இதுவரை பார்த்ததும் இல்லை. அவரைப்பற்றி நான் இதுவரை கேள்விப்பட்டதும் இல்லை. இந்தப் பதிவின் மூலம் மட்டுமே நான் கொஞ்சம் தெரிந்துகொள்ள முடிகிறது.

    அன்புடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. தவறுகளைச் சுட்டிக் காட்டுவது நற்செயல் ; அவற்றைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு நேர்கிறதல்லவா ? தொடர்ந்து அச்செயலைச் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் .

      Delete
  4. “பிறரைக் குறை கூறுவதே பாண்டியத்தின் முக்கிய லட்சணமென்ற கொள்கையுடையோரால் தமிழில் இலக்கியச் செல்வம் எந்நாளேனும் பெருகுவதாகுமா?”
    மிகச்சரியான கூற்று. எக்காலத்துக்கும் பொருந்தும் உண்மை.
    சி.வை.தாமோதரம் பிள்ளையவர்கள் ஆற்றிய அரும்பணியை அறியச்
    செய்தமைக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் , எக்காலத்தும் பொருந்தும் ; ஒரு முனைவர் இயற்றிய முக்கிய நூலொன்றைப் பற்றி இன்னொரு முனைவரிடம் நான் சொன்னபோது , அவர் சொன்ன பதில் : நான் அதைப் பார்க்கவில்லை ; என்ன எழுதியிருக்கப் போகிறார் ? வேறு நூல்களைத் தழுவி எழுதியிருப்பார் " என்று அலட்சியமாய்ச் சொன்னார் . பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

      Delete
  5. நான் அறியாத தகவல்கள். பகிர்வுக்கு நன்றி அய்யா

    ReplyDelete
    Replies
    1. வருக , வருக ! உங்கள் பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .

      Delete