Monday 25 November 2019

தேளும் நானும்







என் காரைக்கால் ஓட்டு வீட்டில் கரப்பான் பூச்சிகள் ஏராளமாய்க் குடியிருந்தன; அவற்றை வதஞ் செய்வதற்கு இரவு நேரங்களில் வெளிப்பட்ட தேள்களுக்கும் பஞ்சமில்லை; இவை கதவில் சுவரில் தங்கி இரைக்காகக் காத்திருக்கும்; இல்லத்தாரை அடிக்கடி கொட்டிவிடும். மின்சாரமற்ற அந்தக் காலத்திலே, மண்ணெண்ணெய் விளக்குகள் உமிழ்ந்த வெளிச்சம் மங்கலானது ஆதலால் வீட்டின் சில பகுதிகள் இருளில் மூழ்கியிருக்கும். அந்த இருட்டுச் சூழ்நிலை தேளுக்கு வசதியானது; அதன் தாக்குதலுக்கு அதிகமாக ஆளாகிறவர்கள் பெண்களே; ஏனெனில் அவர்களுக்குத் தானே அங்குமிங்கும் நடமாட வேண்டிய அவசியம் உண்டு?

  பல வீடுகளில் அடுக்குப் பானை அறை என்றோர் அறையிருந்தது: அரிசி, துவரை, உளுந்து, புளி முதலியவற்றை சீசன் சமயத்தில் குறைந்த விலையில் பெரிய அளவில் வாங்கி ஸ்டாக் செய்வார்கள்; ஒவ்வொரு பானையிலும் ஒவ்வொரு சரக்கு; சொந்தத் தயாரிப்பான வற்றல்கள், வடகம், அப்பளம் முதலானவையும் பானைகளுக்குள் அடக்கம்.  

  ஒரு பெரிய உறுதிவாய்ந்த பிரிமணையைத் தரையில் இட்டு அதன் மேல் பெரும்பானை யொன்றை வைத்தால் அது ஆடாமல் அசையாமல் நிலைத்து நிற்கும்; அதன்மீது சிறிய பானை, இதன் மேல் இன்னுஞ் சிறியது என அடுக்குவார்கள். இப்படி மூன்று நான்கு அடுக்குகள் சுவரையொட்டி வரிசையாக நிற்கும்; இந்த இடமும் தேளுக்குப் பிடிக்கும்.

  அடிப் பானையிலுள்ள பொருளை எடுப்பதற்கு, மேலிருக்கும் பானைகளை ஒவ்வொன்றாய் இறக்கி வைத்து, வேலை முடிந்ததும் மறுபடி அடுக்க வேண்டும். பகல் வெளிச்சத்தில் பிரச்சனை இருக்காது; இரவில் மங்கிய விளக்கொளியில் தேளிருப்பது தெரியாது; அதை நம் கை தொட்டுவிடுவது சகஜம்.

  பாரதியார், தம்கண்ணன் என் சேவகன்பாட்டில் வேலைக்காரன் மட்டம் போடுவதற்குக் காரணம் பானைத் தேள் கொட்டியமை என்று சாக்கு சொல்வான் என்கிறார்:

ஏனடா நீ நேற்றைக்கு இங்குவர வில்லை யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லாற் கடித்த தென்பார்

பணியாள் கூறியமை மெய்யாகவும் இருக்கலாம்.

  தேளுக்குப் பலியானவர்கள் வலியால் துடிப்பார்கள்; தக்க மருத்துவம் எதுவுமில்லை. தாக்கிய தேளைத் தேடினால் சில சமயம் சிக்கும்; அடித்து விடுவோம். நான் ஏராளத் தேள்களைத் துவம்சம் செய்திருக்கிறேன். ஒரு தடவை கூடக் கொட்டுப்பட்டதில்லை, என் 36 ஆம் வயது வரை. (1962 வரைக்கும்)

  அந்த ஆண்டு மேத் திங்களில் புலவர் பட்டத்துக்கான இறுதித் தேர்வை எழுதுவதற்காகக் கும்பகோணம் சென்று தேர்வுக் கூடத்துக்கு அருகிலிருந்த ஓர் உணவகத்தில் தங்குவதற்கான ஏற்பாடு செய்துகொண்டேன். அங்கிருந்தது ஒரேயோர் அறை; அதுவும் மொட்டை மாடியில். பேருந்து முதலிய ஊர்திகள் தோன்றாத அக்காலத்தில் அதிகப் பேர் பயணிக்கவில்லை யாதலால் கும்பகோணம் போன்ற பெரிய நகரங்களிற் கூடத் தங்கும் அறைகள் அபூர்வமாய்த் தான் காணப்பட்டன.

  ஆறு நாள் தேர்வு; டவுன் ஹைஸ்கூல் என்னும் பள்ளிக்கு நடந்தே போய் எழுதினேன்.

  மூன்று தாள் மன நிறைவுடன் எழுதி முடித்தபின் அடுத்த நாளுக்கான கல்வெட்டுகள் என்ற பாடத்தினை மீள்பார்வையாய்ப் படித்தேன்; 30 பாடங்களுள் கிட்டத்தட்டப் பாதியை நன்கு நினைவுபடுத்திக் கொண்டவுடன் அறையிலிருந்து வெளியேறி மாடியில் உலாவியபடி படித்தவற்றை அசைபோட்டுக் கொண்டிருந்தேன். நடமாட அதிக இடமில்லை; பூச்சட்டிகள் ஆக்ரமித்திருந்தன. திடீரெனத் தீயை மிதித்தது போல் காலைச் சடாரெனத் தூக்கிக்கொண்டேன். இருட்டு: என்னவென்று தெரியவில்லை. வலி தொடங்கியதும் புரிந்தது. தேளின் வேலை! பழி தீர்த்துக் கொண்டது!

  உடனே அறைக்குள் ஓடி அமர்ந்து காலைத் தூக்கி பெஞ்ச் மேல் வைத்துக் கணைக்காலைக் கைவிரல்களால் சுற்றி வளைத்து அமுக்கிப் பிடித்துக் கொண்டேன். நஞ்சு ஏறாமலிருக்கக் கட்டுப் போடலாமென்று தெரியும்; துணிக்கு எங்கே போவது? ஆகையால்தான் விரல்களைப் பயன்படுத்தினேன். கடுப்பு மேலே ஏறவில்லை. எவ்வளவு காலம் இவ்வாறு பிடித்துக் கொண்டிருக்க முடியும்?

  டாக்டரிடம் போனால் ஏதாவது சிகிச்சை செய்யக்கூடுமல்லவா? எழுந்து கதவைப் பூட்டிக்கொண்டு படியிறங்கியபோது வலி விறுவிறு என்று ஏறியது; சமாளித்தபடி கீழே வந்து ஓட்டலதிபரிடம் விசாரித்ததில் தெருக் கடைசியில் ஒரு டாக்டர் இருப்பதறிந்து மாட்டு வண்டியொன்றில் புறப்பட்டேன். (அப்போதெல்லாம் சில ஊர்களில் மாட்டு வண்டி, வேறு ஊர்களில் குதிரை வண்டிதான் வாடகை ஊர்திகள்.)

  டாக்டர் கால் விரலில் ஊசி போட்டார்; உடனடியாய் வலி நின்றது; ஆகா! இதுவல்லவோ வைத்தியம்! தேர்வுக்குப் படிக்க இனித் தடையில்லை.

  இரண்டு ரூபாய் பெற்றுக்கொண்ட டாக்டர் குண்டைத் தூக்கி வீசினார்:

  அதிக நேரந் தாங்காது! விரல்களில் ஐஸ் கட்டி வைத்துக்கொள்ளுங்கள்!”

  அடக் கண்ணராவியே! இதற்கா மெனக்கெட்டேன்? கடைகள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன. ஐஸ்க்கு வழியில்லை.

  அறைக்குத் திரும்பிய சிறிது நேரத்தில் கடுப்பு தொடங்கிவிட்டது. “போச்சு! பரீட்சை போச்சு!” என்ற துயரம் ஒரு புறம், முன் அனுபவம் இன்மையால் மேற்கொண்டு என்னென்ன செய்யுமோ என்ற திகில் ஒரு புறம் (தேள் கொட்டிச் சிலர் இறந்தமை எனக்குத் தெரியும்). துணையில்லாத துரதிர்ஷ்டத்தை எண்ணிக் கலங்கினேன். “சரி, மனந் தளரக்கூடாது; அது பாட்டுக்கு வலிக்கட்டும், நான் பாட்டுக்குப் படிப்பேன்!” என்று துணிச்சலை வரவழைத்துக்கொண்டு புத்தகத்தைத் திறந்து பார்த்தால் எழுத்துகள் நடனமாடுகின்றன! வாசிக்க முடியவில்லை.

  படிக்க இயலவில்லையே! வேறு என்ன செய்யலாம்? தூங்கி விடுவோம்! நேரம் ஆக ஆக வலி குறையும். அதிகாலையில் நிலைமை மேம்பட்டிருக்கும்; அப்போது எழுந்து படிப்போம்என முடிவு செய்து பெஞ்சில் படுத்தேன் (கட்டில் இல்லை).

  விண்விண் என்று தெறிக்கும்போது உறங்குவது சாத்தியமா? சாதாரணப் பல்வலியே தூக்கத்தை விரட்டிவிடும். வேறு வழியில்லை. கண்ணை மூடிக்கொண்டு கஷ்ட காலத்தை சபித்தவாறு புரண்டுகொண்டிருந்தேன். என்னை யறியாமல் உறங்கிவிட்டேன். அதிகக் காலம் ஆகியிருக்காது. விழிப்பு, வலி. மீண்டும் கண்ணயர்தல், விழிப்பு. இப்படிச் சில தடவை.

  ஒரு வழியாய் 4 மணிக்கு எழுந்து படிக்க முயன்றேன்; முடிந்தது; வலியும் மட்டுப்பட்டிருந்தது; ஆனால் பாதத்தில் வீக்கம், தொங்கவிட்டால் அதிக வலி.

  மாட்டு வண்டியிற் போய் எழுதினேன். காலைக் கீழே வைத்தால் விண்விண்! தூக்கி அந்தரத்தில் தொங்கவிட்டபடி மிக்க சிரமத்துடன் ஆனால் நல்லவண்ணம் முடித்தேன்.

  அன்று மாலை. விபத்து நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்டேன். பூச்சட்டி ஓரத்தில் ஒரு தேள்! வாலைத் தூக்கிக் கொண்டு ஓய்வெடுத்தது. அதே தேளா, வேறொன்றா? எதுவானால் என்ன? செருப்பால் அடித்தேன், ஒழிந்துபோ!
 
  ரிசல்ட் வந்தது: தேறிவிட்டேன்!

  93 வயது வாழ்வில் அந்த ஒரு தடவைதான் தேளால் தாக்குண்டேன்.

&&&&&
(படம் உதவி - இணையம்)

14 comments:

  1. அந்தக்கால அனுபவங்கள்சுவையாய் இருக்கின்றன நிறையப் பகிரலாமே தேள்கொட்டிய வலி எப்படி நின்றது

    ReplyDelete
    Replies
    1. நிறையப் பகிர்ந்திருக்கிறேன் .வலி 24 மணி நேரம் நீடிக்கும் என்பார்கள் ; வரவரக் குறைந்துகொண்டே வந்து நீங்கும் .

      Delete
  2. 68ல் 36 என்றால்பிறந்தது 1932 லா எங்கோ இடிக்குதே இப்போ 94 என்பது

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்க வேண்டும் ; அச்சுப் பிழை .அப்போது 1962 ; இப்போது 93 முடிந்து 94 நடக்கிறது ; 2020 பிப்ரவரியில் 95 இல் அடியெடுத்து வைப்பேன் என நம்புகிறேன் அதுவரை ஆயுள் நீடிக்க வேண்டும் .

      Delete
  3. மறக்க முடியாத அனுபவம்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஒரு தடவை அனுபவமல்லவா ?

      Delete
  4. 57 வருடங்களுக்கு முந்தைய சம்பவத்தையும் நேற்று நடந்தாற்போல நினைவிலிருந்து எழுதியமை சிறப்பு. தேள் கடி என்பதை ஊகித்து தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டது வியப்பு. கொடுமையான வலியினூடே தேர்வெழுதித் தேறியது பெரும் சாதனைதான்.

    ReplyDelete
  5. மனத்தில் ஆழமாய்ப் பதிந்திருப்பதால் எழுத முடிந்தது ;தேர்வில் தோல்வி எனில் ஓராண்டு காத்திருக்க வேண்டியிருக்குமே !மூன்று குழந்தைகளுக்குத் தந்தையாய் , இல்லறக் கடமைகளையும் ஆசிரியப் பணியையும் ஆற்றிக்கொண்டு , படிப்பதற்கு அதிக நேரம் இல்லா நிலையில் ஒரு வருஷத்தை இழக்கக் கூடாது என்ற அழுத்தமான எண்ணமே என்னை ஆட்கொண்டிருந்தது .

    ReplyDelete
  6. தங்களின் ஞாபக சக்தி வியக்க வைக்கிறது ஐயா...

    ReplyDelete
    Replies
    1. ஏதோ நினைவில் உள்ளவற்றைப் பதிகிறேன் .

      Delete
  7. இக்காலக் குழந்தைகள் தேளைப் பார்த்திருக்கவே மாட்டார்கள். ஓட்டு வீடு போனவுடன் தேளும் போய்விட்டது. தனியாளாயிருக்கும் போது தேள்கடிக்கு ஆளானது துரதிர்ஷ்டமான விஷயம் தான். வலியைத் தாங்கிக்கொண்டு தேர்வையும் எழுதித் தேர்வானது சாதனை தான்.

    ReplyDelete
    Replies
    1. தேறியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் .

      Delete
  8. தேள் கதை சொல்லிக் கொண்டு போன விதம் சிறப்பாக இருக்கிறது. இந்த வலியோடு பரீட்சையும் எழுதியிருக்கின்றீர்களே. நாம் என்றால் இந்த சாட்டை வைத்துக் கொண்டு ஒரு வாரம் இழுத்திருப்போம். அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதும் சிறப்புத்தான்

    ReplyDelete
    Replies
    1. வருக , வணக்கம் ; உங்கள் பாராட்டுரைக்கு மிகுந்த நன்றி. நான் தேர்வு எழுதியே ஆகவேண்டும் , தேறியாக வேண்டும் என்ற கட்டாயச் சூழல் . தாமதமாய் உங்கள் கருத்தைக் கவனிக்க நேர்ந்தமைக்கு வருந்துகிறேன் .

      Delete