Saturday 26 November 2011

கஜினி முகமது


ஆப்கானிஸ்தானத்தில் கஜினி என்னும் ஊரைத் தலைநகராய்க் கொண்டு அரசு புரிந்தவன் கஜினி. வரலாற்றில் கஜினி முகமது என்று அழைக்கப்படும் அவன் 17 முறை இந்தியாவின் மீது படையெடுத்தான் என்பது பரவலாய்த் தெரிந்த செய்தி.


16 முறை தோற்றும் விடாமல் முயன்று, அடுத்த தடவை வென்றான் என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு திரைப்படப் பாடல்,

முகமது கஜினியை மறந்திடலாமோ?
முயன்றால் பதினேழு முறை முயன்றால்...
செயல் கை கூடும் என்று அறிவுரை கூறுகிறது.

தோற்றோரியல் பள்ளி (Tutorial schools) களில் கஜினி முகமதுவின் படத்தை மாட்டுவது பொருத்தம் என்று ஒரு பத்திரிக்கைத் துணுக்கு தெரிவித்தது.

விடாமுயற்சி பற்றிய கட்டுரையில் மாணவர்கள் கஜினி முகமதுவை எடுத்துக் காட்டாய் எழுதுவதுண்டு.

பலமுறை தேறாமல் போய் மீண்டும் மீண்டும் தேர்வு எழுதுபவரைக் கஜினி முகமது போல் படையெடுக்கிறார் என்று சொல்லிக் கிண்டல் செய்வோர் உண்டு.

ஆனால் கஜினி முகமது பற்றிய இந்தக் கருத்து அடியோடு தவறு; அவன் மாவீரன்; போர்க்கலையில் வல்லவன்; அவனை எந்த இந்திய மன்னனும் வென்றதில்லை. அதாவது, தன் படையெடுப்புகளில் வெற்றி மீது வெற்றி பெற்றுத் தன் பெயரைக் கேட்ட அளவிலேயே மன்னர்க அஞ்சி நடுங்கி ஓடுகிற நிலைமையை உண்டாக்கிய தீரன்.

அவனது படையெடுப்புகள் கி.பி. 1000 முதல் 1025 வரை நிகழ்ந்தன. அவை பற்றிய சுருக்கமான தகவல்களைக் கீழே காணலாம்:-

1. ஆப்கானிஸ்தானிய இந்திய எல்லைப் பகுதிகளில் பலகோட்டைகளும், மாவட்டங்களும் கைப்பற்றப் பட்டன.

2. பெஷாவர் மன்னன் ஜெய்பால் கைது, அவனது 15000 வீரர்கள் சாவு.

3. பீராவின் மன்னன் தோற்றோடித் தற்கொலை செய்து கொண்டான்.

4. பஞ்சாப் மன்னன் அனந்துபால் காஷ்மீர் வரை துரத்தப்பட்டான்.
மூல்டான் மன்னன் அப்துல் பத்தா தவுதை வென்று கஜினி
மூல்டானைக் கைப்பற்றினான்.

5. மூல்டானின் அரசனாய்க் கஜினி முகமதுவால் நியமிக்கப்பட்டிருந்த
அக்பால் சுதந்திரப் பிரகடனம் செய்யவே, முகமது படையெடுத்து
வந்து அவனைக் கைது செய்து சிறையிலடைத்தான்.

6. பெஷாவர் மன்னன் ஜெய்பாலின் மகன் அனந்துபால்
தோற்றோடினான்.

7. கங்கரா மலையில் நாகர்கோட் கோட்டை கைப்பற்றப்பட்டது.

8. மீண்டும் மூல்டான் மீது படையெடுப்பு, அரசன் தவுது தோற்றான்.

9. அனந்துபாலின் மகன் திரிலோச்சனபால் தோற்றுக் காஷ்மீருக்கு
ஓடினான். முகமது அவனை விரட்டிச் சென்று அவனது
படைகளையும், உதவிக்கு வந்த காஷ்மீர் மன்னன் படைகளையும்
ஒரு சேர முறியடித்தான்.

10. தானேஸ்வரத்துக் கோட்டை கைப்பற்றப்பட்டது.

11. காஷ்மீர் படையெடுப்பு கைப்பற்ற இயலவில்லை.

12. கனோஜ் மீது தாக்குதல். கஜினியிலிருந்து புறப்பட்ட முகமது
வழியிற் கண்ட கோட்டைகளை எல்லாம் கைப்பற்றிக் கொண்டு
வந்து பரன் (Baran) என்னும் ஊரை அடைந்தான். மன்னன்
அரதத்தன் அடிபணிந்து இஸ்லாத்தைத் தழுவினான். மகாவான்
அரசன் குலாச்சந்தை முகமது தாக்கினான். குலாச்சந்து தோற்றுப்
போய் தன் மனைவியைக் கொன்று தானும் தற்கொலை செய்து
கொண்டான்.

13. மதுரா படையெடுப்பு; நகரம் முழுதும் அடையாளம் காண
முடியாதவாறு அழிக்கப்பட்டது.

14. முகமதுவின் வருகையை அறிந்த பிருந்தாவன் மன்னன்
ஓடிப்போனான். எல்லாக் கோட்டைகளும் அழிக்கப்பட்டன.

15. சந்தேளா நாட்டு வேந்தன் கோண்டா புறமுதுகிட்டான்.

16. குவாலியர் அரசனை வென்ற பின்பு முகமது தொடர்ந்து சென்று
களிஞ்சர் கோட்டையைப் பிடித்தான்.

17. சோமநாதபுரப் படையெடுப்பு; வழியிலிருந்த அனில்வாராவை
முகமது அடைந்ததும், அதன் மன்னன் ராஜா பீமதேவ் ஊரை
விட்டோடினான். அவ்வூரை அழித்துவிட்டு முகமது,
சோமநாதபுரத்தை வசப்படுத்தினான். அதன் பின்பு அனில்வாரா
அரசன் ஒளிந்திருந்த கண்டா கோட்டை நோக்கி முன்னேறினான்.
அரசன் ஓடிவிடவே நாட்டை முகமது கைப்பற்றினான்.


ஒவ்வொரு படையெடுப்பின் இறுதியிலும், முகமது ஏராளமான பொன், வெள்ளி, வைரம் முதலிய விலை மதிப்புடைய பொருளை வாரிச் சென்றான். நாடு பிடிக்கும் நோக்கம் அவனுக்கில்லை. செல்வக் கொள்ளையே குறிக்கோள். அதில் அவனுக்கு முழு வெற்றி.

11 ஆம் படையெடுப்பில் மட்டுமே முகமதுக்கு வெற்றி கிட்டவில்லை. அதைத் தோல்வியெனல் பொருந்தாது. காஷ்மீர் மன்னன் படையெடுத்துச் சென்று வெல்லவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இவனது தற்காப்பு முயற்சி வென்றது. அவ்வளவே.

(’உண்மையில் எழுதி வெளிவந்தது. 16.06.1993.)

(ஆதாரம்: வி.டி.மகாஜன் எழுதிய Muslim Rule in India. ஆறாம் பதிப்பு.1975)

3 comments:

  1. ஒவ்வொரு முறையும் தன் முயற்சியில் வெற்றி பெற்று தான் நினைத்ததை முடித்த ஒருவனைப் பற்றித் தவறான தகவல்கள் எப்படிப் பரவின என்று வியப்பாக உள்ளது. கஜினி முகமது பற்றி உண்மையானத் தகவல்களை அறியச் செய்ததற்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  2. இவ்வளவு விரிவாக இல்லையென்றாலும் கஜினி பற்றி திரு.மதன் அவர்கள் எழுதிய வந்தார்கள் வென்றார்களில் ஓரளவிற்கு விளக்கியுள்ளார்

    ReplyDelete
  3. இவ்வளவு விரிவாக இல்லையென்றாலும் கஜினி பற்றி திரு.மதன் அவர்கள் எழுதிய வந்தார்கள் வென்றார்களில் ஓரளவிற்கு விளக்கியுள்ளார்

    ReplyDelete