Friday, 23 December 2011

அந்த நாள் ஞாபகம் இந்த நாள் வந்ததே!


அவர் ஒரு கிழவர். முதுமையின் மூர்க்கத் தாக்குதலால் நடையுந் தளர, தேக மொடுங்க, நாவது குழற, கண்கள் மங்க”, காதின் திறனும் கால்வாசியாய்க் குறைந்துபோயிற்று. போதாக் குறைக்கு கொட்டிக் குலைக்கும் இருமல் வேறு. மன உரம் மட்டும் மங்காமையால் மூலைப் பாயில் முடங்கிக் கிடக்காமல் முக்காலால் நடமாட முடிந்தது. அவ்வப்போது ஊரினுள் சிற்றுலாப் போவதும் உண்டு.

ஒரு நாள் குளத்தின் பக்கம் சென்றார். வானுற ஓங்கி வளம்பெற வளர்ந்த மருத மரத்தின் நிழலில் அமர்ந்தார். நீரை நோக்கித் தாழ்ந்திருந்த மரக் கிளை யொன்றின்மீது கவனஞ் சென்று நிலைத்து நின்றது.

முன்கால நினைவுகள் மலரத்தொடங்கின; இரக்க உணர்ச்சி மேலோங்கிற்று:

வண்டலால் பொம்மை வனைந்து மலர் சூட்டி இந்தக் குளத்திலே விளையாடிய சிறுமிகளின் கையைக் கோத்துக்கொண்டு நானும் ஆடினேனே! அவர்களைத் தழுவியும் தூக்கிச் சுமந்தும் வஞ்சனை அறியாமல் விளையாடினேன். என் வயது சிறுவர்களுடன் சேர்ந்து இதோ இந்தக் கிளையின்மேல் ஏறி, கரையில் இருந்தோர் பதற, குளத்து நீர் சிதற, நடுப் பகுதியில் துடும் எனப் பாய்ந்து அடிவரை ஆழ்ந்து மணலை யள்ளி எழும்பி, வெளியே தலை காட்டிக் கை தூக்கி விரித்து மண்ணைக் காண்பித்துப் பெருமிதத்தால் விம்மிதமுற்ற அந்த இளமை இன்று எங்கே? அது இனிக் கிடைக்குமா, பூண் போட்ட கம்பை ஊன்றி நடுக்கத்துடன் நடக்கிற, இருமல்களுக்கு இடையே சில சொல் கூறுகிற, மிக முதிய எனக்கு?”

மேற்கண்ட மலரும் நினைவுகளை ஒரு புறநானூற்றுப் பாடல் விவரிக்கிறது. புலவர் பெயர் தெரியவில்லை. அவரது சொற்றொடர் ஒன்று கொண்டு தொடித்தலை விழுத்தண்டினார்என அழைக்கப்படுகிறார்.

பழைய தமிழுக்கு அஞ்சாதார் பாட்டைப் படிக்கலாம்:

இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி
மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறைஉறத் தாழ்ந்து
நீர்நணிப் படிகோடு ஏறிச் சீர்மிகக்
கரையவர் மருளத் திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்துமணல் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே யாண்டூண்டு கொல்லோ
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே?

1 comment:

  1. "கரையவர் மருளத் திரையகம் பிதிர
    நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
    குளித்துமணல் கொண்ட கல்லா இளமை"

    ஆற்றில் சிறுவர்கள் மேலிருந்து குதித்து விளையாடுங் காட்சியை இவ்வரிகள் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. அழகான பாடல். பதிவுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete