Sunday 25 December 2011

போதை தந்த உந்துதல் - பிரெஞ்சு சிறுகதை


(அல்போன்ஸ் தொதே (Alphonse Daudet))
(பிரெஞ்சிலிருந்து தமிழில் - சொ.ஞானசம்பந்தன்)


 ************************************************************************

அங்கே என்ன நடக்கிறது?

கதவொன்றின் முன் பெண்கள் கூட்டம்; நிற்பதும் உரையாடுவதுமாய் இருக்கிறார்கள். ஒரு காவலர், கும்பலின் நடுவில் நின்று கைச்சுவடியில் எழுதுகிறார்.

படகுகாரர் தெரிந்து கொள்ளும் ஆர்வமுடன் தெருவைக் கடக்கிறார்.

என்ன விஷயம்?

நாய் அரைபட்டதோ? வண்டி ஏதாவது சிக்கிக் கொண்டதா? வாய்க்காலில் குடிகாரன் எவனாவது விழுந்தானோ? அப்படியொன்றும் சுவாரசியம் இல்லை....

இல்லை! ஒரு சிறு குழந்தை மர நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறது. கலைந்த தலைமயிர், ஜாம் அப்பிய கன்னங்கள், கை முட்டிகளால் கண்களைக் கசக்கியபடி அழுகிறது. சரியாய்க் கழுவாத பரிதாப முகத்தில் வழிந்த கண்ணீர்த் துளிகள் விசித்திரக் கோடுகளை வரைந்துள்ளன. உணர்ச்சி எதுவும் இன்றியும் ஒரு குற்றவாளியை விசாரிக்கும் தோரணையுடனும், காவலர் அந்தக் குழந்தையிடம் கேள்வி கேட்டுக் குறித்துக் கொள்கிறார்.

"உன் பெயர் என்ன?"

"தொத்தோர்"

"சரி, விக்தோர். என்ன விக்தோர்?"

பதிலில்லை. குழந்தை முன்னிலும் அதிகமாய் அழுது கத்துகிறது: "அம்மா! அம்மா!"

அப்போது அந்தப் பக்கம் வந்த மிக விகாரமான, மிக அசுத்தமான குப்பத்துப் பெண்ணொருத்தி இரண்டு குழந்தைகளை இழுத்துக் கொண்டு கும்பலிலிருந்து வெளிப்பட்டுக் காவலரிடம்,

"என்னிடம் விடுங்கள்" என்று சொல்லிய பின்பு மண்டியிட்டுக் குழந்தையின் மூக்கையும் கண்களையும் துடைத்துப் பிசுப்பிசுப்புக் கன்னங்களில் முத்தமிட்டுக் கேட்டாள்:

"அம்மா பேர் என்ன கண்ணு?"

அதற்குத் தெரியவில்லை.

அக்கம்பக்கத்தாரிடம் காவலர் விசாரித்தார்.

"இந்தாங்க, வாட்ச்மேன்! அவர்களை உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே?"

அவர்களின் பெயர் யாருக்கும் தெரியாது. வீட்டிலே எத்தனையோ பேர் குடி வருகிறார்கள். போகிறார்கள். தெரிந்ததெல்லாம், அவர்கள் ஒரு மாதமாய் வசித்தார்கள், வாடகை பரம் பைசா கொடுக்கவில்லை, உரிமையாளர் அவர்களைத் துரத்தினார், ஒரு பெரிய இடைஞ்சல் நீங்கியது என்பது தான்.

"என்ன வேலை பார்த்தார்கள்?"

"ஒன்றுமில்லை"

"இரண்டு பேரும் பகலைக் குடிப்பதிலும், இரவைச் சண்டை போடுவதிலும் கழித்தார்கள். பிள்ளைகளை அடிப்பதில் தான் அவர்களுக்குள் ஒற்றுமை. இரண்டு பையன்கள்: பிச்சை எடுப்பதும், கடைகளில் திருடுவதும் தொழில். எப்பேர்ப்பட்ட குடும்பம், புரிகிறதா?"

"குழந்தையைத் தேடி வருவார்கள் என்று நம்புகிறீர்களா?"

"நிச்சயமாக இல்லை"

இவனைக் கைகழுவுவதற்குக் குடி போகிற நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டார்கள். வாடகை கொடுக்க வேண்டிய சமயத்தில் இப்படி நடப்பது இது முதல் முறையல்ல.

காவலர் கேட்டார்:

"அப்படியானால் அவர்கள் போனதை யாரும் பார்க்கவில்லையா?"

விடியற்காலையிலேயே அவர்கள் போய் விட்டார்கள், கணவர் வண்டியைத் தள்ளிக் கொண்டு, மனைவி கவுனில் ஒரு பொக்கேவுடன், பையன்கள் கால்சட்டைப் பைகளுள் கைகளுடன். அவர்களைப் பிடிக்க முடியாது.

அநியாயம் என்ற எண்ணத்துடன் மக்கள் நடந்து சென்றார்கள்.

பாவம் அந்தக் குழந்தை! அதன் தாய் நாற்காலியில் உட்கார வைத்து, "சமர்த்தாக இரு!" என்று சொல்லி இருந்தாள். அப்போது முதல் அது காத்திருந்தது.

பசியால் அழவே எதிர்ப் பழக் கடைக்காரி ஜாம் தடவிய ரொட்டித் துண்டு தந்திருந்தாள். அது தீர்ந்து போய் நெடு நேரம் ஆகிவிட்டது. குழந்தை மீண்டும் அழத் தொடங்கிற்று. நிரபராதியான அந்தப் பரிதாபக்குழந்தைக்குப் பயம். தன்னைச் சுற்றிச் சுற்றி வந்த நாய்களால் பயம்; நெருங்கிக் கொண்டிருந்த இரவால் பயம்; தன்னிடம் பேசிய முன் பின் தெரியாதவர்களால் பயம்.

சாகப் போகின்ற குருவியொன்றின் இதயம் போல் அதன் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. அதைச் சுற்றிக் கூட்டம் அதிகரித்தது.

எரிச்சலுற்ற காவலர் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல குழந்தையின் கைகளைப் பற்றினார்.

"என்ன, இதை யாரும் கோரவில்லையே?"

"ஒரு நிமிஷம்!"

எல்லாரும் திரும்பிப் பார்த்தனர். செப்பு வளையங்கள் தொங்கிய காதுகள்வரை, வாய்விரிய அசட்டுச்சிரிப்பு சிரித்த ஒரு தடிமனான மற்றும் முகத்தில் சிவப்பேறிய ஆசாமியொருவரைக் கண்டனர்.

"ஒரு நிமிஷம்! யாரும் விரும்பவில்லையென்றால் நான் எடுத்துக் கொள்கிறேன்!"

கூட்டம் குதூகலக் குரல் எழுப்பியது. "பாராட்டு!", "பெரிய நன்மை, நீங்கள் செய்வது" "நீங்கள் நல்ல மனிதர்!"

திரு லுவோ, வெள்ளை ஒயினாலும், வாணிக லாபத்தாலும் எல்லாரது ஆமோதிப்பாலும் வெகுவாய்த் தூண்டப்பட்டுக் கைகளைக் கட்டிக் கொண்டு நடுவில் நிமிரிந்து நின்றார்.

"என்னங்க! என்ன சொல்றீங்க? இது சாதாரண விஷயம்".

காவல் நிலையம் வரை ஆர்வலர்கள் அவரைத் தொடர்ந்தார்கள், அவரது ஊக்கம் குன்றிவிடாதபடி பார்த்துக் கொண்டு.

அங்கே, இப்படிப்பட்ட கேஸ்களில் வழக்கமாய் நிகழ்வது போல், விசாரணை நடைபெற்றது.

"உங்கள் பெயர்?"

"பிரான்சுவா லுவோ, கமிஷனர் சார். கல்யாணம் ஆனவன். இன்னுஞ் சொல்லப் போனால் மனவுறுதியுள்ள ஒருத்தியைக் கட்டிக் கொண்டவன். அது எனக்கு அதிர்ஷ்டம், கமிஷனர் சார். ஏனென்றால் நான் ரொம்பப் பலசாலியல்ல, அல்ல. ஹா! ஹா! தெரியுதுங்களா? நான் ஒரு பருந்தல்ல. என் பெண்சாதி சொல்வது போல, "பிரான்சுவா பருந்தல்ல".

அவர் இந்த அளவு பேச்சு வன்மை உடையவராய் ஒரு போதும் இருந்ததில்லை. தளை நீங்கிய நாக்கும் லாபகரமான பேரமொன்றை முடித்த மற்றும் ஒரு பாட்டில் வெள்ளை ஒயின் பருகிய மனிதனின் திடமும் தம்மிடம் இருப்பதாய் அவர் உணர்ந்தார்.

"உங்கள் தொழில்?"

"படகுகாரன், கமிஷனர் சார். செமை படகான 'அழகிய நிவேர்னேஸ்' படகின் சொந்தக்காரன். அருமையான ஆட்கள் அதில் வேலை செய்கிறார்கள். ஆகா! பேர் பெற்ற தொழிலாளிகள்! மரி பாலத்திலிருந்து கிளாம்சி வரையுள்ள டோல்கேட் காரர்களைக் கேட்டுப் பாருங்களேன். கிளாம்சி தெரியுமா உங்களுக்கு, கமிஷனர் சார்?"

சுற்றி நின்றவர்கள் புன்முறுவல் பூத்தார்கள். லுவோ தொடர்ந்தார், தெளிவு குறைவாய், சொற்களின் பகுதிகளை விழுங்கியவாறு:

"கவர்ச்சியான இடம் ஆயிற்றே, கிளாம்சி! வழி முழுக்க மரம். அழகான மரம். வேலைக்கு ஆகிற மரம். எல்லாத் தச்சர்களுக்கும் தெரியும். அங்கே தான் எனக்கு வேண்டிய மரம் வாங்குவேன். ஹா! ஹா! தேர்ந்தெடுப்பதிலே நான் சூரன். என் பார்வை அப்படி, என்ன? நான் பலசாலி என்று அர்த்தமல்ல. நிச்சயமாய் நான் பருந்தல்ல, என் பெண்டாட்டி சொல்வது போல. ஆனால், பாருங்க, பார்வை போதும். எப்படின்னா, உங்களைப் போலத் தடியான- மரியாதைக் குறைவு என்று நினைக்காதீர்கள், கமிஷனர் சார்- ஒரு மரத்தைப் பார்க்கிறேன். ஒரு கயிற்றால் அதைச் சுற்றுகிறேன், இப்படி....."

காவலரை யணைத்துத் தம் பையிலிருந்து எடுத்த கயிற்றால் சுற்றினார். காவலர் விடுபட முயன்றார்:

"விடுய்யா, என்னை!"

"விட்டுடறேன், விட்டுடறேன், கமிஷனர் சாருக்குக் காட்டுவதற்குத் தான். இப்படிச் சுற்றுகிறேனா, அளந்த உடனே பெருக்குகிறேன், பெருக்குகிறேன்........எதால் பெருக்குகிறேன் என்று நினைவில்லை. என் பெண்சாதிக்குத் தான் கணக்கு தெரியும். நல்ல மண்டை என் வீட்டுக்காரிக்கு".

கூட்டம் மிகச் சுவைத்து ரசித்துக் கொண்டிருந்தது. கமிஷனரும் புன்சிரித்தார். கலகலப்பு சிறிது அடங்கியதும் கேட்டார்:

"இந்தப் பிள்ளையை என்னவாக ஆக்குவீர்கள்?"

"பணக்காரன் ஆக்கமாட்டேன் நிச்சயமாக. என் வம்சத்தில் பணக்காரர்கள் இருந்ததேயில்லை. படகுகாரன் ஆக்குவேன், ஒரு நல்ல படகுகாரன், மற்ற பிள்ளைகளைப் போல."

"உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா?"

"நன்றாய்க் கேட்டீர்கள்! இவனைச் சேர்த்து நாலு ஆகும். ஆகட்டுமே! மூன்று பேர்க்கு உண்டு என்றால் நான்கு பேருக்கு உண்டு. கொஞ்சம் அமுக்கும். பெல்ட்டை இறுக்கிக் கொள்வேன்; மரத்தைக் கூடுதல் விலைக்கு விற்க முயல்வேன்."

சுற்றியிருந்தவர்கள் மீது திருப்தி நிறைந்த பார்வையைப் படரவிட்டபடி, அவர் சிரித்த பெருஞ் சிரிப்பில் காது வளையங்கள் ஆடின. தடிமனான ஒரு ரிஜிஸ்டரை அவருக்கு எதிரில் தள்ளினார் கமிஷனர்.

எழுதத் தெரியாமையால் அடிப்பக்கத்தில் பெருக்கல் குறியிட்டார்.

அவரிடம் குழந்தையைக் கமிஷனர் ஒப்படைத்தார்:

"அழைத்துப் போங்கள், பிரான்சுவா லுவோ. நல்லபடி வளருங்கள். இவனைப் பற்றி ஏதாவது தகவல் கிடைத்தால் உங்களுக்குத் தெரிவிப்பேன். நீங்கள் நல்ல மனிதராகத் தெரிகிறீர்கள். உங்களிடம் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எப்போதும் போல் பெண்சாதிக்குக் கீழ்ப்படியுங்கள். போய் வாருங்கள்! வெள்ளை ஒயினை அளவுக்கு அதிகமாகக் குடிக்காதீர்கள்"

2 comments:

  1. நல்ல மனநிலையில் உள்ளவன் செய்யத் தயங்கும் ஒரு செயலை குடிபோதையில் ஒருவன் நிலைதடுமாறாமல் முடிவெடுத்து செய்துமுடிக்கிறான். அவன் போதையில் இருந்தாலும், அவனுடைய வார்த்தைகள் தெளிவாக வந்துவிழுகின்றன. மனைவிமேல் வைத்திருக்கும் மரியாதையும், நம்பிக்கையும், குழந்தையின்பால் கொண்ட அன்பும் அவனை நல்லவனாகவே காட்டுகின்றன. கமிஷனர் சொல்வதுபோல் வெள்ளை ஒயினை அளவுக்கதிகமாக குடிக்காமலிருந்தால் அவனை விடவும் உயர்ந்தவர் எவரும் இருக்க முடியாது.


    தேர்ந்த மொழிபெயர்ப்பு, கதையின் சுவையை முழுதும் ரசிக்கச்செய்கிறது. பகிர்வுக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் நற்பணி.

    ReplyDelete
  2. "காவல் நிலையம் வரை ஆர்வலர்கள் அவரைத் தொடர்ந்தார்கள், அவரது ஊக்கம் குன்றிவிடாதபடி பார்த்துக் கொண்டு".
    இந்த வரிகளைப் படித்தவுடன் சிரிப்பு வந்தது. எல்லா ஊரிலும் மனிதர் ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள் என்ற உண்மையும் புரிந்தது.

    ReplyDelete