Tuesday, 13 December 2011

அரச சிந்தனைசங்க இலக்கியங்கள் தொல்கால முன்னோரால் நமக்குக் கிடைத்துள்ள அருஞ் சொத்து. அவர்களிற் சிலரது சிந்தனைகள் அவற்றுள் பொதிந்துள்ளன. ஒன்றனை அறிவோம்.

அறிவியல் பரவியுள்ள இந்தக் காலத்திலும், “உலகில் அக்கிரமங்கள் மிகுந்துவிட்டன. அதனால்தான் மழை பெய்தும் கெடுக்கிறது, பெய்யாமலும் கெடுக்கிறது. இயற்கைப் பேரிடர்கள் நிகழ்ந்து பெருஞ் சேதம் விளைவிக்கின்றனஎன்று பலர் கருத்துரைக்கின்றனர்.

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை

என்ற ஔவை பாடல் மாந்த ஒழுக்கத்துக்கும் இயற்கையின் செயலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்ற கருத்தைத் தெரிவிக்கிறது.

இந்தக் கருத்துப் பழங் காலத்திலிருந்து தலைமுறை தலைமுறையாகப் பரப்பப்பட்டுவருகிறது என்பதை சங்க காலப் பாண்டியன் இளம்பெரு வழுதியின் பாட்டொன்றால் அறிகிறோம்.

ஏராளத் தீயொழுக்கங்களைப் பொறுத்துக்கொண்டு ஏன் உலகம் அழியாமல் இருக்கிறது என்று அவன் சிந்தித்தான். காரணங் கண்டுபிடித்தான், செய்யுளில் விவரித்தான்.

அவன் கூறியது என்ன?

உலகில் சான்றோர்கள் இருக்கின்றனர். தேவாமிர்தம் கிடைத்தாலும், அவர்கள், ஆகா! இனிதுஎனத் தனித்து அதை உண்ணார்; யாரையும் வெறுக்கமாட்டார்; துன்பத்துக்கு அஞ்சிச் சோம்பி இரார்; புகழ் வருமாயின் உயிருங் கொடுப்பார்; பழி என்றாலோ உலகையே தந்தாலும் கொள்ளமாட்டார்; சோர்விலார்; தம் நன்மைக்காகச் செயல்படாமல் பிறரது நலனுக்காக முயல்வார். இப்படிப்பட்டவர்கள் இருப்பதால் இருக்கிறது இவ் வுலகம்

என்பது அவன் கண்டுபிடிப்பு.

இந்தக் கருத்தைத் திருவள்ளுவர்,

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்

மண்புக்கு மாய்வது மன்.

என்று சுருக்கிக் கூறினார்.

அருங் குணங்கள் வாய்ந்த சான்றோர் நம் காலத்திலும் இருக்கிறார்கள், எக் காலத்தும் இருப்பார்கள். என்ன? அவர்களின் தொகை சிறியது. அவர்கள் மீது விளம்பர வெளிச்சம் விழுவதில்லை; அவர்களும் அதை விரும்புவதில்லை.

பாண்டியனின் கருத்தை அறிவியல் கண்ணோட்டத்தில் நோக்கக்கூடாது; பழங் கால நம்பிக்கை என்று கொள்ளவேண்டும். 2000 ஆண்டுக்கு முன்பு ஒரு மன்னன் உலகம் பற்றிச் சிந்தித்து இருக்கிறானே! அதைப் பதிவு செய்தானே!

பாராட்டுக்கு உரியதல்லவா அது?

கடல் விபத்தில் மாண்டதால் அவனுக்குக் கடலுள் மாய்ந்த இளம் பெரு வழுதி எனப் பெயர் வந்தது.

இனிப் பாடல், ஆர்வம் உள்ளோருக்காக:

உண்டால் அம்மஇவ் வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவ தாயினும் இனிதுஎனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;

துஞ்சலும் இலர்;பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழெனின் உயிரும் கொடுக்குவர்; பழிஎனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்.

அன்ன மாட்சி அனையர் ஆகித்

தமக்குஎன முயலா நோன்தாள்

பிறர்க்குஎன முயலுநர் உண்மை யானே.

( பா 182)

1 comment:

  1. தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

    ReplyDelete