Friday 16 December 2011

குளிர் கால விளையாட்டு


"இன்னைக்குப் பனிப் பொழிவு அருமை" என்றேன் காவலாளியிடம்.

"நாளை இன்னும் பிரமாதமாய் இருக்கும்" எனப் பதில் சொன்னார் அவர்.

சிறுவன் ஒருவன் குறுக்கிட்டான்: "ஐயா ஏன் ஸ்லெட்ஜ் ஓட்டக்கூடாது? ஜாலியாய் இருக்குமே! பசங்களுக்கும் வயசானவங்களுக்கும் பொருத்தமாச்சே அது!"

"வயதானவங்களுக்குத் தோதுபடுமா? உனக்கு நல்லாத் தெரியுமா?"

"தெரியுமாவா? எங்க தாத்தா தினம் காலையில் ஓட்டுறாரே!"

எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

"சரி, அதை எப்படி ஓட்டுறது?"

"ரொம்ப சுலபங்க, ஏறி உட்காருங்க, தானா ஓடும்"
.
"யாரும் கத்துக் கொடுக்க வேண்டாமா?"

அவன் வெடிச் சிரிப்பு சிரித்தான்: "சேச்சே! வேண்டியதே இல்லீங்க"

அப்பாடா! குளிர் கால விளையாட்டில் நான் ஈடுபடும் வாய்ப்பு வந்தேவிட்டது.

ஒரு ஸ்லெட்ஜ் வாங்கினேன். லேசான சரிவு ஒன்று ஆசை மூட்டியது. உட்கார்ந்தால் போதும்; தானாக ஓடும் என்னும் எண்ணம் உற்சாகம் ஊட்டியது.

அமர்ந்தேன்; வசதியாய்த் தான் இருந்தது, சாய்மானம் இல்லாததே குறை. பரவாயில்லை, மெள்ள ஓட்டுவோம்!

கடவுளே ! காப்பாத்துங்கள் !

வண்டி விரைவாக ஓடுகிறது;  வேகம் வரவரக் கூடுகிறது; என்ன செய்வது என்று தெரியவில்லை .

ஒரு மோதல்! பனிச் சிதறல்! புதைந்தே போனேன்! "அம்மா!"

வயதாகி விட்டால் எல்லாரும் அம்மாவைக் கூப்பிடுவது வழக்கம்.

உடலெங்கும் படு காயம் திண்ணமாக ஏற்பட்டிருக்கும். தடவித் தடவிப் பர்த்துக் கொண்டேன். ஒன்றுமே இல்லை ! தப்பித்தேன் .

ஸ்லெட்ஜைக் கை விட்டுவிட்டு நடந்தே திரும்பினேன்; 2 மணி நேர நடை !

விடுதி முன்னால் சிறுவனைக் கண்டேன் .

" வண்டி எங்கே , ஐயா ! "

"அங்கேயே போட்டுட்டேன் ; அதோட வேகத்துக்கு என்னாலே ஈடு குடுக்க முடியவில்லை "

" அப்போ ஒங்கக் காலைப் பயன்படுத்தலையா ?"

"காலா ? எதுக்கு ?"

"பிரேக் போடுறத்துக்கு . "

" பிரேக் போடணுமா ? "

" ஆமாம் , காலால் பிரேக் போட்டுக்கணும் . "

மறு நாள் .

படகு ஸ்லெட்ஜில் சவாரி போகலாம் என்று சிலர் யோசனை சொன்னார்கள் .

" அது உங்களுக்கு ஆனந்தம் தரும் "

" ஆபத்து ஒண்ணுமில்லியே ? "

" மொத்தம் ஆறு பேர் ; தலைப்பில் இருக்கிறவர் ஸ்டீரிங்க் பிடிப்பார் : உங்களுக்குப் பயிற்சி இல்லாததாலே ..... "

" ஏன் பயிற்சி இல்லே ? இருக்கே ! "

" அப்போ உங்களைக் கடைசியிலே உட்கார வைப்போம் . "

நா காக்கத் தவறிவிட்டேனோ ? இல்லையில்லை ; கடைசியில் இருந்தால் என்ன ஆகிவிடப் போகிறது ? முன்னாலே இருக்கிறவர்கள் மேலே விழப் போகிறேன் ; அவ்வளவு தானே ?

இதோ புறப்பட்டாயிற்று.

ஆகா ! என்ன அழகு ! அமைதியான சூழலில் இந்தப் பயணம் எவ்வளவு இன்பம் !

பனி சறுக்குவோர் ஒருவர் எங்களை முந்த முயல்கிறார் ; விழுகிறார் ! அப்படி விழு !

இனி எப்போதும் படகு ஸ்லெட்ஜ் பயணம் தவிர வேறு பயணம் செய்ய மாட்டேன். மேலும் கும்பலில் ஒருவனாக இருக்கிறபோது தன்னம்பிக்கை மிகுதி , துணிச்சலும் அதிகம் .

இதென்ன ? நகர்வதாகவே தெரியவில்லையே !

" கவலைப் படாதீங்க ! இன்னம் சில நொடிகளில் 80 கிலோமீட்டர் வேகத்திலே ஓடும் ! " என்றார் ஒருவர்.

80 கிலோமீட்டர் ! எனக்கு முன்னால் இருந்தவரை இரு கைகளாலும் கட்டிப் பிடித்தேன் . அவரது முழங்கைக் குத்து என்னைப் பின்னுக்குத் தள்ளியது .

ஒரு கத்தல் !

" வலப் பக்கம் சாயுங்கள் !"

" ஏன் ? "

" திருப்பம் ! ஜாக்கிரதை ! கடைசி ஆள் , பிரேக் போடு !"

" என்னா ? "

" பிரேக் ! பிரேக் ! "

" காலாலேயா ? "

''சீ ! பிரேக்கை அமுக்கு ! "

" எங்கே இருக்கு ? "

எனக்கு ஒன்றுமே புரியவில்லை ; எல்லாரும் கரணம் அடித்தோம் .

கரணம் என்றால், அது கரணம் !

( வோல்ஃப் என்பவர் எழுதிய நாட்குறிப்பு என்ற பிரஞ்சு நூலில் ஒரு சிறு பகுதி ; பெயர்ப்பு என்னுடையது

1 comment:

  1. அருமையான நகைச்சுவை! அறியத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete