Wednesday 21 December 2011

நானோர் அநாதை


பெற்றோர் இறந்து பல்லாண் டாயின.
பொற்றொடி பிரிந்து பெற்றாள் விலக்கும்.
திருமணம் புரிந்துந் தனிமர மானேன்.
அண்ணனை அண்டினேன் அடித்துத் துரத்தினான்.
தம்பியை நாடினேன் துரத்தி யடித்தான்.
தோழனை நம்பினேன் துண்டித்தான் தொடர்பை.
தெரிந்தவர் சிலரைத் தேடிச் சென்று
கூனிக் குறுகிக் குரலைத் தாழ்த்தி
உதவி கோரினேன் உதடு பிதுக்கினர்.
ஆயிர மாயிரம் மக்களி னிடையே
ஆதர வின்றி அல்லல் உழந்தேன்.
பட்ட காலிலே படுமென் பதுபோல்
அடிவயிற் றில்வலி அதிகமா யிற்று.
மருத்துவர் கதியென மனையை அணுகினேன்.
பரிசோ தித்தார் பரிதாப முற்றார்.
பரிவுடன் பார்த்துப் பகர்ந்தார்: "பாவம்,
வாழ்வை யிழந்தாய் வரம்பிலாக் குடியால்!"

4 comments:

  1. அய்யோ பாவம் என்று படித்துக் கொண்டே வந்து கடைசியில் முடிக்கும் போது தான் தெரிகிறது, இவன் அநாதையானதற்கான காரணம். ஒரு நல்ல சிறுகதை போல் அமைந்த கவிதைக்குப் பாராட்டு.

    ReplyDelete
  2. ஒருவனுக்கு இப்படியா அடுத்தடுத்துத் துன்பங்களும் இழப்புகளும் நேரவேண்டும் என்று எண்ணி வருத்தப்படும் வகையில் வாசிப்பவரது பரிதாபம் மொத்தத்தையும் குத்தகைக்கு எடுத்துவிட்டு, இறுதியில் அளவிலாக் குடியே இத்தனைக்கும் காரணம் என்று வெளிப்படுத்தியிருப்பது நல்ல திருப்பம். பாராட்டுகள்.

    ReplyDelete
  3. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

    ReplyDelete