“ஆபாச நூலொன்றைப் படித்தாய்” என்றீர்,
மெளனித்தேன் காப்பதற்கு உம்மகளை!
“மோதிரங் காணோம், திருடி” என்றீர்,
மெளனித்தேன் காப்பதற்கு உம்மகனை!
பாட்டிலைப் பார்த்ததால் “குடிகாரி” என்றீர்,
மெளனித்தேன் காப்பதற்கு உம்கணவரை!
அன்றொருநாள் அவரடியைத் தடுத்து விட்டேன்,
வலியினின்று காப்பதற்கு உம்உடம்பை!
என்னசெய்தும் உங்கொடுமை குறையக் காணோம்.
திருந்தாத பிறவிநீர்! தெளிந்து விட்டேன்.
மணவிலங்கை முறிப்பதுதான் தீர்வோ என்றன்
மனநிம் மதிதன்னைக் காப்பதற்கு?
(படம் - கூகுள் உபயம்)

புகுந்த வீட்டினரின் தவறுகளைத் தன் தலைமேல் சுமந்துவாடும் மருமகளின் பொறுமை, எல்லை மீறும் தருணத்தை அழகிய கவிதை மூலம் வெளிப்படுத்தியிருக்கும் விதம் அருமை. பாராட்டுகள்.
ReplyDeleteபாராட்டுக்கு மிக்க நன்றி ; மணவிலக்கு சட்டம் இல்லாக் காலத்தில் எல்லையிகந்த தொல்லைகளைத் தாங்க முடியாதபோது தற்கொலை ஒன்றே மருமகள்களை மீட்டது .
ReplyDelete