Friday, 16 December 2011

மாங்காய்ப் பித்து (Mango Madness)




மூன்று மாதச் சூலிகள், 'மாங்காய், மாங்காய்' என்று தேடிப் பிடித்து விரும்பித்தின்று மகிழ்வார்கள். அதுதான் மாங்காய்ப் பித்து என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நான் எழுதுவது ஒரு மனநோய் பற்றி.

ஆஸ்திரேலிய வடபகுதி மக்களை அக்டோபர் நவம்பர் மாதங்களில் தாக்கக் கூடியது. கோடைக்காலம் நெருங்க நெருங்க வெப்பமும், காற்றில் ஈரப்பதமும் அதிகரித்துக் கொண்டே போகும். மக்கள் தங்கள் ஆற்றல் குறைந்து சுறுசுறுப்பு சூனியமானதாய் உணர்வார்கள். இந்தப் பொது சங்கட நிலைமையைச் சிலரால் தாக்குப் பிடிக்க இயலாது. அளவுகடந்த மன இறுக்கமும் நிம்மதிக் குறைவும் அவர்களுக்கு உண்டாகும். இதுவே மாங்காய்ப் பித்து.

எல்லாவித மனக்கோளாறுகளும் முற்றுவதும், புதியவர்களைப் பற்றுவதும் அந்தக் கால கட்டத்தில் அதிகரிப்பதாய் உளநோய் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

சரி, இதற்கும் மாங்காய்க்கும் என்ன தொடர்பு? மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல் இருக்கிறதே?

தொடர்பு உண்டு. அது ஆஸ்திரேலியாவில் மாங்காய் பழுக்கும் பருவம். எனவே அந்தப் பெயர்.

இந்நோய் ஏற்படுவதற்குச் சரியான காரணம் தெரியவில்லை. வெப்பக் கால ஈரப்பதத்தில் மக்கள் பல வாரங்கள் உழல்வதால் அன்றாட வாழ்க்கை நெருக்கடிகளுக்கு ஈடு கொடுக்கும் சக்தி குறைந்துவிடுகிறது என்பது மருத்துவர்களின் கருத்து. தெற்கிலிருந்து வட பகுதிக்கு அப்போது பெயர்கிற மக்கள் மனக்குழப்பத்துக்கு ஆளாவதும் பருவகால அசெளகரியந்தானாம்.

காரணம் புரியாமையால் தடுப்புக்கு வழியில்லை. நீர்மங்களை நிறையப் பருகுவதும், இயன்றவரைக் குளிர் சூழலில் வாழ்வதும் அதிக சிரமம் தரும் வேலைகளை ஒத்திவைப்பதும் அறிவுடைமையாம்.

(மையக்கருத்தைத் தந்த நூல் : Good Health Fact Book)

1 comment:

  1. நம்மூரில் புத்தி மந்தமாயிருப்பவர்களை மாங்காய் மடையன் என்பார்கள். ஆஸ்திரேலியாவில் அப்படிப்பட்ட மனநிலைக்கு மாங்காய்ப்பித்து என்று பெயர் வைத்திருப்பது வியப்பை அளிப்பதாயுள்ளது. அறியாத தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete